வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

பொம்மலாட்டம்

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

தமிழர்களின் மரபுவழிக்கலைகளில் மிகப் பழமையானது பொம்மலாட்டம். இது கலை தழுவிய கூத்து வகையை சேர்ந்தது. மரத்தில் செய்யப்பட்ட மொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்குவதே பொம்மலாட்டம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதை இந்த கலை தான். மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இத்தாலி, இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறது இக்கலை.

இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. மரபு வழியாக இக்கலையை நிகழ்த்துவோர் கும்பகோணம், தஞ்சாவூர், சேலம் பகுதியில் இப்போது கொஞ்சமாக வசிக்கிறார்கள். இக்கலையில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகிப்பதுண்டு. 9பேர் பங்கேற்பார்கள். 4 பேர் பொம்மைகளை இயக்குவார்கள். மற்ற நால்வர் இசைக்கலைஞர்கள். ஒருவர் உதவியாளர்.

ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்தலுக்கு பயன்படுத்தப்படும். தற்போது சிலர் எலக்ட்ரானிக்ஸ் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபு ரீதியாக இந்த கலை நிகழ்த்தப்படும்.

வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பர். அரங்கின் முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளிவிட்டு கருப்பு திரையன்று கட்டப்பட்டிருக்கும். இந்த திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கருப்பு திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

பொம்மலாட்டத்துக்கு பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என்று அழைக்கப்படும் மரத்தில் செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து, பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும்.

பொம்மையின் உறுப்புகள் மற்றும் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வண்ணம் தீட்டுவர். தொடக்கத்தில் எல்லா பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டது. இப்போது கற்பனைக்கும், பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபு ரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்ற உடைகளும், சமூக கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிப்பார்கள்.

பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாக தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு.

எந்த கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. சில குழுக்கள் பபூன்களை களமிறக்கி காமெடி செய்வதும் உண்டு.

பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளை பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்த குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளை பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து நிகழ்த்துபவர் தலையில் மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்கு பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்கு தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்யும் இந்த கலை மிகவும் எதார்த்தமானது.

இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப்படுகிறது. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலை பாணி. கும்பகோணம் குழுவினர் கர்நாடக இசையை ஒட்டி பாடல்களை பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாலும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலை பாணியை பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தை தவிர்த்து முகவீணையை பயன்படுத்துவார்கள். கயிறுகளில் பொம்மைகளை பிணைத்து பயன்படுத்துவார்கள்.

இப்போது, ஒரு சில இடங்களில் மட்டும் ஓரளவுக்கு ஜீவித்து நிற்கிறது இக்கலை. எயிட்ஸ், காசநோய், சிறுசேமிப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் என்ற அளவுக்கு இதன் தளம் சுருங்கிப் போய் விட்டது. எப்போதேனும் அதிசயமாக கோவில்களில் நிகழ்த்த அழைக்கிறார்கள். பொம்மலாட்டத்தை பரம்பரையாக கைகொண்டு ஜீவித்தவர்கள் இப்போது இந்த கலையை நம்பவில்லை. பல்வேறு தொழில்களை நாடிச் சென்று விட்டார்கள். தெருக்கூத்து நாடகங்களாக மருவி மேடைகளை ஆக்கிரமித்த தருணத்தில் இக்கலையின் சிதைவு தொடங்கியதாக சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். கோவிலை சார்ந்து மரப்பாவை கூத்து கொஞ்சமாக ஜீவிக்கிறது. தோல்பாவைக் கூத்து அழிவின் விழிம்பில் நிற்கிறது.



பொம்மலாட்டம் - ஒளியும் ஒலியும்

Loading...

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</