மத்தியான வேளை. மண்டையைத் துளைக்கும் உச்சிவெயில். வெறிச்சோடிய மின்ரயில் நிலையம் கத்திரிவெயிலின் உக்கிரத்தைப் பலமடங்கு அதிகரித்துக் காட்டியது. வெயிலின் விளிம்பை நீங்கி விலகியோடத் துடித்து நீளும் தண்டவாளங்கள் தொலைவில் வளையுமிடத்தில் கானல் மிதந்தது. இன்றைக்குச் சென்று வந்த நேர்முகத்தின் பலன் பற்றி மீண்டும் ஒரு மின்னல் முத்தையாவுக்குள் ஓடி விதிர்த்து மறைந்தது.
குளிர்பானம் குடிக்க முடிவெடுத்தான். கடைக்காரரிடம் பானத்தின் பெயர் சொன்னான்.
நிலையக் கூரையைத் தாங்கி நின்ற கம்பத்தின் அருகே, பார்வையில்லாத பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். அவள்மீது கவனம் குவிந்தது. குச்சிகுச்சியான கைகள். தட்டையான மார்பு. எலும்பைத் தவிர வேறு எதுவும் இல்லாத உடல். முன்பக்க முந்தானை பிடிப்பின்றி விலகி ஒருக்களித்திருந்தது. தோள்பைக்குள்ளிருந்து எடுத்த மஞ்சள் பையை மடியில் கவிழ்த்துக் கொட்டினாள். உதிர்ந்த சில்லறைகளை வேகவேகமாக எண்ணத் தொடங்கினாள் - அருகில் நின்ற சோனிக் குழந்தையை அவ்வப்போது ’காசெ எடுத்தே, கொன்னுப்புருவேன்’ என்று மிரட்டியபடி.
எவ்வளவு காசுகள். முத்தையாவுக்கு ஒரு கணம் பொறாமையாக இருந்தது. சில்லறைகளை ஒரு பெரிய சுருக்குப் பைக்குள் போட்டுவிட்டு, தோள்பைக்குள் கையை நுழைத்துத் துழாவினாள். தன்னைச் சுற்றிலும் கையெட்டும்வரை தரையைக் கையால் தடவிப் பார்த்தாள். ’பைக்குள்ளெருந்து ஒரு பத்து ரூவா நோட்டு விளுந்திச்சே. எங்கெ சனியனே? கையிலெ வச்சிருக்கியா, திருட்டுச் சிறுக்கி?’ என்று குழந்தையின் முதுகில் ஓர் அறை வைத்தாள்.
’இல்லே, இல்லேம்மா’ என்று அலறி விட்டு, உரத்து அழ ஆரம்பித்தது அது.
அப்ப அவென்தான் களவாண்டுருப்பான். எங்கெ அந்தப் பிச்செக்கார நாயெ. அவனெ எங் கையாலெ ஒரு சாத்துச் சாத்துனாத்தான் எனக்கு அடங்கும்.
என்று அறிவித்துவிட்டு, ரயில் பாலப் படிக்கட்டை நோக்கி நடந்தாள். கைக்கோலை ஊன்றாமல் அவள் விரைவாக நடப்பதை வியப்புடன் பார்த்தான் முத்தையா. தடுமாறாமல் நடந்தாளே யொழிய, சட்டென்று புரியாத, துரிதமான ஒரு கணக்கு அவள் நடையில் இருப்பது தெரிந்தது. குழந்தை அழுதுகொண்டே பின்னால் ஓடியது.
ஒழுங்கற்ற குச்சுத் தாடியுடன் கீழ்ப்படியில் உட்கார்ந்திருந்தவனிடம் போய் நின்றாள். அவனும் பார்வையில்லாதவன். ஏதோ சொல்லியவாறு அவன் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டினாள். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவன் உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். ’தேவிடியாச் சிறுக்கி’ என்று ஆவேசமாய் எழுந்தான். இவள் இருந்த திசையில் கையை வீசினான். வீச்சின் அரைவளையத்துக்கு வெளியில் நகர்ந்துவிட்டிருந்தாள் இவள்.
இருவரும் ஒருவரையொருவர் தாக்குவதற்காக முயன்று காற்றில் கடும் வேகத்துடன் இலக்கின்றிக் கைகள் போய்வந்தன. குழந்தை பெருங் குரலில் அலறிக்கொண்டே அருகில் நின்றது.
முத்தையா பதட்டத்துடன் நகர்ந்தான். எட்டிக் கழுத்தை நீட்டி வேடிக்கை பார்த்த கடைக்காரர்,
நீங்க தலையிடாதீங்க சார். அவுங்க ரெண்டுபேரும் புருசம் பொண்டாட்டி என்றார்.
அவன் கையில் அவள் தலைமுடி அகப்பட்டுவிட்டது. கையால் சுழற்றிக் கீழே தள்ளி அவள் மேல் விழுந்தான். எலும்பு தரையில் மோதும் ஒலி தட்டென்று கேட்டது. இலக்கு சிக்கியதில் நிம்மதியானவர்கள் மாதிரி இருவரும் ஒருவரையொருவர் ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையால் தாக்கிக்கொண்டு உருண்டார்கள். சுற்றிலும் பத்திருபது பேர் சேர்ந்துவிட்டார்கள்.
தொலைவில் ரயிலோசை கேட்டது. சண்டை உடனடியாக நின்றது. அவள் உடைகளை வேகமாகச் சரி செய்துகொண்டாள். அவன் தனது தோள் பையிலிருந்து பெரிய கஞ்சிராவை எடுத்தான். ரயில் வந்து நின்றது. பெட்டிச்சுவரைக் கையால் தடவி உணர்ந்து இருவரும் ஏறினார்கள். அழுகையை நிறுத்தியிருந்த குழந்தை பின்தொடர்ந்தது. மறு நிமிடம் ரயில் கிளம்பியது. அவள் பாடும் குரல் ஜன்னல் வழி வெளியே வந்தது.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
அவனுடைய தாளம் பின் தொடர்ந்தது. ’நல்ல குரல் அவளுக்கு’ என்று நினைத்துக்கொண்டான் முத்தையா.
---------------------------------------------------------------------------------------------
|