இந்தியனா நீ....
ஊழலால் இந்நாடு
உருக்குலைந்து போனாலென்ன.. - இன்பச்
சூழலில் நம் காதல்
சுகமாக வாழட்டும்!
எல்லையில் தீவிரவாதம்
எப்படி வளர்ந்தாலென்ன...- எந்தத்
தொல்லையுமின்றி நம் காதல்
தொடர்கதையாய் நீளட்டும்!
மதவெறியால் இச்சனங்கள்
மடிந்தால் நமக்கென்ன....- சுவை
இதம்தரும் உன்னிதழில்
இன்பவெறி ஊறட்டும்!
அன்னிய நாட்டுக்கடன்
அளவின்றி உயர்ந்தாலென்ன...- நான்
உன்னிடம் பட்ட கடன்
உயிருள்ளவரை தொடரட்டும்!
விலைவாசி நாளுக்குநாள்
விண்ணுக்கு உயர்ந்தாலென்ன.....- நாம்
சுகவாசம் அனுபவிக்கச்
சுதந்திரமாய் செலவழிப்போம்!
என்றுதான் எண்ணியிருந்தேன்
என் மனதில் நேற்றுவரை...
இதயத்தில் ஓர் குரல்..
"இந்தியனா நீ? என்று!
மனச்சாட்சி உறுத்துதலால்
மறந்துவிட்டேன் உன் நினைவை!
மறுபிறவி ஒன்றிருந்தால்
மறுபடியும் காதலிப்போம்!
|