எக்காளம் என்பது ஒரு இசைக்கருவி. அந்த இசைக்கருவியை அடித்தபடி ஆடும் ஆட்டம் எக்காள ஆட்டம் அல்லது எக்காளக் கூத்து எனப்படும். இக்கலை நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவான தொட்டியப்பட்டி நாயக்கர் என்ற இனத்து மக்களால் ஆடப்படும் இனச்சார்பு கலையாகும். இந்த சமூக மக்களைத் தவிர மற்ற யாரும் இக்கூத்தை நிகழ்த்துவதில்லை.
எக்காளம் என்பது காட்டு எருமைக் கொம்பால் செய்யப்பட்ட ஒரு ஊதுகருவி. பெரிய வேலைப்பாடுகள் ஏதுமின்றி, முனைகளில் ஓட்டை செய்து உருவாக்கப்படும் இந்த இசைக்கருவியை இயக்க ஆழ்ந்த மூச்சுத்திறன் அவசியம். மற்றபடி ஏதும் இலக்கண வரம்புகள் இல்லை. அசுரத்தனமாக ஓசையெழுப்பும் இக்கருவியின் இசை வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது.
தொட்டியப்பட்டி நாயக்கர்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாயக்கர் சமூகத்திலேயே அடித்தட்டு பிரிவுகளில் ஒன்று இது. நாகரீகத்தின் சுவடுகளைக் கூட எட்டிப்பிடிக்க முடியாத இந்த சமூகத்திற்கு போதிய கல்வி வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே வாழ்க்கையைக் கழிக்கும் இம்மக்கள் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலையும் செய்கின்றனர். இளைஞர்கள் பெரும் தனவந்தர்களிடம் பண்ணைய ஆளாக பணி புரிகின்றனர். இதுதவிர வேட்டையாடுவது இவர்களின் வாழ்க்கையோடு கலந்த பொழுதுபோக்கு. பலர் இதையே முழுநேரத் தொழிலாக கொண்டிருந்தார்கள். இதற்கென பிரத்யேகமாக வேட்டைநாய்களையும் வளர்ப்பதுண்டு.
குழு வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட இம்மக்கள் வேட்டையாடச் செல்லும் போதும் கூட்டமாகச் செல்வது வழக்கம். மிக லாவமான தொழில்நுட்பத்துடன் வேட்டையாடும் திறன்மிக்க இச்சமூக மக்கள் வில், அம்பு, கருக்கருவாள், ஈட்டி, தொரட்டி உள்ளிட்ட ஆதி பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே வேட்டையாடுவார்கள். பெரும்பாலும் காடு, மலைகளில் சுற்றித் திரியும் இம்மக்கள் குழுவாக வேட்டைக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடியதும், அந்த விலங்கை ஒரு பொது இடத்தில் வைப்பார்கள். காட்டுப்பூக்களைப் பறித்து, வேட்டையாடப்பட்ட விலங்கை அலங்கரிப்பார்கள். பின் ஊர்வலமாக தாங்கள் வசிக்கும் ஊருக்குள் எடுத்து வந்து பொது இடத்தில் வைத்து தங்கள் இன வழக்கப்படி பூஜை செய்வார்கள். வேட்டையாடப்படும் விலங்கை இறைவன் தங்களுக்கு அளித்த பரிசாக கருதும் மனப்பாங்கே இந்த பூஜைக்கு காரணமாக உள்ளது. இவ்விதம் ஊர்வலமாக வரும்போது, விலங்குகளின் தோலாள் செய்யப்பட்ட உறுமி, பறை, கிடுமுடி போன்ற இசைக்கருவிகளோடு எருமைக் கொம்பால் செய்யப்பட்ட எக்காளத்தையும் ஆங்காரமாக முழங்குவார்கள். அதிர வைக்கும் இந்த இசைக்கேற்ப, வேட்டையாடியவர்கள் ஆடியபடி ஊர்வலத்தில் நடந்து வருவார்கள்.
ஊர்ப்பொது இடத்தில் வைத்து பூஜைப்போடப்பட்ட விலங்கை, ஊர்ப்பெரியவர் கூறுபோடுவார். வேட்டையாடியவர்கள், உறுமி, எக்காலம் இசைத்தவர்கள், மற்றவர்களுக்கு விலங்கின் கறி கூறுபோட்டு வழங்கப்படும். அன்று இரவு சாப்பாடு முடிந்தபின் அதே பொதுவிடத்தில் கூடி கும்மி, தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகிய நாயக்கர் இனமரபு ஆட்டங்களை ஆடி மகிழ்வார்கள். அப்போதும் முக்கிய இசைக்கருவியாக எக்காளம் இசைக்கப்படும்.
வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுவிட்டதால் இந்த சமூக மக்களின் வாழ்வியல் கூறுகள் வெகுவாக நசிந்து விட்டன. குழு வாழ்வியல் பழக்கம் கொண்ட இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சிதறிவிட்டனர். அதனால் எக்காளக்கூத்து வழக்கம் ஒழிந்து விட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இம்மக்கள் தற்போது கொத்தடிமைகளாக நிலசுவான்தாரர்களிடம் பணிபுரிந்து வாழ்க்கை ஓட்டுகிறார்கள்.
|