பாலகிருஷ்ணன் (தி.சு.பா) , Atlanta, USA |
|
சென்னை அண்ணா நகர் ஹெச் பிளாக் 24, 25, 26 ஆகிய மூன்று வீதிகளும் சந்திக்கும் முச்சந்தியில் தான் அந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணி இரவு 11 ஐத் தாண்டி சில நிமிடங்கள் ஆகி இருந்தது. விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டி, தொண்டர்கள் சிலர் முன்னரே வந்திருந்து ஆக வேண்டிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். மற்ற தொண்டர்கள் சாரிசாரியாக விழாவுக்கு வந்த வண்ணம் இருந்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கும் தலைவர் வழக்கம் போல் தாமதமாகத் தான் வருவார் போலும், இதுவரை வந்தபாடில்லை.
நியான் விளக்கொன்றிற்கு கீழே விழா மேடை 'டாம்பீகமாக' அமைக்கப்பட்டிருந்தது. விழா மேடையின் வடிவமைப்பும், அலங்காரமும் பார்ப்பவர் மனதைக் கவரும் வண்ணம் இருந்தது. முச்சந்தி வழியே செல்பவர் எவராயினும் பத்து நிமிடமாவது நின்று, பார்த்து, ரசித்து, பாராட்டிவிட்டு தான் செல்வர். இந்த மேடையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சென்ற வாரம் எதிர் கட்சியினரின் விழா மேடை 'கால் தூசு'.
மேடையின் வடபுறம்!
விழா நாயகன் ராமு தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். எல்லோர் ஓரப்பார்வையும் அவனை நோக்கிப் பாய்ந்த வண்ணம் இருந்தன. ராமுவின் முகம் சாதித்ததற்கான ஒரு கலையுடன் காட்சியளித்தது. எந்த ஒரு மனிதனுக்கும் சாதிப்பதால் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. அதன் சுகம் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.
"ராமு கலக்கிட்ட போ....தலைவரை தனியாப் போய் பார்த்தியா?"
"ம்.....காலையிலேயே போய் பார்த்து ஆசி வாங்கிட்டேனே...."
"உனக்கு கட்சியில பெரிய பதவி காத்துக்கிட்டு கிடக்குப்பா....அரசல்புரசலா பேசிக்கறாங்க..."
"கட்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டுருக்கான்ல, சும்மாவா?"
ராமு சந்தோஷத்தின் உச்சத்தில் பதிலேதும் கூறமுடியாமல் இருந்தான்.
மேடையின் தென்புறம்!
வேறு சிலருக்கு, கர்வம் தலைக்கேறியது போலத் தோற்றமளித்தான் ராமு. இது வெற்றி பெற்ற எந்த ஒருவனுக்கும் ஏற்படும் ஒரு கசப்பு அனுபவம். ஒருவன் முன்னுக்கு வருவது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. 'எல்லாம் கடின உழைப்பு' என்பர் சிலர், 'எல்லாம் அதிர்ஷ்டம்' என்பர் வேறு சிலர்.
"அப்படி என்ன கிழிச்சுட்டான்னு இந்த விழாவை வச்சுருக்காங்க? நம்மளை எல்லாம் பார்த்தா இவங்களுக்கு எப்படித் தோணுதாம்?" என்று வயிற்றெரிச்சலில் ஒருசில பேர் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
"வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னா 'ஜால்ரா' போட தெரிஞ்சுருக்கணும் டா...வேலைல மட்டும் கவனமா இருந்தா பத்தாது....இதோ பாலுவை எடுத்துக்கோ, அவன் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு செஞ்சுருக்கான்? அவனை எவனாவது மதிச்சானா? ராமு ஜால்ரா போட்டான், சலாம் போட்டான், இதோ ஹீரோவாயிட்டான்ல!"
"பாலுவுக்கு கொழுப்புபா.....பதவி தேடி வந்தப்ப அது சரியில்ல இது சரியில்லனு தலைவரையே பகச்சுக்கிட்டான்....இப்போ கடந்து அனுபவிக்கறான்...ஒரு பய சீண்டலயே..."
அரசியல், மென்பொருள், அரசாங்க வேலை என்று ஆரம்பித்து, தெருவோர நாய்கள் வரை 'ஜால்ரா' போட்டால் தான் முன்னுக்கு வரமுடியும் என்பது அனுபவசாலிகளுக்கெல்லாம் தெரிந்த உண்மை! தன்னுடைய 'பாஸ்' மனம் கோணாமல் இருந்தால் பாராட்டு விழா, பட்டம், பதவி இப்படி எல்லாம் உண்டு. இல்லையென்றால், 'புடலங்காய்' தான். ஒருசில துறைகளில் இந்த 'ஜால்ரா' ரொம்ப அசிங்கமாக இருக்கும். ஆனா எல்லா துறைகளிலும் ஒற்றுமையாக இருக்கும் விஷயம் - 'ஜால்ரா!'.
"என்னதான் இருந்தாலும் ராமு செய்த வீரதீர பராக்கிரமத்தால் நம்ம சமூகத்துக்கே பெருமை இல்லையா?"
"கிழிச்சான்.....ஆளை கொலை செய்யறது, போட்டுக் கொடுப்பதெல்லாம் வீரதீரமா? இதற்கெல்லாம் பாராட்டு விழாவா?" என்று ஒருவன் பொறுமினான்.
"அதுக்கெல்லாம் நெஞ்சுல தெகுரியம் வேணும்......கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுங்கறதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்குத்தான் லாயக்கு. நிஜ வாழ்க்கைக்குத் தேவை புத்தியைத் தீட்டாதே, கத்தியைத் தீட்டு தான்".
"இப்படியே போனா நம்ம சமூகத்தோட மதிப்பு, மரியாதை என்ன ஆவது?....நாடு கெட்டுப் போச்சுன்னேன்....." என்று வருத்தப்பட்டது ஒரு பெருசு.
"வயசுதான் ஆச்சே தவிர, உனக்கும் சரி பாலுவுக்கும் சரி உலக அனுபவம் கம்மி....சுதாரிச்சுக்கோங்க...அவ்வளவு தான் சொல்லமுடியும்..."
பாலுவும் அவன் சகாக்களும் சற்று நேர்மைவாதிகளாக இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆனால் இந்த கூட்டம் 'ராமு'வைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்டிருக்கிறது. பாலு, 'கோட்டை விட்டவன்', ராமு, 'கோட்டையைப் பிடித்தவன்'! இந்த பாராட்டு விழாவில் ராமுவுக்குத் 'தங்க மணி' ஒன்று பரிசாக வழங்கப்பட இருக்கிறது. அதோடு அவனுக்கு 'ஆளமுடித்தான் ராமு' என்ற பட்டமும் கொடுத்து கௌரவிக்கப் போவதாக கேள்வி.
நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அவனவன் நிலையில் நின்று பார்த்தால் எல்லாம் நல்லதாகவே இருக்கும். ஆக உலகத்தில் 'கெட்டது' என்ற ஒன்று இருப்பதற்கே வாய்ப்பில்லை அன்றோ?
நிற்க.
தொண்டர் பலர் புடைசூழ, தலைவர் அதோ வந்துவிட்டார்! அவர் முகத்தில் ஒரு பூரிப்பு. கம்பீரமாகத் தோற்றமளித்தார். கூட்டம் எழுந்து அவருக்கு மரியாதை செய்தது. நடுநாயகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரியனையில் வந்து அமர்ந்தார். கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தவர், தன் பார்வையை மேடையின் இடது ஓரத்தில் ஆரம்பித்து, கூட்டத்தின் கோடிக்கு இட்டுச் சென்று, வலது ஓரத்தில் ஒரு 'நீள்வட்டமிட்டு' நிறுத்தினார். பிறகு நீளவாக்கில் தன் பார்வையை விட்டு, கோடிக்கு இட்டுச் சென்று, மீண்டும் மேடை ஆரம்பம் ஆகும் இடத்திற்கு வந்து நிறுத்தினார்.
'10000 வாலா' சர வெடி போல் கைத்தட்டலால் அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது. தலைவர் கை அமர்த்தி நிறுத்தினார்.
மயான அமைதி! விழா கோலாகலமாக ஆரம்பம் ஆனது.
மேடையில் தலைவருடன் முக்கிய புள்ளிகளெல்லாம் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு புள்ளியும் தலைவரைப் பற்றி முக்கால் வாசியும், ராமுவைப் பற்றி கால் வாசியும் போற்றிப் பேசினர். அது தானே வழக்கம்!
என்னதான் ராமு வீரதீரனாக இருந்தாலும், தலைவர் கடைக்கண் பார்வை அவனுக்குக் கிடைத்ததால் தான் இதெல்லாம். அவரும், ராமுவைத் தூக்கிவிடுவதற்குத் தக்கதொரு தருணத்தைக் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். தலைவர் எழுந்து, விழா மேடையின் நடுவில் வந்து நின்றார். ராமுவும் அழைக்கப்பட்டான். கரவொலி முழங்க ராமுவுக்கு 'தங்க மணி'யைப் பரிசாக வழங்கினார் தலைவர். ராமுவின் முகத்தில் ஒரு பெருமிதம்! பின், ராமு தலைவர் காலில் 'சாஷ்டாங்கமாக' விழுந்து ஆசி பெற்றான். கூட்டத்திலிருந்த அனைவரும் ஏகோபித்தக் குரலில் தலைவரின் பட்டப்பெயரை பல முறை சொல்லி, அவரை பேச அழைத்தனர்.
தலைவர் மேடை ஓரத்திற்கு வந்து பேசும் வரை அவரது பெயரைக் கூறி கொண்டிருந்தது கூட்டம். முன்வரிசையில் உள்ள துடிப்பான இளைஞர்கள் தலைவர் பார்வை தன் மீது விழும்படி வைக்க 'விதவிதமான' வகையில் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். தலைவர் எல்லோரையும் கை அமர்த்தி, பேச ஆரம்பித்தார்.
"இவ்விழா ராமுவின் வீரதீர செயல்களுக்கானப் 'பாரட்டு விழா' மட்டும் இல்லை. நான் சென்னைக்கு வந்த பொழுது என்னை ஒரு நாய் கூட மதிக்கவில்லை. தெருத்தெருவாக அலைந்தேன். சாலையில் பொறுக்கினேன். வெய்யிலிலும், மழையிலும் நடுவீதியில் படுத்து மிகவும் துன்பப்பட்டேன். அப்பொழுது நமக்கென்று ஒரு சமூகம் கிடையாது. கட்சி உண்டா? கொள்கை தான் உண்டா? நமது கட்சியில் உள்ள மூத்தத் தலைவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த கட்சியை தலைசிறந்த கட்சியாகக் கொண்டு வர நான் எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பேன்...."
என்ற பொழுது, 'தலைவர் வாழ்க' என கூட்டம் வாழ்த்திக் கூறத்தொடங்கியது. தலைவர் மீண்டும் கை அமர்த்தி தன் பேச்சைத் தொடர்ந்தார்.
"....அண்ணா நகரில் ஆரம்பித்து, திருவான்மியூர், பெரம்பூர், தாம்பரம் வரை இன்றைக்கு நம் கட்சி வளர்ந்திருக்கிறது. கூடிய விரைவில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நமது கட்டுக்குள் வரப்போவது உறுதி. அதன்பின் இந்த தேசமும் நமதே! நாம் வைத்ததுதான் சட்டம். அதற்கு ராமு போன்ற இளைஞர்கள் நம் கட்சிக்குத் தேவை. கொஞ்ச காலமாகவே நானும், நமது மூத்தத் தலைவர்களும் ராமுவின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்துக்கொண்டு தான் வருகின்றோம். அவன் நமது சமூகத்தின் முதுகெலும்பு. மூன்று மாதத்திற்கு முன்பு நள்ளிரவு 1மணி என்று கூட பாரமால் முகப்பேர் பிரதான சாலையில் காரில் சென்ற இருவரைத் தீர்த்துக் கட்டினான். ஓடும் காருக்குள் பாய்ந்து சென்று, அவர்களிருவரையும் பரலோகத்திற்கு அனுப்பிய விஷயம் முதல் பக்க செய்தியாக எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. ஆனால் அவனை யாரால் என்ன செய்ய முடிந்தது? அவன் வீரத்திற்கு மற்றுமொரு சான்று, சென்ற மாதம் 'பட்டப்பகலில்' நடந்த கொலை. +2 படிக்கும் மாணவன் ரவி, தான் தொடர்ந்து முதல் ரேங்க் வாங்குவதால் கர்வத்தோடு அலைந்தான். நம்மை அடிக்கடி சீண்டிக் கொண்டும் வேறு இருந்தான். ராமுவால் பொறுக்க முடியவில்லை. வெகுன்டு எழுந்தான். பட்டப்பலிலேயே அவன் கதையை முடித்தான். இன்று முதல் ராமுவை அனைவரும் 'ஆளமுடித்தான் ராமு' என்று தான் கூப்பிட வேண்டும். இது என் அன்புக் கட்டளை....."
என்ற பொழுது, கூட்டம் 'ஆளமுடித்தான் ராமு' என பலமுறைக் கூறி தலைவர் முகத்தில் நிரந்தர சந்தோஷத்தைக் கொடுத்தது.
தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது, அவருக்கு வேண்டாதவர் சிலர் கூட்டத்தில் குசுகுசு வென அவரை வசைபாடி கொண்டிருந்தனர்.
"என்னய்யா உலகம் இது? ஒருவன் செஞ்ச அநியாயங்களைப் பட்டியலிட்டு அவனைப் பாராட்டுறாங்க....இவுங்க பண்ற அட்டூழியத்துக்கெல்லாம் விமோசனமே இல்லையா? மக்கள் இவுங்கள இப்படியே விட்டாங்கன்னா நாட்டை பாழடிச்சுடுவாங்கய்யா....இதை மக்களுக்கு எப்படியா புரிய வைக்கறது?"
"மக்களுக்கு எவ்வளவோ கவலைங்க..இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்க போகுது...."
"என்னய்யா பெரிய வேல? அதோ இருக்கே அந்த பெரிய அப்பார்ட்மென்ட், அதுல மிட் நைட் ல எத்தன வீட்டுல லைட் எரியுது பார்த்தியா? ஒருத்தன் கூட தூங்கலை....எல்லாரும் விடிய விடிய டிவி பார்த்துக்கிட்டு இருக்காங்க....இப்போ சொல்லு?"
மீண்டும் தலைவர் உரையின் குறுக்கே, அண்ணா நகரே அதிரும்படி கூட்டம் கோஷம் எழுப்பியது!!!
தலைவர் உரை பாதி தான் முடிந்திருக்கும். அவ்வழியாக வந்த மென்பொருள் வல்லுனன் சஞ்சய், மேடையின் ஓர் ஓரத்தில் தன் 'பைக்' கை நிறுத்தினான். சஞ்சய்க்கும் தலைவருக்கும் கொஞ்ச நாட்களாக ஒத்துப் போவதில்லை. அநியாயங்களை அடிக்கடி தட்டிக் கேட்பான். தலைவரையேப் பகைத்துக் கொண்டான். சஞ்சய்க்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தமே இல்லை. இருந்தாலும் தலைவரின் செயல்பாடு அவனுக்கு வெறியைத் தூண்டி விட்டிருந்தது. கொஞ்ச நாட்களாக உலகமெங்கும் பரவி வருகிறது இந்த பழக்கம். தலைவர் ஒருவர் பேசும் போது வெறுப்பைக் காட்டுவதற்காக அவர்மீது காலணியை விட்டெறியும் பழக்கம். தன் செருப்பை எடுத்து தலைவர் முகத்தில் விழுமாறு எறிந்தான் சஞ்சய். யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் தலைவர் முகத்தை அவன் காலணி பதம்பார்த்தது. அடுத்த விநாடி ஒட்டு மொத்த கூட்டத்தின் பார்வையும் சஞ்சய் மீது விழுந்தது.
தலைவரின் பேச்சால் வெறுப்படைந்து அந்த தவறை செய்துவிட்டான் சஞ்சய். தான் தனியாக இருப்பதைக் கூட உணராமல் கோபத்தில் அவ்வாறு செய்துவிட்டதைத் தாமதமாகத் தான் உணர்ந்தான். தலைவருக்கு ஒன்று என்றால் தொண்டர் கூட்டம் சும்மா விட்டுவிடுமா? சஞ்சய்யை நோக்கி அந்த கூட்டம் படை எடுத்தது. சஞ்சய்யால் தப்பித்து ஓட முடியாமல் வியூகம் அமைக்கப்பட்டது. ராமு தான் அந்த தாக்குதலையும் முன் நின்று நடத்த ஆரம்பித்தான். கோபத்தின் உச்சியில் ஸ்தம்பித்து போய், மேடையின் நடுவே உயிருள்ள சிலையாக காட்சியளித்தார் தலைவர். அவரைச் சுற்றி சில தொண்டர்கள்.
ராமுவின் தலைமையில் கூட்டம் சஞ்சயை நெருங்கியது. பட்டப்பகலில் கொலை செய்வபவன் ராமு. இந்த கும்மிருட்டு நேரம் அவனுக்கு வசதியாக இருந்தது. சஞ்சய் கூப்பாடு போட்டுப் பார்த்தான். ஒருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தொண்டர்கள் அனவரும் சஞ்சயைத் துவம்சம் செய்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் சஞ்சய் உயிர் பிரிந்தது. தெருவோரமிருந்த குப்பைத்தொட்டியில் கண்கள் திறந்து, வாய் பிளந்து, இரத்தம் சொட்டச்சொட்ட, சட்டை கிழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் சஞ்சய்.
'அடப்பாவிகளா! இந்த நாய்களோட அட்டூழியம் இப்படியே வளர்ந்துச்சுன்னா சிட்டியில ராத்திரில இனிமே யாரும் நடமாட முடியாது போலருக்கே. அப்புறம் ஆறுமாசத்துல தமிழ்நாடு, இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்த தேசமே அவ்வளவுதான்......' என்று தன் வீட்டு மாடி அறையின் ஜன்னல் வழியாக இந்த விழாவையும், சஞ்சய் கொலை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் மிகவும் வருத்தப்பட்டார்.
தலைவரின் சந்தோஷம் தான் ராமுவுக்கு முக்கியமாகப்பட்டது. அந்த மாதிரி ஒரு கொடூரக் கொலை சமீபகாலத்தில் பத்திரிகையிலும், சினிமாவிலும் கூட வந்ததில்லை. ராமு ஒரு 'வெறியன்', 'சைக்கோ'. அவன் 'பிணத்தையும் கொலை செய்வான்'. பிணத்தைத் 'தற தற' வென இழுத்துவந்து விழா மேடையின் நடுவில் கொண்டு வந்து போட்டான் ராமு. கூர்மையான ஆயுதங்கள் சிலவற்றால் பிணத்தின் வயிற்றையும், மேலும் பல பாகங்களையும் கிழித்தெறிந்தான். அதைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார் தலைவர். வெறியர்களின் தலைவர் ஆயிற்றே?
அப்பொழுது திடீரெனெ அந்த மேடையில் நடந்த கொடூர சம்பவத்தைப் பார்த்து ஜன்னல் மனிதர் உறைந்து போனார்.
ஏன்?
ராமு வாயில் சஞ்சய் கையெலும்பு!!!
முற்றும்
|