அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் என பல பொருள் தாங்கி நிற்கும் வார்த்தை ஒயில். ஒயிலாட்டம் என்பது அழகான ஆட்டம். ஆண்மையின் கம்பீரத்தை உணர்த்தும் இந்த கலையாடலில் பெண்களுக்கு இடமில்லை. முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை இது. ஒரே நிற துணியை தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்தில் ஆன துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
|
இந்த ஆட்ட அடவுகள் ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. திருநெல்வேலி வட்டாரத்தில் உடையார்பட்டி, ஆலங்குளம், மதுரை வட்டாரத்தில் சேலையூர், சோழவந்தான் பகுதிகளிலும் ஒயிலாட்டக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். பத்து முதல் 12 பேர் கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர் திசையிலோ, அல்லது நேர்த்திசையிலோ நின்று கொண்டு ஆடுவார்கள். |
பானைத்தாளம், தவில், சிங்கி, சோலக் போன்ற இசைக்கருவிகளை இந்த ஆட்டத்தில் பயன்படுத்துவதுண்டு. பானைத்தாளம் என்பது, குடத்தில் மாட்டுத்தோலைக் கட்டி இசைக்கப்படும் வல்லிசைக் கருவியாகும். பறைக்கு பதிலாக இந்த கருவியை இசைக்கிறார்கள். இவைகளோடு கலைஞர்கள் காலில் அமிந்திருக்கும் சலங்கை இன்னுமொரு கருவியாக மாறி அடவுக்கேற்ப இசைக்கும். இந்த இசைக்கருவிகளை கட்டுப்படுத்தி வகைப்படுத்துவதே சிங்கி என்ற இசைக்கருவியின் வேலை.
பாடலும், ஆடலும் நிறைந்த இக்கலையில், பாடத்தெரிந்தவருக்கு ஆடத்தெரிந்திருக்கத் தேவையில்லை. பாடலுக்கு தகுந்தவாறு அடவு வைத்து ஆடற்கலைஞர்கள் ஆடுவார்கள். பெரும்பாலும் இராமாயணக்கதைகளே பாடல்களாக பாடப்படுகிறது. இது தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை, சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. ரெட்டியார் மற்றும் முக்குலத்தைச் சேர்ந்த சில இனத்தினர் இக்கலையை மரபு ரீதியாக நிகழ்த்தினர். இப்போது தலித்கள் உள்ளிட்ட பிற இனத்தினரும் இக்கலையாடலில் ஈடுபடுகின்றனர்.
மரபுசார்ந்து இயங்கிய பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களிலும் அண்மைக்காலமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளை பாடி ஆடுகின்றனர். ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் உண்டு. ஒழுங்காக தலை வாரியிருப்பார்கள். கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்திருப்பதும், தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளை கட்டியிருப்பதும் அவசியம். பெரும்பாலும் கையில் பிடித்திருக்கும் துணி சிவப்பு நிறத்தில் இருக்கும். தலைமையாளர் மட்டும் பச்சை நிறத்தில் பிடித்திருப்பார்.
வெள்ளை வேட்டியை தார் பாய்ச்சிக்கொள்வதும் மரபாகும். தொடக்கத்தில் கை கூப்பி, ஒரு காலை மட்டும் தட்டி கடவுள் வணக்கம் செய்து, அடுத்து தரையைத் தொட்டு அவை வணக்கம் செய்து விட்டு அடவுகளைத் தொடங்குவர்.
மெதுவாக தொடங்கும் அடவுகள் மெல்ல, மெல்ல உச்சம் பெறும். இடையிடையே களைப்பைப் போக்கிக் கொள்ள பாடல் பாடும் அண்ணாவி விசிலடித்து ஆட்டத்தை நிறுத்திக் கொள்வார்.
பெரும்பாலும் ஒயிலாட்டக்குழுவின் தலைவரோ அல்லது வாத்தியாரோ தான் அண்ணாவியாக செயல்படுவார்கள். கடைசிப்பாடலுக்கு முன்னர் வாத்தியார் பார்வையாளர்களுக்கு நன்றி சொல்வார். கடைசி அடவு முடிந்ததும் அனைத்துக் கலைஞர்களும் பூமியைத் தொட்டு வணங்கிவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். ஆதி காலத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இக்கலையாடலில் சிறந்த ஆண்களையே பெண்கள் மணம் முடிக்க விரும்பியதாக குறிப்புகள் உண்டு.
|
ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மாணிக்க ஆட்ட இலக்கணங்களும் உண்டு. ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் என்றும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்து அடி, சாரி, தட்டு என்றும் வகைப்படுத்தியுள்ளனர். தக்கு என்பது மெதுவான ஆட்டத்திற்கான இலக்கணம். வேகமாக அடவுகளுக்கு காலம் என்று பெயர். வேகமான அடவுகள் ஒன்றாம் |
காலத்தில் தொடங்கி மூன்றாம் காலத்தில் நிறைவுறும். வாத்தியார் பாடலைப்பாட, குழுவினர் அதே வரிகளைப் பாடி ஆடுவார்கள்.
"ஆளோடு ஆளு
உரசாமல்
உங்கள் ஆளிலே ஒரு முழம்
தள்ளி நின்று
காலோடு காலு உரசாமல்
உங்கள் கைபிடித்துணி
தவறாமல்
மேலோடு மேலு
உரசாமல்
உங்கள் வேரூவை தண்ணி
சிதறாமல்.." & என்று நீளும் பாடல் ஒயிலாட்டத்தின் இலக்கணங்களை வரையறுக்கிறது.
"சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்"என்றும் இக்கலையின் தன்மையை வருணிக்கிறார்கள்.
தொடக்கம் முதல் இறுதிவரை கலைஞர்களின் அடவுகள் கம்பீரம் குறையாமல் இருக்கும். ஆட்டத்தின் எந்த தருணத்திலும் கலைஞர்களின் கழுத்துக்கு கீழே, இடுப்புக்கு மேலே உள்ள உடல்பகுதிகள் வளையக்கூடாது. ஒயிலாட்டம் ஆடும்போது காலில் கட்டிய சலங்கை "கெம்பீரிக்க வேண்டும்" என்பது நியதி.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்பூத்தூர் மாவட்ட கோவில் விழாக்களில் இப்போதும் அவ்வப்போது ஒயிலாட்டம் நிகழ்ந்து வருகின்றது. மதுரை குருநாதப்பிள்ளை, வாசகம் பிள்ளை ஆகியோர் இக்கலையில் குறிப்பிடத்தக்க கலைஞர்கள்.
- ஒளியும் ஒலியும்
|