முற்றம்
டப்ளின் நகரைப் போல திருவண்ணாமலை நவீன தமிழ் கலை இலக்கியத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டுமென பல தமிழ் ஆளுமைகள் தொடர்ந்து பேசுவதற்கான காரணம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மோலாக இங்கு தொடர்ந்து நிகழ்ந்துவரும் புதிய புதிய முயற்சிகள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பெரும் மனிதத் திரளை சங்கமிக்க வைத்த கலை இலக்கிய இரவு என்கிற வடிவம் தமிழகமெங்கும் நகலெடுக்கப்பட்ட போது அதிலிருந்து விலகி கொஞ்சம் நாள் மெளனம் காத்தோம்.
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெரும் நிலப்பரப்பிலான மண் மைதானத்தில் முப்பது, நாப்பது பேர் வட்டமடித்து உட்கார்ந்து, தமிழின் முதல் கலைஞன் என அடையாளப்படுத்தப்படும் கோணங்கியோடு ஆரம்பித்தது முற்றம்.
அடுத்த நிகழ்வே டேனிஷ்மிஷன் பள்ளியுன் புராதனமான ரெட் பில்டிங் முன் முற்றத்தில் தொடர்ந்தது.
தமிழின் ஆக சிறந்த படைப்பாளிகள், ஆளுமைகள், கல்வியாளர்கள் என அது மிகக் குறுகிய காலத்திலேயே மொழி, மாநிலம் கடந்து இந்திய அளவிற்கான தழில் வாசல் என ஆனது. பால் சக்காரியாவில் தொடங்கி, டெல்லியிலிருந்து வந்த கவிஞர் சச்சிதானந்தன் வரை பெரும் கனவுகளின் நிஜத்தில் அம்மைதானம் கெளரவப்பட்டது.
சுந்தர ராமசாமி, தமிழவன், நாஞ்சில்நாடன் எனத்துவங்கி கே.எண்.பணிக்கர், வசந்திதேவி, திரும்பாம்பரம் சண்முக சுந்தரம் என பல்வேறு ஆளுமைகளால் விரிந்த அதன் கிளைகள் அசுர வேகத்தில் வளர்ந்தது.
கேளிக்கை மனத்திற்கு முற்றம் மெளனமாக தடைபோட்டது. சகிக்க முடியாத ஒரு சமூக அமைப்பை படைப்பாளர்களும், கலைஞர்களுமாக சேர்ந்து தங்கள் வாசகர்கள் முன் லேசாக அசைத்துப்பார்த்த நேரடி நிகழ்வாக அதன் வெற்றியை அம்மைதானத்தின் இருளடைந்த ஏதாவதொரு மூளையில் தனியே நின்று கவனிக்கும் போது மனம் பெருமிதப்பட்டிருக்கிறது.
எத்தனையோ பெரும் சிரமங்களுக்கிடையே என் அன்பு நண்பர் தவநெறிச் செல்வன் அவர்களின் ஒரு சிறு பங்களிப்புடன் இந்நிகழ்வை உலகம் முழுமைக்கும் சாத்தியப்படுத்துகிறது இணையம்.
- பவா செல்லதுரை
|