வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
 
     
     
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு



கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...!


தமிழ்மகன்  

வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.

கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.

இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.

இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.

கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.

நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.

நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.

புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.

இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.

மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.

வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...

கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....

பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...

இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.

கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.