அசுத்த வரிகள்
இருந்த ஒத்தப்பட்டுச் சீல ஜரிகைய
வித்துதான் மினி ட்ராப்டருக்கு அம்மா
காசு குடுத்துச்சு
தீட்டுதுணிக்குங்கூட ஒதவாதத வச்சு என்ன
செய்யன்னு சொன்னாலுங் கண்ணுல
தண்ணி கோத்துருச்சு அப்பத்தா இதுங்
கலியாணத்துக்கு எங்கியோ நெச்சு வாங்கியாந்ததாம்
அன்னிக்கு அப்பனுக்கும் அம்மாவுக்கும் செம சண்ட
லச்ச ரூவா குடுத்தாலும் பொண்ணுங்க
ஹாஸ்டலுக்கு வேலைக்கு போமாட்டேன்னுச்சு
அப்பன் என்னிய பார்த்துக்கிட்டே
அப்பலேர்ந்து பெரியவாத்தி
பேசுறதும் பாக்குறதும் சரியில்ல
அப்பனுக்கு இப்பல்லாம் கண்ணு செரியா
தெரிய மாட்டெங்குது
அதுந்தான் என்ன செய்யும்
சாராயம் குடிக்காட்டி அடப்பெடுக்க எப்பிடி எறங்க
முடியும் பீத்தொட்டிக்குள்ளாற
நெஞ்சு வலிக்குது
அம்மாட்ட எப்பிடி சொல்றது வாத்திய அறஞ்சத
******************************************
வளர்ப்பு மிருகம்
பெருந்துயருக்குப் பிறகான மௌனங்களில்
பிணைந்து கிடக்கும் வேசைத்தனமும் நடிப்பும்
அருவருப்பானது.
கசிந்தொழுகும் பாவனைகளில்
ஊறிக்கிடந்த சொற்களின் கனிவில்
மிதந்ததெல்லாம்
தோலுரிக்க கொதிநீரில் அமிழ்ந்த
மிருகத்தோலின் கொழுப்புவீச்சம் .
உசிதமானவற்றின் மீதான
உணர்விளக்கம் செலுத்திய
திசையின் இரையென
வியூகத்துடனான தந்திரங்களின்
பிரயோகங்களில் புலனொடுங்கிய
மென்னுயிரியின் மீது எய்திய
வெற்றியென எக்காளமிடும் உவகை
எவ்வெப்பொழுதும் நிரப்பிய சிரிப்பின்
வெளிச்சத்தில் ஒட்டியிருந்தது
யாரோவின் கனவு சாம்பல் .
பசித்த குஞ்சுகளின்
அலகுத்திறப்பில் மின்னும்
சூரியனின் எச்சமெனகிடக்கும்
நீர்நிலை வெளியில்
காய்ந்து கொண்டிருக்கும் வலைகள்
இமைப்புகள் தோறும் வீசிப் பரப்பிய கண்ணிகள்.
சாயல்களுடனான ஒப்பீடுகளில்
சாவை புசிக்கத்தரும் உன் கருணைக்கு
மயங்கிக் கிடந்த பித்து இரக்கத்திற்குரியது .
...............பேரூழிக்குப் பின்னும்
விந்தின் அடர்த்தியுடன் உயிருலவும்
கண்ணீரில் மிகுந்து வளர்கிறது
நெடும் யாசிப்பின் ஈவாய் வழங்கப்
பெறும் பிரியத்தின் பிணை
மடிந்த உதடுகளின் விசும்பல் நடுக்கம்
வதையின் ஈற்றாய் விழுங்கும் சப்தங்களின்
வதையை முத்தங்களால் மூடும் உதடுகள்
புதையுண்டிருக்கும் கிரகதூரத்தை கடக்கும்
நெடும்பகல் உச்சிப் பொழுதின் கடல் நிழலில்
**********************************************
மீதமிருக்கிறது
கழிவறை கதவில் ஸ்டிக்கர் பொட்டு நட்சத்திரங்கள்
தாவணிகள் மற்றும் வண்ணக் கோலப் பொடி டப்பாவும்
சமையல் புத்தகமும்
மீதமிருக்கிறது யாருக்கும் தெரியாமல்
சோப்பில் செதுக்கி இருக்கும் பெயர்
உள்ளாடை மஞ்சளிடையே உதிரக்கறை
ரீசார்ஜ் கடையின் பாக்கி மற்றும் சில அசைவ குறிப்புகள்
மீதமிருக்கிறது
விற்கும் முன் கழற்றிய திருஷ்டி சங்கு
வண்டிக்கு பழக்கிய நுகத்தடி
தீவனத்தொட்டியில் கழுத்து அழுக்கு
மரத்தூணில் கொம்பு தேய்த்தத் தடம்
ஆனால் யாருக்கும் தெரியாமல்
உரித்தத் தோலில் தார்க்குச்சி காயங்கள்
குளம்புகளில் தேய்ந்த லாட யிரும்பு
பண்ணையாள் கலந்த விஷம்
மீதமிருக்கிறது
ஓய்ந்த பொழுதில் வாசிக்கும் தோல்பறை
எண்கள் அழிந்த செல்போன் ஒரு எப் எம் ரேடியோ
வெயிலில் வைத்து கேட்க ஒரு சோடி பேட்டரி
ஒரு டார்ச் லைட்டு
எல்லோருக்கும் தெரியும்
மோட்டர் ரூம்பு கூரையில் இருக்கும் ராக்கொடி
பாண்ட்ஸ் பவுடர் டப்பாவுக்குள் இருக்கும்
அவ்வப்போது ஏறிய தாலிக்கொடி
பூச்சிமருந்து கேனுக்குள் இருக்கும் ஆணுறைகள்
|