சகாதேவன் மற்றும் சகாக்ககள்
பத்தாம் வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் வகுப்பில் ஆக்டிவ் வாய்ஸ் பேசிவ் வாய்ஸ் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் கரும்பலகையைப் பார்த்து தங்களது நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டிருந்தனர். சகாதேவன் மட்டும் நோட்டுப்புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சுவரில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்திற்கு அருகே மாட்டியிருந்த சுவர்கடிகாரத்தை பார்த்து பார்த்து எதையோ எதிர்நோக்கிக் காத்திருப்பவன் போல சலித்துக் கொண்டான்.
ச்சே மணி பன்னண்டு ஆகப் போவது இன்னுமா ரெடியாகல?
சகாதேவன் நல்ல கட்டுமஸ்த்தாய் ஆறடியில் அரவான் சிலையைப் போல கம்பீரமாய் இருப்பான். பத்தாம் வகுப்பு வரை இருக்கும் இந்த அரசூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இவன்தான் பெரிய மாணவன். வயதிலும் சரி. உடல் அமைப்பிலும் சரி.
தண்ணீர் டேங்க் மீது ஏறி குழாயை சரி செய்வது கோவையிலையை கரியோடு சேர்த்து நசுக்கி அனைத்து வகுப்பு கரும்பலகையிலும் பூசுவது மதிய உணவு எடுத்துக் கொண்டு வராத நாட்களில் ஆசிரியர்களுக்கு கூட்ரோடு சென்று உணவு வாங்கி வருவது ஆசிரியர்களுக்கு வயிறு கலக்கிவிடும் நாட்களில் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் இருக்கும் சுத்துக்கொளத்து காட்டுக்கு அவர்களுக்கு துணையாக செல்வது என எந்த வேலையாக இருந்தாலும் சதா சகாதேவனைத் தான் கூப்பிடுவார்கள்.
சகாதேவன் அப்போதெல்லாம் வெறுப்பை மனதில் ஒளித்து வைத்தபடி சிரிப்பை மட்டும் முகத்தில் வைத்து ஆசிரியர்களுக்கு அந்த வேலைகளை செய்து கொடுப்பான்.
சில சமயம் அவனுக்குள்ளாகவே சலித்துக் கொள்வான்.
எதுக்கெடுத்தாலும் சகாதேவன் சகாதேவன். ஏன்னா நான்தான் ஸ்கூல்லியே பெரியவனாம். பெரிய பையன் அப்பிடிங்கிறதுக்காக எனக்கென்ன பத்துமார்க் அதிகமாவாபோடறாங்க?
அவன் அதிகம் நொந்து கொள்வது கணக்கு வாத்தியார் குமரேசனைத்தான்.
ச்சே இந்த குமரேசன் வாத்தியார் என்னத்த தான் திம்பாரோ? தெனமும் சுத்துக் கொளத்துக்கு பேல்றதுக்கு கூட்டினு போயிடராறு. அங்க என்ன சிங்கம் புலியா திரியுது, அப்படியே இருந்தாலும் அதுங்கெல்லாம் இவரப்பாத்து பயப்படாம இருந்தா போதாதா.
மற்ற ஆசிரியர்கள் சொல்லும் வேலைகளெல்லாம் சகாதேவனுக்கு வெறுப்பாய்ந்தான். இருக்கும். ஆனால் சத்துணவு பொறுப்பாளர் முர்த்தி சொல்லும் வேலைகள் மட்டும அவனுக்கு இனிப்பாய் இருக்கும்.
எப்போதெல்லாம் அவர் உதவிக்காக வேண்டி கிடங்கிற்கு சகாதேவனை அழைக்கின்றாரோ அப்போதெல்லாம் துள்ளிக் குதித்து ஓடுவான். காரணம் கிடங்கிற்கு சென்றால் இவனது பற்கள் முப்பத்திரண்டும் அரவை இயந்திரமாக மாறிவிடும். அரிசி, பருப்பு, காய்கறி என இருப்பதையெல்லாம் ஒரு மேய்ச்சில் மேய்ந்து விடுவான். சத்துணவு பொறுப்பாளர் மூர்த்தி அதைக் கண்டும் காணததுபோல விட்டுவிடுவார். ஆனால் ஒன்றை மட்டும் கராறாய் சொல்லிவிடுவார்,
இதப்பாரு சகாதேவா நீ எவ்வளவு வேணும்ன்னாலும் தின்னுக்க ஆனா வெளியில போகும்போது மட்டும் ஒரு துரும்பு கூட எடுத்துக்கிட்டு போகக் கூடாது. ஏன்னா இதெல்லாம் சர்க்காரு பொருளு சொல்லிப்புட்டேன், என்ன புரியுதா?
இந்த ஒருவார்த்தை போதாதா என்பது போல அவன் மலங்க மலங்க தலையாட்டுவான்.
சரி சார்! சரி சார்!
சத்துணவு பொறுப்பாளர் மூர்த்தி மூலம் கிடைக்கும் இந்த கிடங்கு மேய்ச்சல் சகாதேவனுக்கு வெறும் வெண்பொங்கலை போன்றதுதான். ஆனால் அவர் மூலம் கிடைக்கும் முட்டை உரிக்கும் மேய்ச்சல்தான் அவனுக்கு சர்க்கரை பொங்கலை போன்றது.
முட்டை உரிக்கும் மேய்ச்சல். அந்த மேய்ச்சலுக்காகத்தான் தன் வகுப்பில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போட்டிக் கொண்டிருக்கும் ஆக்டிவ் வாய்ஸ் பேசிவ் வாய்சை கூட எழுதாமல் அவன் மூர்த்தி வாய்சை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான்.
அப்பாடா மூர்த்தி வாத்தியார் வந்துட்டாரு!
அவன் நினைத்தது போலவே சத்துணவு பொறுப்பாளர் மூர்த்தி அப்போது வகுப்பை நோக்கி வந்தார். பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களிடம் கேட்டார்.
சார் ஒரு அஞ்சு ஸ்டூடன்ஸ் வேணும்சார்.
எதுக்கு?
சார் இன்னிக்கு சத்துணவுல முட்டை குடுக்கணும் அதான் உரிக்கிறதுக்கு.
ஓ.. சரி சரி! ஏம்ப்பா ஒரு அஞ்சு பேரு போங்கப்பா! அஞ்சு பேரு போதுமா சார்?
போதும் சார்.
சகாதேவன் முண்டியடித்துக் கொண்டு முன்னால் ஓடினான். அவனைத் தொடர்ந்து ரெங்கநாதன் பாண்டுரங்கன். வேலாயுதம், சங்கர் என நால்வர் அணிவகுத்துச் சென்றனர்.
சகாதேவன் மனதுக்குள் நினைத்துக கொண்டான். இன்னிக்கு எப்படியும் ஒரு அஞ்சு முட்டையாவது திங்கனும்.. அஞ்சு முட்டையா போனதடவையே ஆறு தின்னோமே இப்போ.. இப்போ அதவிட அதிகமாகத்தான் திங்கனும்.
சகாதேவன் முண்டியடித்துக் கொண்டு முட்டை உரிக்க வருவதற்கு காரணமே முட்டை தின்பதற்காகத்தான். ஆமாம். சிதம்பர ரகசியம் போல அது சகாதேவன் ரகசியம்.
அரசுப் பள்ளிகளில் சத்துணவோடு மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது (இருக்கிறது) அதன்படி இந்த அரசூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கம் அது வழங்கப்பட்டு வந்தது (வருகிறது).
இதில் விசேஷம் என்னவென்றால் சத்துணவு பொறுப்பாளர் மூர்த்தி அவர்கள் மாணவர்களுக்கு முட்டையை உரிக்காமல் வழங்கமாட்டார். அனைத்து மாணவர்களுக்கும் முட்டையை அவித்து தோளை உரித்துத்தான் சத்துணவோடு சேர்த்து வழங்குவார். முட்டைகள் ஒன்றிரண்டு என்றால் அவரே உரித்து விடலாம். ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்கும் முட்டையை ஒருவர் மட்டுமே எப்படி உரிக்க முடியும். சத்துணவு தயாரிக்கும் ஆயாக்கள் இரண்டுபேர்தான். அவர்களை அழைக்கலாமென்றால் அவர்களோ சத்துணவு தயாரிப்பதில் அடுப்போடு அடிதடி சண்டையில் ஈடுபட்டு கண்களை கசச்சிக் கொண்டு அழுது கொண்டிருப்பார்கள். மீறி அவர்களை அழைத்தால் சரியான நேரத்திற்கு மாணவர்களுக்கு சத்துணவு வழங்க முடியாது. எனவேதான் தலைமையாசிரியரிடம் சொல்லி முட்டை வழங்கும் நாட்களில் ஐந்து மாணவர்களை முட்டை உரிப்பதற்காக அவர் அழைத்துச் செல்வார்.
மூர்த்தி வகுத்த இந்த திட்டடத்தைத்தான் சகாதேவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டான். எப்படியெனில் முதல் தடவை மூர்த்தி அவர்கள் முடடை உரிப்பதற்காக ஐந்து மாணவர்களை அழைத்துச் சென்றார். அதில் சகாதேவனும் ஒருவன். அப்போது சகாதேவன் முட்டையை உரித்துக் கொண்டே இருக்கையில் திடீரென்று ஒரு முட்டை ஓட்டுடன் வெள்ளைக் கரு சேர்ந்தது போல உடைந்து விட்டது. பயந்தவாறு அவன் மூர்த்தியிடம் சொன்னான்.
சார் இந்த முட்டை ஒடஞ்சிடுச்சிசார் என்ன சார் பன்றது?
மூர்த்தி வெகு இயல்பாக சொன்னார்
ஒடைஞ்சா என்னபண்றது உன் வாயில போடறது.
இதைக் கேட்டு முடித்ததுதான் தாமதம். சகாதேவன் ஓட்டுடன் சேர்ந்து பிய்ந்து கொண்டு வந்த வெள்ளைக் கருவை தேங்காய் சில்லையை சுரண்டுவது போல அதைப் பல்லால் சுரண்டி எடுததான்.
அப்போது மூர்த்தி முட்டை உரிக்கும் பையன்களிடம் ஒரு வார்த்தை சொன்னார்.
இதப்பாருங்கப்பா முட்டை ஒடைஞ்சிடுச்சின்னா கீழகீழ போட்டுடாதீங்க. அப்படியே சொரண்டி தின்னுடுங்க. ஒரு முட்டை என்னா வெல விக்குது தெரியுமா?
இந்த ஒரு வார்த்தைதான் சகாதேவனுக்குள் ஒரு மிருகத்தையே எழ வைத்து விட்டது. அதிலிருந்து முட்டைகளை வேண்டுமென்றே உடைக்க ஆரம்பித்தான். பெயர்ந்து வரும் வெள்ளைக் கருவை தின்ன ஆரம்பித்தான்.
இதற்காகவே இப்படி முட்டைகளை வேண்டுமென்றே உடைத்து வெள்ளைக்கரு திண்பதற்காகவே அவன் எப்பொழுது சத்துணவில் முட்டை வழங்கும் நாள் வரும் என்று காத்திருப்பான்.
இன்று சத்துணவில் முட்டை வழங்கும் நாள். மூர்த்தி அழைத்ததிலிருந்து சகாதேவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
ஏம்ப்பா போங்கப்பா ஆளுக்கொரு முட்டையா கையில எடுத்தீங்கன்னா சீக்கிரம் வேலை முடிஞ்சிடும். மூர்த்தி மாணவர்களிடம் முட்டையை உரிக்கச் சொல்லிவிட்டு புகையில்லா இடத்தைத் தேடி செல்ல, அவர்கள் அனைவரும் தலையாட்டினர்.
சரி சார்! சரி சார்!
சின்னப்பையன் கடையில் பிரியாணி கிண்டும் பாத்திரத்தைப் போல இருந்த அந்த அகன்ற பாத்திரத்தில் நுரை தளும்பியவாறும் வெடித்துச் சிதறியதை போலவும் முடடைகள் தண்ணீரில் கிடந்தன. அதன் அருகே ஓடுகளை போடவும் உரித்த முட்டைகளை போடவும் என இரண்டு அகன்ற ஈயப்பாத்திரங்கள் இருந்தன.
சகாதேவன் தன் வேலையைக் காட்ட ஆயத்தமானான். எடுத்த எடுப்பிலேயே முதல் முட்iயை உடைத்தான். வெள்ளைக்கரு ஓட்டுடன் சேர்ந்து பிய்ந்து வந்தது. தன் கூரிய பற்களால் வாயில் வைத்து சுரண்டினான்.
பாண்டுரங்கள், ரெங்கநாதன், சங்கர், வேலாயுதம் நால்வரும் குத்த வைத்த பெண்ணைப்போல குனிந்தபடியே முட்டை உரித்தவாறு இருந்தனர்.
சகாதேவன் அடுத்த முட்டையை எடுத்து நீரில்லா நிலம்போலவெடித்து வாய்பிளந்து கிடந்த அந்த முட்டையில் தன் பெருவிரலை நுங்குக் கண்களில் நுழைப்பதைப் போல நுழைத்து வேண்டுமென்றே உடைத்தான். அவன் எதிர்பார்த்ததைவிட மஞ்சள்கரு தெரியுமளவிற்கு வெள்ளைக்கரு வெடுக்கென பிளந்து கொண்டு வந்தது.
அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தான். மூர்த்தி வீதியை பார்த்தபடி கோழி றெக்கையால் காது குடைந்து கொண்டு இருந்தார். மற்ற மாணவர்கள் நால்வரும் முட்டை உரிப்பதில் மும்முரமாய் இருந்தனர்.
யாரும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன். அப்படியே லபக்கென வாயில் போட்டான். மென்றான்.
அப்போது திடீரென்று தலைநிமிர்ந்த சங்கர் வாயசைத்தபடி இருந்த சகாதேவனை பார்த்தான். கேட்டான்.
டேய் சகாதேவா இன்னடாடா திங்கிற எனக்குக் கொஞ்சம் குடுடா.
மென்றுகொண்டே சகாதேவன் சங்கருக்கு பதிலளித்தான்.
ஒண்ணுமில்லடா!
ஒண்ணுமில்லயா? வாய இந்த கொதப்பு கொதப்புற ஒன்னுமில்லேங்கிற.
முழுவதுமாய் முட்டையை முழுங்கியவன் வாயைப் பிறந்து காட்டிச் சொன்னான்.
ம் . . . பாரேன் ஒன்னுமில்லடாங்கிறேன்.
டேய் நான் பாத்தண்டா நீ தின்னத அப்படியே ஒரேடியா பீத்திக்காதடா குடுக்கமாட்டேன்னா குடுக்கமாட்டேன்று சொல்லிட்டுப் போ. உனக்கு ஒரு காலம் வரும் போது எனக்கு ஒரு காலம் வராதா?
சகாதேவனுக்கு பக்கென்றது. சங்கர் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்தது. ஆமாம் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வின்போது சங்கர் தன் விடைத்தாளை காட்டியதின்பேரில்தான் சகாதேவன் தேறி இருக்கிறான். இல்லையென்றால் ஐந்தாம் வகுப்புவரை உள்ள தொடக்கப் பள்ளியையே எட்டு ஆண்டு காலம் படித்தவன் இப்படி பத்தாம் வகுப்பு வரை எப்படி வந்திருக்க முடியும். அதுவுமில்லாமல் இந்த வருடம் பத்தாம் வகுப்புவேறு பொதுத்தேர்வில் காட்டாமல் போய்விட்டால் அவன்.
எனவே சங்கரை சமாதானம் செய்யும் பொருட்டும் தனக்கு வேறு வழி தெரியாததாலும் அவனிடம் சகாதேவன் தன் சிதம்பர ரகசியத்தை சொன்னான்.
இது ஒண்ணுமில்லடா சங்கரு..
எல்லாவற்றையும் வாயைப்பிளந்தபடி கேட்ட சங்கர் ஆவலோடு சகாதேவனைப் பார்த்து கேட்டான்.
ஏண்டா மூர்த்தி வாத்தியார் பார்த்தா திட்டமாட்டாரு?
திட்டாம கொஞ்சுவாராக்கும். எவன்டா இவன் அவருக்குத்தான் தெரியாமதான் திங்கணும். ஒரு வேளை அப்படியே திங்கும்போது பார்த்துட்டார்னா சார் முட்டை ஒடைஞ்சிடுச்சி சார். அப்பிடின்னு சொல்லிட வேண்டியதுதான்.
டேய் சகாதேவா இப்பதான்டா எனக்குத் தெரியுது. நீ ஏன் மூர்த்தி வாத்தியார் முடடை உரிக்க கூப்பிட்டார்னா முந்திர்க்கொட்ட மாதிரி முன்னாடி முன்னாடி போய் நிக்கிறன்னு.
சரி சரி பல்லன் பாண்டுரங்கனுக்கு தெரிஞ்சிடப் போவுது. தெரிஞ்சா அவ்வளவுதான் டமாரம் வாயன் ஊருக்கே தந்தியடிச்சிடுவான்.
இருவரும் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்தார். யாரும் கவனித்ததாக அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, இப்போது இருவரும் வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். ஆமாம் சங்கருக்குள் இருந்து குள்ளநரியும் சகாதேவனுக்குள் இருந்த குள்ளநரியும் சேர்ந்து முட்டைகளை சுவை பார்க்கத் தொடங்கின.
பாவம் சகாதேவன் தாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை அறியாதவன் போதும். ஆமாம் அவனும் சங்கரும் பேசிக்கொண்டிருந்ததை பாண்டுரங்கன் எப்படியோ கேட்டுவிட்டான். கேட்டது மட்டுமல்லாமல் மற்ற இருவரிடமும் அந்தச் செய்தியை அறிவித்துவிட்டான். ஆனால் என்ன பயன் அதற்குள்தான் அனைத்து முட்டைகளையும் உரித்தாயிற்றே. இனி எப்படி அவர்களால் முட்டை திங்க முடியும். எனவே அடுத்த முட்டை உரிக்கும் நிகழ்வில் தங்கள் கைவரிசையை காட்டியாக வேண்டும் என மூவரும் நினைத்துக் கொண்டனர்.
அப்போது சகாதேவன் எங்கே தன் உதடுகளின் ஓரங்களில் முட்டை தின்றதற்கான அடையாளங்கள் இருந்துவிடுமோ என்று தன் வாயைத் துடைத்தபடி மூர்த்தியிடம் கூறினான்.
சார் வேலை முடிஞ்சது சார். நாங்க போலாமா சார்?
நல்லா சுத்தமா உரிச்சிட்டிகளப்பா! தோளுகீளு இருக்கப்போவுது. பாவம் பசங்க வயித்துக்குள்ள போயிட்டா வம்பாயிடும். குரல் கொடுத்தவாறே அவர்கள் அருகில் வந்த முர்த்தி ஐவருககும் ஒரு ரூபாய் வீதம் ஐந்து ரூபாயை வழங்கினார். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்த வெளியேறினர்.
நாட்கள் ஓடியது. அதுவரை சகாதேவன் மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முட்டை உரிக்கும் வேலைக்கு முந்தைய முட்டை உரித்த நாளிலிருந்து சங்கர், பாண்டுரங்கன். வேலாயுதம், ரெங்கநாதன் என நால்வரும் எப்போது மீண்டும் சத்துணவில் முட்டை வழங்கும் நாள் வரும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அப்படியே அவர்கள் எதிர்பார்த்தது போலவே அடுத்த முட்டை உரிக்க முண்டியத்துக் கொண்டு ஓடியது. அதே முட்டை அவித்த பாத்திரம். அதே தோள் உரித்துப் போடும் பாத்திரம். ஐவரும் முட்டை உரிக்க (உண்ணி) ரவுண்டு கட்டி அமர்ந்தனர். மூர்த்தி பசங்களிடம் முட்டையை உரிக்கச் சொல்லிவிட்டு கிடங்கிற்குள் சென்றார்.
காயந்தமாடு கம்மங்கொல்லையில் பாய்ந்ததுபோல பாண்டுரங்கன் எடுத்த முதல் முட்டையையே உடைத்து தன் பற்களுக்கு பலி கொடுத்தான். ஐந்து முட்டை நன்றாக உரித்தால் அதில் ஒன்றை சுவை பார்க்கத் தொடங்கினான். வேலாயுதமும் ரெங்கநாதனும் நீயா நானா என்பது போல தங்களது போக்கில் தங்கள் கை வரிசையை காட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது சகாதேவன் அவர்களின் வாயசைவைப் பார்த்துவிட்டான். அதுபற்றி பாண்டுரங்கனிடம் கேட்டான்.
டேய் பல்லா இன்னாடா திங்கிற?
பாண்டுரங்கன் சர்வசாதாரணமாக சொன்னான்
ம். தெரியல முட்டை திங்கிறேன்.
சங்கரும் சகாதேவனும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
டேய் மூர்த்தி சாரு நம்பள முட்டை உரிக்கத்தான் கூப்பிட்டாரு. திங்கறதுக்கு இல்ல தெரியுமா?
டேய் எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீ வேலையைப் பாருடா.
பாண்டுரங்கன் எகத்தாளமாக பேசுவதிலிருந்தே சகாதேவனுக்கு ஏதோ பொறிதட்டியது.
டேய் சாருக்கிட்ட சொல்லிடுவண்டா.
சொல்லிக்கோ நாங்க மட்டுமா மாட்டுவோம். நீயும் தான் மாட்டுவ.
இப்போது சகாதேவன் நாக்கு தழுதழுக்க கேட்டான் ஏன் நான் ஏன் மாட்டுவேன்.
தம்பியார இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட உடாத நீ எதுக்கு முட்டை உரிக்க வரேன்னு எங்களுக்குத் தெரியும். நீ தின்னா சரி நாங்க திண்ணா தப்பா.
சகாதேவன் பேயறைந்தவாறு முழித்தான். சங்கரை பார்த்து முறைத்தான். சங்கர் நான் சொல்லவில்லை என்பதுபோல கையசைத்தான்.
பாண்டுரங்கன் மீண்டும் தொடர்ந்தான்.
இப்ப சொல்லு சகாதேவா. போய் சாருகிட்ட சொல்லுவோமா?
சகாதேவன் பொறியில மாட்டிக்கொண்ட எலியைப் போல தன்னை உணர்ந்தான். பின் பாண்டுரங்கனிடம் சொன்னான்.
சரிடா பல்லா இப்ப என்ன பண்ணனும்ங்கிறே?
ஆங். அப்படி வா வழிக்கு? நீ எங்களை கண்டுக்காத. நான் உங்களக் கண்டுக்காம விட்டுறேன்.
சகாதேவன் வேறு வழிதெரியவில்லை. மறுத்தால் மூர்த்தி வாத்தியாரிடம் நாமும் மாட்டிக் கொள்ள நேரிடும். எனவே ஒத்துக் கொண்டான்.
சரிடா பல்லா. ஆனா ஒண்ணு இதான் சந்தர்ப்பம்னு பூந்து வெளையாடிடகூடாது. அப்புறம் எல்லோரும் மாட்டிக்குவோம்.
பாண்டுரங்கன் சொன்னான்.
அதெல்லாம் ஒண்ணும் தெரியாது கவலப்படாத.
இப்போது ஐவரும் தங்களது வேலைகளை கவனிக்கலானார்கள். உரிக்க வேண்டிய முட்டைகள் காலியாகிக் கொண்டிருந்தன. எப்படியோ ஒரு வழியாய் அனைத்து முட்டைகளையும் உரித்து முடித்தார்கள். சகாதேவன் உரித்த முட்டைகளை உற்று நோக்கினான். கிட்டத்தட்ட முக்கால்வாசி முட்டைகள் உடைந்த முட்டைகளாக இருந்தன. அப்படியே வைத்தால் மூர்த்தி வாத்தியார் சந்தேகப்படுவார். சகாதேவன் யோசித்தான். உடைந்த முட்டைகளையெல்லாம் தெரியாதபடி அடியில்போட்டு நல்ல முட்டைகளை மட்டும் மேலே வைத்து ஜோடித்தான். வேலை முடிந்து விட்டதை கூற மூர்த்தியை தேடினான். அவர் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பதைப் போல வீதியில் நின்று கொண்டிருந்தார். சகாதேவன் அவர் அருகில் சென்று சொன்னான்.
சார் வேலை முடிஞ்சிருச்சி சார். முடிஞ்சிருச்சா. சரி இந்தா ஆளுக்கு ஒரு ரூபா எடுத்துங்குங்க என்று அவனிடம் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினார்.
அதை வாங்கிக் கொண்டவன் கேட்டான்
யார் சார் வர்றாங்க இன்னிக்கு?
ம்.. டவுன்ல இருந்து அதிகாரிங்க வர்றாங்க.
தலைமை ஆசிரியர் வந்த அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வகுப்பாக காட்டிக்கொண்டு வந்தார். கடைசியில் ஆரம்பித்த இடமான பள்ளி அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.
அதிகாரிகள் மூவரும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். பின் அதிகாரிகளிலேயே மூத்தவராக இருந்தவர் சொன்னார்.
சரி ஓ.கே! சத்துணவுக்கு டைம் ஆயிடுச்சில்ல பெல்லு அடிச்சிருங்க.
பெல் அடிக்கப்பட்டது. வழக்கம் போலல்லாமல் மாணவர்கள் இரண்டு வரிசையாக அமைதியான முறையில் சத்துணவு வாங்க நின்று கொண்டிருந்தனர்.
வழக்கமாய் செரிமானமாகாதவன் வாந்தி எடுத்ததைப் போல் இருக்கும் சத்துணவு இன்று மாட்டுக்களி போட்டு கிண்டிய கேப்பக்கலியைப் போல திடமாய் வாசனையாக இருந்தது.
ஆளுக்கொரு வரிசையாய் ஆயாக்கள் இருவரும் சத்துணவு வழங்க. மூர்த்தி ஒவ்வொரு மாணவன் சத்துணவுத் தட்டிலும் முட்டைகளை வைத்தார்.
அருகே நின்று கொண்டிருந்த அதிகாரி ஒருவர் என்ன நினைத்தாரே திடிரென்று மூர்த்தியை நகரச் சொல்லிவிட்டு அவர் முட்டை வழங்க ஆரம்பித்தார்.
சகாதேவன் ஜோடித்து வைத்த நல்ல முட்டைகள் ஒவ்வொன்றும் காலியாகிவிட்டது.
இப்போது அவர் கையில் உடைந்த முட்டை கவனித்தாரோ, கவனிக்கவில்லையோ ஒரு மாணவனுக்கு வழங்கிவிட்டார்.
அடுத்த ஒரு உடைந்த முட்டை. இப்போது முட்டை உடைந்திருப்பதை கவனித்துவிட்டார். என்ன நினைத்தாரோ குடுகுடுப்புக்காரனைப் போல் அதை ஒரு சுழட்டிப் பார்த்தார்.
அடுத்து.. அடுத்து .. அடுத்து.. எடுக்கின்ற முட்டையிலெல்லாம் வெள்ளைக்கரு பாதி உடைந்ததுபோலவே இருக்கவே. பாத்திரத்தில் இருந்த முட்டைகளை ஒருமுறை உற்று நோக்கினார். அவர் எதிர்பார்த்ததைவிட அனைத்து முட்கைளும் வெள்ளைக்கரு உடைந்தது போலவே இருக்கவே ஆவேசப்பட்டு மூர்த்தியின்மேல் பாய்ந்தார்.
யோவ் மூர்த்தி என்னய்யா இது? ஒவ்வொரு முட்டையிலும் கிட்டத்தட்ட பாதி மூட்டையைக் காணோம்.
மூர்த்தி பதற்றத்துடன் பாத்திரத்தைப் பார்த்தார். அதிகாரி சொன்னதின் அர்த்தம் புரிந்தது. பின் தழுதழுத்தாவறு சொன்னார்.
சார் அது வந்து...
என்னய்யா வந்து போயி ஒரு முட்டையை ஒழுங்கா வேகவெச்சு உரிக்கத் தெரியாதா உங்களுக்கு?
சடாரென ஆயாக்கள் பக்கம் திரும்பியவர் கேட்டார். ஏம்மா முட்டையை நீங்கதான உரிச்சீங்க. ஆயாக்கள் இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தனர்.
ஏன் அவரப் பார்க்கிறீங்க. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. ஒரு ஆயா பயந்தவாறே சொன்னார். ஆமாம் நாங்கதான் உரிச்சோம்.
ம்.. ம். ஏம்மா உங்க வீட்டுலயெல்லாம் இப்படித்தான் செய்வீங்களா. இருவரும் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டனர்.
பின் மூர்த்தி பக்கம் திரும்பியவர்
ஏன் மூர்த்தி இதையெல்லாம் கண்டிக்கமாட்டிங்களா? கவர்மென்ட் சொத்துன்னா உங்களுக்கெல்லாம் எளக்காரமா போச்சா? ஒரு முட்டை என்ன வெலை விக்குது தெரியுமா?
சரி சரி இனிமே இப்படி நடந்துக்காம பாத்துக்குங்க.
அதிகாரிகள் அங்கிருந்த வெளியேறினர்.
தன் கீழ் வேலை செய்யும் பணியாட்கள் முன்னிலையிலும் மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படவே மூர்த்திக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சகாதேவனையும் சகாக்களையும் பின்னியெடுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் நிதானமாய் யோசித்தவர் அந்த கோபத்தில் கொஞ்சம் கூட நியாயமில்லே என்பதை உணர்ந்தார்.
அப்போது அங்கே சகாதேவனையும் அவன் சகாக்களையும் தேரில் பூட்டிய குதிரைகள் போல முன்னே விட்டு தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் அவர்கள் பச்சைக் காட்டாமணிக் குச்சியால் அவர்களை விளாசியபடி பின்னே வந்தார்.
போங்கடா போயி சாருக்கிட்ட மன்னிப்பு கேளுங்க. சார் இவனுங்கதான் சார் எல்லாத்துக்கும் காரணம். தலைமை ஆசிரியர்.
மூர்த்தி சலித்தவாறு சொன்னார்.
அவனுங்கள சொல்லி என்ன சார் பிரயோஜனம். எல்லாம் என் தப்பு சார். வெளையாட்டு பசங்ககிட்ட அதுவும் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட வேலை வாங்கினது என் தப்புத்தான் சார்.
தம்பி நீங்க போங்கப்பா.
சகாதேவனும், சகாக்களும் மூக்கை உறிஞ்சியபடியே ஒட்டுமொத்தமாய் மூர்த்தியிடம் நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டனர்.
சார் எங்கள மன்னிச்சிடுங்க சார்.
மூர்த்தி சகாதேவனின் தோளைத் தட்டியபடியே சொன்னார்.
சரி சரி போங்கப்பா.
ஐவரும் அங்கிருந்து வெளியேறினர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்த அரசூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மாணவர்களாகவும் ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவும் மட்டுமே இருந்தனர்.
குமரேசன் வாத்தியார் சுத்துகொளத்துக்கு கழிவறை செல்வதற்கோ, இல்லை மதிய உணவு எடுத்துக் கொண்டு வராதவர்கள் உணவு வாங்கி வரச் சொல்லியோ யாரும் சகாதேவனையோ இல்லை வேறு எந்த மாணவனையோ அழைக்கவே இல்லை.
முக்கியமான விஷயம் அடுத்து வந்த முட்டை வழங்கும் நாளில் மாணவர்கள் எல்லோரும் முட்டைகள் அப்படியேதான் வழங்கப்பட்டது. உரிக்கப்படவே இல்லை.
அ.வ. உத்திரக்குமரன்
அரசூர்.
|