எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. |
|
வீட்டினை நெருங்கும் முன்பே ஏதோ ஒரு விபரீதம் நிகழ்ந்திருப்பது புரிந்து போயிற்று. வீட்டின் பக்கவாட்டால் செல்லும் பாதையை நோக்கி மக்கள் கலவரம் போர்த்திய முகங்களோடு அவசர,அவசரமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். நானும் கலவரமடைந்தவனாக அவர்கள் எதை நோக்கி ஓடுகிறார்கள் என ஆவல் உந்தித்தள்ளப் போய் அனைவரினதும் பார்வைப் புள்ளி மையத்தினை நோக்கினேன்.
லொறியொன்றின் முன் டயருக்குள் பிரேமா அக்கா சிக்குண்டிருந்தாள். தோள்பட்டை, நெஞ்சுப் பகுதியின் மேலால் டயர் ஏறியிருந்தது. இரத்தம் ஒரு சிறு ஊற்றைப்போல அந்தச் சிறு தார் வீதியெங்கும் பள்ளம் நோக்கி ஓடத்துவங்கியிருந்தது. உயிர் பிரிந்திருக்க வேண்டும். விழி திறந்து கருமணிகள் இரண்டும் வானம் நோக்கி உறைந்து போயிருந்தன.
கூட்டுறவுக்கடைக்குப் போய்வந்து கொண்டிருந்தவளை லொறி மோதியிருக்கவேண்டும். பையிலிருந்த அரிசி, சீனி, ஒரு கொப்பி, சவர்க்காரம், கூப்பன் கார்டும் வீதியில் சிதறிக்கிடந்தன. அரிசி மணிகளை நாளை கோழிகள் உண்ணக் கூடும். அவையும் பிரேமா அக்கா அடைகாக்க வைத்த முட்டைகளிலிருந்து வந்த கோழிகளாக இருக்கும்.
பிரேமா பக்கத்து ஊரைச் சேர்ந்த சிங்களப் பெண். அவளின்றி இந்த ஊரில் அனேக வீடுகளில் வேலைகள் ஓடாது. துணி துவைப்பது, தேங்காய் உரித்துத் துருவிக் கொடுப்பது முதல், விஷேட தினங்களில், விஷேட வீடுகளில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். ஊரில் அவள் கைராசிக்காரி என்றொரு பேச்சிருந்தது. புது மரங்கள் நடுவது, கோழி முட்டைகளை குஞ்சு பொறிப்பதற்காக அடை காக்க வைப்பது என அவளது கைகளால் செய்யப்படும் சில காரியங்கள் பெரும்பலனைக் கொடுக்கவே அவளுக்கு அந்தப்பெயர் சொந்தமானது. அந்தக் கைகளிலொன்றுதான் இப்பொழுது லொறியின் டயருக்குள் நசுங்குண்டிருந்தது.
சடலத்தைப் பார்த்தவுடனே விழிகளை ஒரு கணம் இருக்க மூடிக்கொண்டேன். ஒரு வைத்தியனாக இருக்குமெனக்கு இரத்தமும், காயங்களும் பழகிய விடயங்கள் தானெனினும் இப்படியான கோரவிபத்துக்கள் இதயத்தில் ஒரு பேரிடியின் அதிர்வை உணரச் செய்பவை . உடனடியாக எதையுமே செய்யவியலாத தடுமாற்றத்தைக் கொடுப்பவை.
நெருங்கி, அருகில் சென்று நன்றாக இருந்த கையின் நாடித்துடிப்பைப் பார்த்தேன். மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து உறையத் தொடங்கியிருந்தது. எப்படியும் 15 நிமிடங்களாவது ஆகியிருக்கவேண்டும். உடனடியாக பொலிஸுக்கும் வைத்தியசாலைக்கும் அறிவிக்கவேண்டும். யாராவது அறிவித்தார்களோ தெரியவில்லை. அறிவித்திருக்கச் சாத்தியமில்லை. எதற்கும் சிலரிடம் விசாரித்துக் கொண்டேன். தமக்கெதுவும் தெரியாது என உதடுபிதுக்கினர்.
இன்னுமின்னும் அதிகமாகக் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது. விஷயம் கேள்விப்பட்டு வீதிக்கு அருகாமையில் வீடிருந்த பெண்களும் சுமதி டீச்சரும் கூட வந்து சடலத்தைப் பார்த்தவாறு கன்னத்தில் கைவைத்து நொந்தனர். நிச்சயமாக பூனைக்குட்டி, சேவல், கோழி விபத்துக்களை விழிகசியப் பார்த்தவர்களுக்கு ப்ரேமா அக்காவின் மரணமானது, ஆண்டாண்டு காலமாக, பரம்பரை,பரம்பரையாகச் சொல்லப்படும் கதைகளாக மறக்கமுடியாமல் போய்விடும். நான் கூட்டத்துக்குள் அம்மாவைத் தேடினேன். அம்மா அங்கு இல்லை.
சடலத்தின் துணி தொடைவரை விலகியிருந்தது. இரத்தம் பார்த்தாலே மயக்கம் வருவதாகச் சொல்லும் விசாலாட்சிப் பாட்டி, வேலிக்கு இட்டிருந்த கறுப்பு ரப்பர்சீட்டை முடியும்வரை இழுத்துப் பிய்த்து சடலத்தின் அருகிலேயே சென்று திறந்திருந்த கால்பகுதியை மூடிவிட்டார்.
லொறி எந்த ஊருக்குச் சொந்தமானது என அதன் பக்கவாட்டுப் பெயிண்ட் எழுத்துக்கள் தெரிவித்தன. அங்கிருந்த முகங்களில் லொறிச் சாரதியைத் தேடினேன். புதிதாக எவனுமில்லை. எல்லாம் பழகிய முகங்கள். விபத்து நடந்த உடனேயே அவன் தப்பித்துவிட்டிருந்தான். ஊர் இளைஞர்கள் அவனுக்கு அடிப்பதற்காக ஆக்ரோஷமாகத் தேடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தங்களது வீரத்தைக் காட்ட ஒரு ஆள் சிக்கும்வரைக்கும் ஒரு புத்தனாகத்தான் நடித்துக்கொண்டிருப்பர் எனத் தோன்றியது. அவனை வீதிக்கு இருபுறமுமிருந்த வாழைத்தோட்டத்துக்குள் தேடித் திரிந்தனர். அந்த வாழைகளும் பிரேமா தன் கைகளால் நட்டவையாக இருக்கக்கூடும்.
விபத்தினை யாரும் நேரில் கண்டிருக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டுமே போக முடியுமான குறுகிய பாதை. சந்தியில் வைத்துத்தான் விபத்து நடந்திருந்தது. வாகனம் மோதிய பின்னரான பெரிய ப்ரேக் சத்தமும், ஒரு கூக்குரலும் சனங்களை அங்கு இழுத்துவந்திருந்தன.
முதலில் பொலிஸும், ஆம்புலன்ஸும் இங்கு வரவேண்டும். நான் வீட்டுக்கு ஓடினேன். நானும் அம்மாவும் மட்டுமே வசித்து வரும் வீட்டின் வாசலிலேயே பதற்றத்துடன் நின்றிருந்தார் அம்மா.
"அம்மா, விபத்தொன்று ''.
"ஓம்.தெரியும் மகன். நீங்க வரும்வரைக்கும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்."
"யாரெண்டு தெரியுமோ? நம்ம பிரேமா அக்கா "
"அடக் கடவுளே..அவளா?" அம்மாவின் கண்கள் சட்டென்று குளமாகின.
"ஓம்..பொலிஸுக்குச் சொல்லணும்"
நான் தொலைபேசியை நோக்கி நகர்ந்தேன். அம்மா அருகினில் வந்து தோளினைத் தொட்டார்.
"கொஞ்சம் இருங்க மகன்..இப்பவே கோல் எடுக்க வேணாம்.கொஞ்சம் இப்படி வாங்க"
கிட்டத்தட்ட என்னைக் குசினிக்குத் தள்ளிக்கொண்டு வந்தவர் சொன்ன தகவலைக் கேட்டதும் இருந்த பதற்றத்தில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"கொஞ்சமாவது அறிவிருக்கா அம்மா உங்களுக்கு? அங்க பொடியன்மாரெல்லாம் அவனைத் தேடிக்கொண்டிருக்காங்க..நாளைக்குப் பொலிஸ், கோர்ட்னு யாரு அலையுறது? பொலிஸ், கோர்ட்டை விடுங்க. பிரேமாட ஊர்க்காரங்களெல்லாம் விஷயம் தெரிஞ்சா நம்ம வீட்டு முன்னாடி வந்து நிப்பாங்க..அப்ப என்ன பதில் சொல்றது?''
"இல்ல மகன்..யாருண்டாலும் வேணுமுன்னு செய்வாங்களா? இவனென்ன? வீட்டை விட்டு வரும்போதே இப்படியொருத்தியக் கொல்லவேணுமெண்டு நேந்துக்கொண்டா வந்திருப்பான்? பார்த்தா சின்ன வயசு மாதிரி இருக்கான்."
"இப்ப எங்க அவன்?" இன்னும் என் கோபம் தணிந்திருக்கவில்லை.
"கிளினிக்குள்ள தான் இருக்கான்..இந்தாங்க சாவி..யோசிச்சு ஏதாவது நல்லதா செய்ங்க."
முதலில் கோபத்தை அடக்கிக்கொண்டு பொலிஸுக்கும் வைத்தியசாலைக்கும் விபத்து குறித்தும், மரணம் குறித்தும் அறிவித்தேன்.
சாவியால் கதவு திறபடும் சத்தம் கேட்டதும் நிலத்தில் சம்மணமிட்டு அமர்ந்து அழுதுகொண்டிருந்தவன் கலவரம் தேக்கிய முகத்தோடு எழுந்தான். இரு கைகளையும் கூப்பித் தன்னைக் காப்பாற்றும்படி உடல்நடுங்கும் பதற்றத்தோடு மன்றாடினான். அவன் முப்பதுகளின் ஆரம்பத்திலும், உயரமானவனுமாக இருந்தான். பிஜாமா சாறன் அணிந்து பத்திக் டிசைன் போட்ட சட்டை அணிந்திருந்தான். அம்மா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
ஊரை விசாரித்ததில் தொலைதூர நகரொன்றின் பெயர் சொல்லி அதனருகிலுள்ள ஒரு கிராமம் எனச் சொன்னான். அடையாள அட்டையையும், சாரதி அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட ரைஸ் மில்லின் பெயர் சொல்லி அதற்கு அரிசி லோடு கொண்டுவந்ததாகவும் இந்தப் பாதையில் போனால் சீக்கிரமாக டவுணுக்குப் போய்ச்சேர முடியுமென்று யாரோ சொன்னதை ஏற்று அப்பாதையில் போனதாகவும் சந்தியில் அவளது வருகையை எதிர்பார்க்காமல் அவசரமாக ப்ரேக் போட்டும் அவள் மோதுண்டு விழுந்து டயருக்குள் சிக்குண்டாள் எனவும் சொன்னான்.
"என்னைப் பொலிஸில் ஒப்படைச்சிடுங்க ஐயா. தெரியாத ஊரு. தெரியாத மனுஷங்க. அங்க நின்னா அடிச்சிடுவாங்கன்னு தெரியும். பொலிஸுக்குப் போகத்தான் இறங்கி ஓடிவந்தேன். இங்க பொலிஸ் எங்க இருக்குங்குற திசை கூடத் தெரியாது. உங்களோட டொக்டர் போர்டைப் பார்த்தேன். அதான் இங்க ஓடிவந்தேன். என்னைப் பொலிஸ்ல ஒப்படைச்சிடுங்க ஐயா " வார்த்தைகள் தடுமாறியவனாக சிங்களத்தில் சொல்லிமுடித்தான்.
நான் எதுவும் சொல்லாமல் கிளினிக் அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மாவிடம் அறைச் சாவியைக் கொடுத்தேன்.
"அம்மா ரூமைப் பூட்டிடுங்க..வெளிக்கதவையும் பூட்டிடுங்க.நான் அங்க போய்ப் பார்த்துட்டு வாறேன்.யார் வந்து கதவு தட்டினாலும் திறந்துடாதீங்க."
இவன் இப்பொழுது பெரும்பிரச்சினையாக மாறிப்போனான். அடைக்கலம் கொடுத்த அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தாலும், ஊரார்களிடமிருந்து மறைத்த காரணத்தாலும் இனி நானும் அவர்கள் கண்களில் குற்றவாளியாகப் பார்க்கப்படுவேன். இரு ஊரிலிருந்தும் வைத்தியத்துக்காக வரும் சனங்கள் குறைந்துவிடும்.
பிரேமாவின் கணவனுக்கும், ஊராருக்கும் தகவல் போயிருக்கவேண்டும். சர் சர்ரென்று ஆட்டோக்கள் வந்தவண்ணமும், அதிலிருந்து ஆட்கள் இறங்கி ஓடிவந்த வண்ணமுமிருந்தனர். லொறியின் முன்கண்ணாடியை யாரோ அடித்துநொருக்கியிருந்தனர். பக்கவாட்டுக் கண்ணாடிகளும் உடைசலுற்றுத் தொங்கிக் கொண்டிருந்தன.
நல்ல வேளை மேலும் விபரீதங்கள் நடக்கமுன் பொலிஸ் வந்துவிட்டிருந்தது. சடலத்தைச் சுற்றிச் செங்கட்டியொன்றால் வரையப்பட்டிருந்தது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படச் சடலம் காத்திருந்தது.
இனி நான் என்ன செய்வேன்? எதுவுமே புரியவில்லை. வந்திருக்கும் பொலிஸிடம் விடயத்தைச் சொல்லிவிடலாமா?வேண்டாம். அவர்களிலொருவரேனும் ப்ரேமாவின் ஊர்க்காரராக இருக்கும் பட்சத்தில் கடமையை விட இழப்பே மேலோங்கியிருக்கும். என்ன வேண்டுமானாலும் நடக்கச் சாத்தியங்களுண்டு.
வந்து நின்ற ஆட்டோவொன்றிலிருந்து அது நிறுத்தப்படமுன்னமே குதித்து இறங்கி, ஒடிவந்தான் சுனில். பிரேமாவின் கணவன். ஏற்கெனவே அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனம் அடங்காத் துயரத்தோடு ஓடிவரும் சுனிலை சடலத்தின் மேல் விழாமல் காத்துக் கொண்டது. கதறிக் கதறி சத்தமிட்டு அழுதான். தென்னை மரம் ஏறிக் கொண்டிருந்தவனுக்கு விஷயத்தைச் சொல்லிக் கூட்டிவந்திருந்தனர். உழைத்துக் கருத்த தேகத்தில் சட்டை இல்லை.
"பிள்ளைகள் ரெண்டும் ஸ்கூலிலிருந்து வந்துகேட்டால் நான் என்னடி சொல்வேன்? என்னடி நடந்துச்சு உனக்கு?"
அவனது ஓலம் வந்திருந்தவர்களை உசுப்பிவிட்டதில் அவனது ஊர் இளைஞர்களும் எனது ஊர் இளைஞர்களோடு சேர்ந்து சாரதியைத் தேடத்தொடங்கினர். குற்றவாளியை நான் தான் ஒளித்துவைத்திருக்கிறேன் எனத் தெரிந்தால் நாளை இதே ஒற்றுமை இனக்கலவரமாக மாறச் சாத்தியமிருக்கிறது.
யோசிக்க நேரமில்லை. பொலிஸார் விபத்தினை நேரில் கண்ட, முதலில் கண்ட சாட்சியங்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க நான் வீடுவந்து கதவு தட்டினேன். அம்மா உடனே திறந்தார்.
"பாவம் அவள். முந்தா நாள்தான் வந்து மாவிடிச்சிக் கொடுத்துட்டுப் போனாள். இந்த வருஷம் அவ மகன் அஞ்சாம் ஆண்டுச் சோதனை எழுதுறானாம். நல்லாப் பாஸாகினா வேறொரு பெரிய ஸ்கூல்ல சேர்க்கோணும், அதுக்கு மாசம் மாசம் காசு சேர்க்குறேண்டு சொல்லிக் கொண்டிருந்தா "
அம்மா தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருந்த எதையும் காதில் வாங்காமல் கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு அவனிருந்த அறைக்குப் போனேன். அம்மா தேநீர் ஊற்றிக் கொடுத்திருந்தார். இன்னும் அழுது கொண்டிருந்தவனை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்வழியால் கராஜுக்கு வந்தேன். சீக்கிரமாகக் காரின் பின்கதவு திறந்து உள்ளே சீட்டோடு ஒட்டி நிலத்தில் படுத்துக் கொள்ளச் சொன்னேன். அம்மாவைக் கைகூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டு உயர்ந்த உடலை மிகச் சிரமத்தோடு முழங்காலை மடக்கிக் குறுக்கி காரின் சீட் நிலத்தோடு ஒட்டிப் படுத்துக்கொண்டான்.
அம்மாவைப் பின்சீட்டில் ஏறி, அமர்ந்துகொள்ளச் சொன்னேன். காரை மெதுவாக வீதிக்கு எடுத்தேன். வீதியில் இன்னும் புதிது,புதிதாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். அனைவரது முகங்களும் புதுவிதமான அனுபவமொன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. நல்ல வேளை யாரும் காருக்குள் எட்டிப்பார்க்கவோ, குசலம் விசாரிக்கவோ இல்லை.
காரை முன்வீதி வழியாக எடுத்து பொலிஸ்நிலையம் நோக்கிச் செலுத்தினேன். ஏதோ தவறு செய்தவனைப் போல எனது நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. வீதியில் எதிர்நோக்கும் விழிகளெல்லாம் 'நீயெல்லாம் ஒரு வைத்தியனா?' எனக் கேட்பதைப் போல இருந்தது.
பொலிஸ் நிலைய முற்றத்தில் காரை நிறுத்தி, அம்மாவையும், அவனையும் வாகனத்துக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். விபத்தை அவர் அறிந்திருந்தார். ஸ்டேஷனிலிருந்து ஆட்கள் போயிருந்தனர். வந்த விஷயத்தை அவரிடம் சொன்னதும் நன்றி சொன்னார். எங்கேயோ தப்பித்து ஓடித் தேடவைத்துத் தமக்குத் தலைவலி கொடுக்க இருந்தவனைக் கூட்டிக் கொண்டுவந்து ஒப்படைத்தமை பெரிய சேவை எனச் சொல்லி அவனை அழைத்துவரச் சொன்னார்.
அம்மாவைக் காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு அவனை உள்ளே அழைத்துக் கொண்டுபோனேன். அழுதபடியே வந்தவனை அங்கு முறைப்பாடு கொடுக்கவந்தவர்கள், பொலிஸ்காரர்கள் வினோதமாகப் பார்த்தனர். இன்ஸ்பெக்டர் விபத்து நின்ற இடத்திலிருந்த பொலிஸாருக்கு எனது பெயர் சொல்லி, நான் குற்றவாளியைக் கூட்டிவந்து ஒப்படைத்ததைச் சொல்லி மேலும் தேட வேண்டாமெனக் கட்டளையிட்டார்.
அவனிடம் வாக்குமூலம் கேட்டு, எழுதி அதில் ஒப்பமிடச் சொல்லிவாங்கி, அவனை அங்கேயிருந்த ரிமாண்டில் அடைத்தார்கள்.அவன் என்னை நோக்கி ''மிகவும் நன்றி ஐயா. ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்கமாட்டேன் இந்த உதவியை'' என்றான். அவன் உடல் இன்னும் நடுங்கியபடியே இருந்தது.
இனிப் பிரச்சினையெல்லாம் எனக்குத்தான். எனக்கு மட்டுமே தான். எனது ஊருக்கும், அவளது ஊருக்கும் எப்படி முகம் கொடுக்கப் போகிறேன்? ஒரு வைத்தியனாக இருந்துகொண்டு, ஊர்மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது மன்னிக்க முடியாக் குற்றம்தானே?
வாசலில் ஒப்பாரியுடனான அழுகைச் சத்தம் கேட்டது. பிரேமாவின் கணவனை பொலிஸார் அழைத்துவந்திருந்தனர். அவனுடன் இன்னும் சிலபேர். சுனிலிடம் அவன் இறந்துபோன மனைவி பற்றிக்கேட்டு எழுதிக் கொண்டனர். குற்றவாளியைக் காட்டினர்.குற்றவாளி இருந்த ரிமாண்ட் அருகிலேயே நின்று கொண்டிருந்த என்னைக் கண்டதும் சுனில் அழுகையை நிறுத்தி ஓடோடிவந்தான்.
திட்டப்போகிறானா? சட்டையைப் பிடித்திழுத்துச் சண்டை போடப்போகிறானா? அவனுக்கு இப்பொழுது எனது சட்டையைப் பிடித்திழுத்துக் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. இறந்தவள் அவன் மனைவி. அவளது இறப்புக்குக் காரணமானவனுக்கு நான் அடைக்கலம் கொடுத்திருக்கிறேன்.
"நல்லவேலை செஞ்சீங்க ஐயா.என் பொண்டாட்டிய முட்டிட்டு தப்பியோடியவனை எப்படியோ பொலிஸில் பிடிச்சுக் கொடுத்துட்டீங்க.நீங்க இல்லன்னா இவனை நாங்க எங்க போய்த் தேடியிருப்போம்? நாங்க ஏழைங்க ஐயா. இந்தப் பொலிஸும் கொஞ்சநாள் தேடிப் பார்த்துட்டு கேஸை மூடியிருக்கும். ரொம்ப நன்றி ஐயா "
கைகூப்பி என்னை வணங்கிய அவனது கரங்களை எனது விரல்களுக்குள் அடக்கிக் கொண்டேன்.தோள் தொட்டு அணைத்துக் கொண்டேன். குற்றவாளியைக் காட்டியதும் உள்ளிருந்த அவன் தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும்,தன்னை மன்னித்து விடும்படியும் சுனிலிடம் வேண்டிக்கொண்டான்.
இனி அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு வைத்தியசாலைக்குப் போகவேண்டும்.இவர்களுக்குச் சீக்கிரமாகச் சடலத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.காருக்கு வந்து அம்மாவிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதாகச் சொல்லி ஏறிக் காரை இயக்கினேன்.
அம்மா அழுதிருந்தார்.விழிகள் ரெண்டும் சிவத்திருந்தன.ஏனென்று கேட்டேன்.
"உன் அப்பாவும் ஒரு ட்ரைவரா இருந்தவர்டா" என்றார்.
முற்றும்
|