வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

கரகாட்டம்

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

கரகாட்டம் தெய்வீகக் கலை. கிராமிய வழிபாட்டு முறைகளோடு கலந்த இந்த தொன்மக்கலை தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் கரகச் செம்பு என்றும், மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கரகாட்டம் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. நாட்டார் வாழ்வியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது கரகாட்டம்.

சக்தி வழிபாட்டுக்கும், கரகக்கலைக்கும் நிறைய தொடர்பு உண்டு. தமிழர் சமய வழிபாடுகளில் இயற்கையை முன்னிறுத்துவது இயல்பு. அவ்விதம் இயற்கைக்கு தந்த முக்கியத்துவத்தை பெண்களுக்கும் வழங்கினான் ஆதித்தமிழன். நதி, மலை என இயற்கையின் அற்புதங்களுக்கு பெண்களின் பெயரை இட்டு மதிப்பு செலுத்தியது தமிழர் பண்பாடு. அவ்விதம் உதித்த ஒன்று தான் சக்தி வழிபாடும்.

சக்தி வழிபாட்டில், அம்மனை சேவிக்க நீர்நிலைகளில் இருந்து குடத்தில் தண்ணீர் சுமந்து வரும்போது அருள் வந்து ஆடுவதுண்டு. அதுதான் கரகக்கலையின் தொன்ம வடிவம். மழை தெய்வமான மாரியம்மன், நதிதெய்வமான கங்கையம்மன் ஆகியவற்றின் வழிபாடு தொடர்பானதே கரகக்கலை என்று அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். ஊரில் பஞ்சம் ஏற்பட்டால், கொள்ளை நோய் பரவினால் மழை பெய்யாதிருந்தால், கரகம் சுமந்து அம்மனை வழிபடுவது ஒரு சடங்கு. தேவாங்க செட்டியார்கள் இனத்தை சேர்ந்த மக்கள் சௌடாம்பிகையம்மன் என்ற தங்கள் தெய்வத்தை நீர்நிலைகளில் இருந்து கரகம் சுமந்து அழைத்து வந்து ஆலயங்களில் இருத்துவதை இன்று வரையிலும் ஒரு வழிபாட்டு முறையாக வைத்துள்ளார்கள்.

இவ்விதம் தெய்வீக சாரமுள்ள கரகம் சுமத்தலை சக்தி கரகம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். சக்தி கரக வழிபாட்டின் துணை நிகழ்வாக ஆட்டக்கரகம் பிறந்தது. இக்கலை கடந்த 20 ஆண்டுகளில் பலத்த பின்னடைவையும், சிதைவையும் சந்திக்க நேர்ந்தது பெரும் சோகம்.

பெண்களை தெய்வமாக உயர்த்தி வைத்துக் கொண்டு பிற்காலத்தில் சகல உரிமைகளையும் திட்டமிட்டு களவாடிய ஆண் வர்க்கம் கலைகளையும் விட்டு வைக்கவில்லை. தெய்வக்கரகத்தை பெண்கள் சுமக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்து விட்டு தாங்களே தெய்வாம்சம் பொருந்தியவர்களாக நிலை நிறுத்திக் கொண்டார்கள் ஆண்கள். பொழுதுபோக்குக்கான ஆட்டக்கரகம் மட்டும் பெண்களின் தலையில்.

கரகம் என்ற சொம்பை தலையில் வைத்து இசைக்கேற்ப ஆடுவதால் இது கரகாட்டம் ஆனது. நையாண்டி மேளத்தின் பின்னணியில் நடக்கும் இந்த கலையாடலில் தொடக்கத்தில் ஆண்களே பங்கேற்றனர். இடைக்காலத்தில் ஆண்களைக் கவர, ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடினர். தற்போது 12 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்களே பங்கேற்கிறார்கள்.

இக்கலை நிகழும் அரங்கு பற்றி எவ்வித வரையறையும் இல்லை. கோவிலை ஒட்டி திறந்தவெளியில் வட்டமாக கயிறுகளை கட்டி நடுவில் களம் அமைப்பார்கள். தொடக்கத்தில் பல்வேறு ஜாதியினர் இக்கலையை நிகழ்த்தினாலும் தற்போது தலித் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியின் தன்மை, தரப்படும் பணத்தை பொறுத்து கரகாட்டக் கலைஞர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் அமையும். சாதாரணமாக, ஆண், பெண் என ஒரு கரகாட்ட ஜோடி, நகைச்சுவைக்காக 1 பபூன், துணையாட்டமான குறவன் குறத்தியாட்டத்துக்கு இருவர் மற்றும் இசைக்கலைஞர்கள் என ஒரு கரகாட்டக்குழு அமையும்.

கரகம் என்பது செம்பு என்ற உலோகத்தால் ஆன சிறிய குடம். சிலர் எவர்சில்வர் கரகத்தையும் பயன்படுத்துவதுண்டு. இந்த கரகச்செம்பு அதிகப்பட்சம் 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். அடிப்பகுதி தலையில் அமரும் வண்ணம் நெளிந்திருக்கும். கரகத்துக்குள் அரிசியைக் கொட்டி எடையை சமன்படுத்துவர். சிலர் மண்ணையும் பயன்படுத்துவதுண்டு. செம்பின் வாய்ப்பகுதி தேங்காயால் மூடப்பட்டிருக்கும். இதன் மேல் கலர் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட டோப்பாவை வைத்து அலங்காரம் செய்வார்கள். டோப்பாவின் மேல் கிளி, அன்னம், புறா போன்ற பறவைகள் இடம் பெற்றிருக்கும். இதை கிளிக்கொச்சம் என்பார்கள்.மதுரை பகுதியில் கிடைக்கும் நெட்டி என்ற நாணல் மூலம் செயயப்படுகிறது கிளிககொசசம். இது உக்கிரமாக ஓடும் போது ஆட்டத்தின் வேகத்துக்கு சுழலும். கொண்டையை விசாலமாக்கி கரகத்தை தாங்குவதற்காக கொக்குமுடி என்ற குஞ்சத்தை பயன்படுத்துவார்கள். இதன் விலை அதிகம். கொக்கில் உள்ள நுணுக்கமான, லேசான முடிகளை கோர்த்து செய்யப்படுவது. ஒரு கொக்கில் ஒரு முடி மட்டுமே இதற்கு பயன்படும். புதுக்கோட்டை பகுதியில் 2000 ரூபாய் வரை கொக்கு முடி விற்கப்படுகிறது. வண்ணப்பவுடர்களை பயன்படுத்தி பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்வார்கள். தொடைக்கு கீழே கணுக்கால் வரை, தொப்புள் பகுதி¢, முழங்கைக்கு கீழே, முகம், கழுத்து, நெஞ்சு வரை ரோஸ் பவுடரை பூசி கவர்ச்சியான தோற்றத்துடன் களத்துக்கு வருவார்கள். ஆண்கள் சந்தனத்தை பூசிக்கொள்வார்கள்.

கரகாட்டம் தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் நையாண்டி மேளம் களை கட்டும். பின்னர் பபூன் சேஷ்டைகள் செய்து கூட்டத்தை கலகலக்க வைப்பார். பின் கரக ஜோடி களமிறங்கும். முதலில் ஆடப்படுவது கலை மரியாதை ஆட்டம். தெய்வத்துக்கும், இசைக்கருவிகளுக்கும், மக்களுக்கும் வணக்கம் செய்யும் வகையிலான ஆட்டம் இது. பின் பல்வேறு மரபு ஆட்டங்களை ஆடத்தொடங்குவார்கள். ஒண்ணாங்காலம், ஸ்ரீராமச்சந்திர ஆட்டம், ராஜபார்ட் ஆட்டம், சதுரவல்லி ஆட்டம், பவளக்கொடி ஆட்டம், அரிச்சந்திரன் ஆட்டம், கட்டப்பொம்மன் ஆட்டம், காவடி ஆட்டம், மகுடி ஆட்டம், கள்ளப்பார்ட் ஆட்டம், முளைக்கோட்டு கும்மி என பலவகை ஆட்டங்களை வரிசை கிரமமாக ஆடுவார்கள்.

ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் இடித்துக் கொள்ளாமல் ஆடவேண்டும். தலையில் இருக்கும் கரகம் விழாமல் புவியூர்ப்பு தானமுறையில் சுழன்று ஆட வேண்டும். தொடக்கத்தில் ஆட்டக்காரர் நையாண்டி மேளத்துக்கு தகுந்தவாறு ஆட்ட்ததை தொடங்குவார். அடுத்த கட்டத்தில் நையாண்டி மேளக்காரர் வேகமாக இயங்க, அதற்கிணையாக ஆட்டக்காரரின் வேகம் அதிகரிக்கும். மூன்றாவது நிலை அதிவேக ஆட்டம். இதில் ஆட்டக்காரர் வலது புறமாக சுழன்று ஆடுவார். இடையிடையே ஆட்டக்காரர்களும், இசைக்கலைஞர்களும் ஓய்வெடுக்க, பபூன் நகைச்சுவை செய்வார்.

நீண்ட கத்தியுடன் ஆடுதல், வளையத்துக்குள் நுழைந்து ஆடுதல், கரகம் சுமந்தபடி கண் இமையில் காசு எடுத்தல் என சில சர்க்கஸ் காட்சிகளும் கரகாட்டத்துடன் இணைந்து காணக்கிடைக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு கரகாட்டம் ஆடுபவர்கள் தெய்வீக அம்சங்கள் பொருந்தியவர்களாக கருதப்பட்டனர். ஊரார்கள் மிகுந்த மரியாதை தருவார்கள். அவர்கள் கரம் பட்ட பின்னே அம்மன் ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கும். குதிகால் வரைக்கும் பட்டுடுத்தி, கரகம் சுமந்து ஆடினால் ஆண், பெண் அத்தனை பேரும் குழுமி ரசிப்பார்கள். அம்மனுக்கு மஞ்சள் நீரூற்றி அபிஷேகம் செய்வது போல் கரகம் ஆடும் பெண்களுக்கும் அபிஷேகம் நடப்பதுண்டு.

கடந்த 20 ஆண்டுகளில் கரகக்கலை மிகவும் நசிந்து விட்டது. கரகாட்டம் என்றாலே முகத்தில் ஜொல் வடிய, ஆண்கள் அணி வகுக்கிறார்கள். பெண்கள் அருவெறுக்கிறார்கள்.

இப்போது கரகம் ஆடும் பெண்கள் முழங்கால் வரை பாவாடை, சிறிய ரவிக்கை, மார்புக் கச்சை, கொடுவாள் பட்டி, ஜாககெட், சலலடம், மாராடி என கவர்ச்சியை ஊக்குவிக்கும் உடைகளை அணிந்து கொள்கிறார்கள். எல்லா உடைகளிலும் ஜிலுஜிலுக்கும் ஜிகினா.

கரகக் கலையின் துணையாட்டமாக கருதப்பட்ட குறவன், குறத்தி ஆட்டத்துக்கு இணையாக கரகாட்டமும் தரம் தாழ்ந்து நிகழ்கிறது. ஆட்டம், அபிநயம், வார்த்தைகள் எல்லாவற்றிலும் ஆபாசம் கொடி கட்டிப் பறக்கிறது. மார்புகளை அமுக்குதல், பிறப்புறுப்பை காட்டுதல் என வெண்திரையில் நிகழ்வனவெல்லாம் கண்முன் காட்சியாக விரிகிறது. திடீரென்று கூட்டத்தில் புகுந்து பாவாடையை ஆண்கள் மத்தியில் அவிழ்த்துக் காட்டும் அசிங்கங்கள் கூட நிகழ்கின்றன. இசைக்கலைஞர்களும் கரக காரிகைகளை அங்க சேஷ்டைகள் செய்து வக்கிரம் காட்டுகிறார்கள். இப்போது கரகக்கலைஞர்கள் என்று அடையாளப்படும் பலரும் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். இப்போதுள்ள கலைஞர்களுக்கு ஊரில் அவப்பெயர் தான் கிடைக்கிறதே தவிர மரியாதை கிடைப்பதில்லை.

லோடு ஆட்டோக்களில் தான் கரகாட்டக்குழுக்கள் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு செல்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் ஊரில் கூட யாரும் மனிதர்களாக மதிப்பதில்லை. பெண்களின் அங்கங்களை குறி வைத்தே ஆண்களின் கண்கள் அலைபாயும். கிராமத்தில் கலைஞர்களுக்கு கறி விருந்து நடக்கும். பலர் மதுவும் அருந்துவதுண்டு. பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் தான் மேக்கப் ரூம். ஜன்னல்கள், கதவிடுக்குகளில் பல கண்கள் ஆபாசமாக பார்க்க, முந்தானையை மார்பில் சுற்றிக்கொண்டு நெஞ்சுக்குழி வரை மேக்கப் போடுவார்கள் பெண்கள். ஆண்களும் வண்ணச்சாயம் பூசி அலங்காரம் செய்வார்கள். சுமார் 1 மணி நேரம் அலங்காரம் நீடிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடை மாற்ற ஒரே அறை. ஆட்டம் தொடங்க அரைமணி நேரம் முன்பு நையாண்டி மேளம் தொடங்குகிறது. ரசிகர்களின் மனநிலை அறிந்து கரகம் சுமக்கும் அடவுகளிலேயே அபத்தங்களை அறங்கேற்ற தொடங்கி விடுகிறார்கள். மெல்ல, மெல்ல சில்மிஷங்கள் அதிகரிக்க, ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் ஓர்¤ரு பெண்களும் எழுந்து ஓடி விடுகிறார்கள். இடித்துக்கொள்ளுதல், அணைத்துக் கொள்ளுதல் என அரை மணி நேரத்தில் அனலாகிப்போகும் கரகாட்டக்களம்.

இப்போது கான்ட்ராக்டர்களை நம்பித்தான் கரகாட்டக் கலைஞர்கள் பிழைக்கிறார்கள். அவர்களின் கண்படாவிட்டால் பட்டினி தான். அதற்காக காண்ட்ராக்டர்களிடம் பல்வேறு விதங்களில் பணிந்து நடக்க வேண்டியிருக்கிறது. இளமையும், ஆட்டத்திறனும் உள்ள பெண்களுக்கு இப்போது ஏக கிராக்கி. இப்போது ஒரு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் தேவை.

இதில் குறத்திக்கு 1500 ரூபாய். குறவனுக்கு 1100. கரகம் ஆடும் பெண்ணுக்கு 1200. இசைக்கு 3001. மற்றவை கான்ட்ராக்டருக்கு. கரகாட்டத்தில், ரசிகர்களின் கனவுக்கன்னி என்று சொல்லத்தக்கவர் புதுக்கோட்டை திலகவதி. உடையில் புரட்சி செய்து கரகாட்டக்கலையில் புதிய கலாச்சாரத்தை தோற்றுவித்தவர். 87ம் ஆண்டில் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் திலகவதியின் கரகாட்டத்துக்கு போலீசார் தடைவிதிக்க, ரசிகர்கள் கொந்தளித்து பஸ் மறிக்க, துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்குப் போனது நிலை. இப்போது காண்ட்ராக்டராக இருக்கிறார்.

தஞ்சாவூர் ராணி உள்ளிக்கோட்டை சொர்ணம் உள்ளிட்ட பலர் அண்மைக்காலத்தில் கரகாட்டக் கலையில் வெற்றிக் கொடி கட்டியவர்கள்.

பெரும்பாலான நல்ல கலைஞர்கள் இந்த குத்தாட்டப் போட்டியை தாக்குப் பிடிக்காமல் வயற்காட்டு வேலைக்குச் சென்றுவிட, புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள வறுமையும், இளமையும் ததும்பி நிற்கும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் இப்போது ஆட்டக்கலைஞர்களாக அரிதாரம் பூசிக் கொண்டுள்ளனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தையட்டி இயங்கும் கிராமியக் கலைஞர் சங்கங்களே இவர்களுக்கு வாழ்க்கை. இவற்றில் 500க்கும் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

கரகாட்டத்தில் கான்ட்ராக்ட் கொடுமை கொத்தடிமைத்தனத்திலும் கொடூரமானது. வறுமை காரணமாக பருவம் எய்துவதன் முன்னரே சிறுமிகளை கான்ட்ராக்டர்கள் வசம் ஒப்படைக்கும் பெற்றோரும் உண்டு. இதுபோன்ற சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, வெட்கம் போக்கும் கொடுமைகளும் இக்கலையின் திரைமறைவு அவலங்களில் ஒன்று என்கிறார்கள் சிலர்.

இவற்றுக்கு மத்தியில் கடும் வாழ்வியல் நெருக் கடிகளைச் சுமந்துகொண்டு ரெட்டிப்பாளையம் தேன்மொழி, பொன்னமராவதி கல்யாணி, ஆர்.கே.விசித்ரா, ஆர்.கே.ஜெகதாம்பாள் என்று அங்கொனறும் இங்கொன்றுமாக ஆதிக்கரகமாடும் கலைஞர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
தேன்மொழி
 



கரகாட்டம் - ஒளியும் ஒலியும்

Loading...

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</