வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

கழைக்கூத்து

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

கழை என்பது மூங்கில் களிகளைக் குறிக்கும் வார்த்தை. மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிறில் நடந்து வித்தை காட்டுவது கழைக்கூத்து. இதை ஆரியக்கூத்து என்றும், ஆரியக் கழைக்கூத்து என்றும் அழைக்கிறார்கள். வடநாட்டில் இருந்து வந்த கலை என்பதால் இதை ஆரியக்கூத்து என்று அழைக்கப்டுகிறது.

இந்தக்கலை இரவு நேரத்தில் நிகழ்வதில்லை. பகல் நேரத்தில் காலை 8 மணி முதல், பதினோரு மணிவரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை நிகழ்த்துவது மரபு. பொதுவாக சூரிய ஒளியில் நிகழ்த்த வேண்டும் என்பது நியதி.

கழைக்கூத்து நிகழ்த்துபவர்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட காட்டுநாயக்கர்கள். இவர்களை ரெட்டி டொம்பரர்கள் என்றும் அழைப்பார்கள். இவர்கள் வடநாட்டில் இருந்து வந்து ஆந்திரத்தில் குடியேறியவர்கள். நாயக்கர் காலத்தில் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.

இக்கலையில் இசை கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. தவில் அல்லது தட்டு பயன்படுத்துவார்கள். முழுக்க, முழுக்க இந்த கலையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்கள் இக்கலைஞர்கள். ஆண், பெண், குழந்தைகள் என இக்கலையை அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள். எனவே இதை குடும்பக்கலை என்றும் அழைப்பதுண்டு.

இந்த கூத்தை பெரும்பாலும் மணற்பாங்கான இடத்தில் தான் நடத்துகிறார்கள். இக்கூத்து நிகழ்த்த 4 வலிமையான மூங்கில்கள் தேவை. 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் வரை உயரம் இருக்கலாம். முந்தையக் காலங்களில் இதைவிட அதிக உயரமுள்ள குச்சிகளை பயன்படுத்தினார்கள். இரண்டு கம்புகளை பெருக்கல் குறிபோல இருபுறமும் நட்டு வைத்து, கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் செய்யப்பட்ட கயிரைக்கொண்டு கட்டி, பூமியில் இரும்புக் கம்பியை நட்டு கட்டிவிடுவார்கள். நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

கூத்து தொடங்குவதைக் குறிக்கும் விதத்தில் தட்டு அல்லது தவில் இசைப்பார்கள். தொடக்கத்தில் சில சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள். தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மேல் கத்தியை வீசுவது, கர்ணம் அடிப்பது என கலை நீளும். அடுத்து கயிற்றில் நடப்பது. பெரும்பாலும் பெண்கள் தான் கயிற்றில் நடக்கிறார்கள்.

பெருமளவில் இக்கலை இப்போது நடைமுறையில் இல்லை. சென்னையில் ஜல்லடியான் பேட்டை என்ற கிராமத்தில் குடியிருக்கும் கழைக்கூத்தாடிகள் பற்றி ஒரு பிரபல இதழில் நான் எழுதிய கட்டுரை இதன் தொடர்ச்சியாக வருகிறது. அக்கட்டுரை இம்மக்களின் இன்றைய வாழ்க்கைச்சிக்கலைச் சொல்லும்.

தென் சென்னையில் மேடவாக்கத்துக்கு அருகில் இருக்கிறது ஜல்லடியான்பேட்டை. கழிவுகளால் மூழ்கி வரும் பள்ளிக்கரணையின் நோய்க்காற்று தொட்டுச் செல்லும் 'புண்ணிய' பூமி. இங்குதான் இருக்கிறது கழைக்கூத்து நகர்.

ஒரு நேர்க்கோட்டு ரோடு சென்று, திரும்பி, நீளும் ஒரு குறுக்குச் சந்தில் நிசப்தமாக அமர்ந்திருக்கும் இந்த கழைக்கூத்து நகரில் 40 கூத்துக் குடும்பங்கள், கொஞ்ச நஞ்ச ஆயுளை குடிசை கட்டி கழிக்கின்றன.

கழைக்கூத்தாடிகளை தரிசிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. தவிலும் தட்டும் முழங்க, பச்சைக் குழந்தையை ஒற்றைக்கையில் தூக்கி வித்தை காட்டிய மனிதர்கள் தட்டை நீட்டி பிச்சை கேட்கையில், முகத்தைத் திருப்பி நகர்ந்து வந்த அனுபவம் அநேகம் பேருக்கு இருக்கக்கூடும். வேகாத வெயிலில், உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்துவிட்டு, உணவுக்கு கையேந்துகையில் பல வீடுகளில்

ஜன்னல்கள் கூட சாத்தப்படுகின்றன. காலம் கலைத்துப் போட்ட வாழ்க்கை. குழந்தைகளைக் கூத்துக்குப் பயன்படுத்தக் கிளம்பிய எதிர்ப்பு, அந்த மக்களின் பட்டினி நாட்களை அதிகமாக்கி விட்டது.

இப்போது...

குழந்தைகள் பள்ளி செல்கின்றன. கம்பங்களையும், கயிறுகளையும் தூர வீசிவிட்டு மினிடோர் ஆட்டோக்களின் டிரைவர்களாகவும், குப்பை பொறுக்குபவர்களாகவும் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளனர் அந்தக் கலைஞர்கள்.

வெள்ளை வெளேரென திரும்பிப் பார்க்கத் தோன்றும் அழகுப் பெண்கள், கம்பீரம் பொருந்திய ஆண்கள், மொழுமொழுவென்று தூக்கிக் கொஞ்சத் தோன்றும் குழந்தைகள்...

இவர்களின் பூர்வீகம் குஜராத். குஜராத்தின் பூர்வகுடிகளான தோம்பரா மக்களின் பாரம்பரிய கலைதான் கழைக்கூத்து. தோம்பராக்கள் காட்டுநாயக்கர்களின் ஒரு பிரிவு என்ற கருத்து உண்டு. குஜராத், இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், ஜீவனம் தேடி இடம்பெயர்ந்தவர்கள், ஆந்திரம் வழியாக தமிழகம் வந்து அடைக்கலமானார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர் கழைக்கூத்தாடிகள். தமிழகத்தில் மொத்தம் 500 கூத்தாடிக் குடும்பங்கள் இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.

இவர்களின் வாழ்க்கை சோகமும் கண்ணீரும் கலந்தது. ஆயினும், அந்த வலிகள் பிறப்பிலேயே பழக்கப்பட்டு விடுவதால் அந்த நேர்க்கோட்டு வாழ்க்கை திசை திரும்புவதை யாரும் விரும்புவதில்லை.

தங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்களை, பசிக்குப் பறிகொடுத்த கழைக்கூத்தாடிகள் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதம் நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர். கழைக்கூத்து நகரில் அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக நிற்கிறது ஜெபக்குடில்.

தமிழ்நாடு கழைக்கூத்து கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் பாபுஜி. 'நல்ல நேரம்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு கே.ஆர்.விஜயாவின் தலையோடு, தலை சேர்த்து கூத்தாடியவர் இவர்தான்.

''தெருவுல கூத்தாடுறதைத் தவிர வேறெதும் எங்களுக்குத் தெரியாது. இப்ப தெருவுல கூத்துப் போட்டா போலீசுக்காரங்க புடிச்சிடுறாங்க. அதனால, நெறைய பேரு தொழிலை விட்டுட்டு வேற பக்கம் திரும்பிட்டாங்க. இப்போ புள்ளைகளையும் பள்ளிக்கூடத்துல சேத்துட்டோம்" என்று கூறும் பாபுஜிதான் கழைக்கூத்து நகரின் தலைவர்.

குழந்தைகளுக்கு 2&வது மாதத்திலேயே கூத்துப்பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். தலையே நிமிராத இரண்டு மாதக் குழந்தையை ஒரு கையால் தூக்கி, மேலே நிறுத்துவது தான் முதல்கட்டப் பயிற்சி. கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றைக் கட்டி, ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் நீள்கின்றன. 3 வயதிலேயே குழந்தை

தட்டோடு தெருவிறங்கி விடுகிறது.

உறவுகளை அறிந்து கொள்ளும் முன்பாகவே பிச்சைக்குப் பழக்கப்பட்டு விடுகின்றன குழந்தைகள். பெண்ணாக இருந்தால் 12 வயதிலேயே திருமணம் முடிந்து விடுகிறது.

'இப்படி சிறு வயதில் திருமணம் செய்வது தப்பில்லையா?'

''தப்பு, சரியெல்லாம் யோசிக்க முடியாது. எங்களுக்கு சாப்பாடுதான் பிரதானம். நாளெல்லாம் பட்டினி கெடக்குற மனுஷங்களுக்கு சோறுபோட வழி செய்யாத சட்டம், எங்க பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் குறை சொல்ல மட்டும் ஏன் வருது?" & வெடிக்கிறார் பாபுஜி.

கூத்து நடக்கும் தெருவே பெண் பார்க்கும் இடம். பல்டியடிப்பது, கயிறு மேல் நடப்பது, தவில் தட்டுவது இவைதான் பெண்களின் திருமணத் தகுதி. நன்றாகக் கூத்தாடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள கடும் போட்டி நிலவும். மாப்பிள்ளை பார்த்தலும் கூத்திலேயே நிறைவடையும். திருமணத்துக்கு முதல்நாள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மணமக்கள் நெல் வசூலிப்பார்கள். கிடைக்கும் நெல்லை குத்தி, அரிசியாக்கி, நெல் தந்த உறவினர்களிடமே திருப்பி தந்து விடுவார்கள். திருமணத்தன்று மணமக்கள் குத்தி தந்த அரிசியில் சோறாக்கி சாப்பிட்டு விட்டு உறவினர்கள் திருமண நிகழ்விடத்துக்கு வருவார்கள். திருமண சடங்குகள் மிக எளிமையாகவே நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கட்டாயம் தனிக்குடித்தனம் தான். ஆனாலும், எல்லோருமே கூத்தை நம்பி வாழ்வதால் திருமணத்துக்குப் பிறகும் தம்பதியர் தத்தம் பெற்றோரை எளிதில் கைகழுவிவிட முடியாது.

'' முன்னாடியெல்லாம் கல்யாணமான ஆம்பிளை பொண்ணு வீட்டில தான் இருக்கனுன்னு கட்டுப்பாடு இருந்துது. காலப்போக்குல கலைக்கூத்து அழிஞ்சது மாதிரி கட்டுப்பாடும் அழிஞ்சிருச்சு. இப்போ, கல்யாணமாகி தனிக்குடித்தனம் போற ஆம்பிளை, தன்னோட வருமானத்துல பாதியை, ஒரு மாதம் பெத்தவங்களுக்கும், மறு மாதம் மாமியாரு வீட்டுக்கும் தரணும். அப்படித் தர மறுத்தா அந்த ஆம்பிளையை, ஊர் கூடி மொட்டையடிச்சு கழுதையில் ஏத்தி தண்டிப்போம்" என்கிறார் இந்த நகரின் இன்னொரு முக்கியஸ்தர் சேகர்ஜி.

தங்கள் கிராமத்து பெண்களை அசலூருக்குக் கட்டித் தருவதையும் கலைக்கூத்து மக்கள் விரும்புவதில்லை. 'புள்ளைகளை பக்கத்தில கட்டிக்கொடுத்தா, புருஷன் அதட்டிப் பேசாம பாத்துக்கலாம்..' என்று காரணம் சொல்கிறார்கள். திருமணமான ஜோடிகள் ஒருமாதம் வரை தொழிலைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. அதன் பிறகு வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பினால், ஒரு வருடமோ, ஆறு மாதமோ? கோயில்கள், பொது இடங்களில் இரவு தங்கல். தெருவோரம் கட்டிக்கொள்ளும் தற்காலிகக் கூடாரங்களில்தான் தாம்பத்யம்.

இவர்களின் குலதெய்வம் கம்பத்தடி கருப்பர். கழைக்கூத்து நகரில் உள்ள கம்பத்தடி கருப்பருக்கு தை மாதம் 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. ஆடு, கோழி என்று பூஜைகள் அனல் பறக்கும். இரவுகளில், தினமும் ஒரு குழுவின் கூத்து. பத்தாம் நாள் இரவு, கழைக்கூத்து நகரே கலந்து கட்டி ஆடும்.

20 அடி உயரத்தில், கயிறில் நடக்கும்போது தவறி விழுந்து கால், கை முறிந்தவர்கள், உயரிழந்தவர்கள் அநேகம் பேர். அப்படி பாதிக்கப்படுவோருக்கு எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை.

இமிதிஜியை மாதிரி கயிற்றில் நடக்கும் கூத்தாடி யாரும் இல்லை. லாவகமாக நடந்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று காசை அள்ளும் இமிதிஜி, சில வருடங்களுக்கு முன் சென்னை அமைந்தகரையில் கூத்து நடத்தும்போது அந்தரத்தில் இருந்து கீழே விழுந்தார். ஒரு காலை எடுத்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை. 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு வழி? கூத்துக்கு குட்பை சொல்லிவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று வருகிறார் இமிதிஜியின் மனைவி ராணி.

''சில நேரங்கள்ல இது என்னடா பொழப்புன்னு தோணுது. லாட்டரி சீட்டு மாதிரிதான் வாழ்க்கை. ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்குத் தேறும். இன்னொரு நாளைக்கு பட்டினி. தலைமுறை, தலைமுறையா கம்பியிலே நடக்குறதையும், குட்டிக்கரணம் போடுறதையும் விட்டுட்டு எங்க குழந்தைகளுக்காவது வேற திசை காட்டணும். அதுக்காகத்தான், அங்க இங்க கடன வாங்கி ஒரு லோடு ஆட்டோ வாங்க முடிவு பண்ணியிருக்கேன்" என்கிறார் கலைக்கூத்தாடி கணேஷ்.

குழுவாக கூத்தாடப்போன இடத்தில் கணேசும், பக்கத்து வீட்டு சந்திராவும் காதலிக்க, சின்ன சலசலப்போடு ஊர் கூடி திருமணம் செய்து வைத்திருக்கிறது. கூத்துகிராமத்தில் முதல் காதல் திருமணம்.

முத்துவுக்கும் ரேவதிக்கும் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. வெளியூருக்கு கூத்துக்கட்ட செல்ல வண்டி ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ''கைநிறைய கலை இருந்தாலும் கையேந்தி நிக்கிற இந்த பொழப்பு வெறுப்பா இருக்கு. எங்க குழந்தையை நிச்சயம் கழைக்கூத்தாடியா வளக்க மாட்டோம்" & முத்துவின் வார்த்தைகளில் விரக்தி அப்பிக் கிடக்கிறது.

''இப்போ தமிழ்நாடு முழுதும் இருக்கிற எங்க குழந்தைங்க பள்ளிக்கூடம் போறாங்க. அடுத்த கட்டத்துக்கு எங்க தலைமுறை போகணும்னா அதுக்கு சாதிச் சான்றிதழ் கட்டாயத் தேவை. வெவரம் தெரிஞ்ச நாளுல இருந்து எங்க மக்கள் சாதிச் சான்றிதழ் தாங்கன்னு அரசாங்கத்துகிட்டே கேட்டுட்டு இருக்காங்க. எங்க சத்தம் அரசாங்கத்துக்கும் கேட்கல; ஆண்டவனுக்கும் கேட்கல..." & கோபமாக சொல்கிறார் பாபுஜி. அவரின் வார்த்தைகளில் தெறிக்கும் கோபம், கம்பத்தடி கருப்பர் கோயிலில் பட்டு எதிரொலிக்கிறது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</