“க” அப்படித்தான் தோன்றிற்று அவனுக்கு அந்த மெல்லிய காற்று,அதன் ஸ்பரிசம் அவன் தோல் பட்டு மெல்ல ஊடுருவி உள்ளே நுழைந்து வேறெங்கோ சென்று உணர்வாய் வெளிப்படும்வரை அதை கலைக்காமல் இருந்தான், நொடிக்கும் குறைவான காலம்தான், இருந்தும் அவனுள் காலத்தின் இடைவெளியை உணரும் அளவு பொறுமை இருந்ததால் அதை படிப்படியாய் உணர முடிந்தது, அந்த அதிர்வுகள் அவனுள் அவனை அறியாமல் “க” என்று உதிர்த்தது.அவனுக்கு ஒவ்வொன்றும் ஓர் அதிர்வுதான் ஓர் எழுத்துதான்.
ஓர் இருளில் தான் அவன் மொழியின் மூலத்தை தேடத்துவங்கினான்,இருள் என்று அவன் சொல்லும்போதுதான் அவனுக்கே உரைத்தது, இருள் என்று அழைப்பது அந்த தன்மையின் அடையாளம் அன்றி வேறேதும் இல்லை,அதை நேரடியாய் உணர்ந்ததில்லை இன்னும் சொல்லப்போனால் அதை வேறு விதமாக கவனித்தது கூட இல்லை என்று.
மொழி தன் அறிவுக்கு ஓர் ஆடை போல் இருப்பதை உணர்ந்தான்,அது எப்படி தன்னை இவ்வளவு தீர்க்கமாக எல்லாவற்றையும் இவ்வளவுதான் என்று இயங்க வைக்கிறது என்று யோசித்தான்,மொழியின் இயக்கம் புலன்களுக்கும் உணர்தலுக்கும் இடைப்பட்டு ஓர் கருவி போல் இருப்பதாகவே பட்டது.
உணர்தலுக்குள் வந்ததும்தான் அவனுள் இன்னொன்றும் உரைத்தது, இங்கு அனைத்தும் அடையாளப்படுத்தி அவ்விதமே பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது,இன்னும் கடவுள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் தன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்று.
தன்னைத்தவிர இங்கனைத்தும் நிர்வாணமாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது,அதுவும் மிக வெளிப்படையாக அதைக் காண தனக்குத்தான் ஆடை தேவைப்பட்டிருக்கிறது என்றும் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய உடனே அவன் அனைத்தையும் அப்படியே பார்க்க முயற்சித்தான் , அப்போதுதான் அவனுக்கு தன் கடந்த கால செய்கைகளே விந்தையாய் இருந்தது,சில வேடிக்கையாகவும் இருந்தது.
விரைந்து எழும்போது சுவற்றில் மோதிய நாற்காலியை அன்னிச்சையாய் தடுத்து அது அடிபட்ட இடத்தை தொட்டுப் பார்க்கும் போதுதான் அது அவனுக்கு பட்டது,அதை பத்திரப்படுத்தும் நோக்கத்தைவிட அடிபட்டால் அதற்கு வலிக்கும் எனும் நோக்கமே அதிகமிருப்பதை. தனக்கு இருப்பதுபோலவே உணர்வும் அறிவும் அதற்கும் இருப்பதாய் பாவித்து கொண்டிருப்பதை.
எப்படி எல்லாவற்றையும் உயிருள்ள ஒன்றாகவே கருத முடிகிறது? இது தன்னுடன் உள்ள பொருட்களுக்கு மட்டுமல்ல புதிதாய் காண்பவைகளுக்கும் அப்படித்தான் நிகழ்வதும் புரிந்தது,அறிவு உயிரற்ற ஒன்றை விரைந்து உயிருள்ள ஒன்றாக ஸ்ருஷ்டித்து அதை நம்பவும் செய்துவிடுகிறது. இதை உணர்ந்த நொடி முதல் அவன் இவ்வுலகை நிர்வாணமாகவே பார்க்கத்துவங்கினான்.
தன்னாலும் ஸ்ருஷ்டிக்க முடிகிறது என்றவுடன் தன்னைதானே கடவுள் என்று என்னும் மடத்தனம் அவனுள் எழவில்லை,இதுவரை தான் கடவுள் என்று நம்பி வந்தது பெரும்பாலும் தன் அறிவு ஸ்ருஷ்டித்ததன்றி வேறொன்றும் இல்லை என்று அறிந்து கொண்டான்.
கடவுள்தான் தன்னிடம் இருப்பதிலேயே மிகப்பெரிய அறியாமை என்று அறிந்து கொண்டான்,அதை அறிந்ததும் அவனால் அதை உணர்ந்து கொள்ள புத்தனைப் போல் வெளியேற இயலவில்லை,அவன் மாறாக அதைப் புரிந்து கொள்ள முயன்றான் மொழியின் வாயிலாக.
மொழி என்றவுடன் அதன் இரு வேறு தன்மைகள் முதலில் வந்தது,ஒலி மற்றும் குறியீடு இவற்றில் எதைத் தேர்வு செய்வது என்று யோசித்தான்,இரண்டும் காலப்போக்கில் அதன் தன்மைகளுக்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்திருப்பதை யோசித்து பார்த்தான்.
எப்படியும் ஒலி வடிவில்தான் முதலில் உருவாகி இருக்கக் கூடும்,குறியீடு பிற்பாடே வந்திருக்க முடியும் என்றும் தோன்றியது,குறியீட்டை கற்றுக்கொண்டமையால் ஒலிவாயிலாக வெளிப்படுத்தும் போது குறியீடும், குறியீட்டின் வாயிலாக ஒலியும் இணைந்தே வெளிப்படுகிறது, முதலில் இந்த இரண்டையும் தனித்தனியே பிரிக்க முயன்றான்,ஒலி வாயிலாக மொழியை உரைத்து குறிகளையும் அதன் பால் வெளிப்படும் நினைவுகளையும் நிறுத்தினான்.ஒலியினை நேரடியாக அனுபவித்தான்.
வடிவமைக்கப்பட்ட ஒலிதான் மொழி என்று அவன் சிந்திக்க துடங்கியதும், அனைத்து ஒலிகளையும் கூர்ந்து கவனித்தான் காற்று , நீர் என எந்த வழியில் வெளிப்பட்டாலும் அதை கவனித்தான்.இவற்றில் எந்த ஒலிகள் எல்லாம் மொழியுடன் ஒத்துப்போகின்றன என்று யோசித்தான். இங்கு வெளிப்படுத்தப்படும் அனைத்து ஒலிகளும் தன்னால் கிரகிக்க மட்டும் அல்ல வெளிப்படுத்தவும் முடியும் என்றும் தோன்றியது.
அவனுக்கு பிற ஒலிகளில் ஒரளவு பிடிப்பு ஏற்பட்டவுடன் அவன் முதலில் கையில் எடுத்தது பெயர்களை அதுவும் பேசாத தாவரங்கள்,செடிகள் மரங்களையே முதலில் நாடினான்,
ஒரு மரத்தின் அடியில் சென்று அதன் பெயரை உச்சரித்துப்பார்ப்பான்,உச்சரிக்கையில் நா மடியும் விதமும் அடி வயிற்றில் இருந்து வெளிப்படும் காற்றையும் அதன் அதிர்வுகளையும் கவனிப்பான்.
பெரும்பாலான பெயர்கள் அதன் குண நலன்களை பொறுத்தே வைக்கப்பட்ட படியால் அதன் அர்த்தங்களையும் ஆராய்ந்தான்,சில சமயம் தன்னை வைத்தே சோதனையும் செய்தான்,வேம்பிற்கு கசக்கும் தன்மையாலே அப்பெயர் வந்திருக்கும் என்பதால் கசந்த வேப்பங்கொட்டைகளை உண்டு பார்த்தான்,அது தனக்குள் தரும் உணர்வு மாற்றங்களை கவனிப்பான்,அந்த பெயரை உச்சரிக்கையில் உருவாகும் அதிர்வுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பான்.
இந்த உலகம் அவனுக்கு அப்படியே அமைந்ததால் அவன் படிப்படியாய் ரசிக்கும் தன்மையை இழந்தான்,பூவின் நறுமணம் கூட அவனுள் ஆராய்ச்சியாகவே வெளிப்பட்டது.
மெல்ல அவன் இயங்கும் தன்மையுடய உயிரினங்களை நாடினான்,அவைகள் ஒலியினை வெளிப்படுத்தும் போது அவை சார்ந்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனவா அல்லது வெறுமே வெளிப்படுத்துகின்றனவா என்று அறிந்து கொள்ள முயன்றான்,ஓர் மலை உச்சியின் மீது ஏறி நின்றான்,ஒரு கூட்டமாக இருந்த பறவைகளில் ஒன்று மட்டும் சப்தமிட அவன் அனைத்து பறவைகளையும் உற்று நோக்கினான்,பெரும்பாலான பறவைகள் சலனமற்று இருக்க அந்த சப்தம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது திடீரென ஒரு பறவை மட்டும் அதன் அருகில் பறந்து சென்று அமர அவனுக்கு அவைகளுக்குண்டான தொடர்பு புரிந்தது.அதிலும் தேவைகளுக்கு ஏற்ப அவைகளின் ஒலிகளும் மாறுவதையும் உணர்ந்தான்.இது போலவே அவன் அனைத்து உயிரினங்களிலும் சோதனை மேற்கொண்டான்.
அரவமற்ற காட்டில் அவன் அனைத்தயும் மறந்து படுத்திருக்கும் போதுதான் தனக்குள்ளேயே எந்த முயற்சியும் இன்றி ஒலி வெளிப்படுவதை உணர்ந்தான்,அது ஒரு சுழற்சி போல் இருந்தது,அதை உணர உணர அதன் சுழற்சி அதிகமாகியது,அவன் கண்களில் காரணமே இல்லாமல் கண்ணீர் வடிந்தது,அவன் அப்படியே தன்னை மறந்து நெடுநேரம் கிடந்தான்.
“டாக்டர் இந்த பேஷண்ட் தன்னைதானே கோமாவுக்கு நகர்த்திட்டு இருக்கார்,பாருங்க ஐ பிலின்க் ரேட் கூட கம்மியாகிட்டே வருது”
“ஒள” என்றே உதிர்ந்தது அவனுள் அவனுடய வார்த்தைகள்.
“ம்ம் பார்ப்போம் நம்ம கைல ஒண்ணும் இல்ல”
“ல” என்று சொல்லி முடித்ததும் அவன் அவனுள் நிர்வாணமாய் மாறத்துவங்கி இருந்தான்,அது அவனை எல்லை இல்லாமல் எங்கோ நகர்த்திக் கொண்டிருந்தது,அங்கு அவன் தேடிய மொழி இருக்குமா என்று தெரியவில்லை. |