பா.சுரேன் |
வியாழன் , 25-02-2010; 8:04 PM |
அது காசிமாநகரம் இறைவனின் இருப்பிடமாகவும்,மனிதர்களின் இறுதி இடமாகவும் ஒரு சேரத் திகழும் ஊர். சந்நியாசிகளின் சரணாலயம், பாவங்களைப்போக்கி முக்தியைத் தரும் புன்னிய நகரம். இவற்றிற்கெல்லாம் மேலாக உலகின் மிகப் புனிதம் வாய்ந்த நதியாகக் கருதப்படும் கங்கை அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஆனால் அதன் கரைகளிளே குப்பைகளும்,பிணங்களுமே மிகுந்து இருந்தது.
காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும், காலபைரவரையும், அன்னபூரணியையும் தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கி புனிதர்களாக இறைவனைக் காண எண்ணியிருந்தனர் போலும். அதனாலேயே தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள கங்கையில் இறங்கிக்குளிதனர். அவர்களின் பாவங்கள் கங்கையிலே கலந்தது, கரைந்தது. இன்னும் சிலர் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்காய் பிண்டம் வைத்தனர், திதி குடுத்தனர்.சில இறந்து போன ஆத்மாக்களின் சடலங்கள் சொர்கத்தை நோக்கிய தங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தன கங்கையில்.
அங்கே கங்கையின் கரையில் ஒரு அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. அங்கே இதற்கு முன் நிறைய அழுகுரல்கள் கேட்டிருக்கலாம். இப்போது கேட்டுக்கொண்டும் இருக்கலாம். ஆனால் அவை பெரும்பாலும் இறப்பின் அழுகுரல்கள்தன். ஆனால் இதுவோ பிறப்பின் அழுகுரல். அழுது கொண்டிருப்பவள் ஒரு இளம்பெண். அவளின் கறுச்சிறையிலிருந்து உலகினைக்காணும் ஆவலில் தன் உடலினை உந்திக் கொண்டிருந்தது ஒரு உயிர்.
அங்கிருந்த பலரும் அந்நிகழ்வினை, அவள்படும் துயரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மனதில் ஏதோ பட்டவர்காளாய் அங்கிருந்த சில பெண்கள் மட்டும் அவளருகில் சென்று தங்கள் கைகளில் வைத்திருந்த மாற்றுப் புடவைகளைக் கொண்டு அவளைச்சுற்றி கூடாரம் போல் மறைத்தனர். அந்தக் கூடரத்தினுள்ளே இரண்டு உயிர்கள் தங்களின் உலக வாழ்வினைத் தொடங்க, தொடர துடித்துக் கொண்டிருந்தன.
ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின். ஒரு புதியஉயிர் தன் அழுகையின் மூலம் இவ்வுலகத்திற்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. அங்கேயிருந்த பெண்கள் கூட்டத்திலிருந்த ஓர் முதிய பென்மணி மட்டும் அந்தக் கூடாரத்தின் உள்ளே சென்று இந்த உலகத்திற்கு வருகை தந்திருக்கும் அந்தப் புதிய உயிரினை வரவேற்றாள். அதுவரை அந்தத் தாயையும், சேயையும் பிணைத்திருந்த கொடியிலிருந்து விடுவிக்கப்பட்டு அந்தப் புதிய உயிர் இந்த உலகத்தின் சுதந்திர ஜீவனானது.
அந்தப் புதிய ஜீவனின் உலகப்பிரவேச வரவேற்புகள் நிறைவு பெற்றதும் அங்கேயிருந்த கூட்டம் மெல்லக் கலைந்தது. அவளைச் சுற்றியிருந்த கூடாரமும் விலக்கப்பட்டது. இப்போது அங்கே அவளும்,அவள் குழந்தையும் மட்டுமே இருந்தனர். இது அவள் குழந்தை எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரால் உருவானது? யாருக்கும் தெரியாது. ஏன் அவளுக்கும் கூடத் தெரியாது.
தன் கால்கள் போன போக்கிலே நாடோடியாய்த் திரிந்தவளை ஓர் நள்ளிரவிலே தன்வயப்படுத்திக் கொண்டவன் எவன் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத பேதையாய் அவள் நிற்கிறாள். அந்தக் குழந்தையை இந்த உலகிற்குக் கொடுத்தவள் அவள். ஆனால் அவளுக்குக் கொடுத்தவன் யாரென்பதுதான் அவளுக்கும் தெரியாததாய் இருந்தது.
இந்தப் பாவப்பட்ட உலகத்தின் பரிகாசங்களுக்கு ஆளாக அந்த உயிருக்கு அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை. அவள் தன்னை மறந்து, தன்னை இழந்ததன் பிரதிபலிப்பாய் அவளை இந்தச் சமூகதின் கேலிப் பொருளாய்க் காட்சிப்படுத்தும் அடையாளமாகத் தனது வரவினை ஆக்கிக் கொள்ள அந்த உயிருக்கு என்ன அவசியமோ தெரியவில்லை. எதுவும் தெரியாமல், எவரும் அறியாமல், இவ்வுலகிலே தனக்குரிய அங்கீகாரத்தைக் கூட அறிந்து கொள்ளாமல். தன்னை இவ்வுலகின் பிரஜையாகப் பதிவு செய்து கொண்டது அந்த உயிர். அதனை கையில் ஏந்தியபடி அவள்.
அவளைப் பொறுத்தவரை இப்போது அவள் கையில் இருப்பது ஒரு பாவத்தின் சின்னம். அவள் செய்த பாவத்தின் பிரதிபலிப்பு. யாரோ செய்த பாவத்தை அவள் சுமந்ததன் அடையாளம். பாவப்பட்ட இந்த பூமியின் கணக்கிலே சேர்க்கப்பட்ட புதிய வரவு. பாவதின் பலனாகப் பிறந்து இந்தப் பூமியிலே வாழ்ந்து மேலும் பாவங்களைச் சேர்க்கக் காத்திருக்கும் ஒரு ஜீவனின் பயணம் இன்று இந்தப் புனித பூமியிலே தொடங்கி இருக்கிறது.
அவள் இந்தப் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேட நினைத்தாள். பாவத்தின் சின்னமாக வந்துதித்த அந்தப் புதிய உயிரினைப் புனிதம் நிறைந்த காசிமானகரினை மேலும் புனிதப் படுத்தும் கங்கையிலே விட்டு அதன் பாவங்களைப் போக்க யத்தனித்தாள். இதுவரை பாவப்பட்ட உயிர்களின் அழுக்குகளையும்,உயிரற்ற உடல்களையுமே ஏற்றுக்கொண்டிருந்த கங்கைநதி இப்போது உயிருள்ள ஓர் புதிய ஜீவனையும் ஏற்கத் தயாராயிருந்தது.
அவள் தன் கைகளிலே ஏந்திக் கொண்டிருந்த அந்த உயிருடன் கங்கைக் கரையின் படிகளிளே இறங்கி, தன் கையிலிருந்த அந்தக் குழந்தையை கங்கை நீரிலே விடுவதற்காகக் கைகளை இறக்கினாள். குளிரான கங்கை நதியின் நீர் குழந்தையின் கால்களிலே பட்டதும் அது சிலிர்த்தது. எங்கிருந்தோ அவளுக்குத் தொற்றிக்கொண்ட தாய்மை உணர்வில் அவள் மனம் பதைத்தது. அவள் குழந்தையை அள்ளி மார்போடு அனைதுக்கொண்டாள். அவள் மனம் மாறியவளாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மேலே ஏறினாள்.
இந்த உலக மனிதர்களின் பாவங்களின் நிழல்படாத, இந்த உலகிற்கு இன்றே புதிதாய் வந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கால்கள் பட்டதும் பாவங்கள் நீங்கிப் புனிதமடைந்திருந்தது கங்கை.
முற்றும்
|