"விஷ்ணுபுரம்" தமிழ் நாவல்களில் ஒரு சிகரம் - கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல்
"வர்க்கப் போராட்டங்களின் வழியே, வர்க்கங்களை கடந்து செல்வது மார்க்சியம் "
தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, மார்க்சியம், சூழலியம், மெய்யியல், தமிழ் அறம், திறனாய்வு முதலிய தளங்களில் 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வருபவர் கோவை ஞானி அவர்கள். ஞானியின் அரசியல்/அழகியல் பார்வை ஆகச்சிறந்தது. ஆதிக்கத்தை எந்த ரூபத்திலும் எதிர்க்கும் கீழை மார்க்சியத்தோடு இணைந்தது. 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட பார்வை இழப்புக்குப் பின்னர் அதிகளவிலான படைப்புகளில்/திறனாய்வுகளில் ஈடுபட்டுள்ளார். " எனது எழுத்துகளில், என் வாழ்வும், அனுபவமும் அடங்கியிருக்கின்றன" எனும் கோவை ஞானி அவர்களுடனான நேர்காணல்...
உங்களைப் பற்றி....
1935 ல் ஒரு கோவை மாவட்டம் சோமனூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். வளமான வாழ்க்கை எங்களுக்கில்லை. வறுமையிலும், பஞ்சத்திலும் அடிபட்டுத்தான் வாழ்ந்தோம். கிராமத்து இயற்கைச் சூழலில் நண்பர்களோடு விளையாடித் திரிந்தேன். என் தந்தையார் விடுதலை உணர்வுமிக்கவர். நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் தமிழிலக்கிய அறிவில் தேர்ந்தவர்கள். கணிதத்திலும், வரலாற்றிலும் எனக்கு ஆர்வம் அதிகம். ஆறாம் வகுப்பிற்கு பிறகே ஆங்கிலம் கற்றேன். கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக்கல்வி கற்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றேன். இளமைக் காலத்தில் என் தமிழ் என்பது ஏறுமுகத்தில் இருந்தது. பெரியார், அண்ணா, அப்பாதுரையார், சேதுப்பிள்ளை, திரு.வி.க, மு.வ, ம.பொ.சி, முதலியவர்கள் தமிழ் வாழ்வையும், வரலாற்றையும் வளர்த்தெடுத்தனர். இந்தச் சூழலில் நானும் கலந்தும், கரைந்தும் போனேன். முதுகலைப் படிப்பிற்கான வாய்ப்பைத் தவறவிட்டேன். பள்ளி தமிழாசிரியராகத்தான் முப்பது ஆண்டுகள் பணிசெய்தேன். எஸ்.என்.நாகராசன், எல்.வி.ஆர் முதலியவர்களோடு மட்டுமில்லாமல் செல்லப்பா, க.ந.சு, ல.ச.ரா முதளியவர்களோடும் நெருக்கமாக இருந்து நவீன கால அரசியல் மற்றும் கலைஇலக்கிய வளர்ச்சியைக் கற்றேன். சிற்றிதழ் இலக்கியத்தில் நானும் இணைந்திருந்தேன். மார்க்சிய நோக்கிலான தமிழிலக்கிய திறனாய்வில் பெரிதும் ஈடுபட்டேன். தமிழ் வாழ்வு எனக்கு பெரும் நிறைவைத் தருகிறது.
நீங்களேன் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குவதில்லை?
நான் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்கவில்லை என்பது உண்மைதான். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் சிறப்பாகவே எழுதினேன். வானம்பாடி இயக்கக் காலத்திலும் புதுக்கவிதை முயற்சியிலும் ஈடுபட்டேன். புதுக்கவிதை என்பது குறுகிய வடிவில்தான் இருந்தாக வேண்டுமென்று சிலர் கூறியதை நான் ஏற்கவில்லை. அன்றியும் பழைய தொன்மங்களை நம் காலச்சூழலுக்கு ஒத்தமுறையில், நவீனகால நோக்கையும் உள்ளடக்கி புதுப்பிக்க முடியும் என்றமுறையில் "கல்லிகை" என்ற குறுங்காவியம் எழுதினேன். அகலிகை கதையை மார்க்சிய நோக்கில் புதியதாகப் படைத்தேன் . அதன் பிறகும் தொடர்ந்து புதுக்கவிதைகளை எழுதினேன். எழுதியவற்றில் ஒரு பகுதியே அச்சில் வெளிவந்தது. இடையில் சிறுகதை முயற்சியிலும் ஈடுபட்டேன். ஒரு நாவலும் எழுதினேன். படைப்பைவிட திறநாய்வில்தான் என் நாட்டம் சென்றது. மார்க்சியம் உட்பட பலதுறை அறிவில் எனக்கு எப்போதும் ஈடுபாடு அதிகம். இளமை முதற்கொண்டே வாழ்வியல் சார்ந்த சிக்கல்கள் என்னைக் கடுமையாக பாதித்திருந்தன. சிக்கல்களைப் புரிந்துகொள்ள வரலாறு, பொருளியல், மெய்யியல் என்று பல களங்களிலும் தேடவேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மாபெரும் படைப்புகளையும் புரிந்து கொள்வதில் எனக்கிருந்த ஈடுபாடு காரணமாக ஒவ்வொன்றையும் வரலாறு முதலிய சூழலில் வைத்து ஆராய்வது தேவையென்று அறிந்தேன். இவ்வகையில்தான் திறனாய்வுத் துறைதான் எனக்குப் பொருத்தமானதென்று தெரிவுசெய்தேன். திறனாய்வும் ஒரு படைப்புதான் என்ற உண்மையை என் திறனாய்வுக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் உணரமுடியும்.
உங்களிடம் எஸ்.என்.நாகராசனின் பாதிப்பு இருக்கிறதா?
எஸ்.என்.நாகராசன் உயிரியல் படிப்பைத் தெரிவுசெய்து, அதன் மூலமாகவே மார்க்சியத்திற்கு வந்துசேர்ந்தவர். 1844 இல் பாரீசிலிருந்தபோது மார்க்ஸ் தன் சிந்தனைகளை தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எழுதிய கையெழுத்துப்படிகள் 1930 வாக்கில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாயின. மார்க்சியத்தின் வலுவான மெய்யியல் அடிப்படையாகிய அந்நியமாதல் என்ற கோட்பாடு இந்தக் கையெழுத்துப்படிகளில் அடங்கியிருந்தன. இளம் மார்க்சுதான் இந்தக் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். முதிய மார்க்சு இதை மார்க்சு இதை ஒதுக்கிவிட்டார் என்பது உண்மையில்லை. இந்த அந்நியமாதலை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் எஸ்.என்.நாகராசன்தான். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்தியச் சூழலில் சமூகம், இலக்கியம்,பண்பாடு என்பவற்றை புரிந்துகொள்ளமுடியும். எஸ்.என்.நாகராசன் மார்க்சியத்தின் ஆதார நூல்கள் பலவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஜே.தி.பெர்னால்டு, கிறிஸ்டோபர் கால்டுவெல், ஜோசப்நீதாம், டி.டி.கோசாம்பி முதலிய மார்க்சிய அறிஞர்கள் எங்களுக்குப் பாடநூள்களாயினர். கட்சி மார்க்சியம் என்ற குறுகிய எல்லைக்குள் நாங்கள் என்றும் அடைபட்டதில்லை. சோவியத் மார்க்சியத்தை நாங்கள் உதறியதற்கும், மாவோவின் மார்க்சியத்தை தழுவியதற்கும் தூண்டுதலாக அமைந்தவர் எஸ்.என்.நாகராசன்தான். நாகராசன் அவர்களின் புதிய ஒரு கோட்பாடென கீழைமார்க்சியம் என்பதைக் குறிப்பிடமுடியும். இந்திய/தமிழ் மரபோடு மார்க்சியத்திற்கு நெருக்கமான உறவுண்டு என்ற அடிப்படையில்தான் கீழைமார்க்சியம் என்பதை நாகராசன் முன்வைத்தார்.இப்படி எனக்குள்ளும், நண்பர்கள் பலருக்குள்ளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய எஸ்.என்.நாகராசன் அவர்கள் எனக்கு ஆசான்.
எஸ்.என்.நாகராசன் அவர்களுடன் இணைந்து "புதிய தலைமுறை" என்ற கோட்பாட்டு சிற்றிதழை நடத்திய அனுபவம் குறித்து சொல்லுங்கள்...
1967-68 காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்த மார்க்சிய இலக்கிய/தத்துவ திங்களிதழ் "புதிய தலைமுறை". கட்சி மார்க்சியரோடு முரண்பட்டு கலை, இலக்கியம்,தத்துவம் பற்றிய எங்கள் பார்வையை தமிழகத்தில் முன்வைக்கும் முறையில் இந்த இதழைத் தொடங்கினோம். மாவோவின் சிந்தனையை இந்த இதழ்மூலம் பரவலாக்கினோம். எங்கும், எதிலும் தமிழ்தான் என்று எழுதினோம். பாரதிதாசனைப் பாராட்டினோம். சங்கஇலக்கியம் பற்றி விரிவாக எழுதினோம். அந்நியமாதல் என்ற அடிப்படையில் சிறுகதைகள் வெளியிட்டோம். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி பற்றி கூர்மையாக விமர்சனம் செய்தோம். சாலை இளந்திரையன் கவிதைகள் எங்கள் இதழில் வெளிவந்தன. 68 இல் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்து எழுதினோம். கல்கி, விகடன் முதலிய வணிக இதழ்களில் வந்த கதைகளை கூர்மையாக விமர்சனம் செய்தோம். எஸ்.வி.இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களின் ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட்டோம். நிறைய விவாதங்களும் வெளிவந்தன. இந்நிலையில் இந்தியாவில் வடக்கில் தோன்றி தெற்கில் பரவிய " வசந்தத்தின் இடி முழக்கம்" என்ற முறையில் அறிமுகமான நக்சல்பாரி இயக்க உணர்வுகள் எங்களை ஆட்கொண்டன. புதிய தலைமுறையின் அனைத்துப் படைப்புகளிலும் இதன் வெளிச்சத்தைக் காணமுடியும். எங்களுக்குள்ளும் உருவான குறுங்குழு அதிகாரம் காரணமாக நாங்களும் பிளவுபட்டோம். காவல்துறையின் கெடுபிடிகளும் அதிகரித்தன. 23 இதழ்களில் புதிய தலைமுறை தன் ஆயுளை முடித்துக்கொண்டது. பலர் நெஞ்சில் இன்னும் ஆற்றல்மிக்க ஒரு மார்க்சிய இதழாக எங்களின் புதிய தலைமுறை இன்றும் நிலைத்திருக்கிறது.
சிறுகதைக்கு ஜெயமோகனை நீங்கள்தான் அறிமுகம் செய்துள்ளீர்கள். தற்போது ஜெயமோகனின் வளர்ச்சியையும், அவர் மீதான விமர்சனங்களையும் எப்படி பார்க்கிறீர்கள்?
நண்பர் ஜெயமோகனின் முதல் சிறுகதையை "நிகழ்" இதழில் நான் வெளியிட்டேன் என்பது உண்மைதான். அந்தச் சிறுகதையை தன் காலச்சுவடு இதழில் வெளியிட சுந்தரராமசாமி மறுத்தாரென்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. பேச்சிப்பாறை அணைக்கட்டு கட்டிய காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய ஆதிவாசிகளின் பெருந்துயரை அந்தச் சிறுகதையில் சிறப்பாக ஜெயமோகன் எழுதியிருந்தார். நவீன அறிவியல் வளர்ச்சி என்பதற்காக காடுகள் அழிக்கப்படுவதும், மக்கள் வாழ்க்கையில் நெருக்கடிகள் அதிகரிப்பதும் முதலாளிகளுக்குத் தேவையாக இருக்கலாம். நமக்கு அது தேவையில்லை. சுந்தரராமசாமியைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சியை ஆதரித்தார். மக்கள் வாழ்வில் ஏற்படும் துயரை அவர் பொருட்படுத்தவில்லை. இவை தவிர நிகழ் இதழில் அந்தச் சிறுகதை வெளிவந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது, ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சுந்தரராமசாமி கூறினாராம். அதை விட்டுவிடலாம். சுந்தரராமசாமி காலத்திலேயே அவரை ஜெயமோகன் கடந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டார். ஜெயமோகனின் வாழ்வியல் அனுபவங்கள் மிக மிக விரிவானவை. இந்திய தத்துவம் பற்றி அவரது படிப்பும், பார்வையும் வியக்கத்தக்கவை. ஒரு கடிதம் என்றாலும் 20/30 பக்கங்களுக்கு ஒரே அமர்வில் எழுதக்கூடியவர். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுடையவர். இவரது அறிவாற்றலும், கலைத்திறனும் பன்முகப்பட்டவை. இவர் எழுதிய "விஷ்ணுபுரம்" நாவல் தமிழ் நாவல்களில் ஒரு சிகரம். சிலப்பதிகாரத்தின் இன்னொரு பெருவடிவம் "கொற்றவை".
நவீன தமிழிலக்கிய படைப்பாளிகள் குறித்து ஆழமான பார்வையோடு கூடிய இவரது திறனாய்வுகள் மிகச் சிறப்பானவை. சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுகள் என இவர் ஓயாமல் எழுதுகிறார். தற்கால தமிழிலக்கியச் சூழலில் இவருக்கு நிகரானவர் என்று இன்னொருவரை சொல்வதற்கில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டை இவர் பெரிதும் போற்றுகிறார். வன்முறை அரசியலை வெறுக்கிறார். அம்பேத்கர், பெரியார் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுதுகிறார். மார்க்சியம் பற்றி இவரது விரிவான அறிவு வியக்கத்தக்கது. எனினும் இவர் பார்வையோடு எனக்கு உடன்பாடில்லை. காந்தியை எவ்வளவோ பாராட்டலாம். காந்தி பற்றி இவருக்கு சிறிதளவும் விமர்சனம் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை இவர் கொச்சைப்படுத்துகிறார். "பின் தொடரும் நிழலின் குரல்" நாவலில் கட்சி மார்க்சியரின் சீரழிவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். இதன் காரணமாக கட்சி மார்க்சியர் இவரைச் சாடுகின்றனர். இவரை முழு அளவில் இந்துத்துவவாதி என்று சிலர் கடுமையாகத் தாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இவரிடம் எனக்கு பேரளவு நேசமும், மரியாதையும் உண்டு. என்னை இவர் அடிக்கடி ஆசான் என்று குறிப்பிடுகிறார். இவரிடம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். என்னளவில் இவரும் எனக்கு ஆசான்தான். உலகளவிலான இலக்கியங்கள் பற்றி இவரது பேரறிவு பாராட்டுக்குரியது. தமிழ்ச்சூழலில் இவர் பாராட்டப்படவில்லையென்பது தமிழுக்கு ஒரு கேவலம்.
பிற மார்க்சியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத க.நா.சு, சுந்தரராமசாமி முதலியவர்களை நீங்கள் ஏற்றுகொண்டது எப்படி?
க.நா.சு, சுந்தரராமசாமி, லா.ச.ரா, மௌனி, அசோகமித்திரன் முதலியவர்களை மார்க்சிய வட்டாரத்தினர் ஏற்கவில்லை என்பது உண்மைதான். இவர்களும் தம் படைப்புகளில் தனிமனிதர்களை முதன்மைப்படுத்தி எழுதினாலும் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த சமூகம் / சமூகச் சிக்கல் குறித்து எழுதாமல் இல்லை. சமூகத்தில் / வரலாற்றில் வேர்கொள்ளாத மனிதர் என்று எவருமில்லை. கட்சி அரசியலுக்கு முதன்மை தந்த மார்க்சியர், எந்த ஒரு இலக்கியமும் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க அரசியலையும் முதன்மைப்படுத்த வேண்டுமென்று கருதினார்களே ஒழிய இப்படி கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும்போது கலைத்தரம் குறைந்துவிடுவது பற்றி கவலைப்படவில்லை. இலக்கியம் என்பது அரசியலுக்கு சேவை செய்யவேண்டும். கட்சி அரசியலுக்கு சேவை செய்யாத எந்த கலைஞருக்கும் மரியாதையில்லை. மார்க்ஸ் ஷேக்ஸ்பியரைப் பாராட்டினார். ஏங்கல்ஸ் பால்சாக்கை கொண்டாடினார். லெனின் டால்ஸ்டாயைப் பாராட்டிச் சொல்லவில்லையென்றால் டால்ஸ்டாய் மதவாதி என ஒதுக்கப்பட்டிருப்பார். வர்க்க அரசியலுக்கு அழுத்தம் தருவதென்றால் "பிரம்மசாரியின் டைரி" முதலிய நாவல்களை எழுதிய கார்க்கியையும் இவர்கள் சாடவேண்டியிருக்கும். ஜெயகாந்தனையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. சமூகச்சிக்கலுக்கு கூடுதலான அழுத்தம் தந்ததால் மௌனி முதலிய கலைஞர்களை நாங்கள் மதிக்கத் தவறினோம் என்று சிவத்தம்பி சுயவிமர்சனம் செய்துகொண்டார். க.நா.சு முதலிய அற்புதமான கலைஞர்கள் தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்த்த அளவிற்கு மார்க்சியர் செய்யவில்லை.
மார்க்சியவாதிகளால் அதிகம் விமர்சனத்துக்குள்ளான பொன்னீலனின் "புதிய தரிசனங்கள்" மீதான உங்கள் விமர்சனம் என்ன?
பொன்னீலன் அவர்களின் "புதிய தரிசனங்கள்" நாவல் பற்றி எனக்கு விமர்சனங்கள் ஏதுமில்லை. மார்க்சிய கட்சி வட்டாரத்தில் "புதிய தரிசனங்கள்" நாவல் குறித்து கடுமையான விமர்சனங்கள் உண்டு. சோவியத் ஒன்றியத்தை பொன்னீலன் விமர்சனம் செய்தார். இந்திராகாந்தி மூலம் இந்தியாவில் சோசலிசம் வந்துவிடுமென்று நம்பி இந்திராகாந்தியோடு ஒத்துழைத்தார். கட்சி வட்டாரத்தையும், நெருக்கடி நிலையையும் அவர் கடுமையாக சாடினார். மார்க்சிய கட்சி வட்டாரத்தினுள்ளும் அதிகாரம் செயல்படுவதை அவர் மதிக்கவில்லை. கட்சிக்குள் உண்மையான ஊழியர்க்கு மரியாதை இல்லையென்பதை சுட்டிக்காட்டினார். மார்க்சியர் அன்றைக்கு தலித்தியத்தையோ, பெண்ணியத்தையோ பெரியதாக வரவேற்கவில்லை. பொன்னீலன் வரவேற்றார். காந்தியம் பேசுபவர்க்குள்ளும் உண்மையான ஊழியர் உண்டென்பதைச் சுட்டிக்காட்டினார். தென் மாவட்டங்களில் மக்களோடு இணைந்திருந்த பக்தி இயக்கங்களைப் பாராட்டினார். அய்யா வைகுண்ட சாமி இயக்கத்தைப் பாராட்டி எழுதினார். இவை தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் தனிமுகம். ஊர், ஊருக்குள் நெருக்கடி நிலைக்கு முன்பும், பின்பும் நடைபெறுவதான உறவுகள், போராட்டங்கள்தான் மையம். ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களில் தமிழில் ஒரு அற்புதமான நாவல் "புதிய தரிசனங்கள்". ஆனால் அதில் நக்சலைட் இயக்கத்தைக் கேலி செய்து எழுதியிருக்கிறார். நக்சலைட் இயக்கம் பற்றி எனக்குப் பெரும் மரியாதை உண்டு. ஒரு நக்சலைட்டை கோமாளி என பொன்னீலன் சித்தரித்தார் என்பதைத் தவிர வேறு குறைபாடில்லை.
ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பரவலாக்கும் உங்கள் முயற்சியின் பலன் என்ன?
ஈழத் தமிழிலக்கியத்தொடு 60களுக்குப் பிறகு குறைந்த அளவுக்கு எனக்கு உறவு ஏற்பட்டது. பத்மநாப அய்யர் ஈழத்தமிழ் இலக்கிய நூல்களைக் கொண்டுவந்து எங்களுக்குத் தந்தார். எஸ்.பொ, கணேசலிங்கன், கைலாசபதி, தளையசிங்கம் முதலியவர்களை நாங்கள் முன்பே அறிந்திருந்தோம்.தமிழ்நாட்டு தமிழ் இலக்கியவாதிகள், திறனாய்வாளர்களைவிட இவர்கள் மீது எங்களுக்கு கூடுதலான மரியாதை இருந்தது. ஈழத்தமிழ் விடுதலைக்கானப் போராட்டம் எங்களையும் வெகுவாக பாதித்தது. தமிழ்த் தேசியம் பற்றி நாங்களும் கூடுதலாகப் பேசினோம். ஈழத்தமிழ் விடுதலைக்கு தமிழகம் செய்த துரோகத்தை நம்மால் என்றும் துடைக்க முடியாது. போர்க்காலச் சூழலுக்கு முன்னரும், பின்னரும் ஈழத்தமிழ் படைப்புகளின் வீரியத்தை தமிழ்ச் சூழலில் வாழும் நம்மால் எட்டிப்பிக்க முடியாது. 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சூழலில் 'சுகமாக' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெயரளவிற்கு போராட்டங்கள் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூடு நமக்குத் தெரியாது. மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழ் விடுதலை, உலகில் தமிழர் என்ற முறையில் நமக்கும் பெரும் மரியாதையைத் தந்திருக்கும். இத்தகைய மரியாதையை நாம் இழந்துவிட்டோம் . புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான் இன்றைக்கும் உயிருள்ள தமிழிலக்கியம்.
தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பதில் உங்களுக்கு நிறைவிருக்கிறதா?
தமிழ், செம்மொழிதான் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உலகளவில் அறிஞர் பெருமக்கள் ஒப்புக்கொண்டனர். தமிழகத்திலும் ஒரு நூற்றாண்டுக்காலம் எவ்வளவோ, வற்புறுத்தல்கள், போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்திய அரசு தமிழைச் செம்மொழியென ஏற்றுக்கொண்டது. உலகளவில் மனித நாகரிகத்தின் முதற்பேரெழுச்சியை தமக்குள் பதிவுசெய்து கொண்டிருப்பவை கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம் முதலிய செம்மொழிகள். இந்த மொழிகளின் வரிசையில் இணைவதற்கான எல்லாத் தகுதிகளும், தனித்தன்மையும் கொண்டது தமிழ்மொழி. மேலும் சரியாக சொல்வதென்றால் சமஸ்கிருதத்தைவிட தொன்மையும், வளமும் மிக்கது தமிழ். இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று அறிஞர் பெருமக்கள் உரிமை கொண்டாடினாலும், இந்திய நாகரிகம் என்பதன் அடிப்படைகள் அனைத்திற்கும் ஊடகமாக இருப்பது திராவிட/தமிழ் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை, அறிவியல், வணிகம், கட்டிடம், சிற்பம், கணிதம், தர்க்கம், மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தின் வலைர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்தது தமிழ் நாகரிகம். தமிழைச் செம்மொழி என்ற பேருண்மையை இந்தியதேசம் ஏற்பதென்பது மீண்டும் ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதற்கான வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழைச் செம்மொழியென நான் கொண்டாடுவதற்கும் இதுவே முதற்காரணம்.
சமஸ்கிருதம்தான் மூலமொழி என்று பல ஆய்வாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே?
சமஸ்கிருதம் என்பதன் பொருள் திருந்திய / திருத்தம் செய்யப்பட்ட மொழி . ரிக்வேதம் முதலியவை கி.பி முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமஸ்கிருதம் என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த சமஸ்கிருதம் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலிய பல மொழிகளின் கலவை. சமஸ்கிருதம் என்ற மொழி இந்தியாவில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள அறிஞர்கள், தமக்கிடையில் உறவு கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை மொழி.சமஸ்கிருதம் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்று இந்தியாவில் எவரும் இல்லை. சம்ஸ்கிருத மொழிக்கு என்று ஒரு மாநிலமோ, ஒரு ஊரோ கூட இல்லை. தமிழ் மொழியிலிருந்து தொன்மையான எத்தனையோ சாஸ்திரங்கள் சமஸ்கிருதத்தில் பெயர்க்கப்பட்டன. சமஸ்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தவர்கள் தமிழர்கள். பாணினி, சாணக்கியர், பரதமுனிவர், சங்கரர், மத்துவர் முதலியவர்கள் தமிழகத்தில்தான் வாழ்ந்தனர். சமஸ்கிருதத்தில் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட இடம் காஞ்சிபுரம். வேதங்களின் உள்ளும் தமிழ்ச் சொற்கள், கருத்துகள் நிறைய உண்டு. சில அறிஞர்கள் கூறுவதுபோல சமஸ்கிருதமும் தமிழர்கள் படைத்த மொழிதான். சமஸ்கிருதம் புனித மொழி என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய். இந்தியாவில் இந்தி முதலிய வடஇந்திய மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை இலக்கணம் தந்தது தமிழ்தான், சமஸ்கிருதம் இல்லை. அம்பேத்கர் கூறியபடி மேற்கிலிருந்து வந்த ஐரோப்பியர்தான் பிராமணர்களையும், சமஸ்கிருதத்தையும் மகிமைப்படுத்தினர். அவர்களே பின்னர் தங்கள் பொய்யை உணர்ந்து கொண்டனர்.
குலதெய்வக் கோவில்களில் பிள்ளையாரை வைக்க ஆரம்பித்துவிட்டார்களே? ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் நவீன உத்தியா இது?
குலதெய்வ கோவில்கள் தொன்றுதொட்டு நம்முன்னோர்களின் வழிபாடு என்ற முறையில் இன்றும் மரியாதையோடு தொடர்வை. ஆயிரக்கணக்கான நம் ஊர்ப்புறங்களில் முன்பு நம் மரபுமுறையில் நடைபெற்ற திருமணங்களில் இப்பொழுதெல்லாம் பிராமணர்களை அழைத்து வேள்வி, முதலிய சடங்குகளை நம்மக்கள் செய்கிறார்கள். ஊர்ப்புரத்து கிராம தெய்வங்களிள் கோவில்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டுதான் விழா நடத்திவருகிறார்கள். முன்பு முதல்வராக இருந்த அம்மையார் இவற்றை தடுக்கச் செய்த முயற்சி பலனனிக்கவில்லை. இப்பொழுது குலதெய்வக் கோவில்களில் விநாயகரை வைத்து வழிபடும் போக்கு நுழைத்து வருவதாகத் தெரிகிறது. தன்னளவில் விநாயகர் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு தெய்வம். குழந்தைகள் விநாயகர் மீது ஓடி விளையாடலாம். மகாராட்டியத்தில் விநாயகர் திருவிழா பேரளவில் நடைபெறுகிறது. இந்துத்துவத்தை மக்கள் நோக்கில் வளர்த்தெடுக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான வடிவங்களில் விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்தியின்போது கொணர்கிறார்கள். முஸ்லீம்களோடு மோதல் ஏற்படுத்தும் நோக்கில் இதை அவர்கள் செய்கிறார்கள். கடவுள் இல்லை என்று பேசி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் திராவிட இயக்கத்தை முறியடிக்கும் நோக்கிலும் விநாயகருக்கு தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்படுத்த செய்யும் முயற்சியின் ஒருபகுதியாகவே குலதெய்வ கோவில்களிலும் விநாயகர் இடம் பெறுகிறார். மக்கள் பாவம் அப்பாவிகள். இவர்களை ஏமாற்றுவது எளிது
கடவுள் உண்டு அல்லது இல்லை என்ற வாதங்களைக் தவிர்த்து உங்களுக்குள் கடவுளை உணருங்கள் என்று பிரசங்கம் செய்யும் கார்ப்ரேட் சாமியார்கள்
இன்றைய வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறார்களே?
இன்றைய சமூக வாழ்வில் கடுமையான நெருக்கடிகள் அதிகரித்துவருவதன்
விளைவாக நவீன சாமியார்களுக்கும் பெரும் மரியாதை ஏற்பட்டு வருகிறது.
மார்க்சியர் ஒரு காலத்தில் கூறியது போல புரட்ச்சிகரமான சமூக மாற்றம்
ஏற்பட்டிருக்குமானால் மக்கள் வாழ்வில் உள்ள நெருக்கடிகளும், துயரங்களும்
ஓரளவுக்கேனும் ஒழிந்திருக்கும். அந்நிலையில் சாதிக்கும் மதநம்பிக்கைகளுக்கும்,
சடங்குகளுக்கும், சோதிடம் முதலியவற்றுக்குமான செல்வாக்கும், மரியாதையும்
குறைந்திருக்கும். சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் கல்வி
தரப்பட்டிருக்குமானால் அறிவியல் உணர்வு வளர்ச்சிப்பெற்று மூடநம்பிக்கைகள்
ஆட்டம் கண்டிருக்கும். இவற்றுக்கு மாறாக, உலகமயமாதல் முதலிய
பலகாரணங்களால் மக்கள் மத்தியில் சிக்கல் அதிகரித்திருப்பதோடு நவீன நாகரிகம்
முதலிய பிரம்மைகளும், மோகங்களும் வளர்க்கப் படுகின்றன. வெற்றுச் சடங்குகள்
முதலியவற்றை உபதேசம் செய்யும் பழைய சாமியார்களுக்கிடையில் நவீன
முறையில், அறிவியலையும் ஓரளவுக்கு தம்மோடு இணைத்துக்கொண்டு
யோகம், தியானம் என்றெல்லாம் பேசுகிற நவீன சாமியார்களுக்குத் தேவை
ஏற்பட்டிருக்கிறது. மக்களைப் புதிய பிரம்மைகளில் ஆழ்த்துவதற்கு பெரிய
முதலாளிகளுக்கு/ கார்ப்ரேட் முதலாளிகளுக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களும் மருத்துவம், கல்விப்பணி, மரம் நடுதல் என்றும் பேசுகிறார்கள்.
கடவுளைப் பற்றிய பழைய புராணக்கதைகளை இவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள்
உங்களுக்குள்ளும் கடவுள் உண்டு ஏன் வெளியில் தேடுகிறீர்கள் என்றும்
பேசுகிறார்கள். முன்பு வேதாத்திரி மகரிஷிகள் இப்பொழுது ஜக்கிவாசுதேவ்
அமிர்தானந்த மயி, மற்றும் சிலர்.
பெரியாரின் பெண்ணியம் பற்றி நிறைய வாத, பிரதிவாதங்கள் எழுகின்றன. உங்களின் நோக்கில் அதை விவரிக்கமுடியுமா?
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் தொகுத்துச் சொல்வதென்றால் அராஜகம் - அனார்க்கிசம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மனிதன் முற்றிலும் அறிவு சார்ந்தவனாக - பகுத்தறிவு சார்ந்தவனாக இருக்கவேண்டும். எத்தகைய ஆதிக்கத்திற்கும் இவன் உட்படாதவனாக இருக்கவேண்டும். சாதி, மதம், சடங்கு, கடவுள் என்ற எதுவும் இவனுக்குத் தேவையில்லை. தேசம், இனம், மொழி என்பதும் இவனைக் கட்டுப்படுத்த வேண்டாம். இன்றைய உலகச் சூழலில் இவை சாத்தியமில்லை என்றபோதிலும் பெரியாருடைய இலக்கு என்பது இதுவாகத்தான் இருந்தது. இவ்வகையில்தான் பெண்ணின்மீது ஆண் செய்யும் அதிகாரத்தை முற்றாக இவர் மறுத்தார். திருமணம் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழமுடியும். குழந்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு ஆணுக்கு, குடும்ப அமைப்புக்கு பெண் கட்டுப்பட்டுதான் வாழ்ந்தாக வேண்டுமென்பதை பெரியார் ஏற்கவில்லை. மனித இனத்தை, வரலாற்றை தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் பெண்ணுக்கு குழந்தைப்பேறு, குடும்பம், திருமணம், கற்பு முதலியவை வேண்டுமென்றால் பெரியார் இவற்றை முற்றாக மறுத்தார். பெரியாரின் இத்தகைய சிந்தனையும் அராஜகவாதம் என்பதில்தான் அடங்கும். அரசு வேண்டாம், அதிகாரம் வேண்டாம், மதம் வேண்டாம் என்பதன் நீட்சிதான் இக்கருத்தும். பெரியாரியத்திற்கு இது ஒத்தக் கருத்து என்றாலும் இதை மார்க்சியம் ஏற்காது. வரலாற்றின் கட்டுப்பாட்டுக்குள்தான் நாம் வாழ்கிறோம். வரலாற்றை ஒரே பாய்ச்சலில் கடந்து செல்லமுடியாது.
பெரியாரை நீங்கள் வலதுசாரித் தன்மையோடுதான் அனுகுகிறீர்களென விமர்சனமுண்டே?
பெரியாரைப் பொறுத்தவரை வலதுசாரியென்று சொல்லமுடியாது. பெரியாரை இன்று தூக்கிப்பிடிப்பவர்களில் பலர் வலதுசாரிகள். சாதி வேண்டாம், மதம் வேண்டாம், பார்ப்பனியம் வேண்டாம் என்பதை மட்டும் உரத்துச் சொல்லும் இவர்கள் முதலாளியம் வேண்டாம், அரசதிகாரம் வேண்டாம் என்பது பற்றி அக்கறையோடு பேசமாட்டார்கள். முதலாளியத்தோடும், அரசதிகாரத்தோடும் இவர்கள் ஒத்துச்செயல்படுகிறார்கள். சாதி முதலியவை இவர்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கின்றன. பெரியாரின் மையம் என்று சமதர்மத்தைத்தான் சொல்லமுடியும். தன்மானம் என்பதுதான் பெரியாரின் தத்துவம். தொழிலாளிக்குத் தன்மானம் தேவையென்றால் முதலாளியத்தை மறுக்கவேண்டும். பெண்ணுக்கு தன்மானம் தேவையென்றால் ஆணதிகாரத்தை மறுக்கவேண்டும். எவ்வகை ஆதிக்கமும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற பெரியாரின் கருத்தும் மார்க்சியரின் கம்யூனிசம் என்ற கருத்தும் ஒரு நிகரானவை. சாதியா? வர்க்கமா? என்று ஓயாமல் முரண்பட்டு பேசுவதில் அர்த்தமில்லை. மனிதன் முற்றிலும் பகுத்தறிவு வயப்பட்டவனாகவுமில்லை. பெரியாரியமும், மார்க்சியமும் ஒன்றுக்கொன்று எதிரானவையும் அல்ல. ஆனால் பெரியாரியமும், மார்க்சியமும் தமிழகச்சூழலில் இணைந்தாகவேண்டும். பெரியாரியம் பேசும் வலதுசாரிகள் இத்தகைய இணைப்பை ஏற்கமாட்டார்கள். முதலாளியம் / அரசு ஒழியாமல் சாதியையும், மதமும், பார்ப்பனியமும் ஒழியா. சாதி, மதம் முதலியவற்றை மட்டும் ஒழிப்பதுபற்றி மட்டும் ஓயாமல் பேசுபவர்கள் வலதுசாரிகள்.
இன்றைய பெரியாரிஸ்டுகள் யாரும் ஈரோடு திட்டம் பற்றி ஏன் பேசுவதில்லை?
1933 இல் பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து ஈரோடு திட்டம் என்பதை உருவாக்கினார்கள். சிங்காரவேலருக்கும், பெரியாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு ஈரோடு திட்டம் பற்றி பேச்சில்லை. ரஷ்யாவுக்கு சென்று திரும்பிய பெரியார் தமிழ்நாடு முழுவதும் சமதர்ம மன்றங்களை ஏற்படுத்தினார். சிங்காரவேலர் அழுத்தம் திருத்தமான பொதுவுடைமைவாதி. ஜமீன்தாரி முறையை முற்றாக ஒழித்தாக வேண்டும். லேவாதேவி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.இப்படி பல திட்டங்கள். பிரிட்டிஷாரின் சொத்துக்களை எத்தகைய இழப்பீடும் இல்லாமல் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதும் ஈரோடு திட்டத்தில் ஒரு முக்கியகக் கூறு. திராவிட இயக்கம் இத்திட்டத்தில் ஊன்றி நிற்கவில்லை. திராவிட இயக்கத்தினுள்ளும் நிலக்கிழார்கள், முதலாளிகள் என்று பலரும் இருந்தனர். ஜமீன்தாரி முறை முதலியவற்றிற்குப் பிறகு கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. அன்று ஈரோடு திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் திராவிட இயக்கம் பிறகு என்றைக்காவது இதை புதுப்பித்திருக்க வேண்டும். இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவின் பொருளியலையும், அரசியலையும் தனக்குள் முற்றாக அடக்கி தேசத்தை, மக்களை, இயற்கையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தவர்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கெதிராக உறுதியாக நிற்கவேண்டும். லேவாதேவி, ஜமீன்தாரி முறை இன்றும் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. பெரியார் அன்று தன் இயக்கம் புரட்சிகர இயக்கம் என்றார். சீர்திருத்த இயக்கம் இல்லையென்றும் சொன்னார். இன்று எந்த நிலை?
பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை எப்படிக் கருதுகிறீர்கள்?
கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதில் முதல் வெற்றியை
சாதித்திருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்கள் மட்டுமல்ல கார்ப்ரேட் மருத்துவமனைகள்,
பிரமாண்டமான கார்ப்ரேட் பலசரக்கு கடைகள், துணிவணிக நிறுவனங்கள்,
விவசாயத்துறையிலும் கார்ப்ரேட் உற்பத்தி முறை, இப்படி எத்தனையோ
வடிவங்களில் கார்ப்ரேட் கலாச்சாரம் நம்மக்கள் வாழ்வுக்குள் ஆடம்பரமாக,
ஆர்ப்பாட்டமாக நுழைந்து தங்கி வருகிறது. கிரிக்கெட் சூதாட்டங்கள், குளிர்
பானங்கள், சிப்ஸ் நிறுவனங்கள், ஐஸ்க்ரீம், பிசா முதலிய நூறுவகை உணவு
வகைகள், இப்படியெல்லாம் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
பணவசதி பெருகி வருபவர்களுக்கு கார்ப்ரேட் கலாச்சாரம்தான் உகந்த கலாச்சாரம்.
ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்,
பெண்கள் இவர்களுக்கு மாபெரும் விடுதலை போல வந்துசேர்ந்திருக்கிறது.
எந்தகட்டுப்பாடும் தேவையில்லை, எங்கும் திரியலாம், ஓடியாடி வரலாம்,
கைநிறைய காசு. கிராமங்கள்தோறும் விவசாய நிலங்கள் மாபெரும் கட்டிடங்களாக
மாறிவிடுகின்றன. இவர்களின் தேவைக்காகவே ஆறு வழிச்சாலைகள்,
ஐந்து நட்ச்சத்திர விடுதிகள், மலைப்பிரதேசங்களில் குடில்கள்.
மதுவிற்பனையில் கட்டுப்பாடில்லை, அமெரிக்கப்பயணம் எளிது. இந்த
ஆக்டோபஸ் கரங்களில் ஊழியர்கள்/நடுத்தரமக்கள். அது மட்டுமின்றி இன்றைக்கு
பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
அதை சுருக்கமாக விவரிக்க இயலாது. இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள்
விவசாயத்தை கையில் எடுத்து கொள்ளும் பேரபாயம் இருக்கிறது. இந்நிலை
தொடருமாயின் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அம்பானிகளை எதிர்நோக்கும்
அவலம் நிகழும். நிச்சயமாக….
மைய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உயரதிகாரிகளை (I .A .S , I .P .S ) வெளிமாநிலத்தவராகவே நியமிப்பது ஏன்?
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் , இந்திய ஆட்சிமுறை, கூட்டாட்சி முறைதான் என்று பெயரளவிற்கு சொல்லிக்கொண்டபோதிலும் unitary government என்ற முறையில் ஐக்கிய ஆட்சியாக / ஒற்றை ஆட்சியாகத்தான் இருக்கிறது. மாநிலங்கள் பெயரளவுக்கு அரசுகள் / states என்று பெயரிடப்பட்ட போதிலும் இந்தியாவில் இருப்பது ஓர் அரசுதான். மைய அரசின் உறுப்புகளாகத்தான் மாநில அரசுகள் உள்ளன. முதன்மையான / முக்கியமான அதிகாரங்கள் எல்லாம் மைய அரசிடம்தான் உள்ளன. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் தேவைப்படும் பொழுதெல்லாம் மைய அரசு எடுத்துக் கொள்ளமுடியும்.
இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் I .A .S , I .P .S முதலிய அதிகாரிகள் மைய அரசால் தெரிவு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மைய அரசு தன் கட்டுப்பாட்டில் மாநிலங்களை வைத்துக் கொள்ளவேண்டுமென நினைக்கிறது. ஆளுநர்களும் இத்தகைய தேவைக்காகவே நியமனம் செய்யப்படுகிறார்கள். நிதி அதிகாரங்கள் முதலியனவும் பெரும்பகுதி மைய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிற இந்தியாவின் அரசியல் அவலட்சணம் இதுதான். எந்த மாநிலத்திற்கும் தன்னுரிமை / சுயநிர்ணய உரிமை இல்லை. இராணுவ வலிமையால் இந்தியாவை ஒரு தேசமென பிரிட்டிஷார் அறிவித்தனர். பிரிட்டிஷ் அரசின் வாரிசாகத்தான் இந்திய அரசு இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அயல் மொழியினர் தமிழகத்தில் I .A .S , I .P .S அதிகாரிகளாக, இன்றும் இருக்கின்றனர். இவர்களின் அதிகாரத்திற்கு அமைச்சர்கள் அடக்கம்.
அன்னா ஹசாரேக்கு ஆதரவான மக்களின் எழுச்சியை காந்தியத்தின்
மறுமலர்ச்சியாக கொண்டாடுகிறார்களே?
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைத் தொடர்பான ஊழல் விவகாரம் இந்திய
அரசியலில் புயல்போல அடித்துக்கொண்டிருக்கிற அதே சமயம், காமன்வெல்த்
விளையாட்டு தொடர்பான ஊழலும், மும்பையில் இராணுவக் குடியிருப்புத்
தொடர்பான இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய
அரசியலில் இருக்கிற ஊழல் என்ற பிசாசை இனியும் விடுவைக்க முடியாது என்ற
ஆவேசத்துடன் மகாராட்டியத்திலிருந்து அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி புறப்பட்டார். இத்தனை மோசமான சூழலில் ஒரு காந்தியவாதியால் அமைதியாக
இருக்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலில்
எத்தனையோ நாசங்கள் நடைபெற்ற போதிலும் கண்டும் காணாதவர் போலத்தான்
அன்னாஹசாரே இருந்தாரா என்பது தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கான
திட்டங்கள்/ சட்டங்கள் என எவ்வளவோ காலம் பேசப்பட்டபோதிலும் எதுவும்
முறையாக நடைபெறவில்லை. அன்னாஹசாரே மாற்றுத்திட்டம் என்ற ஒன்றை
முன்வைத்தார். சட்டம் இயற்றுவது என்றால் பாராளுமன்றத்தில்தான் அதை
நிறைவேற்றியாக வேண்டும் என்ற முறையில் பிரதமரும் மற்றவர்களும்.
வாதங்களை முன்வைத்தனர். ஊழல்வாதிகள் நிறைந்திருக்கின்ற பாராளுமன்றத்தில்பெயரளவிற்கு ஏதோ ஒன்றை நிறைவேற்றிவிட்டு அப்புறம் அது செயல்படாமல்
இருக்க செய்துவிடுவார்கள். அன்னாஹசாரே உறுதியாக இருந்தார். அப்புறம் ஏதோ
நடந்திருக்கிறது. அன்னாஹசாரேவை ஏமாற்றுவது இந்திய அரசியல்வாதிகளுக்கு
எளிதாக கைவந்தகலை. இனி காந்தியத்திற்கு வெற்றி கிடைப்பதாவது?
இன்றைய இந்திய தேசத்தின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் என்னென்ன?
இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்திய தேசமென்று சொல்வதில்
உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய
ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு
தேசமென இராணுவம் முதலியவற்றை கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன்
மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. காஷ்மீர் என்பது
ஒரு மாபெரும் சிக்கல். அறுபது ஆண்டுகளாக காஷ்மீரை இந்தியாவோடு
வைத்திருக்கவேண்டும் என்ற முயற்சியில் பலநூறுகோடி வீண் செலவு.
ஆயிரக்கணக்கில் படுகொலைகள். இதுபோல பிற கிழக்கு மாநிலங்களிலும்
கடுமையான சிக்கல். இந்தியா என்ற ஒரு தேசத்திற்கு ஒரு மொழி தேவையென்ற
நம்பிக்கையில் இந்தியின் ஆதிக்கத்தை தமிழ் முதலிய பலமொழிகள் மீது
திணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பண்பாடு என்று ஒன்று இருப்பதாக
நம்பி இந்துத்துவம் என்ற பிசாசை வளர்க்க வேண்டியிருக்கிறது. அரசியல்
சட்டத்தினுள்ளும் சாதிக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அந்நிய நிறுவனங்களின்
பொருளியில், ஆதிக்கத்திற்கு அணுசரணையாகவும் இந்தியாவை ஒரு தேசம்
என்று வைத்திருக்க வேண்டியிருக்கிறது. தேசிய இன விடுதலை என்ற பெயரில்
எந்தவொரு இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றாலும் பயங்கரவாதம்/
தீவிரவாதம் என்று சொல்லி அதை ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது. மார்வாடிகள்
முதலிய ஒருசில இனத்தவர் இந்தியா முழுவதும் பரவி பல மாநிலங்களின்
நிலச்சொத்துகளை வாங்குவதுடன் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின்
ஆதிக்கத்திற்கு அந்தந்த மாநில மக்களின் மேல் தம் ஆதிக்கத்தைப் பெருக்க வாய்ப்பு
ஏற்படுகிறது. தமிழ்த்தேசம் இன்று தமிழ்மக்களின் தேசமாக இல்லை.
தற்போது தமிழிலக்கிய வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?
செம்மொழி என்ற தகுதியைப் பெற்ற தமிழைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கும்
ஆற்றல் நம் தமிழ் ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இருப்பதாகத்
தெரியவில்லை. தமிழைத் தின்று இவர்கள் பிழைக்கிறார்களே ஒழிய இவர்கள்
தமிழின் ஆற்றலையும், தமிழின் வாழ்வையும் தமிழ் அறத்தையும் அறவே
புரிந்து கொள்ளவில்லை. விதிவிலக்காக ஒரு சிலர் இருப்பது, இன்றைய உலக
நெருக்கடிகளுக்கிடையில் தமிழைக் காப்பதற்குப் போதாது. தமிழிலக்கியம்
என்ற மாபெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு இன்று இந்திய அளவிலும்,
உலகளவிலும் நமக்கான தகுதியைப் பெறும் திறன் இல்லாதவர்களாக
இருக்கிறோம். தொன்மைத் தமிழ் இலக்கியத்தின் பேரளவுக்கு ஒத்த முறையில் ஒரு
நூற்றாண்டுக்கிடையில் தமிழிலக்கியம் கண்டிருக்கும் வளர்ச்சி வியக்கத்தகுத்தது.
இது பற்றி தமிழ்ப் பேராசிரியர்களுக்கு படிப்போ, பார்வையோ இல்லை. கடந்த
50 ஆண்டுக்கால அளவிலும் இறுதியாக கடந்த 25 ஆண்டுக்கால அளவிலும்
சிற்றிதழ்கள் சார்ந்தும், சாராமலும் நவீன இலக்கியப் பார்வையோடு படைப்பாளிகள்
நூற்றுக்கணக்கில் நவீன கவிதைகள் என்றும் சிறுகதைகள் என்றும் நாவல்கள்
என்றும் தொடர்ந்து படைத்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக
வட்டாரங்கள் இவர்களை, இவர்களது ஆக்கங்களைக் கண்டு கொள்ளவேயில்லை.
ஞானபீட பரிசு முதலியவற்றிற்கு இவர்களில் பலர் தகுதியுடையவர். தமிழ்த்
துறைகளில், பட்டம் பெறாத இவர்களின் நுழைவால் தமிழின் ஆற்றல்
வெள்ளம்போல் பெருகும். பெரியவர்கள் கண்டு கொள்ளவில்லையென்றாலும்
இவர்கள் பார்வைக்கு அப்பால் தமிழிலக்கியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இலக்கியம் பற்றிய உங்கள் மார்க்சிய கோட்பாடு என்ன?
வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மைக் காலத்தில் இயற்கையோடு நம் இணைந்திருந்தோம். ஏற்றத்தாழ்வுகள் நமக்கிடையே இல்லை. உழைப்பிலும், பகிர்விலும் நாம் இணைந்திருந்தோம். தனிவுடைமையும், அதிகாரமும் தொடங்கி வளர்ந்த காலத்தில் இயற்கையிலிருந்து நாம் விலகினோம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சமூகத்தினுள்ளும், நமக்குள்ளும் பிரிவுகள் ஏற்பட்டன. போட்டி, பொறாமைகள் போர்கள் பெருகின. ஏற்றத்தாழ்வில்லாத தொன்மைச் சமூகம் நமக்குள் கனவாய், கற்பனையாய், கதைகளாய், கவிதைகளாய் மீண்டும் மீண்டும் எழுந்தன. ஆதிப் பொதுமை சமூக பண்பாட்டில்தான் நாம் உயிர்த்திருக்க முடியும். அத்தகைய சமூகத்தைப் பெறுவதற்காக காலந்தோறும் நாம் போராடுகிறோம். வர்க்கமற்ற சமூக வாழ்வே நமக்கு இலக்கு. சமதர்மமன்றி நமக்கு வாழ்வில்லை. பேரிலக்கியங்கள் இத்தகைய பேருண்மையைத்தான் தமக்குள் தாங்கியிருக்கின்றன. வள்ளுவரின் ஒப்புரவும், சமதர்மமும் வேறானவையில்லை. சமயங்களின் அடித்தளம் என்பது இத்தகைய சமதர்ம உணர்விலிருந்துதான் கடவுளர்கள், காவியங்கள் எழுகின்றன. இலக்கியம் என்பது வெற்று அலங்காரமில்லை. காலந்தோறும் மனிதன் நடத்திய போராட்டங்களின் பதிவுகள்தான் இலக்கியங்கள். இளங்கோவும், கம்பரும் செய்தவை இத்தகைய பதிவுகள்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் இந்தப் பதிவின் தொடர்ச்சிகள். பிராமித்தியோசை கொண்டாடியவர் மார்க்ஸ். மார்க்சியரின் இலக்கியப்பார்வை என்பதன் மையம் இது.
நேர்காணல்: ஆனந்த் ( படிமை மாணவர் )
|