வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நாட்டுப்புறக் கலைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் நாட்டுப்புறம் சார்ந்த சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினையும், கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் காணலாம்.
 
 

முடச்சிக்காடு புதியபாரதி
-----------------------------------------

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
     
     
     
     
வாயில் TS  நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் வாயில்

பக்கிரிஷாப்பாட்டு

முடச்சிக்காடு புதியபாரதி ilamurasu@gmail.com

இஸ்லாமிய மக்கள் வசிக்கிற தெருக்களில் அவ்வப்போது ஜல், ஜல் இசையுடன் கட்டுக்குலையாத கம்பீரக்குரலில் பாடல்கள் ஒலிக்குமே, கேட்டதுண்டா? அது தான் பக்கிரிஷாப்பாட்டு. பக்கிரிஷாக்கள் இஸ்லாமிய சமூகத்தில் பெருமைக்குறியவர்கள். இறையருள் பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

பக்கிரிஷாக்கள் பச்சை நிறத்துணியால் பெரிய அளவிலான தலைப்பாகையை கட்டியிருப்பார்கள். கழுத்தில் பெரிய மணிகள் கோர்த்த குருமந்தங்காய் மாலைகளை அணிந்திருப்பார்கள். வீடுகளில் பாடல் பாடி தட்சணை பெறுவதற்காக தோளில் ஜோல்னாப் பை ஒன்றும் மாட்டியிருப்பார்கள். எக்காரணம் கொண்டும் பக்கிரிஷாக்கள் காலில் செருப்பு அணிவதில்லை.

குரானில் மிகுந்த புலமை பெற்றவர்களாக பக்கிரிஷாக்கள் இருப்பார்கள். அல்லாவின் புகழையும், நபிகளின் பெருமையும், நபிகள் நாயகத்தினுடைய நண்பர்கள் வரலாற்றையும் கதைகளாக்கி, அரபு மொழிக் கலப்போடு பாடி, பாடலுக்கு தகுந்தவாறு டேப் போன்ற ஒரு இசைக்கருவியை இசைத்தவாறு வீடு, வீடாகச் சென்று தானியம் அல்லது பணம் பெற்றுச் செல்வார்கள். டேப் போன்ற அந்த இசைக்கருவியை "தாயிரா" என்று குறிப்பிடுகிறார்கள். இரவுகளை பள்ளிவாசல், தர்ஹாக்களில் தங்கி கழிக்கிறார்கள்.

மேற்கண்ட வரலாற்றுக் கதைகள் தவிர குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது பாடல்களையும் இவர்கள் பாடுவது வழக்கம். எக்காரணம் கொண்டும் இவர்களாக காணிக்கைகளை கேட்பதில்லை. இவர்களின் பாடல் ஒலி கேட்டதும் இஸ்லாமியப் பெண்கள் காணிக்கைகளை வாரி வழங்குவார்கள். வீடு நாடி வரும் பக்கிரிஷாக்களை வெறும் கையோடு அனுப்பமாட்டார்கள் இஸ்லாமிய மக்கள்.

இஸ்லாமியர்கள் குறைவாக வாழும் ஊர்களில் தனியாகச் சென்று கலை நிகழ்த்தும் பக்கிரிஷாக்கள், பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில் 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று ஊருக்கு நடுவிலான ஓர் இடத்தில் கலை நிகழ்த்துவதுண்டு. இக்காலங்களில் இந்நிலை சிறுத்துவிட்டது. இவ்விதம் குழுவாக இவர்கள் நிகழ்த்தும் கலையாடல் மிகவும் ரசனைக்குறியதாக இருக்கும். இரவு 10 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்ச்சி 1 மணி நேரத்தில் நிறைவடைந்து விடும். ஊர்ப்பொதுவில் பக்கிரிஷாக்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

குழு நிகழ்வில், நால்வர் வட்டமாக அமர்ந்து கொள்வார்கள். தலைமைப்பாடகர் நடுவில் இருப்பார். அவர் தாயிராவை இசைத்தபடி நெடும் கதைப்பாடல் ஒன்றைப் பாட, பிற பக்கிரிஷாக்கள் பின்பாட்டு பாடுவர். தலைமை பக்கிரிஷா பாடலுக்கு இடையே வசனநடையில் விளக்கமும் சொல்வார். இடையிடேயே பெரும்பான்மையான அரபு வார்த்தைகளும், "யா.. அல்லாஹ்" என்ற வார்த்தையும் இசையோடு கலந்து ஒலிக்கும். இக்குழுவில் ஒரு பக்கிரிஷா, நிகழ்ச்சி தொய்வடையும் சூழலில், ஏதேனும் விளக்கங்கள் கேட்டு தலைமைப் பக்கிரிஷாவை உற்சாகப்படுத்துவார்.

இக்குழு நிகழ்வில், நூர்மசாலா கதை, அய்யபு நபி வரலாறு, யூசுபு நபி வரலாறு, இசுவத்து நாச்சியார் வரலாறு, கிளிக்கூட்டு அம்மா வரலாறு ஆகிய அரபுக்கதைகளையும் இசைப்பாடலாக்கி வழங்குவதுண்டு. இக்கலை தமிழ் மொழியில் நிகழ்ந்தாலும், அரபு, உருது, பாரசீக மொழிகள் சார்ந்த ஏராளமான சொற்கள் இடம் பெறுவதால் இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்களுக்கு இக்கலை இருண்மை தரும்.

இக்கலைக்கு திட்டமிட்ட இலக்கணங்கள் உண்டு. சபைக்கு ஸலாம் சொல்வதில் தொடங்கி, பங்கேற்பாளர்களை வரவேற்றல், பார்வையாளர்களை வரவேற்றல், இன்றைய இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைச் சூழல் பற்றிய விமர்சனங்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கூறல் என திட்டமிட்டு நிகழ்த்தப்படும்.
பக்கிரிஷாக்கள் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பக்கீர்களின் தலைவரை உஸ்தாத் என்று அழைக்கிறார்கள். பக்கீராக மாறுவதற்கு தனிச்சடங்குகளே இருக்கின்றன. தர்க்காக்களில் நடத்தப்படும் அந்த சடங்கின் பெயர் முரீஅத். இந்த சடங்கை உஸ்தாத் நடத்தி வைப்பார்.

பக்கிரிஷா ஆக விரும்புபவர், தம் உடம்பில் உள்ள ரோமங்களை களைந்துவிட்டு உஸ்தாத் முன் அமர்வார். ஒரு கம்பியில் பாலைத் தொட்டு, அவரின் முதுகில் "ஹலம்" என்று உச்சரிப்பேற்கும் அரபு எழுத்தை உஸ்தாத் எழுதுவார். அதன் பிறகு பாலும், பழமும் கலந்த உணவு அவருக்கு வழங்கப்படும். இதையடுத்து, பால், வெல்லம், எழுமிச்சை சாறு கலந்த பாணத்தை உஸ்தாத் அவருக்கு ஊட்டி விடுவார். இந்த சடங்குக்குப் பிறகு 40 நாட்கள் பக்கிர்ஷா யார் கண்ணிலும் படாதவாறு தனித்து வாழ வேண்டும். இதற்கிடையே இறந்தவருக்கு செய்யப்படுவது போல பக்கீரானவருக்கும் மூன்றாம் நாள் சடங்கும், பின் 40ம் நாள் சடங்கும் இஸ்லாமிய சமூக வழக்கப்படி செய்யப்படும். இவ்விதம் இறந்தாராகக் கருதப்படும் இஸ்லாமியப் பாணர் பின், இறைவனின் அருள் பெற்றவராகவும், அருகாமையில் வாழ்பவராகவும் கருதப்பட்டு, அவரின் தேவைகளை இஸ்லாமிய மக்களே நிறைவு செய்து காப்பாற்றுவார்கள்.

பல பகுதிகளில் இக்கலை நலிந்து விட்டாலும், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் ஓரு சில பகுதிகளில் உயிர்ப்போடு இருக்கிறது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</