தொக்கையான சிகப்பு புத்தகத்தை
விரித்து கைகளை உயர்த்தினார் பாதிரி
ஆதியிலிருந்த வார்த்தை கடவுளானது
வார்த்தைகள் மூச்சு விடுகிறது
மொழி வழி ஊடாடும்
வினைகளை உட்செறித்தேன்
நேர்கோடாயும் எதிர்கோடாயும் தொடர்கிறது
அதன் புரிதல்கள்
போய்ச் சாவுடா என்ற பதம்
அடிக்கடி சொல்லும் நண்பன்
தூக்கிட்டுக் கொண்டான்
மிகச் சாதாரணமான மதியப் பொழுதில்
வாழ்க வளமுடன் சொல்லும்
திருநீற்று நெற்றி கொண்ட அண்ணா
இறைவனடி சேர்ந்தார் விரைவில்
கடும் நோயின் வளத்துடன் பரிதாபமாக
நோய்கண்டு வருடங்கள் ஆகிறது
என்று சொன்ன மூன்றாம் நாளில்
காய்ச்சல் கண்டு படுத்தேன்
இனி உச்சரிக்கக் கூடாத வார்தைகளை நினைவு கூர்ந்து
அச்சமூட்டுகிறது மொழி
சொற்களை எல்லாம் தட்டையான சில்லுகள் போல
காற்றை கிளித்து
அதன் புவியீர்ப்பில்
அதன் வழிப்பாதையில்
உலவித் திரிகிறது
மோதித் திரும்ப வருகிறது.
மோனம்
மௌனம்
சூன்யம்
சுன்னம்
இவை உத்தரித்த தருணங்களில்
சொற்கள் தோன்றியிருக்கலாம்
தியானமாக இருக்கிறது மொழி
பல பொருள் கொண்ட
ஒரு சொல்லில்
வியாபித்திருக்கும் அறிதல் வகை
மூளை நரம்பின்
ஆட் புலனில் மொழியின் சேர்வை
எவரும் விளக்கவில்லை
எவருக்கும் விளங்கவில்லை
விஞ்ஞானமாக இருக்கிறது சொல்
வார்தைகள் எல்லாம் நல்லவைகளே
வார்த்தைகளில் எது கெட்ட வார்த்தை.
மொழி பிரார்த்தனையாகிறது
பிரார்த்தனை கடவுளாகிறது
ஆதியிலிருந்த வார்த்தை கடவுளானது.
|