|
எம்.வி. வெங்கட்ராம் |
"என்ன வேலை செய்கிறீர்கள்?"
"எழுத்தாளரா இருக்கேன்.''
"அதுசரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?''
ராஜாஜி ஒரு எழுத்தாளரிடம் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பது ஒரு வேலையல்ல. சொல்லப்போனால் எழுத்து எழுதுபவனைக் காப்பதைவிட அவனுடைய உயிரை வதைப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் போன்ற வெகுசிலரே எழுத்தின் மூலமே போராடி வாழ்ந்து காட்டியவர்கள். எழுத்தாளனாக வாழலாம் என்று நினைத்த பலர் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டு மனத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்தான். குறிப்பாக தமிழில் இதற்கு தடுக்கி விழுந்தால் உதாரணங்கள் உண்டு.
புதுமைப்பித்தன் தொடங்கி ஜி.நாகராஜன், பிரமிள், நாரண. துரைக்கண்ணன், கோபி கிருஷ்ணன் என்று நிறையபேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எழுத்தை நம்பியே ஜீவிதம் நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். எழுத்து ஒரு மனிதனை எப்படி விழுங்கும் என்பதற்கு ஒரு சாதனை உதாரணம் அவர்.
படைப்பிலக்கியத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் அறிஞர்களின் வாழ்க்கைக் கதை, சுயமுன்னேற்ற நூல்கள் என எழுதி வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (இதை சமீபத்தில் அறம் என்ற சிறுகதையாகப் படைத்திருந்தார் ஜெயமோகன்.)
ஓயாத மன உளைச்சல். அவருக்குள்ளேயே வேறு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. காதுக்குள் எந்நேரமும் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். உறங்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எதிலும் கவனம் கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. எதையுமே கவனிக்க முடியவில்லை என்பதுதான் சரி.
இந்த அனுவபத்தை அவர் காதுகள் என்ற நாவலாக்கினார். எழுத்தாளன் தன்னை வருத்தி அந்த அனுவபத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகச் செய்யும் மாபெரும் தியாகம் அது. உன்னை யார் கேட்டார்கள் என்று வெளியிலிருந்து ஒரு நபர் சுலபமாகக் கேட்டுவிட முடியும். ஆனால் எழுத்தாளன் அப்படியொரு அனுபவத்தைத் தருவதற்காகத்தான் தவமிருக்கிறான். யாருடைய எதிர்பார்ப்பையும் பலனாக எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறான். அவனுக்காக எங்கோ, எப்போதோ கிடைக்கப் போகிற வாசகனுக்காக அதைச் செய்கிறான். இந்த தியாகத்துக்கு எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகாதமி கிடைத்தது.
காதுக்குள் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் தரும் ஹிம்சையை வாசகனுக்கு இறக்கி வைப்பதில்தான் வெங்கட்ராமின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலில் பார்வதியும் பரமசிவனும் சண்டை போட்டுக் கொள்ளுவார்கள். பச்சை பச்சையான வார்த்தைகள்.. கெட்ட வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சரமாறித் திட்டிக் கொள்வார்கள். பராசக்தி அந்த நாவலின் கதாநாயகன் மீது காம இச்சை கொண்டு புலம்புவாள். தன் காமத்துக்கு இணங்கும்படி ஏங்குவாள், மிரட்டுவாள், அழுவாள்...
திடீரென்று வேறுசில நபர்களும் குறுக்கிட்டுக் கத்துவார்கள். நாயகனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. சொந்தமாகத் தொழில் செய்ய பணம் ஈட்ட கிளம்புவான் வழியிலேயே காதுக்குள் இருக்கும் நபர்கள் விவகாரம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.
நாயகனுக்கு நிறைய குழந்தைகள். மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க முடியாது. குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் துவளும். குடும்பத்தைக் காக்க வேண்டிய நாயகனுக்கு இப்படியொரு பிரச்சினை. குழந்தைகள், மனைவியின் நிலைமை புரியும். ஆனால் அதை மாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாது.
மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மனைவி பலவீனமாக இருப்பாள். குழந்தையோ மனைவியோ இறந்து போய்விடுகிற நிலை. சைக்கிள் எடுத்துக் கொண்டு போவார். குழந்தை இறந்துபோய்விடும். அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனையில் காசு கேட்பார்கள். காசு இருக்காது. நாவலின் பரிதாபத்தின் உச்சம் இது.
குழந்தையைத்தானே அடக்கம் செய்து கொள்வதாக வாங்கி வருவார். சைக்கிளில் கேரியரில் குழந்தையை வைக்க முடியாது. முன் பக்க ஹாண்டில் பாரில் ஒரு பையில் போட்டு மாட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். சைக்கிள் ஹாண்டில் பாரில் காய் காறி வாங்கிவருவதுபோல இறந்து போன தன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தக் காட்சி அதிர்ச்சியானது.
வறுமையின் கையாலாகத்தனத்தின் வறட்சியான சித்திரம். அங்கே குழந்தை, பாசம், நாகரிகம், பழக்க வழக்கம், மரபு, சடங்கு போன்ற அத்தனைச் சொற்களும் பொருளிழந்து தொங்கும்.
வீட்டுக்கு வந்து சேருவார். வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைப்பார். அப்போது பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் அதைப் பார்த்துவிடுவாள். எங்கள் வீட்டின் பக்கம் ஏன் புதைக்கிறாய் என்று கூப்பாடு போடுவாள். அவர் பால்மாறாமல் மீண்டும் தோண்டி எடுத்து தன் வீட்டுக்கு நெருக்கமாக இன்னொரு குழியைத் தோண்டி குழந்தையை மீண்டும் புதைப்பர். இந்தக் காட்சிகளின் போது நாம் பேசி வருகிற சமூக கோட்பாடுகள் அத்தனையும் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி எதிரில் வந்து நிற்கும்.
இறுதியில் அவர் காதுகளின் குரலில் இருந்து விடுபட்டு மீள்வதோடு கதை முடியும்.
இந்த நாவல் இப்போது என்னிடம் இல்லை. படித்த ஞாபகத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறேன். நாவலை மறுபடி புரட்டிப் பார்த்துவிட்டு எழுதுவதைவிட மனதில் வடுவாக பதிந்திருக்கும் காட்சியை எழுதுவது மேலும் உண்மையாக இருக்கும் என்றே நினைத்து இதை எழுதியிருக்கிறேன்.
பியூட்டிபுல் மைண்ட் என்றொரு உண்மைக் கதை நூல். ஒரு எகனாமிஸ்ட்டின் உண்மைக் கதை அது. அவருக்கும் காதுக்குள் குரல்கள் கேட்கும். பொருளாதார பெரிய மேதையான அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டு வருவதுதான் கதை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. எம்.வி.வெங்கட்ராமின் வாழ்க்கையேப் போலவே மிக லேசான ஒற்றுமை அந்த உண்மை மனிதனின் கதையிலும் காணக்கிடைத்தது. பியூட்டிபுல் மைண்ட் சினிமாவாகவும் வந்து ஏராளமான ஆஸ்கர் பரிசுகளையும் வென்றது.
உலுக்கி எடுக்கும் உண்மைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது.
காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
அன்னம் அகரம் பதிப்பகம்
பிளாட் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொ.பே.: 04362-279288