வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
நேர்காணல்கள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நேர்காணல்கள் நேர்காணல்கள் வாயில்


இங்கே எழுதப்படுவது ஹைக்கூ அல்ல பொய்க்கூ - கவிஞர் அய்யப்ப மாதவனுடன் ஒரு நேர்காணல்

ஆனந்த், செந்தூரன், உதவி: கதிர்வேல் : படங்கள்: சோமசுந்தரம்  


சக மனிதர்களிடையே பரிமாறப்படவேண்டிய மனித நேயத்தையும் அதன்பொருட்டு கிடைத்திடும் அத்தனை ரசங்களையும் கவிதைகளாக படைப்பவர் கவிஞர் அய்யப்பமாதவன். எதையும் சார்ந்திராத பற்றற்ற மனநிலையையே உணர்த்தும் இவரின் கவிதைகள் அனுபவ வெளியிலிருந்து உருமாற்றம் கண்டவை. சிலர் அழகியலோடு தத்துவார்த்தமாக, கவிதை நயத்தோடு எழுதுவார்கள். ஆனால் நேரில் ஒரு இறுக்கமான நிலைகாட்டி முரணுணர வைப்பார்கள். எத்தனையோ எதிர்மறை அனுபவங்களைக் கண்டபின்னும் பழகிய அடுத்த நொடியே நெருக்கமுணர்த்தி நெகிழ்வுண்டாக்குகிறார். உலகம் அன்புமயமாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்று மனதார விழையும் மனிதர். மனிதர்க்கு விளைந்திடும் அத்தனை உணர்வுகளுக்குள்ளும் காற்றைப் போல் நிறைந்து கவிதைகளாக வெளிப்படுகிறது அய்யப்பமாதவனின் நல்மனது. தீரா ஆவலுடன் கவிதைகளாகவும், கதைகளாகவும் திரைத்துறை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். "கவிதை எழுதும்போது சாமானியனின் வாழ்வை விட்டு நீங்கிவிடுகிறேன்" என்று சொல்லும் கவிஞர் அய்யப்பமாதவனிடம் ஒரு நேர்காணல் :

நீங்கள் இலக்கியத்துக்குள் பிரவேசித்தது எப்படி?

சிவகங்கைச் சீமையிலிருக்கும் நாட்டரசன்கோட்டைதான் நான் பிறந்த ஊர். பிரபலமாக இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன் பால்ய காலத்திலிருந்தே நண்பர். அவரைப் பார்க்க அடிக்கடி சிவகங்கைக்குச் செல்வேன். கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்துக்கு செழியன் அழைத்துச் செல்வார். அங்குதான் தமிழிலக்கியத்தின் ஆளுமைகளை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மீராவின் மகன் கதிர் நூல்களைப் படிக்ககொடுத்தார் காசில்லாமல் இறுக்கமாயிருந்த நட்பின் அடிப்படையில். நாங்கள் மூவரும் இலக்கியம் பற்றி விவாதிக்க, விவாதிக்க எனக்குள் சிந்தனையும், பேரார்வமும் என்னை செதுக்கிக் கொண்டிருந்தன. அப்போது ஜப்பானிய மொழியிலிருந்து பேராசிரியர் வீ.உண்ணாமலை அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. எளிமையான வடிவமும் வலிமையான பொருளும் ஒருங்கேயமைந்த ஹைக்கூ என்னை ஈர்த்தது. அத்தகைய கவிதைகளை வாசிக்க, வாசிக்க நாமும் எழுத வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. மூன்று வரிகளில் எழுதினால் போதுமென்ற ஹைக்கூவின் இலக்கணம் எனக்கு வசதியாகயிருந்தது. ஆனால் ஹைக்கூவின் மற்ற இலக்கணங்களைத் தூக்கியெறிந்துவிட்டேன். வெறும் மூன்றுவரிக் கவிதைகள்தான் அவை. ஹைக்கூவே அல்லயென்பதையும் பொய்க்கூ என்பதையும் புரிந்துகொண்டேன். இங்கு எழுதப்படுபவை ஹைக்கூ என்ற போர்வையில் எழுதப்படும் கவிதைகளேயன்றி ஹைக்கூ கவிதைகளல்ல என்பது உலகமறிந்த விசயம்.

கண்களுக்கு தூண்டிலிட்டேன்
மாட்டிக்கொண்டது
இதயம்.

இதுதான் நான் எழுதிய முதல் கவிதை. பல நண்பர்களிடம் வாசித்துக் காட்டினேன். ஆனால் செழியன் மட்டும்தான் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அவரின் அந்த வழிகாட்டுதல்தான் அப்போதைய ஆகப்பெரிய உந்துசக்தி. இப்பொழுது இதுமாதிரி கவிதைகளை எழுதமாட்டேன். ஹைக்கூ கவிதைக்கென்று இலக்கணம் இருக்கிறது. முதல் வரியில் ஐந்து அசைகளும், இரண்டாவது வரியில் ஏழு அசைகளும் மூன்றாவது வரியில் ஐந்து அசைகளும் இருப்பதுதான் 'ஹைக்கூ' கவிதைக்கான இலக்கணம்.

கவிதை எழுத ஆரம்பித்த பிறகு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. அத்தருணங்களில் "இதயகீதா" எனும் புனைப்பெயரில் வார இதழ்களுக்கு கேள்வி பதில் அழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். கேள்வி தேர்வானால் பத்து ரூபாய் அனுப்புவார்கள். இதயகீதா என்று இதுவரைக்கும் யாருக்கும் பெயர் கிடையாது. இதயத்தின் கீதம்தான் கவிதை எனும் பொருளில் அப்பெயரை வைத்துக்கொண்டேன். அமரர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய "தாய்" வாரப் பத்திரிக்கையில் என் முதல் கவிதை பிரசுரமாகியது. முதன் முதலாக என் படைப்பை அச்சில் பார்த்த தருணத்தில் பொங்கி பிரவாகமெடுத்த பரவசத்தைச் சொல்லிலடக்க இயலாது. ஊரில் நண்பர்கள் குழுவாக இயங்கி நாடகங்கள் போடுவோம். கதைகளுக்கான விடயங்களைச் செழியன் பார்த்துக்கொள்வார். ஆனால் எங்களின் முதல் நாடகத்துக்கு இயக்குனர் பேரரசுதான் கதை எழுதினார். அவரும் அவர் தம்பி முத்துவடுகுவும் எங்கள் நண்பர் குழுவிலிருந்தனர். சொன்னால் நம்புங்கள், பேரரசும், முத்துவடுகுவும் ஆரம்பத்தில் கவிதை தளத்தில் இயங்கியவர்கள். என் முதல் கவிதைத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. அதற்காக கைக்கடிகாரத்தையும், மோதிரத்தையும் அடகு வைத்தேன். இதுவரை என்னுடைய நான்கு புத்தகங்களை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது . ஒரு சமயம் ஜூனியர் விகடன் நடத்திய ஹைக்கூ போட்டியில் என் கவிதையும், நண்பன் ஆதவன் கவிதையும் தேர்வாகியிருந்தது. ஒரு கிராமத்தில் இரண்டு பேரின் கவிதைகள் தேர்வாகியிருந்தது எங்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய விடயமாகிப்போனது. அந்த போட்டிக்கு நான் எழுதிய கவிதையை எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் மாற்றியிருந்தார்.

எது நிரந்தரம்?
மழையில் கரையும்
சமாதி..

என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். ஹைக்கூ கவிதையில் வினா விடையாக வரக்கூடாது.
எனவே சுஜாதா இப்படி மாற்றம் செய்திருந்தார்.

மண்ணால் அமைத்த சமாதி
மழையில்
கரைகிறது


வெகுவாக கவிதைகள் புனைய ஆரம்பித்த பிறகு திரைத்துறை மீது என் கவனம் குவிந்தது. நானும் செழியனும் சென்னை வந்து மிகவும் கஷ்டப்பட்டோம். பேரரசுவிடம் திரைப்படம் சார்ந்து அலைவரிசை ஒத்துப்போகவில்லை. செழியன் இன்று வரை நெருங்கிய நட்புடனிருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு பிறகு கவிதை ஆர்வம் "ஹைக்கூ"விலிருந்து புதுக்கவிதைக்கு மாறியது.

இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்து உங்கள் இலக்கு என்ன?

முழுமையான கவிதையை நான் எழுதிவிட்டேனா? அல்லது எழுதிவிடுவேனா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞனாக வாழ்வதில் பெருமையும், சந்தோஷமும், கர்வமும் அடைகிறேன். சக மனிதர்களிடமிருந்து நான் எப்போதுமே வேறுபடுகிறேன். வேலை, சாப்பாடு, தூக்கமென்று சதவிகித அடிப்படையில் சராசரியாக என்னால் இயங்கமுடியாது. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

உங்களை சந்தித்ததும், உரையாடிக் கொண்டிருப்பதும் கூட ஆச்சர்யம்தான். காற்றிலசையும் ஓர் இலை துளிர்த்து மரமாவதும், உதிர்ந்து உரமாவதும் வியப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் அள்ளித் தந்துகொண்டேயிருக்கிறது. இப்படியான ஒரு வியத்தல் நிலையிலிருந்தே என் கவிதைகள் முளைவிடுகின்றன. கண்டதை படிப்பவர் பண்டிதர் ஆவாரென்பார்கள். நான் கண்டதையும் படிப்பதில்லை, பண்டிதராகவும் விரும்பவில்லை. மிகக் குறைவாக தேர்ந்தெடுத்தே வாசிக்கிறேன். அதுவும் மிக நிதானமாக. என்னுடைய மிகப்பெரிய கனவே திரைப்படம் இயக்க வேண்டுமென்பதுதான். இன்றைய சூழலில் திரைப்படத்துறை வியாபாரமாகிவிட்டது. வலிமை மிக்க ஊடகம் கேளிக்கைக்கான ஊடகமாக மட்டுமே தோற்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னால் உலக கிளாசிக் வரிசை படத்தைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு அரிது. எனவே என்னுடைய முதல் படம் பெரிய பரீட்சார்த்த முயற்சிகள் இல்லாமல்தான் இருக்கும். பொருளாதர வெற்றி மிக முக்கியம் நண்பரே. ஆக்சன் கதை ஒன்று தயராக இருக்கிறது. அது நிச்சயம் கமர்சியலுக்கு வேறு வண்ணம் கொடுக்கும். திரைத்துறையில் இது குறுகிய கால இலக்கு. இலக்கியத்தில் ஒரே இலக்குதான். அங்கு சமரசத்துக்கு சிறிதும் இடமேயில்லை.

உங்களுக்கு பிடித்தமான கவிஞர்கள் யார்?

தமிழில் எனக்கு பிடித்தமான கவிஞர் ஆத்மநாம். அவரின் கவிதைகளில் வெளிப்படும் இருண்மையும், உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகவும், ஈர்க்கக் கூடியதாகவும், இயக்கக் கூடியதாகவும் இருக்கிறது. நகுலன், பிரமிள் போன்ற பெரிய ஆளுமைகளின் கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். ஆனால் அவை என் மனவெளியிலிருந்து எங்கோ தொலைவில் இருக்கின்றன. இப்பொழுது எழுதும் செல்மா ப்ரியதர்ஸன், யவனிகாஸ்ரீராம், கண்டராதித்தன், பாலை நிலவன், லட்சுமி மணிவண்ணன், சங்கர் ராமசுப்பிரமணியன். ஸ்ரீநேசன், ராணிதிலக், பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தென்றல், உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, போன்றோரின் கவிதைகள் மிக அருமையாக இருக்கின்றன. புதிதாக நிறைய கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், நரன், வெயில், மண்குதிரை, ஊர்சுலா, நிலா ரசிகன், விஸ்வநாதன் கணேசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையப் பேர் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கின்றனர்.

என்ன மாதிரியான கவிதைளை விரும்பி படிக்கிறீர்கள்?

எனக்கு எப்போதும் விருப்பமானவை "ஹைக்கூ" கவிதைகள்தான். அதன் எளிமையான வடிவமும், ஆழ்ந்த அர்த்தங்களும் என்னை வியக்கச் செய்கின்றன. அதை ஒரு துளி சமுத்திரம் அல்லது அணு எனலாம். நீண்ட இடைவெளிக்குபின் ஹைக்கூவின் சரியான இலக்கணங்களுடன் ஹைக்கூக்களை எழுதிப் பார்த்து குவளைக் கைப்பிடியில் குளிர்காலம் என்ற ஹைக்கூ கவிதை நூலை தமிழ்வனம் வெளியீடாக கொண்டுவந்தேன். ஹைக்கூ கவிதையினை ஒரு போதும் ஜப்பானியர்கள்போல நம்மால் எழுதிவிட முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன்.

பிரம்மராஜன் மொழிபெயத்த உலகக் கவிதைகளை அவ்வப்போது எடுத்து வாசித்து என்னை உற்சாகப்படுத்திக்கொள்வேன். அதில் குறிப்பிடும்படியான கவிஞர்கள் நிறைய இருக்கின்றனர். கவிஞர் ஆத்மநாமின் கவிதை நூலை பைபிள் போல வாசித்துக் கொண்டேயிருக்கப் பிடிக்கும். அதே போல் பிரெஞ்சுக் கவிஞர் லாக் பிரவரின் கவிதைகளையும் விரும்பி வாசிப்பேன். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைகளும், போர்ஹஸ்ஸின் கவிதைகளையும், ரைமண்ட் கார்வரின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பேன். முக்கிய விசயம் என்னவெனில் தமிழிலும் உலகக் கவிதைகளுக்கிணையான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்களேன் இந்த தளத்தை விடுத்து வைரமுத்து, பா.விஜய் போல் செயல்படக்கூடாது?

நான் கவிதையின் வடிவத்தை தேர்ந்தெடுப்பதில்லை. எழுத ஆரம்பித்ததும் என் கவிதையே அதற்கான வடிவத்தை அனிச்சையாக அமைத்துக் கொள்கிறது. எனக்கு அவர்களைப் போல கவிதை எழுதத் தோன்றவில்லை. எழுத விரும்பவுமில்லை. வானம்பாடிக் கவிஞர்களில் மீராவின் கவிதைகள் பிடித்தமானவை. சினிமாவில் பாட்டெழுதுபவர்களின் கவிதைகள் என்னைப் போன்றவர்களை அதிகம் ஈர்க்கவில்லை. அதில் உணர்ச்சியிருக்காது. உரைநடைகளை மடக்கி, மடக்கி எழுதிவிட்டு கவிதையென்றால் அது உரைநடைக்கும் அவமானம், கவிதைக்கும் அவமானம். என்னுடைய இயல்பிலிருந்துதான் கவிதைகளை எழுதுகிறேன். எளிமையாக்குகிறேனென்று வலிந்து எழுதி வீரியமிழக்கச் செய்வதில்லை.

புரிந்தால் மட்டுமே கவிதையாகிவிடாது. கவிதை புரியவில்லையென்றால், புரிந்துகொள்வதற்கான மனநிலையை வாசகர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும். என் கவிதைகள் கரடு முரடானவை அல்ல. மறுவாசிப்பிலேயே புரிந்துவிடும். எளிமைப்படுத்துங்கள் என்றால் மாட்டேன். என் எண்ணம் குவிமையமாகும் பொழுது உருவாகும் உணர்ச்சிகளுக்கு சொற்களால் உருவம் கொடுக்கிறேன். உதாரணத்திற்கு குரங்கை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பிச்சையெடுத்த ஒரு பெண்மணியைக் கண்டபோது அக்காட்சிக்குள்ளிருக்கும் வலியும், வேதனையும் மனிதாபிமானமும் என்னை ஒரு கவிதையை எழுதத் தூண்டியது. இப்படி உலகினிடையே நடக்கும் அபூர்வக்காட்சிகளிடையே நான் வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிகிறேன். அதையேதான் என்னால் கவிதையாகவும் வடிக்கமுடிகிறது.

உங்களுக்காக அந்தக் கவிதை:

வால் குழந்தை

குழந்தையைக் கக்கத்தில் வைத்திருந்தாள்
விழிகளையுருட்டி பராக்குப் பார்த்தது
மெலிந்த உடலில் குச்சிவிரல்களில்
முந்தனையைப் பிடித்துக்கொண்டு
சேட்டைகளில்லாது ஊமையாய்
அவளின் காதலில் கட்டுண்டிருந்தது
அவளோ ஐயா சாமியென
தேநீர்க் கடையை நோக்கி
கைகளை விரித்தாள்
கைகளோடு குழந்தையின்
பசியையும் மறைத்திருந்தாள்
முதலாளியாக இல்லாத பணியாள்
பணியின் கவனத்திலிருந்தான்
பசிக்கு பணிபுரியுமவன்
கருணை காட்ட முதலாளி கல்லாவில்
கை வைக்க முடியாத
கூலியாய் விதிக்கப்பட்டிருந்தான்
கடையின் அருகில்
குழந்தையை இறக்கிவிட
சுருட்டிய வாலை குழந்தை
நிமிர்த்த சிறுவர்கள்
குரங்கெனக் கூவி குதூகலித்தனர்
குரங்கோ அவளுக்கு குழந்தை.

சங்க இலக்கியங்களில் பரிச்சயமுண்டா?

ஆரம்பத்தில் நிறைய படித்தேன். கவிதை எழுதுபவர்களெல்லாம் சங்க இலக்கியம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்க்கவிதை மரணித்து முப்பது வருடமாயிற்று என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொன்னார். இப்படிச் சொல்வதற்கு அவர் நவீன கவிதைகளைப் படிப்பதில்லை என்றுதான் அர்த்தம். கவிஞராக இருப்பதற்கு கவிதை மனமும், ரசனையும், பயிற்சியும், அனுபவமும் இருந்தால் போதும். எனக்கான சொற்களை நான் தேடிச் செல்வதில்லை. எனக்குள்ளிருக்கும் மொழியிலிருந்து அது தானே வெளிப்படுகிறது.

மரபுக்கவிதைகள் எழுதியிருக்கிறீர்களா? இப்போது அதிகம் எழுதப்படுவது இல்லையே? அது அழிந்துவிடுமா?

கவிதைக்கு எத்தனை வடிவங்களுண்டோ அத்தனையிலும் எழுதியிருக்கிறேன். இப்போது மரபுக்கவிதை எழுதுவதில்லை. தமிழ் மெல்லச் சாகும் என்கிறார்கள். அதில் துளியும் நம்பிக்கையில்லை. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடிவம் கடினமென்பதாலேயே பலரும் மரபுக்கவிதை எழுதுவதில்லை. ஒரு மொழி உலகெங்கிலுமுள்ள இலக்கிய வடிவங்களை கிரகித்துக்கொள்ளும். சிறுகதை, நாவல், ஹைக்கூ நம்முடைய வடிவமில்லையே. வெண்பாவிலிருந்து விருத்தம், சந்தக்கவிதை எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவற்றை எழுதுவதில்லையே என்ற ஏக்கங்களிருந்தாலும் இப்போது எழுதப்படுகிற நவீன கவிதை வடிவம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. மரபுக்கவிதை எழுதப்படவில்லையென சொல்லவே முடியாது. பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நிறைய மரபுக்கவிஞர்கள் இன்றும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவேன். எந்தக் கவிதை வடிவங்களும் அழிந்துவிடுவதற்கில்லை. மொழியின் ஆரம்பமே மரபென்பதால் மரபுக்கவிதைகள் அழிந்துவிடாது. நவீன கவிதைகள் அவற்றின் ஒரு கிளைதான்.

கவிதையென்பது உணர்ச்சிபூர்வமானது, சிறுகதை, நாவல் என்பது அறிவுப்பூர்வமானது என்று ஒரு எழுத்தாளர் சொல்கிறாரே?

அப்படிச் சொல்ல இயலாது. நானும் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவை பெரும்பாலும் என் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டவை. எல்லாமே உணர்விலிருந்து வருவதுதான். யார் அப்படி சொன்னதென்று தெரியவில்லை. நீங்களும் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் அவர் தரம் குறைந்த தரவிறக்க எழுத்தாளராகத்தான் இருப்பார்.

உங்களின் சிறுகதைகள் பற்றி சொல்லுங்கள்...

" தானாய் நிரம்பும் கிணற்றடி" என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. அதிலுள்ள கதைகள் அனைத்தையும் தனிமையில் எழுதினேன். எனக்கு கதைகளில் பேண்டஸி சேர்ப்பது பிடிக்கும். வீட்டில் ஒரு மூஞ்சுறு நுழைந்து என்னையையும் என் மனைவியையும் பாடாய்படுத்தி வைத்ததை ஒரு கதையாக எழுதினேன். நடந்தவற்றை அப்படியே எழுதினேன். அக்கதையை நிறைய பேரால் ரசிக்க முடிந்தது. மூஞ்சுறு என்ற சிறு உயிரினம் என் பயந்தாங்கொள்ளி மனைவியைப் பயமுறுத்தி, அவளை ஆத்திரமூட்டி, அவள் என் மீது கோபத்தைக் காட்ட வைத்து, நான் மூஞ்சுறுவைப் பிடிக்க பிரயத்தனப்பட்ட கஷ்டத்தைத்தான் கதையாக எழுதினேன். இப்படித்தான் என் கதைகள் சுய அனுபவங்களிலிருந்தும் கேட்டு உணர்கிற அனுபவங்களிலிருந்தும் உருவாகின்றன.

உங்கள் கதைகளில் கதாசிரியனை விட கவிஞன் தான் அதிகமாக வெளிப்படுகிறாரே?

சரிதான். கவிஞன் கதை எழுதுவதென்பது சிக்கல்தான். எனக்குள்ளிருக்கும் கவிஞன் எங்கேயும் எப்போதும் அனிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறான். சிறுகதை வடிவத்தில் இது ஆரம்ப நிலைதானே. வண்ணதாசன் கதைகளில் ஒரு கவிதைத் தன்மையிருக்கும். கவிஞனுக்குண்டான மனநிலையிலிருந்துதான் கதைகளை எழுதுவாரோ எனத் தோன்றும். அடுத்தடுத்த கதைகளில் அதைத் தவிர்க்க நினைக்கிறேன். தவிர்த்துக்கொண்டும் வருகிறேன். மொத்தமே பதினைந்து கதைகள் வரை எழுதியிருப்பேன். இன்னும் நிறைய எழுதவேண்டும். அப்போதுதான் கதையிலிருந்து கவிஞன் வெளியேறுவானென்று நினைக்கிறேன்.

ஏன் இருண்ட பக்கங்களையே எழுதுகிறீர்கள்? அது வாசகனை எந்தளவு சென்றடைகிறது?

பெரும்பாலும் சுயத்திலிருந்துதான் எழுதுகிறேன். என் வாழ்வியல் தன்மை அத்தகையதுதான். சிறுவயதிலிருந்து வறுமையும், கஷ்டமும் என்னுடனேயே வளர்ந்து வந்தன. இப்பொழுது கூட இருண்ட பக்கதிலிருந்து மீண்டிருக்கிறேனென்று சொல்லமுடியாது. சில கவிதைகளை மறுவாசிப்பின் போது நானே அழுதிருக்கிறேன். நிறைய பேர் என் கவிதைகளை படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள்.

ஒரு ரூபாய் சில ஊறுகாய்ப் பைகள்
மூத்திரம் கழிக்கையில் அவனுக்கு
கடைசிச் சொட்டு ரத்தமாக விழுந்தது
சளிப்பிடித்த கன்னங்கள் வீங்கியிருந்த
சிறுவனுக்குத் தேர்வு நேரமிது
தபால்நிலையத்தின் வழியாய்
கருணையுடன் வந்த சிறுபணம்
மருத்துவத்திற்கென்று காலியாகிவிட்டது

இரண்டு நாள் முன்புபோல் மறுபடி பட்டினி
மளிகைக்கடைக்காரனிடம்
கால்வலிக்க நின்று போராடி
கடனில் பெற்ற அரிசியில்
வேகும் சாதம் மற்றும்
ஒரு ரூபாய் ஊறுகாய்ப் பைகள்
சில வெங்காயங்கள்
சில பச்சைமிளகாய்கள்

வட்டிக்காரனின்
மிக மோசமான சொற்களில்
உடைந்திருந்த வீட்டினுள்
அவளின் விவரிக்க முடியாத
கண்ணீர் வாக்கியங்கள்

விற்பதற்கு முடியாத
சொந்தமற்ற செங்கற்சுவர்கள்
உறிஞ்சும் வேதனையால்
தூக்கமற்ற இரவுகளில் புலம்பும்
உதடுகளில் விழிக்காது
உறங்கும் கருணையற்ற காலம்,


உங்கள் கதைகளில் அழகியலைத் தவிர உள்ளடக்கமென்று ஏதுமில்லையே?

எதை வைத்து சொல்கிறீர்களென்று விளங்கவில்லை. சிறுகதை என்பது கடினமான வடிவம். திரைத்துறை சார்ந்தும் இயங்குவதால் கதை எழுதிப் பார்ப்போமே என்றெண்ணத்தில் எழுதினேன். இது முழுமையல்ல, முயற்சி அவ்வளவே! கவிதை வெளியில் நான் வெகுதூரம் பயணப்பட்டு வந்திருக்கிறேன். ஆரம்பகாலக் கவிதைகளையும், தற்போதைய கவிதைகளையும் உற்று நோக்கும் பட்சத்தில் அந்த பரிணாம வளர்ச்சி உங்களுக்கு புலப்படக்கூடும். அடுத்தடுத்த படைப்புகளில் கதைகள் மேம்பட்டுவிடுமென நான் நம்புகிறேன். அழகியல் மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நிறையப் பேருக்கு அழகியலோடு அமைந்ததாலேயே என் கதைகளை பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு படைப்பு எல்லோரையும் திருப்தி படுத்தவேண்டிய அவசியமில்லை. எல்லோரும் என்னை கொண்டாட வேண்டுமென்றும் நினைக்கவில்லை. ஒரு பூவை பூஜையறையிலோ, பிணவறையிலோ அல்லது எங்கோ வைத்துப் பாருங்கள். வெறுமனே நசுக்கிவிட்டுப் போனால் தீர்மானிக்கப்படுவது உங்களின் குணம்தான், பூக்களின் குணமல்ல.

உங்கள் படைப்புகளில் உங்களை ஒரு படிமமாக வைத்திருக்கிறீர்களே?

உண்மைதான். எல்லோருக்கும் எல்லாவிதமான அனுபவங்களும் கிடைத்துவிடாது. ஒரு படைப்பாளியின் மூலமே பெரும்பாலான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதுப்போலவே என் சார்ந்த அனுபவங்களையும், பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையும், படைப்புகளாக்குகிறேன். என் அனுபவமென்பது நான் மட்டுமேயில்லையே! ஆனால் படைப்பாக்கம் என்பது நான் மட்டும்தான். என் அனுபவத்தில் பங்குகொண்ட ஒருவர் என் படைப்புகளை படிக்கும்போது தன் நினைவுகளை மீள்கொணர்வு செய்வார். வேறு ஒருவர் வேறனுபவம் பெறுவார். அதுதான் படைப்பின் வெற்றியே. அதைத்தான் நான் செய்கிறேன். என்னைச் சார்ந்து மட்டுமே எழுதுகிறேன் என்ற விமர்சனத்தை நான் விரும்பவில்லை. இப்பொழுது சமூக, அரசியல் சார்ந்த பகடியான கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் படைப்பு இந்த சமூகத்திற்கு என்ன செய்யுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

அப்படியான எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எனக்குள்ளிருக்கும் ஏதோவொரு உள்ளுணர்வு எழுதத் தூண்டுகிறது. ஏன் கவிதை எழுதுகிறீர்கள் என்றால், நீங்களேன் வாசிக்கிறீர்களென வினவுவேன். இரண்டுக்குமே பதிலளிக்க முடியாது. ஏனெனில் படைப்பது, வாசிப்பதென இரண்டு நிலைகளுமே போதை. ஒரு படைப்பு சமூகத்திற்கு என்ன செய்யவேண்டும்? அது இரண்டு நிலைகளிலுள்ளவர்களின் நிலைப்பாடுகளைப் பொருத்த விடயம். நானெழுதிய ஒரு கவிதையைப் படித்த நண்பர் அவரின் மனநிலையை இன்றிலிருந்து மாற்றிக்கொள்வதாகச் சொன்னார்.

அக்கவிதை ஒரு வயதான பிச்சைக்காரப் பெண்ணைப் பற்றியது. அவள் வாழ்வியல் துயரங்களைப் பற்றி நேரில் கண்ட அவளின் அனுபவத்திலிருந்து எழுதியிருந்தேன். அக்கவிதை "தீராநதி"மாதயிதழில் பிரசுரமாகியிருந்தது. அக்கவிதைப் படித்ததிலிருந்து அவர் இல்லையென்று வருபவர்களுக்கு அவரால் முடிந்ததைச் செய்யப்போவதாக முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார். ஒரு கவிதை ஓர் இதயத்தில் கருணையைச் சுரக்க வைத்தலே போதுமானதுதான். ஆனால் இக்கவிதை இதைச் செய்யவேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படுவதில்லை. மனம் உந்தும் அனுபவங்களைக் கவிதையாக்கும் முயற்சியில் இது நிகழ்கிறதென்று சொல்வேன்.

சமகாலக் கவிஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்...

இன்று புதிதாய் எழுதுபவர்கள் புதிதாய் கவிதையின் வடிவினையும் பொருளினையும் பாட முனைகிறார்கள். அவர்களிடம் ஓர் உத்வேகமிருக்கிறது. நான் மிக விரும்பிப் படிக்கிறேன். இப்போது கவிதையில் இயங்கும் ஓர் இளைஞர் கூட்டம் என்னை வெகுவாக கவர்கிறது. நான் அவர்களை உற்சாகப்படுத்த தவறுவதேயில்லை. புதிது புதிதாய் சிறு பத்திரிக்கைகளை அந்த இளைஞர்களே ஆரம்பித்து கவிதைகளைக் கண்டுபிடித்து பிரசுரிக்கிறார்கள். அவர்களுக்கு கவிதைகளில் உன்மத்தம் பிடித்திருக்கிறதென்று சொல்ல விழைகிறேன். இசை, இளங்கோ கிருஷ்ணன், வெயில், நரன், சிவராஜ், மண்குதிரை, நிலா ரசிகன், வேல் கண்ணன், கணேச குமாரன், ஈஸ்வர சந்தான மூர்த்தி ஆகியோரது கவிதைகள் என்னைக் கவர்ந்து செல்கின்றன. அவர்களால் கவிதையின் வெளி மேலும் விரிவடையுமென்பதில் சந்தேகங்களில்லை.

ஒரு பக்க விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் பத்திரிக்கைகள் ஏன் படைபாளிகளுக்கு சொற்ப ஊழியம் தருகின்றன?

அது என்ன தலையெழுத்தோ தெரியவில்லை. படைப்பாளிகளின் படைப்புகளை பெற்றுக்கொண்டு அவர்கள் பத்திரிக்கைகளை விற்று காசாக்கிக் கொள்கிறார்களே ஒழிய படைப்பாளிகளுக்கு பெரிதாய் ஒன்றும் வழங்கிவிடுவதில்லை. குறைந்த பட்சம் ஒரு கவிதைக்கு 250/= கொடுப்பார்கள். அதுவும் வருவதற்கு பல மாதங்கள் பிடிக்கும். கொஞ்சம் பிரபலமான எழுத்தாளரென்றால் ஒருவேளை கொஞ்சம் அதிகம் கொடுப்பார்களோ என்னவோ தெரியாது. தமிழில் எழுதிப் பிழைப்பதென்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல்தான். எழுத்தாளரென்றால் இங்கு ஒரு சில பேர் மட்டுமே. கவிஞர் என்றால் ஒரு சிலபேர் மட்டுமே. இலக்கியம் வளராத தமிழகத்தில் எழுத்தாளர்களாய் இருந்து ஒரு பிரயோசனமுமில்லை. ஒன்று நீங்கள் சினிமாவுக்கு போன வைரமுத்துவாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனாக இருக்கவேண்டும். அப்போது நீங்கள் பிழைத்துக்கொள்ளலாம். இல்லையேல் உங்களால் ஒன்றையும் பிடுங்கி நட்டு மரமாக்கி பழங்களைச் சுவைக்க முடியாது. எழுதித் தொலைத்துவிட்டு எழுதும் பைத்தியத்தை விட்டொழிக்க முடியாமல் இவர்களிடையே போராட வேண்டிய அவலம்தான் மிச்சம். எழுத்தாளர் அமைப்பு ஒன்று இங்கு வலுவலாக இல்லை. எழுத்தாளர்களிடையே நிலவும் குழு மனப்பான்மையும் எழுத்தாளர்களை குழி தோண்டி புதைக்கும் காரியத்தைச் செய்து கொண்டுதானிருக்கிறது. பத்திரிக்கை நடத்துபவர்கள் ஏன் எழுத்தாளர்களின் ஊதியத்தைக் கூட்டித் தர தயங்குகிறார்களென்று தெரியவில்லை. எழுத்தாளனே எழுத்தாளனை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கேவலம் இந்த ஊரில்தான் நடந்தேறுகிறது.

சமச்சீர் கல்வியை அமல்படுத்த இவ்வளவு அவகாசம் தேவைதானா?

அம்மாவின் பிடிவாதம்தான் இவ்வளவுக்கும் காரணம். பழைய தலைமையைப் பழிவாங்கும் உணர்ச்சியில்தான் இவ்வளவு கூத்துக்களும் அரங்கேறின. நீதிமன்றங்கள் சொன்னால்தான் கேட்போம் என்ற போக்கை இந்த அரசியல்வாதிகள் மாற்றிக்கொள்ளாதவரை கல்வியென்ன எதுவும் உருப்படப்போவதில்லை. எல்லாமே இங்கு தாமதமாகத்தான் நடக்கின்றன. அரசியல்வாதிகளுக்குள் நிலவும் சமரில் யார் ஜெயிப்பது யார் தோற்பது என்ற போட்டியில் மக்களைப்பற்றியும், கல்வி பற்றியும் சிந்திப்பதற்கு அவர்களுக்கு ஏது நேரம். ஓட்டுப்போட்டு முடித்தபின்பு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. பேருக்கு அவ்வப்போது வெற்று அறிக்கைகள் விடுவார்கள். மக்களை நம்ப வைப்பதற்கான எல்லா வாக்குறுதிகளையும் மிகத் தைரியமாக வெளியிடுவார்கள். சமச்சீர் கல்வி எப்போதோ இங்கு வந்திருக்க வேண்டியது. இவ்வளவு தாமத்தால் கல்வி சீர்கேட்டைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வருங்கால இளைஞர்களுக்கு இது போதாத காலம்.

மது அருந்தும் நேரத்தில்தான் கவிதைகள் நன்றாக அமைவதாக கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி சொல்கிறாரே?

அவருக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாம். எந்த நிலையிலும் எழுதுபவனே கவிஞன். குடித்தால் மட்டுமே கவிதை வருகிறதென்று சொல்வதெல்லாம் அபத்தம். நான் இருநிலைகளிலும் கவிதைகள் எழுதுபவன்தான். நம்பி தமிழிலேயே தம் கவிஞர் பட்டியலில் இருவரைத்தான் வைத்திருப்பார். அந்தப் பாகுபாடு ஏன் எனத் தெரியவில்லை. தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களை அவர் படிப்பதில்லையென நினைக்கிறேன். பிடித்தவர்களின் கவிதைகளை மட்டுமே சிலாகித்துக்கொண்டிருப்பார். முதலில் இந்த பட்டியலிடுகிற மனோபாவம் ஒழியவேண்டும். நல்ல கவிதைகளை யார் எழுதினாலென்ன. மிகச் சுலபமாக நல்ல கவிதைகளை எழுதுபவர்களை எப்படி இவர்களால் பராபட்சத்தோடு ஒதுக்க முடிகிறதெனத் தெரியவில்லை. இந்த மாதிரிப் பட்டியல்களில் விமர்சனங்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. உணர்வுகளைத் தூண்டுகிற கவிதைகளை எழுதுகிறவனை மதிக்கிறேன். பாகுபாடு பார்த்தலில் எனக்கு உடன்பாடு கிடையாது. நல்ல கவிதைகளைக் கண்டு நான் பொறாமை கொண்டதில்லை.

பாரதியின் பாடல்களை திரைப்படத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை பாரதியார் உயிருடன் இருந்து திரைப்பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

பாரதியார் உண்மையில் உயிருடன் இருந்திருந்தால் முதலில் பாடலெழுதச் சம்மதித்திருக்கமாட்டார். சம்மதித்திருந்தாலும் அதிரடி மெட்டுக்களில் தலை தெறித்து வீட்டை வேறு ஊருக்கு மாற்றிச் சென்றிருப்பார். பாரதியின் பாடல்கள் இன்றும் நாம் இசைப்பாடல்களாக கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம். பாரதி பாடல் எழுதியிருந்தால் நிறைய இசைமைப்பாளர்கள் அவமானப்பட வேண்டியிருந்திருக்கும்.

உங்கள் படைப்புகளில் உங்களை ஒரு படிமமாக வைத்திருக்கிறீர்களே?

உண்மைதான். எல்லோருக்கும் எல்லாவிதமான அனுபவங்களும் கிடைத்துவிடாது. ஒரு படைப்பாளியின் மூலமே பெரும்பாலான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதுபோலவே என் சார்ந்த அனுபவங்களையும், பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையும், படைப்புகளாக்குகிறேன். என் அனுபவமென்பது நான் மட்டுமேயில்லையே! ஆனால் படைப்பாக்கம் என்பது நான் மட்டும்தான். என் அனுபவத்தில் பங்குகொண்ட ஒருவர் என் படைப்புகளை படிக்கும்போது தன் நினைவுகளை மீள்கொணர்வு செய்வார். வேறு ஒருவர் வேறனுபவம் பெறுவார். அதுதான் படைப்பின் வெற்றியே. அதைத்தான் நான் செய்கிறேன். என்னைச் சார்ந்து மட்டுமே எழுதுகிறேன் என்ற விமர்சனத்தை நான் விரும்பவில்லை. இப்பொழுது சமூக, அரசியல் சார்ந்த பகடியான கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் படைப்பு இந்த சமூகத்திற்கு என்ன செய்யுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

அப்படியான எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எனக்குள்ளிருக்கும் ஏதோவொரு உள்ளுணர்வு எழுதத் தூண்டுகிறது. ஏன் கவிதை எழுதுகிறீர்கள் என்றால், நீங்களேன் வாசிக்கிறீர்களென வினவுவேன். இரண்டுக்குமே பதிலளிக்க முடியாது. ஏனெனில் படைப்பது, வாசிப்பதென இரண்டு நிலைகளுமே போதை. ஒரு படைப்பு சமூகத்திற்கு என்ன செய்யவேண்டும்? அது இரண்டு நிலைகளிலுள்ளவர்களின் நிலைப்பாடுகளைப் பொருத்த விடயம். நானெழுதிய ஒரு கவிதையைப் படித்த நண்பர் அவரின் மனநிலையை இன்றிலிருந்து மாற்றிக்கொள்வதாகச் சொன்னார். அக்கவிதை ஒரு வயதான பிச்சைக்காரப் பெண்ணைப் பற்றியது. அவள் வாழ்வியல் துயரங்களைப் பற்றி நேரில் கண்ட அவளின் அனுபவத்திலிருந்து எழுதியிருந்தேன். அக்கவிதை தீராநதியில் மாதயிதழில் பிரசுரமாகியிருந்தது. அக்கவிதைப் படித்ததிலிருந்து அவர் இல்லையென்று வருபவர்களுக்கு அவரால் முடிந்ததைச் செய்யப்போவதாக முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார். ஒரு கவிதை ஓர் இதயத்தில் கருணையைச் சுரக்க வைத்தலே போதுமானதுதான். ஆனால் இக்கவிதை இதைச் செய்யவேண்டும் என்று நோக்கில் எழுதப்படுவதில்லை. மனம் உந்தும் அனுபவங்களைக் கவிதையாக்கும் முயற்சியில் இது நிகழ்கிறதென்று சொல்வேன்.

நீங்கள் நகரங்களைத் தாண்டி அறியப்படவில்லையே ஏன்?

நான் கிராமத்தித்திலிருந்து கவிதைகள் எழுத வந்தவன். நான் முதலில் ஹைக்கூ கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். காலப்போக்கில் ஹைகூ எழுதுவது அவ்வளவு எளிதல்ல என்று தெளிந்து புதுக்கவிதைகள் எழுத்தொடங்கினேன். அதிலும் வடிவத்திலும் பொருளிலும் பரிசோதனைகள் செய்து செய்தே என் கவிதைகள் புரிவதற்கு மெனக்கெட வேண்டியிருப்பதாகப் படிப்பவர்கள் சொல்கிறார்கள். ஒருவேளை என் கவிதை வடிவமும படிமங்களை கையாளும் விதமும் தான் என்னை நகரம் தாண்டி கொண்டுசெல்லவில்லையென நினைக்கிறேன்.

கவிதை ரசனையை வளர்த்துகொள்வது எப்படி?

நிறைய வாசிப்பு வேண்டும். அதேநேரத்தில் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும். இன்றைய சிற்றிதழ்களில் நிறைய வீரியமான கவிதைகள் வருகின்றன. அவை பரிட்சார்த்த முயற்சியாகவும் இருக்கின்றன. கவிதைகளின் எல்லா வடிவங்களையும் வாசிக்க வேண்டும். எதையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்கும் மனமும் அவசியம்.

இறுதியாக... ஒரு நல்ல படைப்புக்கான வரையறை என்ன?

நல்ல படைப்புக்கென்று வரையறை ஏதும் கிடையாது .எந்த உள்ளடக்கத்துடன் படைக்கப்பட்டதோ அது தொடர்பான உணர்வை வாசகனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

நேர்காணல்: ஆனந்த், செந்தூரன்
உதவி: கதிர்வேல்

படங்கள்: சோமசுந்தரம்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.