அபிலாஷ் கவிதைகள்
பசியும் பிரார்த்தனையும்
தேவாலய மணி ஒலிப்புக்கு
படுத்தபடி
பசித்த பூனை நெட்டி முறித்தது
கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஓசைகளிடம்
முறுக்கி
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்
முடிவில்
துழாவி நீந்தி வேதாகாம ஒலி நாடாவுக்கு
ஏதோ சொல்லியது
கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கலையும் முன்
வானிருளைக் கலைக்க
வாணவேடிக்கை தெறிப்புகள் --
எட்டாவது மொட்டை மாடி ஜன்னல் திண்டில்
ஆழம் பார்க்கும் பூனை
தலை உயர்த்தும் முன் --
தத்தம் இடங்களுக்கு
--------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்குள் வரப் பிடிக்காத பூனை
கிளர்த்திய தூசுகளாய்
எங்கும் அலைந்து திரியும் பூனை
சில நேரங்களில் கேட்டும் கேட்காத மாதிரி பார்த்து
பல நேரங்களில் பார்த்தபடி உதாசீனித்து
என் கவனம் கிடைக்காத வேலைகளில்
வேண்டுதல், கெஞ்சல், தேம்பல், கோபம், சுயவிவாதம், நியாய விசாரணை என
ஒவ்வொரு தொனியிலாய் முடிவற்ற அழைப்புகள் செய்து
யாருக்கும் புரியாத செல்ல விசாரிப்புகளுக்கு மட்டும்
அரைத்தூக்கத்தில் ங்...ம் என முனகி
சில வரிகளில் அடங்கும் பூனை வாழ்வு
தூக்கம், உணவு தவிர்த்த
தேவை:
விளையாட்டுக்கள்
தொந்தரவற்ற இடங்கள்
அடையாத தொலைவுகளை நோட்டமிட உயரங்கள்
வேறு புகார்கள் இல்லை
லோசன் ஊற்றி துடைத்து
நுண்ணியிர்கள் வெளியேற்றி சுத்தம் செய்த நாளொன்றில்
வீட்டுக்குள் வரமறுத்தது
பூனை |