போர் மனிதனை விலங்காக்குகிறது. கலை மனிதனின் மனதை லேசாக்கி, கருணையையும், கனிவையும் புகுத்தி தெய்வமாக்குகிறது. கால் போக்கில் நடந்து, மனம் போன போக்கில் இயங்கிய ஆதிகால மனிதன், வேட்டைக்கருவியாக 'வில்'லை இனங்கண்ட காலத்திலேயே இசைக்கருவியாகவும் அது பரிணமித்து விட்டது. பசியாறிய களைப்பு நீங்க, வில்லை திருப்பி வைத்து நாணால் தட்டி கானகத்தை கலங்க வைத்த ஆதி மனிதனே முதல் வில்லிசைக்காரன்.
|
அதன் பின் போர்க்கருவியாக 'வில்' பரிமாணம் பெற்றபோது, வில்லடியும் களம் மாறியது. வில்லிசை, வெற்றியாளனின் குதுகலமாக அவதரித்தது. தொடர்ச்சியாக, நாகரீகம் மனித இனத்தின் பாதையை மாற்றி, இயந்திரவியல், மின்னணுவியல் சகாப்தங்களில் நிறுத்தி விட்ட தருணத்திலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து, உருவ, உள்ளடக்க மாற்றங்களுடன் மிஞ்சி காலத்தோடு இன்றும் கலந்திருக்கிறது வில்லிசை. |
வில்லிசை உக்கிரமான மகிழ்ச்சி. எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் குரலும், மனமும் போன போக்கில் உதித்த இந்தக் கலை போர்க்களத்தில் தொய்ந்து நிற்கும் போர்வீரர்களின் களைப்பை நீக்கவும், தங்கள் மூதாதைகளின் வீர வரலாற்றை போதித்து உரமேற்றவும் பயன்படுத்தப்பட்டது தான் ஜனரஞ்சகமான வரலாற்றின் தொடக்கம்.
இந்த கலையை முறைப்படுத்தி, இலக்கணமிட்டு அறங்கேற்றியவர் 15ம் நூற்றாண்டை சேர்ந்த பெயர் தெரியாத ஒரு அரசவைப்புலவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொரு தரப்பு, அருதக்குட்டி புலவர் தான் வில்லிசையை இலக்கணச் சுத்தமாக முழுமைப்படுத்தினார் என்கிறார்கள். இக்கலை கி.பி.1550ம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்ட கொடை விழாக்களில் இன்றளவும் வில்லிசை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என வட்டாரத்துக்கேற்ப பெயரிட்டு அழைக்கின்றனர். தற்காலத்தில் கோவில் சார்ந்த நாட்டார் கலையாக இதன் வடிவம் சுருங்கி விட்டது.
இந்த கலைக்குறிய மேடை, தெய்வத்தின் நேர் எதிரில் அமைக்கப்படும். வில்லுப்பாட்டு நடத்தப்படும் கோவிலின் தலைமை தெய்வத்தைப் பற்றிய கதையே பாடலில் முதன்மை பெறும். பனங்கம்பு, மூங்கில் ஆகிய மரங்களில் வில் செய்யப்படுகிறது. வில்லிசை கருவியின் நாண் இல்லாத பகுதி வில் கதிர் எனப்படுகிறது. ஏழு அடி நீளமுள்ள வில்கதிரின் நடுப்பகுதி பெரிதாகவும், வில்லோடு இணையும் அதன் முனைகள் சிறிதாகவும் இருக்கும். கதிரின் மேல் வண்ணத்துணிகளை கட்டி அழகுபடுத்தி சாயம் பூசப்படுகிறது. கதிரின் இரு முனைகளிலும் வெண்கலத்தால் இரண்டு பூண்கள் பொருத்தப்பட்டு அதில் நாண் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். விற்கதிரின் பின்னால் வளைந்த பகுதியில் நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டு அதில் வெண்கல மணிகள் இணைக்கப்பட்டிருக்கும். வில்க்கதிரின் நாண் மாட்டுத்தோளால் செய்யப்படும்.
பாடும் போது இசைவாணர் வில்லின் நாண் மீது வீசி இசையெழுப்பும் கம்புக்கு "வீசுகோல்" என்று பெயர். குழாய் போன்ற வடிவத்தில் இருக்கும் அந்த கோலின் உள்ளே வெண்கல பரல்கள் இடப்பட்டிருக்கும். நாணில் இந்த வீசுகோல் விழும்போது சலசலவென்று பரல்கள் ஒலியெழுப்பி வசீகரிக்கும். வில்லிசையின் முக்கிய துணைக்கருவி குடம். இதை கடம் என்றும் சொல்வதுண்டு. மண்ணால் செய்யப்பட்டு சுட்டு வடிவாக்கப்படும் குடத்தை இசையெழுப்பும் கருவியாக்க சில சித்து வேலைகள் செய்யப்படும். வாழை நார் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட பந்தடையில் குடத்தை வைத்து இசைக்கலைஞர் பாடலுக்கு தகுந்தவாறு இசையெழுப்புவார். குடத்தில் அடித்து இசையெழுப்ப "பத்தி" என்ற கோலை பயன்படுத்துவர். பத்தியால் அடித்தால் குடத்திற்கு பாதிப்பு வருவதில்லை. தற்காலத்தில் வசதி குறைந்த கலைஞர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடங்களையே இசைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
|
வில்லிசையின் இன்னொரு முக்கிய துணை இசைக்கருவி உடுக்கை. இடை சுருங்கியும், வாய் பெருத்தும் இருக்கும் உடுக்கையின் இரு முகப்புகளிலும் பனங்கிழங்கு நாரால் வளையங்கள் செய்து கோர்த்து, கன்றுக்குட்டியின் தோலைக் கட்டி காய வைத்து இசைப்பார்கள். உடுக்கை தான் இசையை உக்கிரமாக்கும். பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிக்கு கொண்டு சென்று, மேடையை தெய்வீகமயமாக்குவது இந்த இசைக்கருவி தான். |
அடுத்த துணை இசைக்கருவி ஜால்ரா. இது தவிர தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டை என்ற இசைக்கருவியும் வில்லுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது மரபு வழி இசைக்கருவிகள் தவிர, ஆர்மோனியம், தபேலா, ஆல்ரவுண்ட், பம்பை உள்ளிட்ட பல கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. பாடல் பாடுபவரை "அண்ணாவி" என்கிறார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருவிகளுக்கு பூஜை நடைபெறும். முதலில் அண்ணாவி அமருவார். பின் பிற கலைஞர்கள் அமருவர். தொடக்கத்தில், அனைத்து கலைஞர்களும் ஒரு சேர "ராஜமேளம்" இசைப்பார்கள். பின் காப்புப்பாடல், குரு வணக்கம், அவை வணக்கம். பிறகு கதை தொடங்கும். பெரும்பாலும்,
"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட
ஆமா வில்லினில் பாட.. வந்தருள்வாய் கணபதியே.." என்றே நிகழ்ச்சியை தொடங்குவார் அண்ணாவி. 5 அல்லது 6 மணி நேரத்துக்கு நீளும் வில்லிசை. அண்ணாவி வில்லில் அடித்து இசையெழுப்பிக்கொண்டே அபிநயத்தோடும், வார்த்தைகளுக்கு தகுந்த ஏற்ற இறக்கங்களோடும் பாட, மற்றவர்கள் சுவாரசியமாக "ஆமா.." என்பார்கள். சில நேரங்களில் இடக்காகவும் பேசி அவையை நகைப்பூட்டுவார்கள். பரம்பரைக் கலைஞர்கள் ஒத்திகை பார்க்கும் வழக்கமில்லை. இசையில் மிகவும் லயித்துப்போய் பாடுவார்கள்.
ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் ஒரு சில பெண்களும் ஜொலித்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் பல இளம் பெண்கள் பாடுகிறார்கள். திரைப்படத்தின் தாக்கங்களுக்கு உட்பட்டும் நசிந்து போகாமல் இன்று வரை சிற்சில சிதைவுகளோடு மிஞ்சியிருப்பது வில்லிசையின் சிறப்பு. தொழில்முறையாக வில்லிசையைக் கைகொண்ட கலைஞர்கள் இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். சிற்சில நெளிவு சுழிவுகளோடு திரையுலகம் சார்ந்து இயங்கும் சில கலைஞர்கள் செழிப்போடு இருக்கிறார்கள். பலர் எயிட்ஸ் விழிப்புணர்வு, காச நோய் விழிப்புணர்வு என்று வடிவத்தை மாற்றி வயிறு வளர்க்கும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும், எந்த சமரசமும் இல்லாமல் இன்னும் இதை தெயவீக கலையாக உருமாற்றாமல் பயன்படுத்தும் கலைஞர்களும் கொஞ்சம் மிஞ்சியிருக்கவே செய்கிறார்கள்.
வில்லிசையில் சாத்தூர் பிச்சைக்குட்டியை மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞராக அடையாளப்படுத்தலாம். திரையுலகம் பிச்சைக்குட்டியின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிச்சைக்குட்டியிடம் வில்லிசை பயின்றவர்கள். இடைக்காலத்தில் நாடார் இன மக்களிடம் செழிப்புற்றிருந்த இக்கலை இடையில் நசிவுற்று பிற்காலத்தில் பிள்ளைமார்கள் மீட்டு வளர்த்தெடுத்ததாக சொல்கிறார்கள்.
நாகர்கோவில், திருநெல்வேலி வட்டாரங்களில் அண்மைக்கால ஊடகத்தாக்கங்களைத் தாண்டி பலத்த ரசிகர் கூட்டத்தினிடையே இன்றளவுக்கும் நடைபெற்று வருகிறது வில்லுப்பாட்டு.
- ஒளியும் ஒலியும்
|