நீங்களேன் கவிதை
எழுதுகிறீர்கள்
வதையும் காதலும்
அரசியலும் தற்கொலைகளும்
நீங்கள் செய்வதில்லையே
பின்னேன் கவிதை எழுதுகிறீர்கள்
பித்தும் ஆற்றாமையும்
கள்ளக் காமமும் நிர்வாணமும்
உங்களிடம் இருப்பதில்லையே
பிறகெதற்காக கவிதை எழுதுகிறீர்கள்
மார்புக்கூடு துருத்தும் உடலும் பசியும்
துர்நாற்றமெடுத்து அழுகும் சருமமும் கடும் நோயும்
உங்களிடம் இருந்ததில்லையே
எதன் பொருட்டு கவிதை எழுதுகிறீர்கள்
சாக்கடைக்கு அருகில் வீடும் கிழிந்த ஆடைகளும்
அழுக்கும் பிச்சையும் இருப்பழிந்த போதைகளும்
உங்களிடம் பார்த்ததில்லையே
எதனால் கவிதை எழுதுகிறீர்கள்
வன் புணர்வும் துவக்குக்கு எதரில் நிற்கவும்
தாயைப் புணரவும் தூக்கு தண்டனையும்
உங்களுக்கும் உறவுகளுக்கும் விதிக்கப் படவில்லையே
எதற்காக கவிதை எழுதுகிறீர்கள்
சக்கிலியராகவும் பறையராகவும்
மிருக காட்சிசாலை வனமிருகமாகவும் சமயலறைச் சிறுமியாகவும்
நீங்கள் பிறக்கவில்லையே
எதைச் சொல்லிட கவிதை எழுதுகிறீர்கள்
நீங்களேன் கவிதை
எழுதுகிறீர்கள்
|