(முன் குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் காலகட்டத்தில், யூதேயாவின் சமூக நிலையை களமாகக்கொண்டது இக்கதை. அது கீழே தரப்படுகிறது.)
பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. ரோம ஆளுனரான பெரிய ஏரோதிற்கு பயந்து, ஜோசப், குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் எகிப்தில், சில காலம் வாழ்ந்தார். பின் இயேசுவின் இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் கழிந்தது. அதனாலேயே நசரேயன் என அவர் அழைக்கப்படுகிறார். அதுவும் ரோம ஆட்சிக்குட்பட்டதாகும். ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாகமத்தின்படி, கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது.
இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான் அவர் போதித்தார். கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தது. இயேசுவுக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை யூத அதிகார மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை (Kingdom of God) நிறுவுவதுமே ஆகும். இதை அன்பின் அரசு என்கிறது வேதாகமம். ஏறக்குறைய கி.பி. 30-ல் அவர் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய்க் குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். யூத சமூகம் மிகுந்த சடங்கு, ஆச்சாரங்களுக்குட்பட்ட ஒரு மூடுண்ட சமூகமாகவே இருந்தது. ரோம ஆளுனர் கீழ் அரசியல் அதிகாரம் இருந்தது. அக்கால கட்டத்தில், அச்சமூகத்தில் பரிசேயர் மற்றும் சதுசேயர் என்ற இரு பிரிவினர் இருந்தனர். மேலும் திருச்சட்ட அறிஞர்களும், யூத குருமார்களும் இருந்தனர். அவர்கள் அச்சமூகத்தில் உயர் குடிமக்கள் ஆவர். ஆலயங்களிலும், தொழுகைக்கூடங்களிலும், மற்ற பிற பொது இடங்களிலும் அவர்களே முதன்மையானவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களே அதிகாரம் பெற்றவர்கள். திருச்சட்டம் மோசேயினால் அச்சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டது. 10 கட்டளைகளும், பிற கட்டளைகளும் அதில் அடங்கும். இது அசிரிய மன்னர் ஹம்முராபியின் சட்டத் தொகுப்பை ஒத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பரிசேயர் என்றால் தனித்துவம் உடையவர்கள் (Separated One) என பொருள் கொள்ளலாம். இவர்கள் திருச்சட்டத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டவர்கள். ஓய்வு நாளை மிகத் தீவிரமாகப் பின் பற்றுபவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் ஓய்வு நாளில் போர் தொடுத்தால் கூட திருப்பி தாக்கமாட்டார்கள். சிரியாவை ஆண்ட ரோம படைத் தளபதிகள் ஓய்வு நாளில் போர் தொடுத்து வெற்றி அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு சட்ட திட்டங்களில் பற்று உடையோர் ஆவர். பரிசேயர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும் பழகமாட்டார்கள். அவர்கள் வீடுகளுக்குச்செல்ல மாட்டார்கள். சதுசேயர்கள் திறந்த மனமுடையவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
ஆட்சியாளர்களுடன் நல்லுறவு கொண்டு, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். கோவில் நிர்வாகம் இவர்களின் கையில்தானிருந்தது. இவர்களும் மக்கள் மேல் அதிகாரம் கொண்டவர்கள். பரிசேயர், சதுசேயர்கள் வேறு வேறான கொள்கை உடையவர்களாயிருந்தும், கிறிஸ்துவை எதிர்ப்பதில் ஒன்றாக செயல்பட்டனர்.
ரோம பேரரசில் மக்கள் ஆட்சியால் அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களின் அடிமை வரலாறு மிக நீண்டது. அசிரியர்கள், பாபிலோனியர் காலம் (ஏறக்குறைய கி.மு 587) முதல் இது ஆரம்பிக்கின்றது. மேலும் மக்கள் சமூக ரீதியில், பரிசேயர், சதுசேயர்களால் அடிமைபட்டுக் கிடந்தனர். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவர்கள் மீட்பரை எதிர்பார்த்திருந்தனர். யூதேயாவில்தான் ஜெருசலேம் நகரம் இருந்தது. கி.மு.962-ல் ஆண்ட சாலமோன் அரசரால் கட்டப்பட்ட புகழ் பெற்ற எருசலேம் தேவாலயம் அங்குள்ளது. யூதேயாவின் ஆளுனரின் அரண்மனை அங்குதானிருந்தது. ரோமானியர்கள், ரோமப் படை வீரர்கள், கிரேக்க முதலான மற்ற பிற இனத்தவரும் அங்கு வாழ்ந்து வந்தனர்.
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவர் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும், பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, போதகரே, இவள் விபச்சாரத்தில் கையும், மெய்யுமாக பிடிபட்டாள். மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டப்படி, இவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும், நீர் என்ன கூறுகின்றீர்? என வினவினர். அவர் மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அப்பெண் சுற்றிலும் பார்த்தாள். எங்கும் ஆண்கள். முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். அவளைத்தவிர அங்கு யாதொரு பெண்ணுமில்லை. வெறி பிடித்த கூட்டம் கைகளில் கற்களை வைத்திருந்தனர். அவள் பயந்திருந்தாள். மரணத்தில் நிழல் அவள் மேல் படிந்திருந்தது. எப்போதேனும், யாரேனும் தாக்கக்கூடும். ஒருவர் தாக்கினால் போதும், கூட்டம் வெறியாய் பாய்ந்துவிடும். அந்த கொடிய கணம், ஒரு நிமிடம் அவள் கண்களில் தோன்றி மறைந்தது.
தேவாலயத்தின் உயர்ந்த கோபுரம் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. இன்று காலை தேவாலயத்தின் அக்கோபுரத்தை பார்த்துக் கொண்டே எருசலேம் நகருக்குள் நுழைந்தாள். திடீரென, ஒரு துக்கம் கலந்த உணர்வு அவளைத் தாக்கியது. எல்லாவற்றையும் இழந்ததைப் போல உணர்ந்தாள். கரிய நிழல் அவள்மேல் ஆக்கிரமித்தது போலிருந்தது. அப்பெரு நகரம் முழுதும் வியாபாரம் பெருக்கெடுத்து ஓடியது. காசுக்காரர்கள், வரி தண்டுவோர், வியாபாரிகளால், ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் அக்கிரமங்கள், பாவங்கள், விபசாரம் அனைத்திற்கும் காலம் காலமாக சாட்சியாய் நின்றிருந்தது அக்கோபுரம். ஏழைகள், குஷ்டரோகிகள், விதவைகள், பேய் பிடித்தோர், திமிர்வாதக்காரர்கள், பார்வையற்றோர், என பல திக்கற்றோர் அங்கு எப்போதும், விடுதலையை எதிர்பார்த்து காத்துகிடந்தனர். யாரும் அவர்களை பொருட்படுத்துவாரில்லை. விடுதலையும் வந்தபாடில்லை.
அவள் மனம் முழுதும், அவர்கள்மேல் வெறுப்பு பீடித்திருந்தது. கொலைகார கும்பல் சலசலவென இரைந்து கொண்டிருந்தது. இதே போல் பல பெண்களை கொன்றவர்கள் தான் அவர்கள். அவளுக்கு, ஏன் அவர்கள், இவர் முன் நிறுத்தியுள்ளனர்?, எனவும் அவளுக்கு புரியவில்லை. தலைமைச் சங்கத்திடம் அல்லவா கொண்டு செல்வார்கள்!. இவர் ரோமானிய அதிகாரி போலவும் தெரியவில்லை. பணியாட்கள், படை வீரர்கள் யாரும் இவரிடம் இல்லை. தனித்துக் காணப்பட்டார். அந்த கொடூரர்களுக்கும் இவருக்கும் பகை, என அவள் யூகித்தாள். அவளை இழுத்து வந்த ஆண்களின் முரட்டுப் பிடியால், அவள் கைகளில் சிறிது காயம் ஏற்பட்டிருந்தது. கால்களில் சிராய்ப்பு தர, தர என இழுத்து வந்ததால், ஏற்பட்டிருந்தது. அவளுக்கு, கைகளிலும், கால்களிலும் காயங்கள் வலியை கொடுத்தன. பசி அவளை மயக்கத்தில் தள்ளிக் கொண்டிருந்தது. மரணத்தின் வாயிலில் இருப்பவளுக்கு பசி ஒரு கேடா? என அவள் நினைத்தாள். இயேசு அப்போதும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அவன், அங்கு நின்றிருந்தான். அவன் ஒரு ரோம போர் வீரன். அவன் கைகளிலும் கல். அவன்தான், அவளுடன் விபச்சாரம் செய்தவன். மிருகம் போல்தான் புணர்ந்தான். திடீரென அக்கூட்டம் மண்டபத்திற்குள் புகுந்து அவர்களை பிடித்தது. அப்போது நோயால் பீடிக்கப்பட்ட ஒரு கோழியைப் போல நடு நடுங்கினான் அவன். மிருகவெறி பிடித்த அந்தக் கூட்டத்தில் அவனும் சேர்ந்துவிட்டான். அவனைப்போல், அவளுடன் விபச்சாரம் செய்த பல ஆண்கள் அங்கு இருந்தனர். உண்மையில் பொல்லாத விபச்சார ஆண்களின் கும்பல்தான் அது. அவள் அவனை உற்று நோக்கினாள். அவன், அவளைக் கொல்ல ஆயத்தமாயிருந்தான். அவன், அவளைப் பார்த்தான். அவன் கண்களில் எள்ளளவும் குற்ற உணர்வு இல்லை. தந்திரமாய் கொல்லும் நரியின் கண்கள் அவை. அவளைக்`கொல்லும், கொல்லும்' என முணுமுணுக்க ஆரம்பித்தான். கூட்டம் அவரை நச்சரிக்கத் தொடங்கியது. இயேசு அப்போதும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.
அவள் தேவாலயத்தின் உயர்ந்த கோபுரத்தை பார்த்தாள். அது ஆறுதல் சொல்வது போலிருந்தது. அவள் இறைவனிடம் பிராத்திக்க வேண்டும், என நினைத்தாள். குழந்தையாய் இருந்த காலங்களில், அவள் பிரார்த்தனைகள் செய்திருக்கிறாள். அதைவிட்டு பல காலங்கள் ஆகிவிட்டிருந்தது. காலம் ஏற்படுத்திய காயங்கள் அவளிடமிருந்த கடவுளை எடுத்துச் சென்று விட்டன. இதே தேவாலயத்தின் முன் பட்டினியாய், அனாதையாய் கிடந்த காலங்கள் கண்முன்னே ஓடின. மிக கொடியதொரு இறந்த காலம் அது. அந்த இறைவனால் கூட மாற்ற முடியாத கொடியதொரு கோடை காலம் அது. நீண்டதொரு இருள்வெளியாய் கண்களில் விரிந்தது கடந்தகால நினைவுகள். இப்படி ஒரு மரணதிற்காகவா இவ்வளவு துயரங்களையும் அனுவித்தேன். மீக நீண்ட கொடிய பயணம். அதன் முடிவோ சாபக்கேடான இழி மரணம். காலம் காலமாக, பெண்களின் மேல் விழுந்த சாபக்கேடு இது. இயேசு அப்போதும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார். கூட்டத்தின் நச்சரிப்பு அதிகமாகியபடியே இருந்தது. தவறு என்றால், இருவருக்குமல்லவா தண்டனை அளிக்க வேண்டும். நான் மட்டும் ஏன் குற்றவாளிக்கூண்டில்? அந்த ஆணோ நீதிபதியின் இடத்தில். அவளுடன் விபச்சாரம் செய்த அனைவரும், அவளுக்கு எதிராக தண்டனை கொடுக்கும் இடத்தில் இருந்தனர். கொடுமையான ஆண்களின் உலகில், தவறு செய்வது ஆண்கள், தீர்ப்பிடுவதும் ஆண்களே, தண்டிக்கப்படுவது மட்டும் பெண்கள். நான் விருப்பத்துடனா இதில் ஈடுபடுகிறேன். வறுமை, விதவை நிலைமை மற்றும் என்னை நம்பியுள்ளோரின் பொருட்டே இக்காரியத்தில் தள்ளப்பட்டேன். இந்த கொடியவர்களால் சிதைக்கப்பட்டதுதான், இந்த மனமும், உடலும். இவர்கள்தான் என்னை விபசாரத்தில் தள்ளினர். குருமார்கள், படைத் தலைவர்கள், படை வீரர்கள் என அனைத்து ஆண்களும், அவள் இளமையை குதறிப் போட்டிருந்தனர். குதறிப் போட்ட, குற்றுயிரும், குலையுருமான ஆட்டுக் குட்டி போல்தான், அவள் மனது துடித்துக் கொண்டிருந்தது. இயலாமையால் வெம்பிப் போயிருந்தாள். அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும், அவள் கண்கள் மலர்ந்தன. மிக்க ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அவள் தைரியம் அடைந்தவளாக காணப்பட்டாள். மரணத்தின் கரிய நிழல் அங்கிருந்து அகன்றுவிட்டது போல அவள் உணர்ந்தாள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவளைப் பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பளிக்கவில்லையா?", என்று கேட்டார். அவள், "இல்லை, ஐயா", என்றாள். இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்", என்றார்.
அவள் நடக்கலானாள். தேவாலயத்தின் உயர்ந்த கோபுரத்தை பார்த்துக் கொண்டே நடந்தாள். மனம் இலகுவாயிருப்பது போலிருந்தது. குளிர்ந்த தென்றல் அவளை வருடிச் சென்றது போல் உணர்ந்தாள்.
முக்கிய ஆதார நூல்கள்:
[1] பரிசுத்த வேதாகமம் - கத்தோலிக்க கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[2] பரிசுத்த வேதாகமம் - சீர்த்திருத்த கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[3] The Open Bible (The New King James Version)
[4] World History by B.V..Rao, Sterling Publishers Private Ltd, New Delhi
முற்றும்
|