ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL)
|
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) சிகாகோ பல்கலைகழகத்தின் பெரும் முயற்சியால் 1996-ல் சென்னையில் நிறுவப்பட்டது. மனித நேயம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் முதலான பல்வேறு துறைகளில், தமிழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் வசதிகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். கோட்டையூர் ரோஜா முத்தையா அவர்களால் சேகரிக்கப்பட்ட நூல்கள் மொத்தமாக இங்கு தொகுக்கப்பட்டு ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
1926-ல் பிறந்த ரோஜா முத்தையா செட்டியார் காரைக்குடிக்கு அருகிலிருக்கும் கோட்டையூரைச் சேர்ந்தவர்; இளைஞராக இருக்கும்போது ஓவியராக விரும்பி, 'ரோஜா ஆர்ட்ஸ்' என்ற பெயரில் விளம்பரப் பலகைகள் எழுதும் கடை ஆரம்பித்தார். பின்னர் 'ரோஜா' என்பது அவருக்குப் பட்டப்பெயராகி, 'ரோஜா முத்தையா' என்னும் பெயரே வழங்குவதாயிற்று. செட்டியாரின் தந்தையாருக்குப் புத்தகங்கள் என்றால் மிகவும் விருப்பம்; அது தனக்கும் தொத்திக்கொண்டதாக டாக்டர் ஜெயபாரதி கண்ட பேட்டியில் செட்டியார் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இருபத்தைந்தாவது வயதிலிருந்து புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார். நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பழைய பேப்பர்க்காரர்களிடமிருந்து எடை போட்டு நிறுத்து வீசைக் கணக்கிலும் மணங்குக் கணக்கிலும் வாங்கிச்சேர்த்து இருக்கிறார். அறிய சில புத்தகங்களை, சென்னை மூர் மார்க்கெட்டிலும் வாங்கிச்சேர்த்துள்ளார். (ஒரு வீசை என்பது 1 கீலோ 400 கிராம் இருக்கும். மெட்ராஸ் மணங்கு என்பது 11கீலோ இருக்கும்)
முத்தையா செட்டியார் வெறும் புத்தகங்களை மட்டுமே சேர்த்ததாக பலர் நினைக்கிறார்கள். உண்மையில், அந்தக் காலத்து டெண்ட்டுக் கொட்டகை சினிமா பிட் நோட்டீஸ் முதற்கொண்டு, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், பழைய கவர்க்கூடுகள், பழைய விளம்பரங்கள், பழைய காலத்தில் வெளியான பத்திரிக்கைகள், மரப்பாம்பூச்சி பொம்மைகள், தொங்கல்கள், தோரணங்கள், கையெழுத்துப் பிரதிகள், பழங்காலத்துப் பென்ஸில்கள், கட்டைப் பேனாக்கள் போன்றவையெல்லாம் அவர் சேகரிப்பில் அடங்கும். 1910-ஆம் ஆண்டு கடிதங்கள் உட்பட பல கடிதங்களைச் சேகரித்து வைத்துள்ளார். புத்தகங்களை வைக்க இடம் போதாததால், மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து பாதுகாத்தார். புத்தகங்களை வைத்துப் படிப்பதற்காக கூடம் ஒன்றை வீட்டிற்கு முன்னால் கட்டி, வீட்டை நூலகமாக்கினர். கிட்டத்தட்ட ஒருநாளில் சுமார் 16 மணி நேரத்தை நூல்களை அடுக்கி வைக்கவும், தூசிகளை தட்டவும், கரையானிடம் இருந்து புத்தகங்களை பாதுகாக்கவும் செலவிட்டார். 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து ஜூன் 4, 1992ல் மறைந்தார்.
முத்தையாவின் இறப்பிற்குபின், C. S. லட்சுமியின் முயற்சியால் சிகாகோ பல்கலைகழகத்தின் கலாச்சார விழிப்புணர்வு துறை அவரின் புத்தகங்களை கொண்டு அவரது பெயரிலே நூலகம் ஒன்றை ஏற்படுத்தி, தனியார் நூலகமாக இன்றளவும் இயக்கிவருகிறது. 1996-ல் முகப்பேரில் (மேற்கு அண்ணா நகரின் விஸ்தரிப்பு) நிறுவப்பட்டு, பின் 2005 ஆரம்பத்தில் தரமணிக்கு நகர்ந்தது. சென்னை முகப்பேர் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் உருவாக்கத்திற்கு திரு.சங்கரலிங்கம் முழுப்பொறுப்பேற்றிருந்தார். இவர் நூலகம், ஆவணக்காப்பகம் போன்றவற்றைச் சமூக இலட்சியங்களாகக் கருதும் எண்ணம் கொண்டவர். எத்தகைய அசாதாரண மனநிலையில் ரோஜா முத்தையா அவரது சேகரிப்புகளைச் செய்தாரோ, அதையொத்த அபூர்வ மன நிலையில் சங்கரலிங்கமும் ஆய்வு நூலகத்தை அமைப்பதில் ஈடுபட்டிருந்தார். செட்டியாரின் சேமிப்பில் இருந்து 1,20,000 -கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகிறது. தமிழ் மொழி கலாச்சாரத்தை, இந்நூலகத்தின் வழியே பேணிக்காக்க பேராசிரியர் ஏ.கே. ராமானுஜன், பேராசிரியர் நார்மன் கட்லர்,பேராசிரியர் அர்ஜுன் அப்பாதுரை, பேராசிரியர் ரால்ஃப் நிக்கோலஸ், மற்றும் பல்கலைக்கழகத்தில் மற்ற உறுப்பினர்களின் துணையுடன் நூலகத்திற்கென்று அதன் பெயரிலே அறக்கட்டளை நிறுவப்பட்டு, 2005 - முதல் இயக்கி வருகிறது.
வரலாற்று விசாரணை , பழங்கால மற்றும் இடைக்கால இலக்கியம், மருத்துவ நூல்கள், செயல்திறன் இலக்கியம், நாட்டுப்புற கதைகள் முதலான துறைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் கல்வி துறை, மனித இனங்களுக்கான தேசிய அறக்கட்டளை, மற்றும் போர்ட் பவுண்டேஷன் இருந்து மானியம் பெறப்படுகிறது. மேற்குலகுக்கு ஆழமாக அறிமுகம் செய்தஏ.கே. ராமானுஜன் அவர்கள் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. நூலகத்தின் மைய அரக்கில் ராமானுஜன் அவர்களால், ஆங்கிலம் பேசும் உலகில் சங்க கவிதை அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு 15,100 தொகுதிகள் மைக்ரோஃபில்ம் செய்யப்பட்டு, கணினிமுறை பயன்பாட்டுக்கு வசதி செய்துள்ளார்கள்.
இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதற்கென்றே தனி அரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் புத்தகங்களை தேர்வு செய்து, நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் படிவத்தில் புத்தகத்தின் பெயர், வரிசை எண், எழுத்தாளர் பெயரை குறிப்பிட்டு அலுவலக பணியளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் புத்தகங்களை எடுத்துவந்து நம்மிடம் கொடுப்பார்கள். சுதேசமித்திரன்,பாரததேவி, ஜெயபாரதி, நவயுகம் போன்ற பத்திரிக்கைகளும், பழங்காலத்திய செட்டிநாட்டு வர்த்தகர்களின் கடிதங்கள், மரப்பாம்பூச்சி பொம்மைகள் முதலான அறிய பொக்கிஷங்கள் கண்ணாடிகளால் மூடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆய்வு மாணவர்களின் பயன்பாட்டுக்காக புத்தகங்களை நகலெடுக்கும் வசதியும், இணையதள வசதியும், மின்னணு பதிவுகளை கொண்ட குறு வட்டுகள், மைக்ரோஃபில்ம் வாசிப்பு உபகரணங்கள், Microfim-ன் தரம்மதிப்பிடும் கருவியும், அனைத்து உபகரணங்களுடன் கூடிய reprographics வசதியும் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும், எல்லா ஞாயிற்றுகிழமையும் விடுமுறையாக தினமாகும். மற்ற நாள்களில் நூலகம் காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரையில் திறந்து இருக்கும். மதிய உணவு இடைவேளை 1.00 முதல் 1,30 மணி வரை. தேசிய விடுமுறை தினங்கள், முக்கியமான பண்டிகை தினங்களில் மட்டும் முழு விடுமுறை தினமாக கொள்ளப்படும். இங்கு மிக சிறப்பாக அம்பேத்கர் தினத்திலும் விடுமுறை விடப்படுகிறது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இந்திரா நகர் ரயில் நிலையத்திற்கு எதிரே , அடையார் மேற்கில், அதாவது தரமணி மத்திய பாலிடெக்னிக் (சிபிடி) வளாகத்தில் அமைந்துள்ளது.
முகவரி:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.
Phone nos. (044) 2254-2551 & 2254-2552
Fax no. (044) 2254-2552
Email: rmrl@dataone.in |