பசியடங்க உண்பதெல்லாம்
ருசியற்றுப் போனது
கடந்து செல்லும் பாவைகளிடத்தில்
உன் சாயல் தெரிந்தது
திசையெங்கும் உன் வாசம்
வானெங்கும் உன் எழில் தோற்றம்
தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களெல்லாம்
என்னிடத்தில்
உன்னைப் பற்றி நலம் விசாரிக்கின்றன
‘அவள் பொன்மேனியை
மழையாய் நான் சற்று
உரசலாமா’- என்று
கருமேகம் கூட
என்னைக் கிண்டல் செய்கிறது
‘அவள் கைகளில் தவழும் குடையாக
நீ பிறந்திருந்தால்
அவள் கூடவே இருக்கலாமென்று’-
கதிரவன் என்னைப் பார்த்துக்
கண்சிமிட்டியது
‘சொகுசுவாகனம் இல்லையென்று
கலலைப்படாதே
மேகங்களில் நீ அவளுடன்
உல்லாசமாய் ஊர்வலம் செல்லலாமென்று’
கிளியொன்று பறந்தோடி வந்து
காதில் கிசுகிசுத்தது
நேற்றிரவு என்னைப் பற்றிய
நினைவுகளில் ஆழ்ந்து
அவள் கன்னம் சிவந்ததாக
வெண்ணிலா என்னிடம்
ரகசியம் சொல்லிச் சென்றது
‘உனக்குறியவளின் மூக்குத்தியாக
நான் மண்ணில் வந்து
ஜொலித்திடவா’ - என்று
அனுமதி கேட்டு
வான் நட்சத்திரங்கள்
என் வீட்டு வாசலில்
வரிசையில் காத்திருந்தன
‘என்னைப் பற்றிய கனவுகளின்
இடைவிடாத தொந்தரவுகளால்
உறக்கம் வந்து அவளைத்
தழுவுவதே இல்லை’ - என
புவிமகள் வந்து புது செய்தியொன்றை
விடியலில் தந்தாள்
‘தேன்நிலவுக்கு தேவலோகம்
வந்துவிடுங்கள்’ - என்று
தேவேந்திரன் வேண்டுகோள் வைத்தான்
இந்திரனிடம் நான் சொன்னேன்
என் தேவதை இருக்குமிடமே
எனக்குத் தேவலோகமென்று! |