விளையாட்டுகள்
நாட்டுப்புறக் கலைகள் குறித்து இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் குறிப்பிடப் படாத கட்டுரைகள் பல்வேறு இணையதளங்கள், மின்னஞ்சல் குழுமங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருந்து தொகுக்கப்பட்டவை. அவர்கள் எல்லோருக்கும் எங்களின் நன்றிகள்.ஒரு நாட்டின் இயற்கை அமைப்பையும் சூழ்நிலையையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்து வேறுபட்டு அமையும் விளையாட்டு களிலிருந்து அந்நாட்டுச் சமூக வாழ்வு பற்றியும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழர்களுக்குரிய நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றி அறிவதன் மூலம் தமிழர் வாழ்வியலை அறியலாம். விளையாட்டுகள் பொழுது போக்காகவும், மரபு தொடர்ச்சியாகவும், நம்பிக்கை சார்ந்ததாகவும், உடல் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சிக்காவும், பிறர் கண்டு மகிழ்வதற்காகவும் ஆடப்படுகின்றன.
பழந்தமிழர் விளையாட்டுகள்
பல பழந்தமிழர் விளையாட்டுகள் இன்றளவும் விளையாடப் பெறுகின்றன. அவற்றில் இன்று விளையாடப் பெறாத சில விளையாட்டுகள் (புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டு,
பந்தாட்டம், ஊஞ்சல், மல்லாட்டம், கழைக்கூத்து, வல்லாட்டம்) இங்கே குறிப்பிடப்படுகின்றன.
ஆடவர் விளையாட்டுகள் :
ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன. ஜல்லிக்கட்டு, பாரிவேட்டை, சிலம்பம், புலிவேடம், சடுகுடு, இளவட்டக்கல், ஓட்டம், இரட்டை மாட்டுப் பந்தயம், மோடி விளையாட்டு, உரிமரம் ஏறுதல், பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு, சூதுதாயம், வாய்ப்புநிலை விளையாட்டுகள், அறிவுத் திறன் விளையாட்டுகள் ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
மகளிர் விளையாட்டுகள் :
மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன. தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், மஞ்சள் நீர் தெளித்தல் முதலியன மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள் :
எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
சிறுவர் விளையாட்டுகள் :
கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுமியர் விளையாட்டுகள் :
சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
குழந்தை விளையாட்டுகள் :
உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
இனி, இத்தனித்தனிப் பிரிவினரின் முக்கிய நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.
1. புனல் விளையாட்டு :
பண்டைத் தமிழகத்தில் ஆற்றருகே இருந்த மக்கள் எல்லோரும் ஆண்டுதோறும் ஆற்றில் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று பகற்பொழுது முழுதும் அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா புனல் விளையாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று.
கரையவர் மருவி திரையகம் பிதிர திடுமென நெடுநீர் குட்டத்தில் குதித்து நீந்தி மண்ணெடுத்து கல்லா இளைஞர் மகிழ்ந்தனர் (புறநானுறு 243/8-11). பெண்டிர் அருவிகளிலும் பாய்சுனைகளிலும் ஆடவர் கடும்புனலிலும் குடைந்து குடைந்து ஆடினர்; குறுநுரை சுமந்து பலமலர் உந்தி வருகின்ற புதுநீரில் நெஞ்சு மகிழ ஆடினர் என்று சங்கப்பாடல்கள் விளக்குகின்றன.
நீராடுவோரெல்லாம் புதுவெள்ளம் வரும் ஆற்றில் இடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கை களையும், தெப்பம் பரிசல் போன்றமிதவைக்கருவிகளையும், காதலர் மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளிப்பதற்கு துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியப் பிறகு தேவைப்படும் உணவு, உடை முதலியவற்றையும் அவரவருக்கு இயன்றவாறு யானை குதிரை தேர் ஆகியவற்றில் ஊர்ந்தும், கால்நடையாக நடந்தும் கொண்டு செல்வர். வழியெங்கும் தங்குவதற்கான குடில்களும் புதுக்கடைகளும் அமைந்து திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
நீந்த வல்லவர்கள் சற்று ஆழத்திலும், அல்லாதார் கரையருகிலும் நீராடுவதும், உடம்பில் பூசும் சுண்ணம் சாந்து குழம்பு முதலியன வற்றின் ஏற்றத்தாழ்வு பற்றிப் பெண்டிர் கிண்டல் பேசுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரோடு கூடிப் நீராடினாரென்று மனைவியர் ஊடல் கொள்வதும் புனல் விளையாட்டு நிகழ்ச்சிகளாகும்.
2. பொழில் விளையாட்டு :
நகரமாந்தரெல்லாம் இளவேனில் காலத்தில் ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு சோலைக்குச் சென்று தனித் தனியாகவும் கூட்டங்கூட்டமாகவும் ஒரு பகல் பொழுது முழுதும் விளையாடி சமைத்துண்டு மகிழ்ந்த விழா பொழில் விளையாட்டு எனப்பட்டது. இது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் கட்டுச் சோறுடன் பிக்னிக் செல்வது போன்றதாகும்.
சோலையை அடைந்த பின் சமையலில் ஈடுபடுவோர் தவிர ஏனையோரெல்லாம் வெவ்வேறு இடம் சென்று விடுவர். ஆடவருள் பெரியவர்கள் வேட்டையாடவும், சிறியவர்கள் மரமேறுதல் காய்கனி பறித்துண்ணல் விளையாடுதல் பொருட்டும் பிரிந்து விடுவர். பெண்டிர் சமையல் செய்ய, சிறார்கள் மலர் கொய்து மாலை தொடுக்கவும், பொம்மை செய்து மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும் ஆங்காங்கு அகன்று விடுவர். நண்பகல் அனைவரும் கூடி அமர்ந்து உணவு உண்ட பின், இளைப்பாறி விட்டு மாலையில் வீடு திரும்புவர்.
3. பந்தாட்டம் :
இதனை மகளிர் மட்டுமே ஆடினர். இவ்விளையாட்டு வீட்டிற்கு வெளியிலும் முற்றத்திலும் மாடத்திலும் மணல் மேட்டிலும் ஆடப்பட்டது. பந்து நுலினால் செய்யப்பட்டது. அதைச் சுற்றிப் பல வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. 'வரிபுனை பந்து' (நற்றிணை 305:1, குறிஞ்சிக் கலி 15/1-4) என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. இதனைச் செல்வக்குடி மகளிர் விளையாடினார்கள். சங்கப் பாடல்களில் வரும் ஆடுபந்து, எறிபந்து என்னும் தொடர்கள் விளையாடும் முறைகளைத் தெரிவிக்கின்றன.
வானைத் தொடுமளவிற்குப் பந்தை எறிந்து விளையாடியதாக குறிஞ்சிக் கலி (4:22-23, 21/6-7) குறிப்பிடுகிறது. காலால் பந்தைத் தள்ளி விளையாடியதாக நற்றினை (324:7-9) சொல்கிறது. எனவே சங்க காலத்தில் கைப்பந்து (Catch ball) எறிபந்து (Sky ball), கால்பந்து (Foot ball) ஆட்டங்களை மகளிர் ஆடினார்கள் என்பதை அறியலாம்.
4. ஊஞ்சல் :
பழங்காலத்தில் பருவப் பெண்கள் மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம். பனைமடலுக்குக் கருக்கு நீக்கிப் பலகை இணைப்புப் போல் பரப்பிப் பெருங்கயிற்றால் பிணைத்து ஊஞ்சலை அமைத்தார்கள் (நற்றிணை 90/6-10). கருங்கால் வேங்கை மரத்திலும் ஊஞ்சல் கட்டப்பட்டது. (நற்றினை 368/1-4). ஞாழல் மரத்தின் உயர்ந்த கிளையிலும் (அகநானுறு 20/5-8) கட்டப்பட்டது. சுறாமீன் கொம்பினால் பலகை செய்தும் அதனைக் கட்டி விளையாடினார்கள்.
5. மல்லாட்டம் :
இது இரண்டு ஆடவர்கள் விளையாடும் புற விளையாட்டு. சோழன் போர்வைக்கோ பெருநற்கிள்ளிக்கும் முக்காவனாட்டு ஆமூர் மல்லனுக்கும் நடைபெற்ற மல்லாட்டத்தைப் பற்றி புறநானுற்றுப் பாடல்கள் (80,81,82,83,84,85) சித்தரிக்கின்றன. மேலும் பட்டினப்பாலை, மறவர்கள் கையிலும் கலத்திலும் சண்டை செய்தனர் என்று குறிப்பிடுகிறது. ஆகவே சங்க காலத்தில் மல்லாட்டம் (wrestling), கைக்குத்துச் சண்டை (boxing) ஆகிய இரண்டும் இருந்திருக்கின்றன என தெரியவருகிறது. சிலப்பதிகாரம் பதினொருவகைக் கூத்துகளுள் ஒன்றாக மல்லாட்டத்தைக் குறிப்பிடுகின்றது. பின்னர் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6. கழைக்கூத்து :
இந்த ஆட்டம் ஆரியக் கூத்து என்றும் கயிற்று நடனம் என்றும் சுட்டப்படுகின்றது. விழா நாட்களில் ஆடல்மகளிர் உடற்பயிற்சி வித்தைகள் (நிஹ்னீஸீணீவீநீ)பலவற்றைச் செய்வார்கள். கழைக்கூத்து நடக்கும் போது வாத்தியங்கள் பல ஒலிக்கப்படுகின்றன. மகளிர் கயிற்றில் நடந்தும் ஆடியும் பொதுமக்களை மகிழ்விக்கின்றனர். இதனை ஆரியர் ஆடினர் என்று குறுந்தொகை (7/3-5) கூறுகிறது. இது விழாகாலத்தில் நடைபெற்றதென குறிஞ்சிப்பாட்டு (192-194) குறிப்பிடுகிறது. இது இன்று தெருக்கள் கூடுமிடத்திலும் சர்க்கஸிலும் ஆடப்படுவதைக் காணலாம்.
7. வல்லாட்டம் :
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி இலக்கணம் கூறுமிடத்து வல்லாட்டம் (373, 374) பற்றி குறிப்பிடுகிறார். இந்த ஆட்டத்தை முதியோர் ஆடினர் என்றும், ஊர்ப் பொது மன்றத்தில் இதற்கான வல்லப் பலகை இருந்தது என்றும், முதியோர் மிகுந்த சிந்தனையோடு ஆடினர் என்றும் புறநானுறும் (32), அகநானுறும் (377) தெரிவிக்கின்றன. வல்லுப்பலகை பற்றி மருத கலியும் (29/13-14) குறிப்பிடுகின்றது. வல்லாட்டம் போட்டி விளையாட்டாக ஆடப்பட்டது என்று பரிபாடலின் (29/13-14) வாயிலாக அறியலாம். திருவள்ளுவர் காலத்தில் வல்லாட்டம் சூது விளையாட்டாக இருந்திருக்கிறது.
இனி ஆடவர் விளையாட்டுகள் பற்றி பார்ப்போம்:
ஜல்லிக்கட்டு :
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18).
குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
|