நிலா
ஆறுமுகமும், ஏழுமலையும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி எட்டைத் தாண்டி விட்டிருந்தது. யாரும் விழித்து விடாத வண்ணம் ரெங்கநாதன் மெதுவாக எழுந்தார். கதவைத் திறந்து வெளியே வந்தார். தெருவில் மக்கள் கட்டிலைப் போட்டும் பாய்களை விரித்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மனித நடமாட்டமே இல்லை. இதுதான் சமயம் ஆறுமுகமும், ஏழுமலையும் தூங்கும் போதே இந்தக் காரியத்தை செய்தால்தான் உண்டு. விழித்துக் கொண்டால் அவ்வளவுதான் வீட்டை போர்க்களமாக்கி விடுவார்கள்.
வட்ட வடிவமாய் சுருண்டு அந்த அமாவாசை இரவிலும் பளிச்சென்று ஒளிவீசியபடி தன்நிலை மறந்து கிடந்த அந்த நிலாவை சடாரென தன் கைகளால் அள்ளித் தூக்கினார். தயாராக வைத்திருந்த சிறிய கோணிப்பையில் அதை தூக்கிப் போட்டு விறுவிறு என்று தோளில் போட்டபடி நடந்தார். ஊர் எல்லையைத் தாண்டி அதனைத் தூக்கிவீசிவிட்டு மீண்டும் ஊரை நோக்கி நடந்தார். சுடுகாட்டுக்கு அருகில் வந்தவர் என்ன நினைத்தாரோ ஊரை ஒட்டி ஓடும் ஆறுத்தண்ணீரில் கால்களை கழுவினார். பின் மீண்டும் தனக்குத்தானே பேசிக்கொண்டே வீட்டை வந்தடைந்தார். கொண்டு வந்த கோணிப்பையை விரித்து திண்ணையிலேயே படுத்தார்.
''அப்பா சனியன் தொலஞசது, இனிமே நிம்மதியா இருக்கலாம். காலையில பசங்க கேட்டா என்ன பதில் சொல்றது? ரெங்கநாதனுக்கு எந்த யோசனையும் தோன்றவில்ல. தூக்கம் தான் வந்தது. சரி காலை விஷயத்தை காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கவுந்து படுத்தார்.
காலை ரெங்கநாதனின் மனைவி மீனாட்சி வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் தெளித்துக் கொண்டே எதையோ பார்த்தவர் உள்ளே பட்டர் பிஸ்கட்டை டீயில் நனைத்து வாய் நிறைய தின்று கொண்டிருந்த தன் மகன்களை கூப்பிட்டாள்.
''டேய் பெரியவளே. சின்னவளே இங்க வாங்களேன் - இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆறுமுகமும். முதல் வகுப்பு படிக்கும் ஏழுமலையும் வெளியே ஓடி வந்தார்கள்.
பாருங்கடா நம்ம நெலாவ சாம்பல அள்ளி பூசிக்கிட்டிருக்கு. சிரித்தவாளே மீனாட்சி நிலாவைக் காட்ட ஆறுமுகமும், ஏழுமலையும் நிலாவின் தோற்றத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அண்ணனும் தம்பியும் நிலாவை ஆளுக்கொரு பக்கமாக பிடித்து குலுக்கினார்கள். அப்போது ஏழுமலை ஏதோ சந்தோஷம் வந்தவனாய் தன் அம்மாவிடம் கேட்டான்.
''அம்மா காலையிலேயே நிலா எங்கம்மா போயிட் வருது?
''ம்... விடிஞ்சிருச்சில்ல அதான் காலையில வெளிய போயிட்டு வருது, சரி சரி அந்த மனுஷன எழுப்புங்க. விட்டா பத்து மணி வரைக்கும் தூங்கும்.
''அப்பா, அப்பா, இருவரும் ரெங்கநாதனை எழுப்பினார்கள். கண்களை கசக்கிக் கொண்டு புலம்பியபடி எழுந்தவர். ஒரு விநாடி அதிர்ச்சியோடு தன் தலைமை பின்னோக்கி இழுத்துக் கொண்டார். காரணம் நிலா என்கிற அந்த வெள்ளைநிற நாய்க்குட்டி அவர்முன் முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்ததுதான்.
ரெங்கநாதன் குழம்பிப் போனார்.
''இது எப்படி திரும்பி வந்துச்சி?
நிலா அவரை முறைத்தபடியே இருந்தது. அந்த முறைப்புக்கு அர்த்தம் ''நீ இல்லடா உன் அப்பன் வந்தாகூட என்ன ஒண்ணும் பண்ண முடியாதுடா என்று ரெங்கநாதனைப் பார்த்து கேட்பது போலிருந்தது. ஆறுமுகமும் ஏழுமலையும் அப்பனைக்குலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்தார்கள்.
''அப்பா அப்பா பாருப்பா. காலையிலேயே நிலா எங்க போய்ட்டு வந்ததுன்னு தெரியல? ஓடம்பெல்லாம் சாம்பல அள்ளி பூசிக்கிட்டு வந்திருக்கு.''
ரெங்கநாதன் குற்ற உணர்வோடு பிள்ளைகளையும், நிலாவையும் கண்கொண்டு பார்க்க முடியாமல் திகைத்தார். எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என்று நினைத்தார்.
''அது, அது ஒண்ணுமில்லப்பா எங்கியாவது குப்பையை கௌறிட்டு வந்திருக்கும் அதான். சரி சரி போங்க பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு போய் குளிங். பிள்ளைகளை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.
இது எப்படி திரும்பி வந்திச்சி?
ஒரு வாரத்திற்கு முன்பு ரெங்கநாதன் தன் குடும்பத்தோடு காட்டுக்குள் இருக்கும் தங்கள் குலதெய்வமான அய்யனாரப்பனுக்கு படையல் போட்டுவிட்டு திரும்பியபோதுதான் மெயின்ரோட்டை ஒட்டி கட்டப்பட்ட அந்த அரசூர் பயணியர் நிழற்குடையில் ஆறுமுகமும், ஏழுமலையும் அந்தக் காட்சியைக் கண்டார்கள்.
ஏழு குட்டிகளை ஈன்ற தாய்நாய் ஒன்று தன் குட்டிகளையெல்லாம் விட்டுவிட்டு எங்கேயோ சென்றிருந்தது. சிறுவர்கள் இருவரும் கண்களை மூடியபடி முனகிக் கொண்டிருந்த நாய்க்குட்டிகளை கண்களை விரித்து ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ஏழுமலை நம் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு போகலாம் என்று தன் அம்மாவிடம் கேட்டான். ரெங்கநாதனோ கராறாக கூறினார்.
''நாய் கீய்ன்னு கேட்ட மவனே கால ஒடிச்சி பூடுவேன். படிக்கிற பையனுக்கு நாய்க்குட்டி எதுக்குடா?
ஏழுமலை விடவில்லை அங்கேயே மண்ணில் விழுந்து அரண்டு புரண்டு அடம்பிடித்தான். மீனாட்சியும் ரெங்கநாதனை பிடித்து சரமாரியாக ஏறினாள்.
''அவன் என்ன புலிக்குட்டியா கேட்டான், நாய்க்குட்டிதானே கேட்டான்.
டேய் சின்னவனே போடா ஞனக்கு எது புடுச்சிருக்கோ போய் தூக்கினு வாடா ஆறுமுகமும் ஏழுமலையும் நாய்க்குட்டிகளுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். கூடி விவாதித்து முயல்குட்டி போன்று மொசு மொசுவென்றிருந்த ஓர் வெள்ளைக்குட்டியை தூக்கினார்கள்.
ரெங்கநாதன் மீனாட்சியை முறைத்தார். இதப்பாருடி நான் சொல்ல சொல்ல கேக்காம, அத தூக்கினு வர்றீங்க. நாளைக்கு நாய் கடிச்சிடிச்சி பேய்கடிச்சிடிச்சின்று எங்கிட்ட வந்தீங்க. ஆத்தானையும், புள்ளையும் சேர்த்து வச்சி ஒதப்பேன் ஆமாம்.
அன்று இரவு வீட்டு வாசலில் ரெங்கநாதன் கட்டிலைப்போட்டு வானத்தைப் பார்த்தபடி படுத்திருக்க. அருகில் வாசல் தரையில் பாயை விரித்து மீனாட்சியும், சிறுவர்களும் நாய்க்குட்டியை கொஞ்சியபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படியே நாய்க்குட்டிக்கு பெயர் வைப்பது குறித்து அவர்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஏழுமலை ''அம்மா விக்கின்று பெயர் வைக்கலாம்மா? என்றான்.
ஆறுமுகமும் விக்கி வேணாம்மா டைகர்னு வைக்கலாம்மா, என்றான்.
ஏழுமலை இல்லை விக்கிதான்.
ஆறுமுகம் இல்ல டைகர்தான். இருவருக்குள்ளும் மோதல் நடக்க, மீனாட்சி வெள்ளித்தட்டாய் ஒளிவீசியபடி இருக்கும். நிலாவைப் பார்த்து ஏதோ யோசனையில் இருக்கும் தன் கணவனை உலுக்கினாள்.
''ஏங்க இங்க ஒரு களேபரமே நடந்திட்டிருக்கு நீங்க என்னடான்னா முட்டாய் கடைய வெறிச்சிப்பார்த்த பட்டிக்காட்டான் மாதிரி நெலாவையே பார்த்துக்கிட்டிருக்கீங்க..?
ஆமாம் ஓம்புள்ளைங்க ரெண்டு பேரும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையைப் பத்தி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டிருக்கானுங்க. அதக்கண்டுக்காம நாங்க விட்டுட்டோம். அடி போடி இவள, இன்னிக்கு பௌர்ணமி பாரு எப்படி பளிச்சின்னு நிலா காயுதுன்னு.
இன்னைக்கு என்னன்னு சொன்னீங்க. மீனாட்சி ஆர்வத்தோடு கேட்டாள்.
''ஏன்டி என்னாச்சி? இன்னைக்கு பௌர்ணமின்னு சொன்னேன்.
மீனாட்சிக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. பிள்ளைகளைப் பார்த்து சொன்னாள்.
''சரிடா விக்கியும் வேணாம். டைகரும் வேணாம், அம்மா ஒரு பேரு சொல்லட்டா, ம் ம். இருவரும் தலையாட்டினார்கள்.
இன்னைக்கு பௌர்ணமி, பௌர்ணமியான இன்னைக்குத்தான் நாம இந்த நாய்க்குட்டிய தூக்கிட்டு வந்திருக்கோம். அதனால நாம இதுக்கு நிலான்னு பேர் வைப்போம் சரியா.
அய். நிலா பேர் நல்லாருக்கும்மா- ஆறுமுகம்.
ஏய் நிலாக்குட்டி. நிலாக்குட்டி. ஏழுமலை நாய்க்குட்டியின் கால்களை பிடித்து ஆட்டினாள்.
நிலா நிலா என்கிற அந்த நாய்க்குட்டியை ஆறுமுகமும், ஏழுமலையும் தங்கள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பும் வரையிலும் பள்ளியிலிருந்து வந்தவுடனும் சதா நிலாவே கதியென்று அதனோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள். ரெங்கநாதனோ அவர்களைப் பார்த்து திட்டிக் கொண்டே இருப்பார்.
''ஏண்டா எதுக்குடா எப்ப பார்த்தாலும் அதையே புடுச்சி நோண்டினு இருக்கீங்க. கடிச்சிட கிடிச்சிட போகுதுடா.
அப்பா நிலாவா. நம்ம நிலா கடிக்காதுப்பா - ஆறுமுகம்.
'' ஆமாம் கடிக்காது இவருதான் பார்த்தாரு. டேய் ராத்திரியில தூங்க முடியலடா, எப்ப பாத்தாலும் லொள் லொள்ளுனு கத்திக்கினே கெடக்குதுடா, பாவம்டா அதுவும் கத்திக்கினு நம்ம தூக்கமும் போயிக்கினு, பேசாம எங்கியாவது போய் உட்டுட்டு வந்துடுங்கடா.
ரெங்கநாதனுக்கு இந்த நாய்க்குட்டி வந்த நாளிலிருந்து தூக்கமே போய் விட்டது. கண்ணசந்து தூங்குவார். உடனே நாய்க்குட்டி வீல் வீல்லென கத்தும். விழித்துக் கொள்வார். பிறகு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பார். அதற்குள் விடிந்துவிடும். பையன்களிடம் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்குத்தான் திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. அதாவது இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு போய் எங்கேயாவது போட்டுவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் என்ன செய்வது அன்று அவர் ஊர் எல்லையைத் தாண்டி கொண்டுபோய் விட்டுவிட்டப் பின்ம் அது திரும்பி வந்து விட்டதே.
பிரிதொரு நாள் அதாவது மேற்சொன்ன சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ஆறுமுகமும் ஏழுமலையும் பள்ளியைவிட்டு வீட்டிற்கு வந்தனர். வந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. வீடு பூட்டியிருந்தது. அருகில் வாசலில் கழுத்தில் சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்த நிலாவைக் காண வில்லை. சங்கிலி மட்டும் தூணில் கட்டப்பட்டிருந்தது. அண்ணனும், தம்பியும் புத்தகப்பையை திண்ணையில் போட்டுவிட்டு வீதி வீதியாக அலைந்து தேட ஆரம்பித்தனர். தெற்குத் தெருவில் நான்கு தெரு நாய்கள் ஒன்றுகூடி நிலாவை சுற்றி வளைத்து கடித்துக் கொண்டிருந்தது. ஆறுமுகமும், ஏழுமலையும் கற்களை தூக்கிக் கொண்டு ஓடினர். தெருநாய்கள் சிதறி ஓடின. சிறுவர்கள் இருவரும் விடவில்லை. தெருமுனைவரை அவைகளை விரட்டி அடித்துவிட்டு வந்தனர். நிலா தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி குளிரில் நடுங்குவதைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. ஏழுமலை அதன் அருகில் சென்று கைகளை விரித்து அழைத்தான. நிலா தன்னைக் காப்பாற்றிய முதலாளி மீது பாய்ந்து தாவியது. இருவரும் நிலாவை தூக்கிக் கொண்டு வீட்டை அடைந்தனர். வீட்டில் மீனாட்சி வேலைக்குச் சென்று திரும்பியிருந்தாள். பிள்ளைகளை பார்த்தவள் அவர்களை நோக்கி வந்தபடி கேட்டாள்.
''பள்ளிக் கொடத்து பைய தூக்கிப் போட்டுட்டு அப்படி எங்கடா அவசரமா போயிவறீங்க. டேய் என்னடா இது கன்னத்துல ரத்தம் வருது ஏழுமலை கன்னத்தைத் தடவினான் எரிச்சலாக இருந்தது.
உடுடா அந்த சனியன, உங்க அப்பன் சொன்ன மாதிரியே நடந்திடுச்சி பாரு, ஏண்டா கடிச்சிச்சு இல்ல நகத்தால பூரிச்சா?
இல்லம்மா நகந்தான் பட்டுச்சி.
இனிமே அது பக்கத்துல போன தோல உரிச்சிடுவேன் ஆமாம். டேய் பெரியவனே அதப்புடுச்சி கட்டுடா - ஆறுமுகம் நிலாவை சங்கிலியால் கட்டினான்.
சில நாட்கள் கழிந்தன. சின்னவன் ஏழுமலைக்கு ஓர் நாள் உடம்பு சரியில்லை. மீனாட்சி ஏழுமலையை பக்கத்து ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று ஊசி போட்டுக் கொண்டு வந்து, மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு, பாய் கடைக்கு பண்ணு வாங்கச் சென்றிருந்தாள். ஆறுமுகம் பள்ளிக் கூடத்துக்கு சென்றிருந்தான். ரெங்கநாதன் ஆத்தாரம் வேலிக்கு கருப்பங்கத்தை தூக்கச் சென்றிருந்தார். மதியம் உச்சிவெயில் நேரம் மீனாட்சி பண் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். வந்தவள் அப்படியே பன்னை தூக்கி வீசிவிட்டு அலறினாள். திண்ணையில் நல்ல பாம்பு ஒன்று நான்கு துண்டுகளாக கந்தல்கந்தலாக சிதறியபடியும். அதன் அருகில் சிறுவன் ஏழுமலை உறக்கத்தில் இருந்தபடியும் கிடந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி நிலா வாயில் ரத்தம் படிந்த கோலத்தோடு கண்கள் கிறங்க கால்களை உதறியபடி கிடந்தது. மீனாட்சி ஓடி பையனைத் தூக்கினாள். கூட்டம் கூடியது. கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் பேசிக் கொண்டார்கள்.
''பாருடீ யாரு செஞ்ச புண்ணியமோ, அந்த புள்ளைய கடிக்க வந்த பாம்ப, இந்த நாயி கடிச்சி காப்பாத்தி இருக்கிறத.
யாரு செஞ்ச புண்ணியமா, அந்த பையன் செஞ்ச புண்ணியந்தான். எப்ப பாத்தாலும் நிலா நிலான்னு தூக்கி வச்சிக்கினு அவன் திங்கறதையெல்லாம் இதுக்கு கொடுத்தான்ல அந்த விசுவாசம்தான். சும்மாவா சொன்னாங்க நாயி நன்றி உள்ளதுன்னு.
ஒருத்தி மீனாட்சியிடம் சொன்னாள். மீனாட்சி இது நாயில்லடி சத்தியமா இது ஓங்கொலதெய்வம்டீ.
பையனின் உடம்பை பரிசோதித்த ஆண்களில் ஒருவர் சொன்னார்.
'ஏம்ப்பா பையனுக்கு ஒண்ணும் இல்லப்பா. நாய்க்குத்தான் வெசம் ஏறி முறுக்கினு கெடக்குது. மொதல்ல அத தூக்குங்கப்பா. இரண்டு பேர் நாயை வைத்தியரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மீனாட்சியும் ரெங்கநாதனும் நிலாவை தங்கள் குலதெய்வம் அய்யனாரப்பனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அந்த காவல் நாயாகவே நினைத்து வழிபட்டார்கள். அது மட்டுமல்லாமல் மீனாட்சி நிலாவை தன் பிள்ளையாகவும் கருத ஆரம்பித்தாள்.
தன் இரண்டு பிள்ளைகளுக்கு வாங்குவதைப் போலவே நிலாவுக்கும் சேர்த்து ரொட்டி வாங்கினாள். தன் பிள்ளைகளை குளிப்பாட்டுவதைப் போலவே நிலாவையும் சோப்புப் போட்டு குளிப்பாட்டினாள். ரெங்கநாதனும் தன் பங்குக்கு கசாப்புக்கடையில் சொல்லி வைத்து எலும்புத் துண்டுகளை வாங்கி வந்து போட ஆரம்பித்தான்.
ஒரு ஐப்பசிமாதம். அடைமழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஊர் வெள்ளக் காடாக மாறிக் கொண்டு வந்தது. ஆற்றில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. எப்பொழுது வேண்டுமானாலும் கரைமீறி தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடலாம் என்ற நிலையில் இருந்தது. ஊர் மக்களெல்லாம் கும்பல் கும்பலமாக அமர்ந்து பேசிக் கொண்டார்கள்.
''சர்க்காரு கிட் எத்தன தடவையா சொல்றது. வருசா வருசம் வெள்ள அபாய அறிக்கை மட்டும் விடுறானுவ. ஒக்காள ஓழிவ ஓட்டு வாங்கறதுக்கு மட்டும் வந்துடறானுவ. ஒரு தடுப்புச் சொவரு மட்டும் கட்டி உடமாட்ரானுவ.
''அவன் எப்படி நமக்கு கட்டுவான். அவ அவன் அவஅவனோட கூத்தியாளுக்கிள்ள குளுகுளு பங்களா கட்டிக்கிட்டு திரியறானுவ. அவன் எப்படி நமக்கு கட்டுவான்.
''சரி சரி எதுக்குய்யா வெட்டியா பேசிக்கினு.
ஆகவேண்டிய வேலைய பாருங்கய்யா,
ஆண்களும் பெண்களும் மூட்டை முடிச்சுகளையும் தட்டுமுட்டு சாமான்களையும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திலும் கோயில்வளாகத்திலும் கொண்டு போய் பாதுகாப்பாக வைத்தார்கள். சிறுவர் சிறுமிகள் தங்களால் முடிந்த பொருட்களை தூக்கிச் சென்றனர்.
ரெங்கநாதன் வீடு மேடான இடத்தில் இருந்ததால் பள்ளத்தில் வசித்த அவரது உறவினர்கள் சிலர் அவர் வீட்டுத் திண்ணையில் தங்கள் பொருட்களை வைக்கலானார்கள்.
ஆறுமுகமும், ஏழுமலையும் மக்கள் பொருட்களை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு செல்வதைப் பார்த்துவிட்டு ரெங்கநாதனிடம் சொன்னார்கள்.
''அப்பா அப்பா எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு இருக்காங்கப்பா. வாப்பா நாமளும் போகலாம்.
டேய் நாம ஏண்டா போவணும். நம்ம வீட்டுப் பக்கமல்லாம் தண்ணி வராதுடா. ரெங்கநாதன் தெரு மக்கள் எல்லோரும் அங்கேயாதான் இருந்தார்கள். அவர்கள் யாரும் கோயிலுக்கோ இல்லை பள்ளிக்கூடத்துக்கோ செல்லவில்லை.
அன்று இரவு. ஊர் மயான அமைதியில் இருந்தது. ஆனால் மழையோ அந்த அமைதியை கெடுப்பது போல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. மழைக்கு பயந்து தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் தூங்கிப் போயிருந்தார்கள். காற்றும் மழையும் இணைந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. அப்போது ஒருவன் வீதிவழியே சத்தம் போட்டபடி ஓடி வந்தான்.
''எல்லோரும் எழுந்திருங்க எல்லாரும் எழுந்திருங்க. நம்ம ஊரு ஏரியும், சித்தானங்கூரு ஏரியும் உடைஞ்சிடுச்சி.
தூங்கிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தூக்கிவாரிப்போட்டதுபோல் எழுந்தார்கள். தண்ணீர் ஊரை நோக்கி வரும் சத்தம் கேட்டது. எப்பொழுதும் ஒரே நேரத்தில் இப்படி அரசூர் ஏரியும் சித்தானங்கூர் ஏரியும் உடைந்ததில்லை. இரண்டு ஊர் ஏரித் தண்ணீரும் ஊருக்குள் புகுந்துவிட்டால் அவ்வளவுதான் ஊரே மூழ்கிவிடும். ரெங்கநாதன் தெரு சனமெல்லாம் அறக்கப்பறக்க பொருட்களை வாரிக்கொண்டு மழையில் நனைந்தபடி பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்கள்.
ரெங்கநாதனும் மீனாட்சியும் இப்படி ஒரு சூழல் வருமென்று எதிர்பார்க்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தையும், ஏழுமலையும் ரெங்கநாதன் இரு தோள்களிலும் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு ஓடினார். பிள்ளைகளை கோயிலில் விட்டுவிட்டு மனைவி மீனாட்சியோடு சேர்ந்து முடிந்த அளவு பொருட்களை கொண்டு வந்து கோயிலில் பாதுகாப்பாக வைத்தார். ஆறுமுகத்திற்கும் ஏழுமலைக்கும் பயங்கரமான தூக்கம் அப்படியே கோயில் வளாகத்திலேயே தூங்கிப் போனார்கள்.
முன்னெச்சரிக்கை இல்லாமலும், அலட்சியத்தோடு இருந்ததாலும் ரெங்கநாதனும், மீனாட்சியும் குறைந்த அளவு பொருட்களையே எடுக்க முடிந்தது. அதற்குள் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.
காலை தூறல்களை சிந்தியபடி வானம் லேசாக வெளுத்தது. ரெங்கநாதனும், மீனாட்சியும் இரவு நடந்த சம்பவத்தின் களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகமும் ஏழுமலையும் தூக்கம் கலைந்து எழுந்து சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தனர். குழப்பத்தோடு தாங்கள் எப்படி இங்கே வந்தோம் என்றபடி மண்டையைச் சொறிந்தார்கள். ஏழுமலை தங்களைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் வீட்டுப் பொருட்களை நோட்டமிட்டான். பின் ஏதோ தோன்றியவனாய் ஆறுமுகத்திடம் கேட்டான்.
''அண்ணா நிலா எங்க? - அவனும் ஒன்றும் புரியாமல் திருப்பி இவனிடமே கேட்டான்.
''ஆமாண்டா நிலாவக் காணோமே எங்க போச்சு?
இருவரும் ரெங்கநாதனையும் மீனாட்சியையும் எழுப்பினார்கள். அவர்கள் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தார்கள்.
ரெங்கநாதன் கொட்டாவி விட்டபடி கேட்டார். என்னடா?
அப்பா நிலா எங்கப்பா? ஏழுமலை
மீனாட்சியும் ரெங்கநாதனும் சடாரென நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிலா. நிலா - அப்பொழுதுதான் அவர்களுக்கே நிலாவின் ஞாபகம் வந்தது.
நால்வரும் தூரலில் நனைந்தபடி வீட்டிற்கு ஓடினார்கள். வீட்டின் முன்வாசல் மணல் மூடி மேடாக கால்தடம் படாத சமவெளிபோல் இருந்தது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட காய்ந்த முள்கொத்து ஒன்று துணிதுவைக்கும் கல் தடுத்து சிக்கிக் கிடந்தது. நீர் வடிந்த சேற்றில் கால்புதைய நால்வரும் வீட்டைச் சுற்றி தேடினார்கள். நிலாவைக் காணோம்.
தெற்குத்தெரு. மேற்குத் தெரு, கிணற்றுத்தெரு, என வீதி வீதியாக ஓடினார்கள். மூலப்புளியாம். மரம், தொப்பக்கொள்ளி, சின்னவாய்க்கால் என ஊரையே ஒரு அலசு அலசினார்கள். எங்கும் நிலாவைக் காணோம். ஆறுமுகமும் ஏழுமலையும் அழ ஆரம்பித்தார்கள். ரெங்கநாதனும் மீனாட்சியும் அவர்களை தேற்றினார்கள்.
வெயில், அலைந்து திரிந்து ஓடிய களைப்பு, நால்வரும் நாக்கு வரண்டு போய் கோயி வளாகத்தில் வந்து அமர்ந்தார்கள். ஆறுமுகமும், ஏழுமலையும் அழுகயை நிறுத்தியபாடில்லை. பசி வேறு அவர்களை வாட்டியது. அப்போது ரெங்கநாதனின் பக்கத்து வீட்டு பையன் செவலையன் அங்கு ரெங்கநாதனை அழைத்தபடி ஓடிவந்தான். தன் கழனியை பார்க்கச் சென்றவன். காட்டுக்குள் இருக்கும் அய்யனார் கோயிலுக்குப் பக்கத்தில் நிலா இறந்துபோய் கிடப்பதாக கூறினான்.
ரெங்கநாதன் குடும்பத்தோடு பதறியடித்துக் கொண்டு அய்யனார் கோயிலுக்கு ஓடினார். முகம் மட்டும் தெரிய உடல் தண்ணீரில் மூழ்கியபடி நிலா முள்ளிள் சிக்கி கண்களை அகல விரித்து இறந்து கிடந்தது. ஆறுமுகமும், ஏழுமலையும், கதறிகதறி அழுதார்கள். மீனாட்சி தலையில் அடித்துக் கொண்டு புலம்பினாள்.
''அய்யோ எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி எடுத்தவ, என் கொலசாமிய மட்டும் மறந்து விட்டுட்டேனே. பாவி பாவி நான் பாவி. என் வீட்டுக் காவல் தெய்வமா இருந்து காவல் காத்துச்சே அதக் காப்பாத்தாம விட்டுட்டேனே. ஆறுமுகமும், ஏழுமலையும் அம்மா அழுவதைப் பார்த்துவிட்டு மேலும் கதறிக் கதறி அழ ஆரம்பித்தார்கள். கூட்டம் கூடியது.
செவலையனும், ரெங்கநாதனும் தண்ணீரில் இறங்கி நிலாவைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
சத்தியமா இது இந்த அய்யனார் சாமிக்கு பக்கத்துல இருக்கிற காவல்நாய்தாம்பா, பாரு ரெங்கநாதன் வீடு எங்க இருக்கு. அய்யனாரப்பன் கோயிலு எங்க இருக்கு? அங்க இருந்து இங்க வந்து கரை ஒதுங்கி கெடக்குதுன்னா இது நிச்சயமா சாமிநாய்தாம்பா.
-------------------------------------முற்றும்----------------------------------------------------------
|