அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
--கலாப்ரியா
-----------------------------------------
சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை --கல்யாண்ஜி
-----------------------------------------
ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
--நகுலன்
----------------------------------------- வாழ்க்கை
நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை.
-- பசுவய்யா
-----------------------------------------
என்ன மாதிரி
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.
என்ன மாதிரி உலகம் பார் இது.
--ஞானக்கூத்தன்
கவிதைகள்
-----------------------------------
கவிதைகள்
கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
-----------------------------------
தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது
சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
விண்ணும்,மண்ணும்
உன் பெயர் சொல்லும்
விடியல் வந்து
உன் கனவினை விரட்டும்
கடலில் கலக்கும் நதியென நான்
உன் உயிரில் கலக்க
ஓடோடி வருகிறேன்
உயிரை வதைக்கும் கொடிய பிணி
என் உடலை வாட்டி எடுக்கும்
நிலையில்
உன் தேன்குரல் வந்து
செவிகளில் பாய்ந்தால் போதும்
எனது கல்லறை கூட
சிறு சிறு கற்களாய் சிதறிப் போகும்.
காற்றில் அசையும்
மரக்கிளைகளைப் போல்
என் உண்மைக் காதல்
உன் மனக்கற்பாறையையும் கரைக்கும்.
காற்றின் போக்கில் வெண்மேகம் செல்லும்
நான் கொண்ட காதலுக்காக
எனது இதயம்,
அவளின் இசைவு வேண்டி
என்னவளிடத்தில் சரணாகதி கொள்ளும்.
பூக்கள் திரண்டு சாமரம் வீசும்
தோட்டத்துப் பூக்களெல்லாம்
மலர்களின் ராணியின்
மலர்ந்த முகம் காண
வைகறைப் பொழுதிலிருந்து
அவள் பவனி வரும்
பாதை பார்த்து
கண்கள் பூத்து தவம் கிடக்கும்.
அணிந்திருந்த
ஆடையையும் மீறி பொங்குகிறது
அழகுக் கடலிலிருந்து
ராட்சச அலைகள்
கரை கடக்க,முக்குளிக்க
பேரெழிலாய்,சுடரொளியாய்,முழுநிலவாய்
பிரகாசிக்க
எப்போது என் கைத்தடம்
பற்றப் போகிறாய்?
காதல் வானில்
சிறகடித்துப் சுதந்திரமாய்
நாமிருவரும் இணைந்து பறக்க...
மின்னலின் வெளிச்சத்தில்
உனது தோற்றம் கண்டேன்
ரகசியமாய்
வானம் எடுத்த புகைப்படமோ- என
மென் சந்தேகம் கொண்டேன்.
மோகம் வளர்க்கும்
தீ ஜுவாலைகள் மத்தியில்
உனது கண்கள் ஏற்றிவைத்த
காதல் தீபத்தின்
நிலைச்சுடரின் ஜோதியில் கலந்து
வீழ்ந்துமடிய விரும்புகிறது
இந்த விட்டில் பூச்சியின்
சின்ன இதயம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.