ரோஸ்லின் கவிதைகள்
ரோஸ்லின, சென்னை |
ஞாயிறு, 21-02-2010, 7:53 PM |
ஏக்கம்
என்னுள் ஆயிரம் மின்னற் பூ பூத்தது
உன் குரல் கேட்கும் அந்நொடி
வரவேண்டும் .
ஆம்!
அருமையான அந்நொடிக்கு
மரணம் இல்லா வரம் வேண்டும்!
பனிக்காக ஏங்கும் மலரைப்போல
ஏங்கினேன் நான் உன் முகம் காண
உன் முகம் காணும் அத்தருணம்
மலர்ந்தேன் நான்
நல் மணம் வீசும் மலராக.
சுகமான சுமையாக நீ இருக்க
அச்சுமையைச் சுகித்து சுமக்கும்
சுமைத்தாங்கி நான்.
கருவறையைக்காட்டிலும்
கருமையானது உன் பிரிவு
என் கண்கொண்டு
உன்னைக்காணும் அந்நொடி
என் வாழ்வில் காரிருள் அற்ற காலமாகிறது.
நான் செயல் இழந்தேன்
வியப்பிற்குரிய உன் செயல்களால்.
நான் பார்வை இழந்தேன்
உன் பாசமிகு பார்வையால்.
கடைசியாக உன் மலர்பாதத்திற்கு
என்னை அர்பணித்தேன்
பாசமிகு பிள்ளையாய்!!
நட்பு
மலரின் மணம் மாசற்றது.
தாயின் அன்பு துயரமற்றது.
பாலின் நிறம் வெண்மையானது.
இவையனைத்தும்
நிலையானது, நிரந்தரமானது.
அதுப்போல
நட்பும் சுயநலமற்றது, சுகமானது.
நாடித்துடிப்போடு ஒப்பிடலாம் நட்பை.
நாடித்துடிப்பின்றி நம்முடல் நமதில்லை.
அதுபோல் நட்பின்றி நண்பர்கள் இல்லை.
பாசம்
உள்ளத்தை ஊடுருவும்
இந்த உலர்காற்றில்
கண்ணைக்கவரும்
இந்த ரோசா தோட்டத்தில்
தயக்கத்தைப் போக்கும்
இந்த தனிமை உலகத்தில்
என் இதயத்தைப்
பறிக்கொடுத்து நின்றாலும்
என் இதயத்தைத் திருடிய
கள்வனைக் காணாமல்
என் கண்ணீர் துளிகள் ததும்ப
அக்கண்ணீர் துளிகள்
இம்மண்ணில் விழும் முன்
என் கண்ணின் மணியே
அத்துளியை கையில் ஏந்தியது.
தமிழுணர்வு
தமிழா தலைநிமிர்ந்து நில்!
உன் தடைகளைத் தகர்த்தெறிந்து,
வீறுக்கொண்டு எழு !
உன் விடியலை நோக்கி.
தெளிவுக்கொண்டு எழு!
உன் திறமைகளை நோக்கி.
சாந்தம் கொண்டு எழு!
உன் சாதனைகளை நோக்கி.
தமிழனுக்கு நிகர் தமிழனே என்னும்
தணியாத தாகம் கொண்டு எழு!
பின்பு அடைவாய் நீ
உயரத்தின் உச்சநிலை!
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழினம்!
வாழ்த்துப்பாடட்டும் தமிழ் மக்கள்!
கண்ணீர் காணிக்கை
சிவப்பா? சிவப்பா?
சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே
பதறுகிறது மனம்.
இறைவன் படைத்த
இனிமையான உணர்வுகளான
இரக்கம், பரிவு, பாசம், சாந்தம் போன்ற
உணர்வுகளை மறந்து
மரக்கட்டைகளான மனிதர்களால்
மாண்ட உயிர் பல்லாயிரம்!
ஈவு இரக்கமற்ற
இம்மனிதர்கள் இருந்தும்
இல்லாததற்கு சமமே இப்பூவுலகில்!
மாண்ட உயிர்கள் அனைத்தும்
மரியாதைக்குரியவையே இம்மண்ணுலகில்!
மாண்ட என் இதயம் மறவா சகோதர்ர்களுக்கு
என் மனமார்ந்த கண்ணீர் காணிக்கை!!
|