வெங்கட் சுவாமிநாதனுடன் - இன்றைய தமிழ் கலைச் சூழல் குறித்து ஒரு நேர்காணல்
வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan) என்ற பெயரில் எழுதும் சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.
இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் , நீல.பத்மநாபனின் தலைமுறைகள் பூமணியின்பிறகு போன்ற பல ஆக்கங்கள் சத்தமின்றி வந்தபோதே, கவனித்து முன்னிறுத்தியவர். அவரது கோணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டாலும் அவர் முன்னிறுத்திய ஆக்கங்கள் பொதுவான அங்கீகாரம் பெற்றன என்பது வரலாறு. நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950லேயே வலியுறுத்தியவர்.
சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பாவின் இந்த வரிகளுடன் யாருமே முரன்படமுடியாது. வெங்கட் சுவாமிநாதன் பற்றி அனைவருக்கும் மிக எளிதாக புரிய வைக்க வேண்டுமானால் சமீபத்திய உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம்.
இயக்குனர் மிஸ்கினின் முதல் திரைப்படமான "சித்திரம் பேசுதடி" வெளிவந்த மறுதினமே படப்பெட்டிக்குள் சென்று சுருங்கிவிட்டது. காரணம் அந்தப் படம் சார்ந்த எந்தவிதமான விளம்பர யுக்தியும் கையாளப்படவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு, அவரே விநியோகம் செய்ய முன்வந்தார். அந்தப் படம் பின்னர் நூறு நாட்களுக்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. காரணம் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் விளம்பர யுக்தி. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, வெறும் விளம்பர யுக்தி மட்டுமே அந்தப் படம் ஓடுவதற்கு காரணம் அல்ல. அந்தப் படத்தின் பாடல்களும், கதை சொல்லல் முறையும் கொஞ்சம் புதிதாக இருந்தது.
இதேப போன்று யாருமே அறிந்திராத பல புத்தகங்களை தனது விமர்சனத்தின் மூலம், உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள். அதற்காக ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் வெ. சா. அவர்களை ஒப்பிட முடியாது. ஒரு உதாரணத்திற்கு இப்படி சொன்னால் வெகுஜன வாசகர்களுக்கு புரியும் என்பதால் மட்டுமே இந்த சொல்லாடல் கையாளப்பட்டது. வெ.சா அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாகவே இதுவரை இருந்து வருகிறார். அவருடன் திரு. முத்துக் கந்தன் அவர்கள் நடத்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்.
முத்துக் கந்தன்: கலைஞனுக்கும் படைப்புக்கும் இடையேயுள்ள ஒத்திசைவும் முரணும் சாத்தியமா?
வெ.சா: என்னுடைய அபிப்ராயத்தில், கலைஞனுடைய அனுபவமும் அவனுடைய படைப்பும் வேறுபட்டிருக்கமுடியாது. அப்படி, தன்னுடைய அனுபவம் ஒன்றாகவும், உள்ளார்ந்த நம்பிக்கை ஒன்றாகவும், அதிலிருந்து பெறப்படும் படைப்பு வேறொன்றாகவும் இருக்குமானால் அது ஒரு தொழில். அவ்வளவுதான். அதாவது முன்னமே சொன்னாற்போல், தன்னுடைய கட்புலன் அனுபவமும் கைத்திறனும் சேர்ந்ததுதான் படைப்பாகிறது. அப்பொழுதான் அவனை ஒவியனாகவோ அல்லது வேறுவகை கலைஞனாகவோ நாம் ஏற்கிறோம். ஆக, அந்த கலைஞன் தானே படைப்பிலும் பிரதிபலிக்கிறான். அவனுடைய அனுபவங்கள் தானே படைப்பில் பிரதிபலிக்கப்படுகின்றன. அதில் அவனுடைய ஆளுமையைத் தானே பார்க்கிறோம். ஆக இதில் ஒத்திசைவு தானே காணும். முரண் எங்கிருந்து வரும்? அங்கனம் முரண் இருந்தால் அது அவனுடைய படைப்பல்ல. அது ஒரு தொழில் திறனால் ஆக்கப்பட்ட ஒரு விற்பனைப் பொருள்.
முத்துக் கந்தன்: தமிழில் கலை குறித்தான விமர்சனம் பற்றி என்ன சொல்வீர்கள்?
வெ.சா: கலை குறித்தான பரிச்சயம் என்பது முப்பது நாற்பது வருடங்களாக தமிழ் சிற்றிதழ்கள் மூலம் கிடைத்த போதிலும் கூட அதனுடைய வாசகப் பரப்பு என்பது மிக மிகக் குறைச்சல் தான். அதனால் அது பற்றிய பிரக்ஞை எவ்வளவு பரவலாகியுள்ளது என்பது சந்தேகம். இதைத் தொடர்ந்து . விமர்சனம் பற்றி பேசுவதானால், தமிழ் நாட்டில் எழுதப்படுகிற விமர்சனங்களைப் பார்த்தால் கலை பிரக்ஞையுடன் அவற்றைப் புரிந்துதான் எழுதுகிறார்களா, தான் பார்க்கும் படைப்பிற்கும் தனக்கும் ஏதாவது சம்வாதம் நடந்துள்ளதா, அப்படியிருந்தால் அதனைப் புரிந்து கொண்டுதான் சொல்கிறார்களா என்பது தெரியவில்லை. அவர்களுக்குச் சில வார்த்தைகள், பரிபாஷைச் சொற்கள் (technical terms) கை வசம் இருக்கின்றன. அந்த வார்த்தைகளைப் போட்டு ஏதேதோ சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.
அந்த வார்த்தைகள்/பரிபாஷைச் சொற்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றைப் போட்டு நிரப்புகிறார்கள். நிஜமாகவே அவர்களுக்கும் அவர்கள் பேசும் ஒவியங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதில்லை.. அவர்களுக்கு நாமும் விமர்சகனாக வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம.. இல்லையெனில் உத்தியோக பூர்வமான லாபங்கள், உயர்வுகள், கிடைக்கும், அல்லது சமூக மதிப்பு உயரும்.. அல்லது தான் ஒரு கலை விமர்சகன் என்ற நிலையில் தமிழ் நாட்டில் உலவி, சில சவுகரியங்களைப் பெறலாம் என்றெல்லாம் நினைப்புகள் இருக்கலாம். அவ்வளவு தான். இப்படியாக சிலர் முயற்சியும் செய்கிறார்கள். பலர் உலவியும் வருகிறார்கள். இப்படி தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் நடக்கிறது. கலைப் பிரக்ஞை வழிநடத்துமானால், ஒவ்வொரு குறள் அத்தியாயத்தையும் விளக்குவதற்காக ஒரு ஒவியம் என்ற சிந்தனையே பிறந்திருக்கமுடியாது. இது சரியல்ல என்று ஒரு குரல் கூட எழவில்லை என்பது சோகம் தான்.
இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் பழக்கப்பட்ட பாதை மீறிய புதுப் புது படைப்புகள் வந்த போது, அவை ஒவ்வொன்றையும் அக்காலத்து விமர்சகர்கள் அவற்றைக் கேலி செய்தார்கள். ஆனால், அப்படைப்புகள் ஏற்கப்பட்டு, பிறகு அவர்களே, கேலி செய்தவர்களே கேலிக்குள்ளானார்கள். இம்ப்ரெஷனிஸம், எக்ஸ்ப்ரெஷனிஸம், ஃபாவிஸம் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வந்தபோது, ஒவ்வொருமுறையும் விமர்சகர்கள் அவற்றைக் கேலி செய்தார்கள். இப்பெயர்களே அவர்கள் இட்ட கேலிப்பெயர்கள் தான். கேலிப் பெயர்களே அவ்வப் பாணியின் பெயர்களும் ஆயிற்று. கடைசியில் அவர்களே கேலிக்கானார்கள். இப்படி அடுத்தடுத்து விமர்சகர்களின் அறியாமைக்கு தொடர்ந்து அடி விழவே, தாங்கள் மேதைகளாகும் எண்ணத்தில் எல்லாவற்றையும் போற்றத் தொடங்கினார்கள். அடுத்தடுத்து வருடாவருடம், புதுப் புதுப் படைப்புகளை எதிர்பார்க்கும் நிர்ப்பந்த சூழல் கலைஞர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஏற்பட்டது. இதன் விளைவுகளில் ஒன்று உதாரணத்திற்கு: ஒரு நாற்சதுர டப்பாவை காட்சிக்கு வைத்து அதற்கு மினிமலிஸம் (minimalims) என்று பெயர் வைத்தார்கள். கடைசியில், 'எதற்காக இந்த டப்பாவை வைத்திருக்கிறார்கள்? என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. கேலியும் செய்யவில்லை. பயம், தாம் கேலிக்கிரையாவாமோ என்று. அப்படியான பயம் இப்போது தமிழ் விமர்சகர்களுக்கு இருக்கிறது. தனக்கு (arts) கலைகள் பற்றி தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவே சில வார்த்தைகளைப் போட்டு உலப்புகிறார்கள். நேரடியாக, "எனக்குப் புரியவில்லை, பிடிக்கவில்லை" என்று சொல்லவே பயப்படுகிறார்கள். அதாவது புரியவில்லை என்றால், புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், வீணாக பம்மாத்து பண்ணக்கூடாது, அதாவது தெரிந்தது போல் பாவனை செய்யக்கூடாது. அக்காலத்தில், கிராமத்தில் இங்கிலீஷ் படம் பார்க்கப் போவார்கள், டூரிங் டாக்கீஸ்களில் வரும். எல்லோரும் சிரிக்கிறபோது அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள், ஏதோ தமக்கும் புரிந்து விட்ட மாதிரி.. ஆக, இம்மாதிரி ஊர் சிரிக்க தானும் சேர்ந்து சிரிப்பது மாதிரிதான், தமிழில் விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
முத்துக் கந்தன்: தமிழ் மரபு (அடையாளம்) சார்ந்து இயங்குகிற படைப்பாளிகள், அதாவது பெரும்பாலனவர்களுக்கு ஐரோப்பிய தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே...?
வெ.சா: யாருக்கும் நேரடியாக ஐரோப்பிய தாக்கம் என்பதே இல்லை. எல்லோரும் தமிழ் அடையாளத்தோடுதான் படைக்கிறார்கள். அதாவது கலைஞர்களுக்கு பரிச்சயமான சிற்பம், கட்டிடக் கலை, ஒவியம் என்பதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லாததா? தமிழ் நாட்டில் தடுக்கி விழும் இடமெல்லாம், 600, 700 அல்லது 1500 வருட கால பழமையான வரலாறுகள் கிடைக்கும். எங்குபோனாலும், பழமையான சின்னமும், கோவிலும் இருக்கும். அக்கோவிலின் கட்டிடக் கலை, 1000, 1500 வருட பழமையானதாக இருக்கும். எதற்கும் 200 வருட கால பழமை உண்டு. அதாவது நாயக்கர் காலத் திலிருந்து, நவாபுகள் காலத்திலிருந்து என்று வரலாறுகள் இக்கலைகளுக்கு உண்டு. இங்கு ஒவ்வொரு கல்லும் ..இடமும்.. மண்ணும்.. சரித்திரம் பேசும். அந்தச் சரித்திரமும் எப்போதும் கலைமொழியில் பேசும். ஆகவே இவர்கள் இப்படியான தாக்கங்களுக்கு ஐரோப்பாவுக்கோ வேறு எங்குமோ வெளியே போகவேண்டியதில்லை. கோவில் சிற்பங்கள் உண்டு, தஞ்சை ஓவியங்கள் நாயக்கர் சுவர் ஒவியங்கள் உண்டு. டெர்ரகோட்டா சிற்பங்கள் உண்டு.
முதன் முதலாக, ஓவியப் பள்ளிகள் பம்பாயிலும், சிம்லாவிலும், கல்கத்தாவிலும் தான் ஆரம்பித்தன. அப்பொழுது தான்
பார்சிகள் அப்பள்ளிகளில் ஒவியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள் அவர்கள் தான் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸின்' பாதிப்பை ஏற்றார்கள். இப்படியான விஷயங்கள் தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. இங்கு ராய் சௌதுரி வந்து சேர்ந்த பிறகு தான் மதராஸ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸி' ல் கலைப் படிப்பு துரிதப்படுத்தப்பட்டது. ராய் சௌதுரி மிகவும் பழமையில் இந்தியப் பழமையில் தோய்ந்தவர். தேசிய தாக்கம் மிகுந்த வங்காளத்திலிருந்து வந்தவர். ஆக காலனி ஆதிக்கம் என்பது பம்பாயில் இருந்ததே ஒழிய, இங்கு இருந்ததில்லை. கல்கத்தாவில் கூட ஆரம்பக் கால கட்டத்தில் தான் இருந்தது. என நினைவு எனக்கு. பின்னர் அதனை எதிர்த்து தேசிய உணர்வின் தாக்கத்தில், 'பெங்கால் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்பது உருவானது. அதே போல் பம்பாயிலும்.
ஆக, ஆங்கிலேய ராயல் அகாடமி பாணிகளை உள்வாங்கினவர் என்று ரவி வர்மா ஒருவரை மட்டுமே குறிப்பிடலாம். ரவி வர்மா நல்ல கைத்திறன் கொண்டவர். சுயமாகக் கற்றவர். இவர் எடுத்துக் கொண்ட பொருள் (கருத்து) இங்கே கேரளத்தையும், மகா ராஷ்டிரத்தையுமே சேர்ந்ததாக இருக்கும். அதாவது மகாராஷ்டிர உடைகளோடு கேரளப் பெண் முகங்களைத் தந்தார். அடுத்து நம் கடவுள்களுக்கு உருக்கொடுத்தார். என்றாலும் அவர் தன்னுடைய மண்ணுக்குத்தான் திரும்பி வந்தார். அதாவது தன்னுடைய அடையாளங்கள் சார்ந்து தான் படைத்தார். அவர் தொழில் திறனையும், அதாவது எண்ணை வண்ணம் என்ற சாதனத்தையும் மட்டுமே வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டாரே ஒழிய படைப்பு என்பது அவருடைய மண் சார்ந்து தான் வந்தது எனவேண்டும். .
முத்துக் கந்தன்: தமிழில் சிறு பத்திரிகைகளுக்கும் ஒவியர்/சிற்பிகளுக்குமிடையில் இருந்த உறவைப்பற்றிச் சொல்லுங்கள்
வெ.சா: ஆரம்பத்தில், அதாவது அறுபதுகளில், இது பற்றியெல்லாம் எழுதப்படவேண்டும், ஒரு பரிச்சயத்தை, அறிமுகத்தை நாம் தொடங்கவேண்டும் என்று (இப்போது பிரமிள் என்று அறியப்படும் ) தருமு சிவராமு, நான் பின் கி.அ.சச்சிதானந்தம் மூவரும் முயன்றோம், சச்சிதானந்தத்திற்கு சென்னை கலைக் கல்லூரி மாணவர்களுடன், கோவிந்தனுடன் பரிச்சயம் இருந்தது. இதெல்லாம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்து, பின் நடை பத்திரிகையில் தீவிரம் பெற்றது. பின் கசடதபற. அவரவர்க்குத் தெரிந்த பழக்கமான் ஒவியர் சிற்பிகளின் புகைப்படங்கள், க்ராஃபிக்ஸ் பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கின. அது பற்றி அவ்வப்போது பேசவும் பட்டது பொதுவாக. இவை ஒரு பரிச்சயத்தை மெதுவாக உருவாக்கின. யாரும் இவையெல்லாம் என்ன, எதற்கு என்று கேட்கவில்லை. கண்கள் பழக, மனம் ஏற்றுக் கொள்ள முதலில் பரிச்சயம் தேவை. எழுபதுகளில், க்ரியா புத்தக வெளியீடுகளை அது வரை அறியாத உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. அதைப் பார்த்து, மற்றவர்களும் அவற்றிற்கு ஒரு மதிப்பு ஏற்படவே தாமும் கையாளத் தொடங்கினர். தொடக்கத்தில் ஏளனம் செய்த புதுக் கவிதை வெகு ஜனப் பத்திரிகைகளிலும் மௌசு கொண்டாடத் தொடங்கியது போல, மாடர்ன் ஆர்ட்-ம் வெகுஜன பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கியது. இதற்கு ஒரு snob value உருவானது. 'மாடர்ன் ஆர்ட்' அட்டை போட்ட புத்தகங்களை எழுபதுகளின் தொடக்கத்தில் show case-ல் வைக்க மறுத்த வெளியீட்டு நிறுவனங்கள் ("இதையெல்லாம் வெளீலே show case-ல் வைக்காதே. உள்ளே மறைவா வை. யாரும் கேட்டால் கொடுக்கலாம்" என்ற முதலாளிகள் சில வருடங்களுக்குப் பின், '"இதை show case-லே வையப்பா, இப்பொல்லாம் இப்படிதான் படம் போடறாங்க. இதான் fashion." என்ற கட்டத்துக்கு முன்னேறி, இப்போது, " ஏம்பா, ஆதிமுலம் கவர் போட்டுத்தரேன்னு சொல்லியிருந்தாரே, வந்திடுச்சாப்பா? என்று தாம் வெளியிடும் புத்தகங்களுக்கே ஒவியர்களை அணுகும் நிலைக்கு வந்துள்ளது. இது வரை வந்தது கூட பரிச்சயமும், சகஜ பாவமும், snob value வும் தானே ஒழிய ரசனையோ புரிதலோ இல்லை. இதன் அடுத்த கட்டம் ரசனையாக வளரலாம். வளர வேண்டும். ஒன்று சொல்ல வேண்டும். இம்மாற்றத்திற்கு, ஆரம்ப அறுபது களிலிருந்தே ஓவியர்களும், சிற்பிகளும் தந்த ஒத்துழைப்பு மிகப் பெரியது. எவ்வித பொருளாதார பலனும் அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பெற்றது, எழுத்தாளர்களிடையே ஒரு தோழமை. வாசகர்களிடையே ஒரு பரிச்சய உணர்வு. பொதுவில் ஒரு மதிப்பு. தான் அனுபவிக்காவிட்டாலும், "மணி அய்யருங்களா, அவர் பெரிய பாட்டுக்காரருங்களே" என்று உடன் கௌரவிப்பது போல.
முத்துக் கந்தன்: ஒவியத்திற்கென்றே நடத்தப்படும் 'மெய்ப் பொருள்" இதழ் குறித்துச் சொல்லுங்கள்:
வெ.சா; ஒவியர் சீனிவாசன் என்னிடம் பேசும்போது, "இந்த இதழ் ஒவியக் கலை பற்றி, மாணவர்களுக்கும், ஒவிய ஆசிரியர்களுக்கும், ஒவியங்களோடு தொடர்பு கொண்டவர்களுக்குமான ஒர் இலவச இதழாகும்." என்று சொன்னார். அவர் சொன்னதை கவனமாக மனதில் இருத்திக்கொண்டிருக்கிறேன். அதாவது ஒவியங்களைப் அவற்றோடான நம் உறவுகளைப் பற்றி புரிதல்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும். வீணாக, இம்ப்ரெஷனிஸம், எக்ஸ்ப்ரெஷனிஸம், க்யூபிஸம் என்றெல்லாம் பாடங்கள் நடத்துவது போல எழுதுவதில் அர்த்தமில்லை. ஆகவே அதையெல்லாம் நான் செய்வதில்லை. ஆனால் சிலர் செய்கிறார்கள். நமக்கும் ஒவியத்திற்குமான தொடர்பு என்னா, அது உண்மையான உணர்வு பூர்வமான ஒன்றா, நாம் அதைப் புரிந்து கொண்டு அதனுடன் சம்பாஷிக்கிறோமா என்பன தான் என் அக்கறைகள்.
மதமோ, வர்க்கங்களோ, சாதியோ, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளோ, அல்லது, நான் தெலுங்கன், நீ தமிழன், கன்னடக் காரன் என்கிற விவகாரங்கள் சார்ந்ததல்ல கலை. இதில் நாஸ்திக ஆஸ்திக கொள்கைகளும் இடை புகுவதில்லை. எந்த மதம், சாதி, கொள்கை, மொழி, சார்ந்த அடை மொழிகளில் அடையாளப் படுத்தினாலும் சரி, கலை உணர்வு என்பது, இவை சார்ந்ததில்லை. ஒரு நாஸ்திகனும், அவன் கலை உணர்வு கொண்டவனானால், கோவில் கோபுரங்களையும், நடராஜ சிற்பத்தியும் கண்டு மெய் சிலிர்த்துப் போகவேண்டும். தமிழ் நாட்டில் சாதியும், அரசியலும், மூர்க்கத்தனமான் அதிகாரம் செய்கின்றன. கலை என்பது இவற்றையெல்லாம் மீறியது. இப்படியான விஷயங்களைத்தான், சீனிவாசனின் "மெய்ப்பொருள்" இதழில் நான் பேசி வருகிறேன். நான் பாடம் நடத்த வரவில்லை. விமர்சனம் - செய்யவும் வரவில்லை. தமிழ்ச் சூழலில் காணாத ஆனால், தமிழ்க் கலை மாணவர்களுக்கு இருக்க வேண்டிய உணர்வுகளைப் பற்றியே பேசிவருகிறேன்.
|