அறுவடைகாலம் தொடங்கியநேரத்தில் மழைகாலமும் வந்தது. கதிர்களை அறுவடை செய்து களம் சேர்ந்தபோது மழை அடைமழையாகிப்போனது நெல் மணிகள் அறியில் இருந்தே முளைத்து களத்துமேடு முழுவதும் கரும்பச்சையானது. வயலில் நெல் விளைந்த பாலை வார்த்த விவசாயி வயிற்றில் இப்போது பற்றி எரிந்தது பசிகளுடன். மழை “ச்சோ” வென்று பெய்ய, இருளும் மழையும் உறவாடிக்கொண்டபோது ரத்தினத்தின் வீட்டின் கூரையை துளைத்துக்கொண்டு மழைத்தண்ணீ வீட்டுக்குள் சொட்டு சொட்டு என்று ரத்தினத்தின் மனைவி வைத்த வெண்கல பாத்திரத்தில் கொத்தலமிட்டுகொண்டிருக்க, ரத்தினத்தின் மனைவி சாரதா “என்னங்க இந்த வீணாபோன மழைவேற நிக்காதுபோல என்க. மதி ரேடியோவை திருக ஆல் இந்தியாவின் மாநிலச்செய்திகள் வாசிப்பது சரோஜினிநாராயணன். தமிழகமெங்கும் அடைமழை, இன்னும் ஒருவாரம் தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனர் மாதவன் கூறினார். கடலோர மக்கள் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளிகளில் தங்கிக்கொள்ளுமாறு அரசு ஏற்பாடு செய்துள்ளது என்க. ரத்தினம் “ அப்ப நாளைக்கு மழை வராது”
“நாளைக்கு வெள்ளன போயி நெல்லு போட்டதுக்கு பணம் வாங்கிட்டு வந்திடுங்க, தீபாவளி வேற வருது, ம்... உழுதவன் கணக்கு பார்த்தா ஒலவுக்கு கூட மிஞ்சாது என்றாள் சாரதா. மீண்டும் முக்கிய செய்திகள் பிரதமமந்திரியின் உரையில் நாளை நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்தார். இத்துடன் இந்த செய்திகள் முடிவடைந்தன என்க இருளும் வீட்டுக்குள் படர தொடந்து பெய்யத மழை மழைத்தூரலாக தொடர்ந்தது, கரிச்சான் கிரிச்சிட, தவளைகள் மழைத்தண்ணீருக்குள் இருந்து பாட. சேவல் கொக்கரிக்க. பொழுது விடிந்துகொண்டு இருக்க. சாரதா கணவனை தட்டி எழுப்பிக்கொண்டே
“ஏங்க மழை நின்னுடுச்சுங்க சீக்கிரமா எழுந்து போங்க அந்த வெளங்கொண்டான் அவன் வீட்டவிட்டு வெளியே கிளம்பிறதுக்குள்ள அவன் வீட்டுக்கு போயி நெல்லு போட்ட பணத்த வாங்கிட்டு வாங்க” எனக்கூறிக்கொண்டே ரத்தினத்தை எழுப்பியபோது மதியும் எழுந்துவிட்டான். அவனை பார்த்த ரத்தினம் “நீ தூங்கு செல்லம்” என்க. மதி எழுந்து “இன்னைக்கு சுதந்திரதினம்ப்பா, அதுக்கு ஸ்கூல்ல பாட்டு சொல்ல மனப்பாடம் பண்ணனும்” “என்ன பாட்டு பாடப்போற” “காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கணிவு தரும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள் பாப்பா” என்றான்.
“மதி நீ பாடப்போற இந்த மூணுமே ரொம்ப காஸ்ட்லிப்பா. இப்ப அப்பா நான் ஒனக்கு ஒரு பாட்டு சொல்லித்தரேன் அதைப்பாடு” மதி “என்ன பாட்டுப்பா”
“நீ உன்னை அறிந்தால்... நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்... என்று பாட்டுபாடு” இதை பார்த்த சாரதா “அப்பாவுக்கு புள்ளைக்கும் காலையில வேற வேலையில்லையா? போயி மொதல்ல பணம் வாங்குற ஜோலிய பாருங்க” ரத்தினம் பஸ்சில் அமர இடம் இருந்தும் எங்க தான்உடுத்தி உள்ள கதர் வேஷ்டி சட்டை கசங்கி அழுக்காகிவிடுமோ என்று சீட்டில் அமராமல் பஸ்சில் தன் தலைக்கு மேலே உள்ள கம்பியை இருக்க பற்றிக்கொண்டு வேஷ்டியை தரையில் படாமல் தன் தொடையில் இருக்க சொருகிக்கொண்டு சோலக்கொள்ளை பொம்மைபோல் பயணிக்க வேகமாக சென்றுகொண்டு இருந்த பஸ் கண்டக்டர் துரித விசில் சத்தத்தால் பஸ் சடன் பிரேக்கில் அடங்கி நின்ற வேகத்தில் சோலக்கொள்ளை பொம்மை போல் நின்ற ரத்தினம் கூட்டத்தின் நெரிசலில் விழுந்த போது அவன் ஆடை மட்டுமல்ல அவனும் கசங்கி போயிருந்தான். அவன் இறங்கப்போகும் பாப்பாநாடு வந்தது பஸ் விட்டு இறங்கிய ரத்தினம் வெளங்கொண்டார் வீடு நோக்கி நடந்தான் வெளங்கொண்டாரின் வீட்டின் முன் நாளைந்து கரை வேஷ்டிகள் இருக்க.
வாசலில் நின்ற பச்சை கலர் அம்பாசிடரை பளபளபாக்கி கொண்டிருந்தான் டிரைவர். ஈரத்துணிகளை உலர்த்திக்கொண்டே வெளங்கொண்டார் மனைவி “நாலு லோடு நெல்லு மழையில நனைஞ்சுகிட்டு இருக்கு. லேசா மழை வேர விட்டிருக்கு இந்த நேரத்துல நெல்ல அனுப்புறத விட்டுபுட்டு கட்சி மீட்டிங்ன்னு காலங்காத்தால வெள்ளையும் சொல்லையுமா கெளம்புரத பாரு. மூணுவாட்டி பஞ்சாயத்து தலைவருக்கு நின்னும் ஒண்ணு ஜெயிச்சபாடு இல்லை எல்லாதடவையும் என் நகையும் நெல்லு வியாபார பணமும் போனதுதான் மிச்சம்”. அந்த வேளையில் வெளங்கொண்டார் “அடுத்த எலெக்சன்ல எம்.எல்.ஏ. சீட்டு தர்ரதா சொல்லி இருக்காங்க. இப்பைல இருந்தே மீட்டிங் போனாதான் கொடுப்பாங்க” எனக்கூற மனைவி சிரித்தபடியே இதையேதான் மூணு தடவ சொன்னீங்க கெடச்சுதா”என்றாள்.
“சரி,சரி... ஒரு காபி கெடைக்குமா”
“ம்...ம்... அப்படியே எழுந்து அதோ (காரின் அருகே நின்ற நான்கு கரை வேட்டி ஆளுன்களையும் சேர்த்து காண்பிச்சு) அந்த தெண்டச்சோறுங்களையும் கூட்டிகிட்டு (அவ்வேளையில் ரத்தினமும் அங்கே வர) அதோ இன்னொரு ஆளும்வந்தாச்சு, எல்லாரும் சேர்ந்து பொடி நடையா ரோட்டு முக்கத்துல உள்ள செட்டியார் கடையில் சுடச்சுட காபியை குடிச்சுட்டு போங்க” என்றாள். செட்டியார் கடையில் காபி குடித்துவிட்டு வெளங்கொண்டார் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க ரத்தினத்துடன் சேர்த்து நால்வரும் பச்சைகலர் அம்பாசிடர் காரின் முன்சீட்டில் புளிமூட்டை போல் அடைந்து கொண்டனர். ரத்தினத்தின் வேட்டி சட்டைகள் கந்தலாகிக்கொன்டிருக்க. ரத்தினம் வெளங்கொண்டாரிடம் தன் நெல் பணத்தை கேட்க முற்படும் முன்பே வெளங்கொண்டார் “இன்னைக்கு சுதந்திரதினவிழா... என்னையா பேசுறது.” என பின்னால் அமர்ந்திருந்த சகாக்களிடம் கேட்க அவர்கள் ஆளுக்கொன்று சொல்ல அதற்குள் விழா நடக்கப்போகும் பள்ளியின் வாசல் முன்வந்து நின்ற பச்சைகலர் அம்பாசிடரில் முன்கதவு வழியாக இறங்கிய வெளங்கொண்டார் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் வணங்கியபடி மேடைக்குச் செல்கிறார்.
அவருடன் வந்த நால்வரில் ஒருவர் “பார்த்தாயா அரைமணி நேரம் முன்னாடி வீட்டிலே அவரோட மனைவிகிட்ட அர்ச்சனை வாங்கிகிட்டு, இங்க என்னடான்னா பலமான வரவேற்பு. நால்வரில் ஒருவர் நெல் வியாபாரம் மட்டுமில்ல அரசியல் வியாபாரத்திலும் இந்தாளு கில்லாடி தான்” என்க, மேடை கலைகட்டியது, மாணவர்கள் அனைவரும் தேசிய கொடியை கையில் பிடித்துக்கொண்டு தேசியகீதம் பாடினர். அந்த கூட்டத்தில் ரத்தினத்தின் மகன் மதியும் இருந்தான். மதி மட்டும் எல்லோரும் தேசியகீதம் பாடி முடிந்த பிறகும் தனது உரத்த குரலில் “நீ உன்னையறிந்தால்... நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்” என பாட இதை கேட்ட அனைவரும் அவன் பக்கம் திரும்பினர். ஒரு ஆசிரியர் ஒடிச்சென்று அவன் வாயை பொத்தினார். அதைக்கண்ட ரத்தினம் அந்த கூட்டத்திற்கு மறைந் கொண்டான். எங்க அந்த சிறுவனின் தந்தை தான் தான் என தெரிந்து நெல் பணம் கிடைக்காமல் போயிவிடுமோ என்று. வாயை பொத்திய ஆசிரியரை பார்த்து அவனை மேடைக்கு அழைத்துவரச் சொன்னார் வெளங்கொண்டார். “உன்னை யாரப்பா இந்த பாட்டு பாடச்சொன்னது”
“எங்கப்பா” என்றான் ரத்தினமும் அவனை பார்த்தான். மதியிடம் ஒரு தேசிய்ச்கொடியை கொடுத்து அவன் முதுகில் தட்டி அவனுக்கு மேடையில் இருந்து விடைகொடுத்தார். மேடையில் இருந்த வெளங்கொண்டார் “இந்த சுதந்திர நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும், நம்நாட்டிற்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டில் கூஜாவாக இருக்க வேண்டும். மனைவிக்கு மரியாதை கொடுப்பவந்தான் சமுதாயத்தில் மதிப்புள்ள மனிதனாக மதிக்கப்படுகிறான். நாம் அனைவரும் பெண்மையை மதிக்கவேண்டும்” என்றார். பெண்கள் கூட்டம் கரகோசம் எழுப்பினர். அனைவருக்கும் தான் வாங்கி வந்திருந்த சீருடைகளை வழங்கிவிட்டு வாழ்த்து கூறி அவர் காரை நோக்கி இளைஞனை போல் வேகமாக ஒடடமும் நடையுமாக வந்து காரில் அமர்ந்தான்.
அதை பார்த்த இளம் பெண்களும் சரி மாணவ, மாணவிகளும் சரி “ அம்பது வயசுல என்ன சுறுசுறுப்பா ஒடிவந்து கார்ல ஏறுராரு பார்த்தையா” “அது ஒண்ணுமில்லப்பா அவர் சாப்பிடுறது எல்லாம் சைவம், யோகான்னு நல்லா பழக்கம் இருக்கு” “என்ன இருந்தாலும் வெளங்கொண்டார்... வெளங்கொண்டார் தான்யா...” என அவருடன் வந்தவர்கள் கூற கார் அங்கிருந்து வெளங்கொண்டார் ஒடி வந்த வேகம்போல் விருட் என்று சென்றது. கதவடைந்த காருக்குள் வெளங்கொண்டார் தெரு நாய் போல் மூச்சு வாங்கிக்கொண்டே “தண்ணீ...தண்ணீ...” என்றார். பின்சீட்டில் அமர்ந்திருந்த ரத்தினம் தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுக்க அதை வாங்கி குடித்துவிட்டு கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்து டிரைவரை பார்த்து “ காரில யாரையும் ஏத்த வேண்டாம்னு சொன்னேனில்ல ” நாலு நாளா கடைக்கும் வீட்டுக்குமா நடையா நடக்கிறாரு, அவர் நம்மகிட்ட போட்ட நெல்லுக்கு பணம் வாங்க, ஊருக்கு போகவர கூட காசு இல்லைனாரு அதான் போறவழியில இறக்கிவிட்டுறலாம்னு” அதற்குள் கார் வெகு தூரம் வந்தது. “சரி...சரி... நாளை வந்து உன் பணத்தை வாங்கிக்க” காரை நிருத்தப்பா. என்று கூறி காரை நிறுத்தி அங்கு ரத்தினத்தை இறக்கிவிட அவன் இறங்கிய வேகத்தில் கார் விருட் என்று செல்ல.
கார் சென்ற வேகத்தில் மழைத்தண்ணியை ரத்தினத்தின் ஆடையில் வாரி பூசிவிட்டு சென்றது. வீட்டைவிட்டு வெளியே வந்த பொழுது வெள்ளையும் சொல்லையுமாக வந்த ரத்தினம் வீட்டிற்கு திரும்பிய அந்த மாலை பொழுதில் கலங்கிய மேகங்களாய் அவன் ஆடைகள் கரைபடிந்திருந்க்க. தன்வீட்டை நோக்கி நடந்தான். டிரைவர் வெளங்கொண்டாரை பார்த்து “இவ்வளவு வேகமா ஒடியாந்து கார்ல ஏறினீங்களே நீங்க ஒரு ஆஸ்துமா பேசண்ட் மெதுவா வரவேண்டியதுதானே”. டிரைவரை பார்த்து வெளங்கொண்டார் ஏலே நான் மெதுவா வந்தா கிழத்துக்கு வயசாகிப்போச்சுன்னு எவனும் வரப்போற தெர்தல்ல ஒட்டு போடமாட்டான், மூணுவாட்டி தோத்திருக்கோம்டா இந்த வாட்டியாவது ஜெயிக்கணும். மக்கள்கிட்ட இப்படி நடிச்சுதான் ஆகனும் வேற வழி ” என்றபோது செவ்வானம் இருளுக்குள் புகுந்தது. மழை ஒய்ந்திருந்தது. ரத்தினத்திற்கு சாரதா சாதமிட்டுக்கொண்டு இருந்தாள் “என்னங்க இன்னைக்கும் அந்த வெறும்பய வெளங்கொண்டான் இன்னைக்கும் ஏமாத்திபுட்டானா?”
“இல்லம்மா நாளைக்கு எப்படியும் பணம் கெடச்சிரும், மதி தூங்கிட்டானா?’ ‘இவ்வளவு நேரம் உங்களுக்காக தான் காத்திட்டிருந்தான் இப்பதான் தூங்கினான்” ரத்தினம் தான் மதியை பள்ளியில் பார்த்த ஞாபகம் வர. அவன் தனக்குள் சிரித்தபோது. மதி எழுந்து தன் தந்தை அருகே வந்துவிட்டான் ரத்தினமும் தான் சொல்லவந்ததை மறைத்து உணவருந்திவிட்டு மூவரும் படுத்துறங்கச் செல்லும் வேளையில் “ அப்பா நீ சொன்ன பாட்ட பாடினேன், எல்லாரும் என்ன பாராட்டினாங்க”என்றான் “ சரி நாளைக்கு பேசிக்கலாம் தூங்கு” ....
“அப்பா எப்பையும் ஒரு கதை சொல்லுவியே அதுமாதிரி ஒரு கதை சொல்லப்பா” “சரி” என்று ஆரம்பித்தான்.
“எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட கதை சொல்லுறேன் கேளு. ஒரு சுதந்திர போராட்ட தியாகி இருந்தாரு, அவருக்கு ஒரே பையன் அவனும் நல்லா படிச்சான், இடையில அவன் அப்பா இறந்திட்டார். அவன் அப்பா போல அவன் நேர்மையா இருந்தான். ஸ்கூல்லயும், காலேஜ்லயும் அவன் தான் முதல் மதிப்பெண் எடுத்தான். கடைசியில MBBS சீட்டு கிடைச்சது. ஆனா நன்கொடையா 25,000 ரூபா கேட்டாங்க, அதுக்கு அவன். நான் படிச்சு பாஸ் பண்ணி நல்ல மார்க் வாங்கியிருக்கேன் ஏன் பணம் கொடுக்கணும்னு. நான் ஒரு பைசா கூட கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டான். அதனால அவனுக்கு MBBS சீட் கெடைக்கல. போனாபோகட்டுமுன்னு அடுத்தவனுக்கு அடிமையா இருக்கறதவிட தன் நிலத்துல உழைச்சு சாப்பிடலாம்னு விவசாயம் தொழில்பண்ணிணான் பத்துவருஷம் முன்னாடிவரை விவசாயம் நல்லாயிருந்திச்சு, இப்ப விவசாயமும் நொடுஞ்சுபோச்சு. ஆனா அவனை தவிர எல்லாமே மாறிப்போச்சு. லஞ்சம் இல்லாம வாழமுடியாத சூழல் வந்திருச்சு. ஆனா அவன் இன்னும் போராடிக்கிட்டே இருக்கான்” என்று கதையை நிறுத்தினான். மதி“நல்லாயிருக்கு மேல சொல்லப்பா” ரத்தினம்“ நீ இன்னும் தூங்கலயா?”
“நீங்க சொன்ன கதை நல்லாயிருந்திச்சு.. அதான் தூங்கல, மேல சொல்லப்பா”
“இனிமே என்ன நடக்கும்னு அவனுக்கே தெரியாதப்பா”
“யாரப்பா அது”
“அதை கேட்ட சாரதா “அது வேற யாருமில்ல உங்கப்பாதான்”..
யாம்ப்பா நீ 25,000 கொடுத்து இருந்தா நமக்கு இந்த கஷ்டமே வந்திருக்காது ல பா?...
யார் டா சொன்னது.. டாக்டர் ஆகி இருந்த இத விட ஜாஸ்தி கஷ்டம் இருந்திருக்கலாம் டா..
பிரச்சனை னு நினைச்சா வாழ்க்கைல எல்லாமே கஷ்டம்தாண்டா.. இருக்கறத வெச்சிக்கிட்டு அதுக்குள்ள வாழ்ந்தோம் நா நிறைவா கூட இருக்கலாம்.. என்ன பொறுத்த வரைக்கும் நான் உனக்கு நல்ல அப்பாவா இருந்திருக்கேன்..உங்க அம்மாவுக்கு நல்ல கணவனா இருந்திருக்கேன்... ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியோட பிள்ளையா இதுவரைக்கும் இனாம் கொடுக்காம வாழ்ந்துக் கிட்டு இருக்கேன்.. இத விட எனக்கு என்ன டா வேணும்? அதே போல நீயும் உன் வாழ்க்கையில நடந்துக்கிட்டினா..எனக்கு ரொம்ப சந்தோஷம் டா..நாமெல்லாம் இருநூறு வருசமோ, முன்னூறு வருசமோ வாழப் போறது இல்ல.. நோயில்லாம ஆரோக்கியமா ஒரு அம்பது வருஷம் வாழ்றதே கஷ்டமா இருக்கு.. இந்த பணம், அந்தஸ்து இதெல்லாம் இன்னைக்கி வெளங்கொண்டார் கிட்ட இருக்கும், நாளைக்கு வேற யார்கிட்டயாவது இருக்கும்.. அப்புறம் உன் கிட்ட இருக்கும்..எதுமே நிரந்தரம் இல்ல டா.. இது தெரிஞ்சே நாம போட்டி, பொறமை னு வாழ்ந்துட்டு இருக்கோம்.. ஒன்னு மட்டும் நீ நான் சொல்றத செஞ்சாப் போதும் பா..
என்னப்பா அது.. சொல்லுப்பா செய்றேன்..
நீ யாருகிட்டயும் இனாம் வாங்காத.. யாருக்கும் இனாம் கொடுக்காத..
அப்படி உன்ன போல ஒவ்வொரு குடிமகனும் இருந்தா, இந்த ஊழல், போராட்டம் எதுமே நமக்கு தேவைப்படாது..
அப்படி இல்லாத ஒரு நாடு எப்ப இருக்குதோ, அப்பதாண்டா நமக்கெல்லாம் சுதந்திரம்..
என்று சொன்னபோது மதி “விளக்க கொழுத்தம்மா” எனக்கூற அவன் ஏற்கனவே பள்ளிக்கு அணிந்து சென்ற சுபாஸ் சந்திரபோஸ் உடையணிந்து அப்பாவை எழுந்து நிற்கச்சொல்லி அம்மாவையும் அருகில் வரச் சொன்னான். அவன் பள்ளியில் கொடுத்த தேசியகொடியை அப்பாவின் கையில் கொடுத்து விட்டு கால்களை நேராக நிறுத்தி நிமிர்ந்து நின்று. அப்பாவை ஒருமுறை பார்த்தான்... அப்பாவும் அவனை பார்க்க தேசியகொடியை கைகளில் பிடித்துக்கொண்டிருக்கும் ரத்தினத்தை பார்த்து “சல்யூட்” என்று சத்தமாக கத்தினான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
|