ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ், சென்னை |
ஞாயிறு, 21-02-2010; 8:04 PM |
மார்கழி பனியை மெல்ல மெல்ல தின்ற சூரியன் தன் பசியால் சிவந்த கண்களை வெண்மையாக்கி கொண்டிருந்தது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
கண்ணாடியில் தெரிந்த பிம்பத்திடம் எத்தனையோ முறை கேட்டும் விடை அது தந்ததில்லை. தரப்போவதுமில்லை. யாரிடமும் கேட்கவும் தோன்றியதில்லை.
கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை. எல்லாருடைய நகைத்தலுக்கும் பாடுபொருளானேன். விடைதான் கிடைத்ததில்லை. உடைந்து போன செல்போன், நேரத்தை கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடியது.
பசிக்கிறது. நேரம் 8ஐ நெருங்கிவிட்டது. ஆதிகாலத்தின் முதல் கடிகாரம் வயிறாகத்தான் இருக்க வேண்டும். புதியதாக வாங்கிய நோக்கியா போன் மின்னியது. காதில் மாட்டிக்கொண்ட ஹெட்போன் வெளிப்புற சத்தங்களை உறிஞ்சிக்கொண்டு இசையை துப்பியது.
செவிக்கு உணவில்லாத போது........... வள்ளுவர் பொய் சொல்லி இருப்பாரோ.
சென்னை வாகன நெரிசல்களில் உருமிக்கொண்டு ஊர்ந்து செல்லும் வாகனங்களை போல பசி ஏற்றம் இறக்கமாக நீள்கிறது.
சென்னையில் ஒன்று பெரிய உணவுவிடுதிகள் அல்லது கச்சடா உணவுவிடுதிகள். இரண்டு மட்டும்தான். நடுத்தர வர்கத்திர்ர்ர். நான்கு இட்லி - அதை இட்லி என செல்ல முடியாது கொஞ்சம் உப்பிய கையடக்க தோசை - இது பெரிய ஹோட்களில் விலை 22ரூ. குறைந்த பட்சம் 8 இட்லி தேவைபடும் என் பசியில் பாதி குறைய. 10ரூபாய்க்கே நாலும் கிடைக்கிறது கச்சடா ஹோட்டல்களில். மணி அங்கேதான் சாப்பிடுறான். எனக்கு அது ஒவ்வுவதே இல்லை.
நீ ஏன் இப்படி இருக்க... குருவின் கேள்விக்கு இன்றுவரை என்னிடமே பதில் இல்லை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி...
சென்னையில் வீடு கிடைப்பது குதிரை கொம்பு. அதும் நமது விரும்பும் பட்ஜெட்ல அமைனும்னா சும்மாவா. சென்னை வந்ததும் நண்பனின் நண்பனோட நண்பனின் அறையிலேதான் வாசம். ஒரு வாரம் தங்கிக்கனு தாராள மனதுடன் சொல்லிவிட்டார் ந.ந.ந. ஆனா ஒரு வாரத்திலே எப்படி பிடிக்க வீட்டை.
அடுத்த நாளே ஒரு வீட்டை பார்த்தாச்சி. 2200 வாடகை. 15000 அட்வான்ஸ். வாங்கிற 4500 சம்பளத்துக்கு எப்படி சாத்தியப்படும். அதுக்கு அடுத்த நாளும் டிட்டோ. குருதான் ஒரு யோசனை சொன்னான். உன் நண்பர்கள் யாராச்சும் சென்னையிலே இருந்தா ஷேர் பண்ணிக்கோ என்று. குரு ந.ந.நவின் நண்பர். இந்த மூன்று நாட்களில் எனக்கும் நல்ல நண்பராகிருந்தார்.
குரு, இப்போ சென்னையில இருக்க ஒரே நண்பன் நீ மட்டும்தான். பத்மாசுரனுக்கு வரம் தந்த சிவனாக குரு. இங்கே ஏற்கனவே 5 பேர் இருக்கோமே. நான் எதும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நான்காவது ந. சாப்பிடலாமா - இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
8தானே இப்போ, ஒரு 9.30 சாப்பிடலாம். கொஞ்ச நேரம் கேரம் விளையாடிட்டு வரோம். சமையல்காம்மா செஞ்சி வச்ச சப்பாத்தி குர்மா வாசனை படந்தது, 7.30 என் அலாரம் அடித்தாகிவிட்டது.
அவர்களை விட்டு சாப்பிடவும், பசிக்கிறதென்று சொல்லவும் சங்கோஜமாகவே இருந்தது. வீட்டுக்கு பேசனும்னு பொய் சொல்லி வெளியேறி விட்டேன். கையிலே 200க்கும் குறைவுதான், அதில்தான் இந்த வாரத்தையே ஓட்டியாகனும். பசிக்கு இந்த சிந்தனையே கொஞ்சமும் இல்லை.
2 பரோட்டா.....
சாப்பிடவா, பார்சலா
சொன்னேன். சுட சுட வந்தது. சாப்பிட்டேன். ம்ம் 9.30 வரை கண்டிபாக தாக்கு பிடிக்கலாம்.
இன்னும் செல்போன் வாங்கலையா, குருதான், அவனை தவிர யாருக்கும் என்னிடம் பேசினதில்லை. எதிரில் வரும் போது புன்சிரிப்பு, அதிகபட்சம் பாஸ் அந்த கதவை சாத்திடுங்களேன்,
இல்லை குரு, அதான் வீட்டுக்கு பேச.... சின்ன வயசிலே இருந்தே சின்ன சின்ன பொய்க்கும் நடுங்கும் கால்கள்.
என்னோட நம்பரை கொடுத்துருங்க, எதாச்சும் அவசரம்னா கூப்பிட உதவியா இருக்குமில்லே.
ரொம்ப தேங்ஸ் குரு... நான் நினைந்திருந்த சென்னை மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருந்தது.
எல்லாரும் ஆட்டத்தில் மும்முரமானார்கள், பாதி பசி என்னோடு தனியாவர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. பசி மயக்கம். அரை தூக்கத்தில் அண்ணே உங்க ஐடி கார்டு என்ற சத்தம் கேட்டுதான் விழித்தேன். ஹோட்டலிலேயே விட்டுட்டு போயிட்டிங்க. சாப்பிட்ட இடத்தில் தவறவிட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும் அந்த பையனையும் மாறி மாறி பார்த்தார்கள். பையன் வந்த வேலை முடிந்தது என ஓடிப்போனான். அவர்கள் எதும் கேட்கவில்லை. கேட்டால் என்ன பதில் சொல்லுவது. அவமானமாக இருந்தது.
குரு மெல்ல ஆரம்பித்தான் நீ வேணும்னா சாப்பிட்டு படுத்துக்க. இல்லே எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம். பசியில் குரல் கம்மி போனது.
எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சாப்பிடவந்தார்கள். எனக்காகவே என்பது புரிந்தது, சந்தோசத்தையும் கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது. குருவோடு சேர்ந்து செந்தில், சுரேஷ், மாரிமுத்து, பாலாஜி எல்லாரும் நண்பர்களாகி போனார்கள் அன்றே. பாஸ்.
குருதான் தனியாக வந்து கேட்டான் ஏன் இப்படி இருக்க? பசிச்சா இங்கயே சாப்பிட வேண்டியதுதானே.
அநாவசியமா ஏன் ஹோட்டல் போற இங்கயே இருக்கும் போது. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மணி நேரம் கூட பசியை தாங்க முடியாமல் ஏன் எனக்கு மட்டும் இப்படி.
பழைய நிகழ்ச்சி அசைப்போட்ட படியே வந்து சேர்ந்தாயிற்று ஹோட்டலுக்கு.
என்ன வேணும் என்று சர்வர் கேட்கவே இல்லை, கடந்த 7-8 மாதமாகவே காலையிலே 4 இட்லி ஒரு வடைதான். சரியாக 25ரூ. குரு மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் திசைக்கொரு பக்கம் பிரிந்து போன பின் என் முக்கிய பிரச்சனையே சாப்பிட்டில்தான். காலை 25ரூ, மாலை 40ரூ, இரவு 35ரூ, சரியாக ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100ரூபாய். இந்த வரிசையை மாற்ற விரும்ப வில்லை. இத்தனை வருட சென்னை அனுபவத்தில் பசியை அடக்க முடியவில்லை, கொஞ்சமாக குறைத்து இருக்கிறேன். தினமும் ஒரே வகை சாப்பாடு. அலுத்துபோனாலும் மாற்ற முடியவில்லை. மதியம் ஆனந்தாவில் முழுசாப்பாடு. இரவு சேட்டு கடையிலே ஏழு சப்பாத்தி. வாங்கும் 6500 சாப்பாட்டில் 3000ரூ சாப்பாட்டிற்கே போய்விடுகிறது.
அறையிலயே சமைக்கலாமில்லே, குரு ஒரு பழைய அறையின் தட்டு, முட்டு பாத்திரங்களை தர தயாராகத்தான் இருந்தான். இடம்தான் இல்லை. 10x10 அறை. இந்த அறைக்கு 1200ரூபாயாம். பஸ் பாஸ் வாங்க ரூ 600 போக. மாசம் 1700 மீந்தும். அதும் வீட்டுக்கு அனுப்பிவிட மிஞ்சுவது 50ஓ 100ஓ.
100ரூ மிச்சமாகும் நாட்களில் மாதம் ஒரு படம். அதுவும் இரண்டாம்தர தியேட்டர்களில் மட்டும், அங்குதான் முதல் வகுப்பு 30ரூ. மிச்சம் 20 முதல் 70வரை. அதில் தான் குளியல் சோப், துவைக்கும் சோப் இன்ன பிற சில்லரை தேவைகள். மிச்சமாகும் 50ரூ நாட்களில் சினிமா பக்கத்து அறை நபர்களின் டீவியில் வரும் சத்தம் மட்டும். சில நாட்களில் கமல். ரஜினி, அஜித், விஜய் குரல்கள் குழப்பும். நால்வரும் சேர்ந்து எதோ சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றே நினைப்பேன்.
உனக்கு எப்போ கல்யாணம்? எதேச்சையாக சந்திக்கும் பழைய தெரிந்த முகங்கள் துக்கம் விசாரிக்கும். பார்த்துகிட்டு இருக்காங்க என்பேன். வேறு எதும் சொல்லும் எண்ணமில்லை. நானிருக்கும் நிலைமையில் திருமணம் செய்து கொடுக்க சுற்றத்தில் யாருக்கும் விருப்பமும் இல்லை. ஏண்டா 30 தாண்டியாச்சே இன்னும் எத்தனை நாள் தனியாக இருப்ப, எதாச்சிம் பொண்ணை லவ் பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணிக்கலாமில்லே, கேட்பது என் மேலதிகாரி. அதில் கொஞ்சம் இழக்காரம் கலந்திருக்கும்.
ஆரம்ப நாட்களில் செந்தில் சொல்லி இருக்கிறான். சென்னையிலே கடல் காற்றும் காதலும்தான் சுலபமாக கிடைக்கும். வெள்ளந்தியாக எப்படி காதல் பண்றதுனு கேட்டுத்தொலைத்தேன். அன்று சனிக்கிழமை இரவு. முதல்ல நல்ல ட்ரெஸ் பண்ணனும். என் முக வாட்டத்தை பார்த்த குரு அதெல்லாம் அவசியமில்லை என்று ஆரம்பித்தான். டைம் இஸ் மணி. டைம் இஸ் கோல்ட் என்றான்.
பெண்களை கவர பணம் இல்லை தங்கம் வேண்டும். இல்லாட்டி அதே மதிப்புடைய காலம்தான் வேண்டும் என்று குரு கொஞ்சம் குழறியபடி சொன்னது, விவேகானந்தரிடம் ஞானபதேசம் பெற்ற சீடனை போல குதுகலிக்கை வைத்தது.
பேருந்தில் பார்த்த பெண்களில் அழகாய் தோன்றியவளைதான் காதல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். உபதேசம் நடந்த இரண்டு வாரமாகியும் என்னால் பேருந்தில் எந்த பெண்ணின் மேலும் காதல் வரவில்லை. அடுத்த சனி இரவு. செந்தில் சொன்னான். அழகான பெண்கள் ஏன் பேருந்துல போகப்போறாங்க என்றான். பாதி புரிந்தது. ஏன் பெண்களை இப்படி நினைக்கிறிங்க என்று கேட்டதுதான் தாமதம். யாரும் உபதேசம் செய்யாமலே எனக்கு புரிந்தது. சனி இரவு பிரம்மச்சாரிகளிடம் பெண்களை பற்றியோ, காதலை பற்றியோ பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன். ஞாயிறு விடுமுறையாக போனது நல்லதாய் போயிற்று. தூங்கும் போது மணி நாலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு தோல்வி இருக்கிறது.
தோல்வி பயம் என்னை பேருந்தினுள் எந்த பெண்ணும் என் கண்ணுக்கு தெரியாமல் செய்துவிட்டது.
என்ன செய்ய கண்ணுக்கு தெரியாமலும் சில நுண்ணுயிரிகள் இருக்கத்தானே செய்கிறது.
எனது மாத சேமிப்பு 50-100ல் ஒரு 10 ரூபாயை இழந்த நாள் அது. பாக்டரியில் வேலை நேரம் 8.30 முதல் 5 மணி வரை. ஆனால் 5 மணியில் கிளம்புவது என்பது சிரமமான ஒன்று. கண்காணிப்பாளரின் அனுமதி கிடைத்தால் சாத்தியப்படும். அதிகபட்சம் மாதம் இரு நாட்கள் 5 மணிக்கே பாக்டரியில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கலாம். மற்ற்படி 7 முதல் 8 வரை கூட பணி இருக்க நேரிடும்.
இரண்டு டீ, நான்கு உப்புபெறாத உப்பு பிஸ்கெட் கிடைப்பது மட்டுமே ஓவர்ர் டைம் பரிசு.
அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக 10ஐ நெருங்கிவிட்டது. எனது அலாரம் அடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரமாகிவிட்டிருந்தது. எத்தனை லிட்டர் தண்ணியாலும் அந்த அலாரத்தை நிறுத்த முடியாமல் தோற்று போனது. டெஸ்பேட்ச் நாட்களில் 9 மணி தொடுமென்றாலும், அன்று அதிகபடியான டெஸ்பேட்சின் காரணமாக நேரம் அதிகரித்துவிட்டது. கடைசி பேருந்து 10.30 என்பது அலாரத்தின் அலறல் என் காதில் மேலும் அதிகமாக கேட்க வைத்தது. ஒரு வழியாக பணி மேற்பார்வையாளர் பிச்சை போடும் முகபாவத்தோடு கிளம்ப அனுமதி தந்தார். எல்லாம் முடித்துக்கொண்டு அறை வரும்போதே எஸ் எஸ் ம்யூசிக் சானலின் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் முடிந்து போய் ஒரு மணி நேரம் மேல் ஆனதை அடுத்த அறை 45 வயசு பிரம்மச்சாரி முருகேசனின் குறைட்டையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
பசி, பயணம், வேளை பளு என்று எல்லாம் சேர்ந்து என்னை ஈவு இரக்கமில்லாமல் அடித்து போட்டது. அசதியில் அடுத்த நிமிடமே உறங்கி போனேன். தூக்கம் ஒரு நல்ல பொழுது போக்கு. கண்களை திறந்து கொண்ட கனவுகளையே கண்டிருக்கிறேன், தூக்கத்தில் கனவுகளை கண்டதில்லை அல்லது நியாபகம் வந்ததில்லை. என்றும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும் பசி அலாரத்தை முந்திக்கொண்டது அதிகாலை கனவு ஒன்று. கீழ் அறை ராஜூக்கு கனவில் அடிக்கடி நடிகைகள்தான் வருவார்களாம். எதோ நிஜமாகவே வந்துவிட்டதை போன்ற குதுகலிப்பான். ஏனோ எனக்கு கனவுகள் வருவதில்லை. வந்த அந்த கனவும் நடிகைகள் வரவில்லை. வந்தது ஒரு நடக்கடலில் ஒரு மரக்கலம் ஒற்றை துடுப்புடன்.
எதோ ஒரு கவிஞருக்கு போக வேண்டிய கனவு வழி தவறி எனக்கு வந்துவிட்டது போலும். அதிகாலை கனவு பலிக்குமாம். ஒரு வேளை கடல் தாண்டி பயணிப்பேனோ வழியில் எதும் கப்பலோ, விமானமோ நொருங்கி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பேனோ என்றெல்லாம் விபரீத கற்பனைகளாளும் காலை அலாரத்தை நிறுத்த முடியவில்லை. வழக்கமான சிற்றுண்டிக்கு பிறகு பேருந்து நிறுத்தம் வந்ததும்தான் நினைவுக்கு வந்தது பஸ் பாஸ் மறந்து போனதை. ம்ம் இன்று ஒரு அநாவசிய நட்டம்.
பாஸ் இருக்கும் நாட்களில் கண்டக்டரை தேடி கூட்டத்தில் நகர அவசியமில்லை, அவர் வந்து சோதிக்கும் போது நீட்டினால் போதும். பேருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. சென்னை எல்லா மாதமும் சித்திரைதான். எப்போது பெண்கள் வரிசையில் ஏறும் வழியிலேயே நடத்துனரின் இருக்கை இருக்கும். அதனால் பெண்கள் பகுதியில் கொடுத்து கண்காணிப்பதே ஷேமம்.
எதோ ஒரு பெண்மணியிடம் காசை தந்து பயணச்சீட்டுக்காக காத்திருக்கையிலே பின்னாளில் இருந்து ஒரு குரல். குரல் திசையை நோக்கி நான். அந்த குரல் என்னை கவரவில்லை. அவளும் என்னை கவரவில்லை. 4.50 ஒன்னு என்றாள். கையில் கைபை. கூட்டத்தில் ஒரு கையில் பாலன்ஸ் செய்து கொண்டு ஒரு கையால் ஒரு 5ரூபாய் நீட்டிக்கொண்டிருந்தாள். வாங்கி கொண்டு ஒரிரு நொடிகள் அவளை நோக்கினேன். சாத்தானின் பார்வை. உடையை சரி செய்து கொண்டால். எதையோ மிதித்தது போல் இருந்தது. அறை எண் 18 தாமு அதைதான் கடவுள் தரிசனம் என்பான். 36 வயது பிரம்மச்சாரி. இரண்டு தங்கைகள். கடைசி தங்கைக்கு சமீபத்தில்தான் திருமணமாகியது.
பேருந்து பயணத்தில் தினமும் காணும் முதியவர்களுக்கு இடம் தராத பெண்கள், கை குழந்தைகாரிகளுக்கு உதவாத இளம்பெண்கள், ஓயாத செல்பேசும் காரிகைகள், கூட்டத்தில் பிதுங்கும் நங்கைகள், மேற்கம்பியை பிடிக்க கையை உயர்த்தும் போது யாராவது கண்களால் கற்பழிக்கிறார்களா என நோட்ட்மிடும் குமரிகள் என பல்வேறு மறந்து போகும் முகங்களில் அவளும் ஒருவளாக இருந்தாள்.
அந்த ஒருவள் ஒரு நாள் எனது அத்தியாயங்களில் ஒன்றிபோகாவிட்டாலும், ஒன்றாகி போனாள். ஒன்று என்பதும் சரியில்லை எதோ சிலவரிகளாகி போனாள்
தொடர்ந்து அவள் இரண்டு வாரங்கள் என் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தாள். கோபபார்வை மறைந்து போனது. மெல்லிய புன்னகை படந்திருக்கும். அந்த இரண்டு வாரங்களில் எனது அலாரம் கொஞ்சம் பழுதடைந்தது போலும். நேரங்கள் தடம்புரண்டன. நான் இறங்கும் முந்தைய நிறுத்ததில் இறங்கி கொண்டிருந்தாள். மறுபடி குருவைதான் கேட்டேன்.
அநாவசியமா காதல் கீதல்னு இறங்காதே, என்று சுறுக்கமாக நிறுத்திக்கொண்டான். எனக்கு குருவை பிடிக்காமல் போனது. செந்தில் தான் என்னனென்னவோ சொன்னான். அவனை பிடித்துப்போனது. காதலுக்கும் காமத்துக்கு உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.
மீண்டும் பசி.
நண்பர்களது எந்தவொரு ஊக்குவிப்பையும் செயல்படுத்தாமுடியாமல் ஒன்று தடுத்தது, சமீபகாலங்களில்தான் அதற்கும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.
நாளிடைவில் அவளது வருகை குறைய தொடங்கியது. அவள் வராத நாட்களில் பசியின் இடம் மாறிப்போனது. வலி மட்டும் மாறாமலே இருந்தது. இரவு தூக்கம் நள்ளிரவை தாண்டியே தொடங்கியது. எலும்புக்கூடாக மாறிக்கொண்டிருந்தேன். சில தினங்களில் அவளது சிறிய அத்தியாயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவளை வேறொருவருடன் மெரினாவில் பார்த்ததும் முற்றுப்பெற்று போனது.
மீண்டும் அதே வேலை, அதே சம்பளம், அதே செலவு. நாளிடைவில் அவளிடம் தோற்றுப்போனதும் மீண்டும் பசியிடம் தோற்க ஆரம்பித்தேன்.
என்னுடன் ஐடிஐயில் ஒன்றாக படித்த சுந்தர், எதோ ஒரு இழையை கைகளில் வைத்து நம்பியார் போல பிசைந்து அதை பீடியிலே வைத்து சுருட்டி புகைக்கும் போது “ டேய் மனுசன் எதுக்குடா உயிர் வாழ்றான். என்று அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொல்லுவான், அவன் சொல்லுவது ஒன்று சாப்பாடு, மற்றொன்றை அவன் இதுவரை சொன்னதே இல்லை, அதற்கு பதிலாக சிரிப்பு மட்டுமே வரும் அவனிடம் இருந்து, நாள் பூரா சிரித்துகொண்டே இருப்பான்,
மேன்சனில் வாழ்ந்த 48 வயது அருள்தாஸ் சொல்லிதான் இரண்டாவதை புரிந்து கொண்டேன் 10 வருடங்கள் களித்து. அருள்தாஸ் கவிதை, கதை எதாச்சிம் கிறுக்கி கொண்டிருப்பார், ஊரில் அப்பா, அம்மா இன்னும் இவரின் அண்ணாவின் பாதுகாப்பில்தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம், அண்ணனுக்கு பெண் பார்க்க போன போது அந்த இடத்திலே பெண்ணின் தங்கைக்கும் அருள்தாசுக்கும் நிச்சயிக்கப்பட்டு ஒரே நாளில் இரண்டு திருமணமும் நடந்தேறியது.
திருமணமான இரண்டாவது வாரம் , அந்தப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். அவமானம் தாங்காமல் சென்னை ஓடி வந்துவிட்டார் அருள்தாஸ், 25 வருடங்களாக சென்னையிலே பிரம்ச்சர்யம். சென்னையிலே எந்தெந்த இடத்தில் என்ன இருக்கும் என்பது இவருக்கு அத்துப்படி. மாடி ரூம் சுந்தரேசன், தனது மார்கெட்டிங்க் ஆர்டர்களை பிடிக்க இவரைத்தான் பயன்படுத்திக்கொள்கிறான், கமிசனே 5000ரூ வாங்கி விடுவார் அருள்தாஸ்.
சினிமாத்துறையில் ஆல் இன் ஆல், ஒரு முறை ஜெயிலுக்கும் போய் வந்தாயிற்று, சென்னை செண்ட்ரல் ஜெயிலுக்கு கடைசியா போனது நாந்தான்னு சொல்லி பெருமையடித்துக்கொள்வார்.
இருட்டையும், பனியையும் தின்று தீர்த்தன் சூரியன் நடு உச்சியில் பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது. இன்று வாராந்திர விடுமுறை, ஒவ்வொரு வியாழனும் விடுமுறை. இது ஒரு வகையில் எனக்கு நல்லதாகவேபட்டது, மேன்சன் நண்பர்கள், என்னை ஞாயிறுகளில் சினிமாவிற்கு அழைக்கமாட்டார்கள். எனக்காக செலவழிக்க அவர்கள் முற்படலாம், இப்போது இருக்கும் மரியாதையும் அப்போ இருக்குமா என்ற பயம்.
கர்ணனை போல் துரியோதனர்களுக்கு நன்றிக்கடன்பட நான் விரும்பவில்லை.
முன்பு அவர்கள்தான் என் காலை வேளை தேனீர் ஆசையை இலவசமாக தீர்த்து வைப்பவர்கள்.
அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லாமல் எப்போதும் தொலைவில் உள்ள கிருஷ்ணன் கடைக்கே செல்லுவது வாடிக்கை, காலை நேர நடைபயிற்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நாளிடையில் எனக்கு புரிய ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பும் முன் தயாராக இருப்பேன். நடுவில் சொந்த கிராமத்துக்கு சென்று வந்தேன்.
என் தங்கைதான் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருப்பாள். அவர்களுடன் தேனீர் குடிக்க செல்லுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு நாள் கீழ் அறை ராஜூ ஏன் என்று கேட்ட பொழுது அவனிடம் மட்டும் சொன்னேன். எங்கள் வீட்டுல வேலைக்கார கிழவிதான் கோலம் போடும்னு அலறலாக சிரித்தான்.
மனிதர்களுக்கு என்றே பிரத்யேகமான உணர்வு சிரிப்பு. காரணங்கள் மட்டும்தான் வெவ்வேறாக இருக்கின்றன. அருள்தாஸ் ஒரு முறை குரங்குகளும் சிரிக்கும் என்று சொன்னது நியாபகம் வந்தது. நானும் சிரித்தேன்.
வேலை நாட்களை விட விடுமுறை தினத்து பசி மென்மையானது. பாக்டரி அருகில் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் புதுப்பட சினிமாவிற்கு போவது போல் கூட்டதை மீறி சென்று சாப்பிட அமரவேண்டும், அந்த போராட்டத்திலேயே பசியின் வலி உச்சமடையும். சாம்பார், காரக்குழம்பு, ரசம் முடித்து மோர் சாதத்திற்கு வரும் முன்னரே அடுத்த பந்திக்கு தயாராவதற்காக நம்மையே வெரித்து பார்த்து பலர் இருப்பார்கள், ஆரம்ப காலங்களில் மோரை புறக்கணித்து எழுந்துவிடுவேன், இப்போது பழகிவிட்டது.
விடுமுறை தினங்களில் எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் திருவல்லிக்கேணி ஆந்திரா சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். முன்பெல்லாம் ஆந்திரஹோட்டலில் வேலை செய்யும் சிறுவர்கள் ஆம்ப்லேட் வேணுமான்னா, முட்டைபொறியல் வேணுமா, சிக்கன் வேணுமா என்று கேட்டுத்துளைப்பார்கள், இப்போது யாரும் கேட்பது இல்லை, ஒவ்வொரு மாத சம்பள தினத்திலும் இன்னு சிக்கன் சாப்பிடனும்னு வைராக்கியமாக கிளம்புவேன். சிக்கன் விலை 100கிராம். 40ரூ என்பதை பார்த்ததும்
வைராக்கியம் பொடிப்பொடியாகி இருக்கும்.
தங்கைக்கு சென்ற வருடத்தின் மத்தியில் திருமணம் நடந்தேறியது. எங்கள் அய்யா ரத்தவாந்தி எடுத்த சில தினங்களில் அமரராகி போனார், அவரது எல் ஐ சி பாலிசியில் கிடைத்த பணத்தை கொண்டு 5 பவுன், 10000 ரொக்கத்தில் எங்கள் சொந்தத்திலேயே- அப்பாவின் தங்கை - திருமணம் நடத்தி கொடுத்துவிட்டோம். திருமணத்தில் என்னுடைய பணம் முழுவதும் கரைந்து போனது, ஊருக்கு திரும்ப பணமில்லாமல் அம்மாவின் உதவியை நாடினேன். அம்மா வீட்டில் எதையும் விற்க முடியுமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள், தங்கையின் மூலம் இதை அறிந்த அத்தை மகன் தனியாக என்னை அழைத்து 1000ரூ கொடுத்துதவினான், அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சுயமரியாதை அவன் காலடியில் போட்டு அழத்துவங்கி விட்டேன். நீண்ட கதறலுக்கு பின்பே இயல்பாகி போனேன்.
சென்னை திரும்பியதும் முதல் முறையாக கிங்பிஷரும் சிக்கனும் உள்ளே போனது. தங்கையின் கணவரால் வரதட்சனை பிரச்சனை வராது என்ற நம்பிக்கையினால் வந்த சந்தோசத்திலும், 2000ரூ சம்பள உயர்வு - என்னுடைய சகாக்களுக்கு 1000ரூதான்- பெற்றதாலும் கிடைத்த சந்தோசத்திலும், தங்கையின் கணவர் - அத்தை மகன் - தந்த 1000ரூபாயில் 70ரூ டாஸ்மாக்ல் பீருக்கும், 50ரூ ஆந்திரா மெஸ் சிக்கனுக்கும் 30ரூ ஆறு பரோட்டாவுக்கும் செலவானது. 4500ரூபாயில் ஆரம்பித்த சென்னை வாழ்க்கை இரண்டு வருடங்கள் களித்து 6500ரூ ஆகிப்போன குஷியிலும், பீரின் குளுமையிலும்
அன்று இரவு நன்றாக தூங்கி போனேன்.
மாதம் இனி இரண்டாயிரம் என் சேமிப்பு. ஐந்து மாதத்தில் சில ஆயிரங்களுக்கு சொந்தக்காரன் என்ற
நினைப்பே மேலும் போதையூட்டியது.
அடுத்து சிலநாட்களில் எனது போதை தெளிந்து போனது, போதை தெளிந்தால் தலைவலி நிச்சயம்.
நெறுக்க ஆரம்பித்தது
4500ரூ சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில் நான்கு இட்லி 12.50ரூ, மதியம் சாப்பாடு 25ரூ, ஒரு சப்பாத்தி 3 வீதம் 21ரூ என ஒரு நாளுக்கு 60ரூ வீதம் மாதம் 1800ரூ செலவாகி கொண்டிருந்தது, வாடகை 800ரூ, பஸ் பாஸ் 600ரூ (இன்னும் கலைஞர் விலையேற்ற வில்லை இதை, அதற்கு அவருக்கு ஒரு நன்றி ) என மாதம் 3200 செலவு போக மிச்சமாகும் 1300ரூவில் குளியல், சலவை சோப்பிற்கு போக மீந்தும் 1000ரூபாவினை வீட்டிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தேன்.
2000ரூ சம்பளம் உயர்வு பெற்றது, எனது சில்லரை கனவுகளான சத்யமில் சினிமா, உயர்தர அசைவ ஹோட்டல் சாப்பாடு, குறந்த பட்சம் இரண்டு செட ஆடைகள், பேக்டரியில் தரும் குண்டு ஷீவை மாற்றி காதிம்ஸ் அல்லது பாட்டாவில் கட் ஷு போன்றவையை நிறைவேற்ற எண்ணியிருந்தேன்.
கல்யாண வேலைகளில் தேய்ந்து போன அம்மாவின் உடல் நலம் கெட்டுப்போனது, அம்மாவின் ரத்த வாந்தி செய்தியை கேட்டு கம்பெனியில் 2500ரூ அட்வான்சாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றேன். டி.பி எனும் காசநோயின் ஆரம்ப பிடிகளில் சிக்கிய எனது அம்மாவை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். (அப்பாவின் மரணத்தின் போது ரத்த வாந்தி எடுத்தது நியாபகம் வந்தது. மறைத்திருக்கிறார் )
தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு விடாமல் மருந்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் எச்சரித்தார். அம்மாவை தங்கையின் இல்லத்தில் விட்டு மீண்டும் சென்னை பயணமானேன், இம்முறை வீட்டிற்கு அனுப்பும் தொகை 3000ரூ உயர்ந்தது. சத்யம், உயர்ரக உணவுகள், துணிகள் கனவு அல்பாயிசில் மடிந்து போனது.
இதற்கிடையே உணவகங்களில் உணவுகளின் விலைப்பட்டியலையும் 2 மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டும், அறையின் வாடகை உயர்த்தப்பட்டதும் வீட்டிற்கு அனுப்பும் தொகை 2000ரூக்கும் குறைவாகி போனது. தங்கையின் தலை தீபாவளிக்கு செல்ல முடியவில்லை. தெரிந்த நண்பரின் உதவியுடன் மாதம் 1100வீதம் 12 மாத தவணையில் 10000ரூ பெற்றேன் - 9500 தான் கிடைத்தது டாக்மெண்ட் சார்ஜ் என்று 500ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். நவம்ப மாத, டிசம்பர் மாத தவணையை நண்பரின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது.
அடுத்த மாதம் முதல் சம்பளம் 6500ல் 1100 கழிந்து போகும். அம்மாவின் காச நோய்கான மருந்தை ஒரு மாதம் நிறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர் சொன்ன கெடு முடியும் முன்னரே. தீபாவளி சமையத்தில் மீண்டும் ரத்தவாந்தி, அதனாலேயே நண்பரிடம் கடன்வாங்க வேண்டியதாக போய்விட்டது.
இன்னும் நான்கு மாதத்றிற்கு தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள வேண்டும் என மருத்துவர் மீண்டும் நாட்களை நீட்டித்துவிட்டார். இன்னும் என் சில்லரை கனவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு வருடம். தேவையற்ற போது ஓடிப்போகும் காலம், தேவைப்படும் போது ஊர்ந்து செல்கிறது.
இருட்டிவிட்டது, இன்னும் ஒரு சில மணி நேரம்தான்.
இன்று கடைசி முறையாக சேட்டு கடையில் 7 சப்பாத்தி. நாளை முதல் எல்லாமே குறைக்கனும். பசியை குறைக்கனும். முடியாவிட்டாலும் முயலவேண்டும். காலையில் இட்லி ஒரு வடை கட். 8.50காசு சேமிப்பு. மதியம் 30ரூ அளவுச்சாப்பாடு. 10ரூ சேமிப்பு. இரவு 4 சப்பாத்தி. ரூ15 சேமிப்பு. . 600ரூ பஸ் பாஸ் இனி இல்லை. 400ரூக்கு பாஸ் -200ரூ சேமிப்பு - இனி சாதாரண கூட்டம் நிரம்பி வழியும் பஸ் மட்டுமே(சென்னையில் எல்லா பேருந்துகளும் கூட்டம்தான், இரவு 10 மணி வரை, தானியங்கி திறக்கும் கதவுகள் கொண்ட டீலக்ஸ் பேருந்துகளே இந்த பாதையில் அதிகம், அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் இரண்டு மூன்று சாதாரண பேருந்துகள், படிக்க்கட்டில் தொற்றிக்கொண்டு பயணிக்க வேண்டும் இனி, இல்லையென்றால் இரவு பத்து மணி மேல் )
வாடகையை குறைக்க முடியாது.
= 8.50 + 10 + 15
= 33.5 * 30
= 1005 + 200
= 1205ரூ இனி மாதந்தோறும் சேமிக்கும் தொகை.
ம்ம். மாத தவணை போக மீதம் 105ரூ.
ஊருக்கு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த சுந்தரேசன் கையை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டு ஓடினான்.
இன்னும் சில மணி நேரம்தான், அடுத்த மேலும் ஒரு புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது.
மேன்சன்வாசிகளின் அறைகளில் கண்ணாடிகளின் சிணுங்கல்கள், எப் எம், டிவிகளின் அலறல்கள்
பெரிதாகத்தொடங்கியது. இன்னும் சில மணிநேரங்களில் உலகம் அழிந்து போகும் பதட்டம், பரபரப்பு எல்லாருடைய நடவடிக்கைகளிலும்.
சேட்டு கடை பூட்டியிருந்தது, நிறைய கடைகள் வழக்கத்துக்கு மாறாக வியாழன் இரவான இன்று பூட்டிக்கிடக்கின்றன, செல்போன் டீலர்ஸ் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிம்கார்டினால் பசியை தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஹோட்டல் கம்போர்ட் உங்களை அழைக்கிறது என்ற ஆங்கில வாசக தட்டி. கண்டிப்பாக என்னை அழைக்காது, அதற்கு குறைந்த பட்சம் மூன்று இலக்க மதிப்பு பணத்தை எதிர்பார்க்கும்.
ரோட்டோர ப்ளாட்பாரவாசிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த மார்கழி குளிரை அலட்சியப்படுத்தி ப்ளாட்பாரங்களில் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வெளிநாட்டு பயணி அந்த ப்ளாட்பாரவாசி பெண்களில் ஒருவளுக்கு ஆங்கில பத்திரிக்கையில் ஆங்கிலம் கற்றுதந்துக்கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை இன்று அதிகமாகத்தெரியிகிறது.
சில வாகனங்களில் பின் இறுக்கையில் ஆண்கள், பல இறுக்கைகளில் பெண்கள்.
ஹோட்டல் அன்னப்பூரணா...
என்ன வேணும்
சப்பாத்தி,
சப்பாத்திக்கு தனியா சைட் டிஷ் வாங்கனும்,
எவ்ளோ
45ரூ.
பரோட்டா இருக்கா,
எத்தனை
இதுக்கு சைட் டிஷ்,
இதுக்குலாம் இல்லை.
ஒரு பரோட்டா எவ்வளவு
14ரூ. இந்த கார்டுல போட்டிருக்கு, பார்த்துக்கோங்க
இரண்டு பரோட்டா
28ரூ பில் கொடுத்துவிட்டு வெளியேறினேன், பெட்டிக்கடையில் இரண்டு பழம் வாங்கி கொண்டு
நேராக அறைக்கு திரும்பினேன் நேரம் 10.30 என்று காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அறைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட குதூகலம்.
2009ற்கும் 2010ற்கும் எனக்கு வித்தியாசம்.
மெல்லிய பசி. தூக்கத்தை உறுத்திக்கொண்டிருந்தது. விளக்கணைத்துவிட்டேன்.
முற்றும்
|