"பட்டினி எனக்குப் புதிதல்ல. என் படம் மக்களுக்கு காண்பிப்பதற்ககே, நானும் நண்பர்களும் பிலிம் பெட்டி சுமந்து மூலைமுடுக்குகளில் என் படத்தைக் காண்பிப்போம். நான் ஒரு துணி விரித்து மக்களிடம் காசு கேட்பேன். தருவதற்கு மனதுள்ளவர்கள் தருவார்கள். விநியோகஸ்தர்கள் என் படத்தைத் தொடவிடமாட்டேன்."
இந்த வரிகளுக்குச் சொந்தக்காரன் ப்ரெஞ்சு சினிமாவின் புதிய அலையை ஏற்படுத்திய இயக்குநரோ, ஈரானிய இயக்குநரோ அல்லது உலகமே வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் இயக்குநரோ அல்ல. இவை தமிழில் "அக்ரஹாரத்தில் கழுதை" என்ற கலைப் படத்தை எடுத்த ஜான் ஆப்பிரகாமினுடைய வார்த்தைகள். ஜான் ஆப்பிரகாம் என்னும் அதி அற்புத கலைஞனைப் பற்றித் தொகுத்திருக்கிறார் காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நடத்திவருபவரும் ஆவணப் பட இயக்குனர்களில் முக்கியமானவருமான ஆர்.ஆர்.சீனிவாசன். "ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை" என்ற பெயரில் வம்சி வெளியீடாக இப்புத்தகம் வந்துள்ளது.
சினிமா என்கிற கலை வடிவம் தமிழகத்தில் வேரூன்றி எழுபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அதன் பாய்ச்சல் எந்தவொரு வேற்று கலைக்கும் இணையற்றது. அவை ஏற்படுத்திய சமூக மாற்றத்தையும் வரலாற்றையும் உலக அளவில் நாம் அறியவில்லையென்றாலும் தமிழக அளவில் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இன்றளவிலும் ஒரு நடிகன், வசன கர்த்தா, முன்னாள் நடிகை இவர்களே நாம் விரும்பாவிட்டாலும் வரும் தேர்தலில் நம் தேர்வாக இருக்க இயலும். அரசியலைத் தாண்டி இன்றைய தமிழ் சினிமாவின் காலகட்டம் மிக முக்கியமானது. அதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று இலக்கியவாதிகள் எல்லாம் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் காலமிது. சினிமாவுக்குள் செல்வது என்ற புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயகாந்தன் முதலான நவீன இலக்கியத்தின் ஆதித் தன்மையிருந்தாலும், இன்றைய நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டவை. இலக்கிய ஆளுமைகள் என்று அறியபட்டவர்களெல்லாம் தடுக்கி விழுந்தால் சினிமா வாய்ப்புக்கு அலைவதை பார்க்கலாம். இன்றையச் சூழலில் இரவு நேர மோகினியைப் போன்றது சினிமா. பயம் தொற்றிக் கொண்டாலும் மோகத்தை விட இயலாது. கால்கள் கட்டுக்குள் இராமல் அவளைத் தேடி நடக்கத் தொடங்கும்.
இந்த இலக்கிய பேராண்மைகள் மாற்று சினிமாவையோ, சினிமா என்பதன் கலை வடிவத்தை நேசித்தோ இயங்குவதில்லை. எந்த ஒரு பரீட்சார்ந்த முயற்சிக்காவும் இவர்கள் சினிமாவை விரும்பவில்லை. சந்தைமயமாக்கி விடப்பட்ட உலகில் தங்களையும் சேர்த்து விற்கிறார்கள். இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும் எல்லா காலத்திலும் இலக்கிய முகம் கொண்ட இயக்குநர்களே சில நல்ல படங்கள் வருவதற்குக் காரணம், இலக்கிய முகம் காட்டிய எழுத்தாளர்கள் அல்ல.
இந்த கோபங்கள் எல்லாம் அனன்று எழக் காரணம் "ஜான் ஆப்பிரகாமின் கலகக்காரனின் திரைக்கதை". இந்த புத்தகத்தில் முதல் பகுதியாக ஜான் ஆப்பிரகாமின் கட்டுரைகள் தொகுப்பட்டிருக்கின்றன். இந்த கட்டுரைகள் ஜானுடைய சினிமாக் கோட்பாட்டை பேசுகின்றன. ஜானைப் பற்றி ஜான் கூறுவதாக தொடங்கும் கட்டுரையில் ஜானினுடைய வாழ்க்கைக் குறிப்புகளை அவரே குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. கம்யூனிசக் கண்களோடே வளர்ந்திருக்கிறார் ஜான். அவ்வாறே வாழ்க்கை முழுமையும் மக்கள் சினிமாவுக்காக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். 'மூன்றாவது கண்ணின் கலை' என்னும் கட்டுரை ஜான் ஆப்ரகாமின் சினிமாக் கோடாட்டை முன்வைக்கிறது. கலை என்பதை வெகுஜன மக்களுக்கு என்பதைத் தவிர்த்து இங்கு வேறொன்று இல்லை என்பதை முன்மொழிகிறார். தான் சினிமாவை தேர்ந்தெடுக்க காரணமாகச் சொன்னவை 'எனது சக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம் தான் சினிமா. காமிராவின் மொழியே திரைப்படம்'.
சினிமாவை ஜான் புரிந்து கொண்ட விதம் இங்கு மிக முக்கியமானது "திரைப்படம் இலக்கியமோ, இசையோ, கவிதையோ, ஓவியமோ இவையனைத்தும் ஒன்றினைந்த வடிவமோ அல்ல.அதைச் சொற்களில் விளக்குவது கடினம். சினிமா தொழிற்புரட்சி மூலம் ஏற்பட்ட இயந்திர உருவாக்கம். எனினும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அதில் காலத்தை ஒட்டிய மனித இயக்க அணுகுமுறைகளோடு காலத்தை உதறும் போக்கும் உண்டு"
கலை கலைக்காகவா கலை மக்களுக்காகவா என்ற அதரப் பழசான கேள்வி தடை எதுவும் செய்யப் படாமல் எல்லாக் காலங்களிலும் கேட்கப் பட்டுக் கொண்டே வருகிறது. மக்கள் கலையை ரசிக்கத் தெரியாத வெள்ளந்திகளாகவும் அதை ரசிக்கக் கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும் என்பதும் தமிழ் இலக்கிய தீர்க்க தரிசிகள் சொல்லிக் கேட்ட பதில்களில் ஒன்று. ஜான் இந்த தடத்தில் வேறுபட்டு நிற்கிறார்.
சாதாரண மனிதனை புரிந்து கொண்டு அவனுடைய தொன்மங்களில் சொல்வதே அது. அதற்காக அவனை பயிற்சிவகுப்புக்கு அனுப்பாமல் படைபாளியை அவன் வாழ்வை புரிந்து கொள்ளச் சொல்கிறார். அவனுடன் இரண்டறக் கலப்பதிலே தான் இது சாத்தியம் என்கிறார். அது தான் அவர் கூறும் மூன்றாவது கண். மேலும் சாதாரணமான மனிதனுக்கு பூடகமான குறியீடுகளை சினிமாவில் மறுதலிக்கிறார்.
பின்நவீனத்துவச் சிந்தனையான பிரதியைக் கட்டுடைத்தலில் எழுத்தாளன் கூறியவை ஒன்றாகவும் வாசகன் புரிந்து கொண்டவை ஒன்றாகவும் இருக்கும் என்பதைப் போன்று இல்லாமல் நான் நேரடியாகவே ஒவ்வொன்றையும் சொல்ல விருப்புகிறேன் என்கிறார்.
'ஜானைப் பற்றிய நினைவுகளும் விமர்சனங்களும்' கட்டுரைகள் ஜானைப் பற்றிய முழுச் சித்திரங்களையும் எழுதிவிடுபவை. ஜானைப் பற்றிய கட்டுரைகளில் முக்கியமானவைகளில் இரண்டு வெங்கட் சுவாமிநாதனுடைய விமர்சனங்களும், யமுனா ராஜேந்திரனுடைய மிகத் தீர்க்கமான பார்வையும்.வெங்கட் சுவாமிநாதன் 'அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர். வெங்கட்
சுவாமிநாதன் ஜானின் திரைப்படத்தில் உள்ள குறைபாடுகளை ஜான் என்னும் ஆளுமையின் குறைபாடாக விவரிக்கிறார். ஜானின குடிப் பழக்கத்திற்கும் திரைப்படத்தின் அழகியல் குன்றலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதே அவர் வாதம். யமுனா ராஜேந்திரனின் கட்டுரை ஜானின் திரைப்படங்களில் உள்ளார்ந்த நேர்த்தியையும் அழகியல் என்பதை மறுத்தே ஜான் பிரக்ஞையுடன் செய்த விடயமாகவே
முன் வைக்கிறார். ஆங்கில திரைப்படங்களின் வழி தோன்றிய கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைந்த அழகியலுக்கு எதிர் கலகமாக லத்தின் அமெரிக்கத் திரைப்படங்கள் முன்வைத்த ஒழுங்கற்ற கலக இயங்கியலே ஜானின் திரைப்படங்களுக்கு அடிப்படை. ஜெயமோகன் என்னும் உலக சினிமா வசனகர்த்தாவின் ஜானைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு எதிர்வினையாக அமைந்திருக்கிறது யமுனா ராஜேந்திரனின் கட்டுரை. மேலும் அவர் குடிப்பழக்கத்திற்குக் காரணம் யதார்த்தத்துடன் தன்னை சமரசம் செய்து கொள்ள இயலாத தன்மை என்பதே ஒவ்வொரு கட்டுரையாளனும் முன்வைப்பவை. குடிப்பழக்கத்திற்கு அடிமையானாலும் ஜானின அன்பு எவரொருவரும் சந்தேகிக்க இயலாத தூய்மையைக் கொண்டிருந்தது.
ஜான் ஜனாநாயகத்தின் வரையரையே தன் சினிமாவிற்கான இலக்கணமாக வகுத்திருந்தார். மக்களின் பங்களிப்பால் தயாரிக்கப்பட்டு அதன் இயக்குதலிலும் அவர்களின் பங்களிப்போடு அவர்களுக்கே மறுபடியும் திரையிட்டுக் காட்டப் பட வேண்டும் என்பதே அதன் அடிப்படை. இதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இயக்கம் 'ஒடிஸா'. இதன் மூலம் மக்களிடம் இரண்டு ரூபாய் முதல் நூறு ரூபாய் வரைப் பெற்று, மக்களின் பங்களிப்போடு இயக்கப்பட்ட திரைப்படம் "அம்ம அறியான்". திரைப்பட உருவாக்கத்தில் மாற்று சினிமாவுக்கான மையத்தை மாற்றியமைத்த சாதனையைச் செய்தது இந்த திரைப்படம்.
ஜான் திரைப்படமாக்க முயன்று தடங்கல்கள் மற்றும் சமரசம் கொள்ளாத் தன்மையினால் நின்று போன திரைப்படங்கள் ஏராளம். சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கிறார். நாடங்கங்கள் நிகழ்த்தியிருக்கிறார். ஜானின் வார்த்தைகள் அவர் படைப்பின் ஆதாரத் தன்மையை புரிந்து கொள்ள மிக இயல்பாக உதவும் " என் சக உயிர்களோடு சேர்ந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள தேர்ந்தெடுத்த மீடியேட்டர் தான் சினிமா".
கலை என்கிற உன்னதத்தை முழுதும் புரிந்து கொணட கலைஞன் ஜான்.
கலை இலக்கியத் தொடர்பு உடையவர்களை சுய பரிசோதனை செய்து கொள்ள, சமரசப்பட்டு பழகிப் போன இதயத்தை உலுக்க, அரிதாரம் பூசிக் கொண்ட ஒப்பனைகளை கலைக்க நம் முன் கண்ணாடிச் சில்லுக்ளாய் சிதறிக் கிடக்கிறது ஜான் ஆப்பிரஹாமின் வாழ்க்கை. அதன் மேலே கால்கள் வைத்து நடக்க, குருதிகள் வழிந்தோடத் தொடங்கும் கணங்களில் முழுமை பெறத் தொடங்கும் ஜான் ஆப்பிரஹாமின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு.
ஜானின் வாழ்வும் மரணமும் பல இடங்களில் வின்சென்ட் வான்காவை நினைவுபடுத்துவதை தவிர்க்க இயலுவதில்லை. இரு கலைஞர்களும் வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களோடு பயணித்தவர்கள். இருவரும் வாழ்வென்பதை தாமாக விரும்பியும் விரும்பாமலும் துன்பங்களோடு அமைத்துக் கொண்டவர்கள். வான்காவிற்கு அவர் தம்பி தியோ என்றால் ஜானிற்கு அவர் மூத்த சகோதரி. தன் தமக்கை புனிதர் பற்றிய படம் ஒன்றை எடுக்க ஜானுக்கு கொடுத்த பணத்தை 'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு, அவரிடம் சென்று 'கழுதையைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன். கழுதைக்கு பக்தி அதிகம் இருக்கிறது என்றிருக்கிறார். இதை வாசித்தவுடன் சிரிப்பை அடக்கிக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது.
வான்காவைப் போலவே ஜானின் மரணமும் பூடகத் தன்மை நிறைந்திருக்கிறது. குடியின் மிகுதியால மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கிறார். வாழ்வை பறவையைப் போல் சுதந்திரமாக வாழ்ந்தவன் தானும் பறப்பேன் என இறுதி கணங்களில் நினைத்திருக்கக் கூடும்.
"ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை" - ஆர்.ஆர். சீனிவாசன்
வம்சி பதிப்பகம்,
19, டி.எம். சாரோன்,
திருவண்ணாமலை -01
9444867023, 04175-251468
www.vamsibooks.com
vamsibooks@yahoo.com
கிடைக்குமிடம் -
டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி ரோடு,
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கலைஞர் நகர், சென்னை.
Ph: 9940446650