அன்றும் என் அம்மாச்சியின் இருமல் சத்தம்கேட்டே படுக்கையை விட்டு எழுந்தேன். வடமாநிலத்திலிருக்கும் அம்மா அப்பா மாதமொருமுறை போன் போடுகையில் நான் மறந்ததே இல்லை அம்மாச்சியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று சொல்ல. எங்க அம்மாச்சி வீட்டின் திண்ணையில் அம்மாச்சியும், அம்மாச்சியின் சகவயதான பால்த்தாய், தங்கத்தாய், பின்னியம்மாள் மற்றும் பல காதருந்த மூழிகளும் ஊர்கதை பேசுவது வழக்கம். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் பால்த்தாயையும்,தங்கத்தாயையும் மில்க்மதர்,கோல்டுமதர் என்றே அழைத்தேன். ஊரிலேயே பெரிய திண்ணை எங்க அம்மாச்சி வீட்டின் திண்ணை. நடுவில் நான்கு படிக்கட்டு வாசல், இரண்டு பக்கமும் திண்ணை என அமைந்திருக்கும். கதவு நிலையில் சாய்ந்தபடி முதற்படிக்கட்டில் அம்மாச்சி உட்கார்வது வழக்கம், அம்மாச்சிக்கு இடதுபுறத்தில் நான். பால்த்தாயும்,தங்கத்தாயும் இரண்டாம் மற்றும் மூன்றாம் படிக்கட்டுகளில். பால்த்தாய் ஊர் சத்துணவுக் கூடத்து சமையல்காரி என்பதால் அம்மாச்சிக்கு மதிய வேளை உணவு நிச்சயம் தினமும். 11:10க்கு பள்ளி இடைவேளை நேரத்தில் சரியாக வந்துவிடுவாள் கி்றுக்குமுத்துப்பினாய் என்னும் முத்துப்பினாயம்மாள். தலையில் பெரிய இய்யச் சட்டியில் வடைகள் வைத்திருப்பாள். அவளின் அழுக்கான நகங்களை இன்றும் வெறுக்கிறேன்.
“ மேல் குளியாத சிரிக்கி “ என்றவளை அம்மாச்சி அழைப்பது வழக்கம். அவள் செய்துவரும் வடைகள் மிகவும் ருசியாக இருக்கும் தொக்குச் சிய்யம் எனது விருப்பம்.அம்மாச்சி வீட்டிற்கு பின்புறம் பள்ளிக்கூடம் அமைந்திருப்பதால் அடிக்கடி வந்து விடுவேன், அதற்க்காகவே சில சமயம் புத்தகங்களை வேண்டுமென்றே வீட்டில் வைத்து விட்டு வருவேன். அம்மாச்சி கந்து
வட்டிக்கு கடன் தருபவள் என்பதால் திண்ணைக் கிழவிகள் ஆமோதித்தே பழகிவிட்டனர், அம்மாச்சியின் பேச்சை. மாலை நேரங்களில் எதையேனும் வாயி்ல் போட்டு அரைத்துக் கொண்டே பேசுவது வழக்கம் பெரும்பாலும் தட்டங்காய் அல்லது அவித்த வேர்க்கடலை, காலை பொழுதுகளில் வெற்றிலை,சுருள் பாக்கு போட்டு எனக்கு வெற்றிலை மெல்லத் தெரியாது, அம்மாச்சி வாயில் சவைத்த வெற்றிலையை எடுத்து தருவாள் எடுத்து தருவாள் எனக்கு. கி்றுக்குமுத்துப்பினாய் வடை விற்ற காசில் மேற்பல் முன்வரிசையில் தங்கப்பல் பொருத்த போவதாக சொல்லிக் கொண்டிருப்பாள், பிற கிழவிகளால் கி்றுக்குமுத்துப்பினாயின் கனவு ஒரு மூண்றாந்தர கனவாகவே கருதப்பட்டது. கோடை காலங்களில் அம்மாச்சி வீட்டின் இரண்டு திண்ணைகளையும் உறுதியாக யாரேனும் ஆக்கிரமித்து கொள்வார்கள் இரவு உறக்கத்திற்கு. அம்மாச்சிக்கு உடல் நிலை சரியில்லை கடந்த ஒரு வருடமாக அவளின் இருமல் சத்தம் ஓய்ந்த நாள் இல்லவே இல்லை. ஒரு இரவில் மூன்று முறையாவது என் தூக்கத்தை கலைக்கும் அம்மாச்சியின் இருமல். அன்று பள்ளி தொடங்கிய முதல் அரை மணி நேரத்திலேயே வீட்டுக்கு போய் சமூக அறிவியல் புத்தகம் எடுத்து வருகிறேன் என்று கேட்டேன் உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டது. ப்ளோரா டீச்சரை முறைத்தப்படியே சமூக அறிவியல் புத்தகத்தை பையிலிருந்து எடுத்தேன். 11:10 மணி ஓசைக்காக காத்திருந்தது என் செவிகள், கி்றுக்குமுத்துப்பினாயின் தொக்குச் சிய்யம் காலியாகி விடக்கூடாது என்ற பிரார்த்தனை என்னுள், மழை பெய்ய தொடங்கியது மணி அடித்தது, அம்மாச்சி உயிரோடில்லை. அம்மா அப்பா வந்து சேர இன்னும் ஐந்து நாட்களாகும், அன்று மாலையே அம்மாச்சி அடக்கம் செய்யப்பட்டாள். நான் அழவில்லை அழவேயில்லை, நான் ஏன் அழவில்லை எதற்க்காக எனக்கு அழுகை வரவில்லையென்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. முந்தைய நாளின் மழை தொடர்ந்தது. தெருக்களில் யாரும் அன்று காகித கப்பல் விடவில்லை , கி்றுக்குமுத்துப்பினாயின் தொக்குச் சிய்யம் உட்பட எந்த வடையும் விற்றாகவில்லை, பால்த்தாயும் தங்கத்தாயும் வெற்றிலையற்ற வாயோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் படிக்கட்டுகளில் அமைதியாக. அம்மாச்சியின் இடம் விட்டு என்னுடைய இடத்தில் நான். ஒச்சம்மாவின் இடம் யாராலுமே நிறப்பமுடியாத ஒரு வெற்றிடமாகவே இருந்து வருகிறது.
முற்றும்
|