"யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று தமிழரின் வாழ்வியல் நெறியை உலகம் கேட்க உரக்க உரைத்த கணியன் பூங்குன்றணாரின் மரபு வழியினர் நடத்தும் அற்புதமான நாட்டுப்புறக்கலை தான் கணியான் கூத்து. தென் மாவட்டங்களில் இன்றளவும் கோவில் கொடை விழாக்களில் தவிர்க்க முடியாத அம்சமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த தெய்வீகக் கலை.
நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கிறது. இக்கலையை மகுடக்கச்சேரி, மகுட ஆட்டம், கணியான் ஆட்டம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து.
கணியான்கள் தங்களை தெய்வீக கலை பொருந்திய மனிதர்களாக கருதிக் கொள்வார்கள். கணியானின் பிறப்பு தெய்வப்பிறப்பென்று சுடலைமாடன் கதை நிறுவுகிறது. இவர்களது தொன்மம் தட்ச & சிவ போராட்டத்தோடு தொடர்பு கொண்டது.
யாகங்கள் நடத்துபவர்கள் அவிர்பாகத்தை சிவனுக்கு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் தட்சன் நடத்திய யாகத்தின் அவிர் பங்கை சிவனுக்கு வழங்காமல் அவமதித்தான். இதனால் கோபமுற்ற சிவன், யாக குண்டத்தை துவம்சம் செய்தான். பயந்து போன தட்சன் சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க மன்றாடினான். சிவன் சாந்தமடைந்த உடன், மீண்டும் அடி தொழுது யாகம் செய்ய அனுமதி அளிக்குமாறு வேண்டினான். சிவன் அனுமதிக்க, தட்சராஜன் யாகத்தை தொடங்கினான். அப்போது யாகக்குழியில் சுடலைமாடன் பிறந்தான். ஆனால் குண்டத்தை விட்டு வெளியே வர மறுத்தான் சுடலைமாடன்.
சுடலைமாடனின் கோபத்தை கண்ட சிவன், காரணம் கேட்க, பெரிய கணியான் ஒருவனை ஆடச் செய்து, பிரளயம் அதிரும் அளவுக்கு எனக்கு பூஜை கொடுக்க வேண்டும். அப்போது தான் குண்டத்தை விட்டு வெளியே வருவேன் என்கிறான். கணியானை எப்படி பிறப்பிப்பது என சிந்தித்த சிவன், இந்திரன் சபையின் ஆடற்கண்ணியரை அழைத்து உக்கிரமாக ஆட உத்திரவிட்டான். அவ்விதம் இந்திராணி தலைமையிலான பெண்கள் ஆடிய தருணத்தில் இந்திராணியின் காற்சிலம்பு தெறித்து விழுந்தது. அதில் ஒரு பரலில் இருந்து உதித்தான் கணியான்.
கால்களில் சிலம்புடனும், பேய்முகத்துடன் பிறந்து கட்டுப்பாடில்லாமல் ஆடிய கணியானுக்கு ஆட்டத்தின் இலக்கண முறைகளை போதித்து முறைப்படுத்தினான் சிவன். நந்தி மகுடம் அடிக்க, கணியான் உக்கிரமாக ஆட, சுடலைமாடன் குண்டத்தை விட்டு வெளியே வந்தான் என்று இவர்களின் தொன்மத்தை சித்தரிக்கிறது சுடலைமாடன் கதை.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுக, சிறுக வாழ்கிறார்கள் கணியான் இன மக்கள். பெண்கள் கூடை முடைய, ஆண்கள் முற்றிலும் கூத்தை நம்பி மட்டுமே வாழ்கிறார்கள். இதனால் பல நாட்களை பட்டினியில் கழிக்கிறார்கள்.
இந்த கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. தெய்வத்தின் எதிர்புறத்தில் மட்டுமே இது நடத்தப்படும். இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும்.
கணியான் ஆட்டக்குழுவில் 7 பேர் இருப்பார்கள். பாட்டுப்பாடி விளக்கமளிப்பவர் பெயர் அண்ணாவி. இவரே குழுவுக்கும் தலைவராக இருப்பார். மகுடம் என்ற இசைக்கருவி வாசிப்பவர்கள் இருவர். ஒருவர், அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர இருவர் ஆட்டக்காரர்கள். அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுவும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் கலை இது.
மகுடம் என்ற இசைக்கருவியை தப்பட்டை என்று கிழக்கு மாவட்டங்களில் அழைக்கிறார்கள். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுவது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையை தர உச்சம். இளகிய ஓசை தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைப்பார்கள். அடிக்கடி இந்த கருவிகளை நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும்.
சுடலை மாடன், பன்றி மாடன், வண்ணாரமாடன், கருப்பசாமி, இசக்கியம்மன், முத்தாரம்மன், சந்தன மாரி உள்ளிட்ட தெய்வங்களை குறித்து பாடல்கள் இடம் பெறும். இது தவிர இராமாயணம், மகாபாரத கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு.
வில்லுப்பாட்டுக்கும், கணியான் கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளில் எடுத்தாளப்படும் கதைகளும் ஒன்றாகவே இருக்கிறது. வில்லுப்பாட்டில் எழுதி வைத்து பாடப்படும் கதைகள், கணியான் கூத்தில் வாய் போன போக்கில் சொல் போன போக்கில் மனதில் இருந்தே பாடப்படுகிறது. வழிவழியாக இக்கலை தொடர்கிறதே ஒழிய, முறைப்படி பயிற்றுவிக்கவோ, ஆட்டுவிக்கவோ ஏற்பாடுகள் இல்லை.
|
அண்ணாவியின் முன்பு இரண்டு புறங்களிலும் இரண்டு ஆட்டக்காரர்கள் நிற்பார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் உச்ச மகுடம், மந்த மகுடம் அடிக்கும் கலைஞர்கள் நிற்பார்கள். அவர்களை ஒட்டி பின்பாட்டுக்காரரும், ஜால்ரா இசைப்பவரும் நிற்பார்கள். இரு பக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, நடுவில் ஓடி ஆடுவார்கள் கணியான்கள். அண்ணாவி பாடல் பாடும் போது ஆடும் கணியான்கள், பாடலுக்கு விளக்கம் |
சொல்லும் போது, சலங்கை கட்டிய கால்களை ஆட்டியபடி அண்ணாவியின் அருகில் நிற்பார்கள். இவர்களின் ஒப்பனை மிகவும் ரசனைக்குறியதாக இருக்கும். மீசையை வழித்து விட்டு, துணிகளை திணித்து மார்புகளை பெரிதாக்கி, பெரிய பொட்டிட்டு, கால்களில் சலங்கை, வட்டுக்கொண்டை, கையில் கடிகாரம், கழுத்தில் கவரிங் நகைகள் என, பார்த்தாலே நகைக்க தகுந்த வகையில் அலங்காரம் செய்கிறார்கள்.
இப்போது இந்த தெய்வீகக்கலையில் திரைப்படத்தின் தாக்கம் சில சிதைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இடையிடையே அண்ணாவி சில திரைப்பட பாடல்களை பாடுகிறார். கணியான்களின் ஆட்டத்தில் விரசங்கள் தலை தூக்கி நிற்கின்றன. திருநங்கைகளின் அங்க சேஷ்டைகளை ஆடல் அபினயத்தில் காண்பித்து, திடீரென கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை அணைத்து கிளர்ச்சியேற்படுத்தி கவர நினைக்கிறார்கள். இதனால் பெண்கள் மத்தியில் இக்கைலை மீதான அபிமானம் வெகுவாக குறைந்து விட்டது.
இக்கலையின் தலையாய கலைஞர்களாக கலைமாமணி 'மூன்றடைப்பு ராமசுப்பு' அவர்களை குறிப்பிடலாம். முதன் முதலாக கலைமாமணி விருது பெற்று கணியான் கூத்துக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் இவர். களக்காடு வாணுமாமலை, பேட்டை முருகன் ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த கலைஞர்கள்.
கணியான்கள் வசிக்கும் பகுதிகளில் சுடலைமாடன் கோவில்களில் ஒரு வழிபாடாகவே இக்கலையாட்டம் இடம் பெறும். இன்றைய நிலையில் கன்னியாகுமரி, தெருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் அம்மன் கோவில், பிற நாட்டார் தெய்வங்களின் ஆலயங்களிலும் பொழுதுபோக்கு கூத்துக்கலையாக இது நடத்தப்படுகிறது.
|