ம.ஜோசப் |
வெள்ளி, 16-04-2010 ; 10:10 PM |
இயேசு கிறிஸ்துவின் காலத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து அடிப்படையான விபரங்களை இக்கட்டுரை
ஆராய்கிறது. அவரது வரலாற்றுப் பின்னணி, அவரைக் குறித்தும், அவரது போதனைகள் குறித்தும் புதிய புரிதல்களுக்கு
வழிவகுக்கும் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாற்றுப் பின்னணி
கிறிஸ்து பிறப்பு வரையுள்ள இஸ்ரவேலரின் வரலாறு குறித்த இச்சுருக்கமான குறிப்பு இக்கட்டுரையின்
சில விபரங்ளை புரிந்து கொள்ள உதவும். பெரு வெள்ளத்தில் காப்பற்றப்பட்ட நோவாவின் புதல்வர்களான சேம், காம்,
யாபேத்து ஆகியோர்களில், சேமின் (Shem) வழிமரபினர் செமிட்டிக் இனத்தவர் (semitic tribes) என அழைக்கப்படுகின்றனர்.
இஸ்ரவேலர் ஒரு செமிட்டிக் இனத்தவர் ஆவர். செமிட்டிக் இனத்தவராகிய ஆபிரகாம் ஏறக்குறைய கி.மு.1900-ல்,
குடும்பத்துடன் கானான் தேசத்திற்கு வருகிறார். அவர்களது மூதாதையர்கள் ஊர் (சுமேரிய நாகரீக நகர்) பகுதியைச்
சார்ந்தவர்கள். கானான் தேசம் என்பது இப்போதுள்ள இஸ்ரவேல் நாடு, பாலஸ்தீன நாடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளைக் குறிக்கும். அவரின் வழி மரபினரான யாக்கோபு, எகிப்து நாட்டிற்கு, கானான் தேசத்தில் ஏற்பட்ட
மாபெரும் வறட்சியின் காரணமாக, குடும்பத்துடன் சென்றார். (யாக்கோபின் 11-ஆம் புதல்வர், ஜோசப், அவரின்
சகோதரர்களால் அடிமையாக எகிப்திய வியாபாரிகளுக்கு விற்கப்பட்டு, சில காலம் கழித்து, நன்னடைத்தையாலும்,
கூர்மையான அறிவாலும், எகிப்தின் பாரோவுக்கு (pharaoh) ஆலோசகராயிருந்தார், அவர் தனது தந்தையின் குடும்பத்தினரை,
பாரோவின் அனுமதியுடன் எகிப்திற்கு அழைத்துக் கொண்டார்). ஆபிரகாமின் சந்ததியினர், எகிப்தியர் பொறாமை
கொள்ளும் அளவுக்கு, பெரும் மக்கள் திரளாக பெருகினர். காலப்போக்கில் அவர்கள் எகிப்தில் அடிமைகளாயினர்.
காலம் ஏறக்குறைய கி.மு 1700 - கி.மு.1250.
ஏறக்குறைய கி.மு.1250-ல் மோசேயினால் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கானான் தேசத்தை
அடைந்தனர். அங்கு இஸ்ரவேல் அரசை நிறுவினர். சவுல், தாவீது, சாலமன் போன்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
தாவீது அரசரின் காலம் ஏறக்குறைய கி.மு.1000.பின் அரசு யூத அரசு, இஸ்ரவேல் அரசு என இரண்டாக உடைகிறது.
பின் அசிரியர்களும், பாபிலோனியர்களும் அவ்வரசுகளை ஆண்டனர். ஏறக்குறைய கி.மு.587ல் பாபிலோனிய
மன்னன் நேபுகாத்நேச்சர் யூதர்களை சிறை பிடித்துச் சென்றான். அதன் பின் பாரசீக ஆட்சிக்குட்படுகிறது. பாரசீக
மன்னன் சைரஸ் கி.மு. 538-ல் யூதர்கள் தாய் நாடு திரும்ப அனுமதிக்கின்றான். பின் கி.மு. 333 பேரரசர் அலெக்சாண்டரின்
ஆட்சியின் கீழ் இஸ்ரவேல் நாடு வந்தது. அதன் பிறகு இஸ்ரவேலின் யூதா குலத்தைச் சார்ந்த மக்கபேயர்கள்
கி.மு 166 முதல் கி.மு 63 வரை பிற படையெடுப்புகளிலிருந்து காத்தனர். ரோமப் படைத் தளபதி போம்பே
இஸ்ரயேலைக் கி.மு 63-ல் கைப்பற்றினான். அதன் பின் அது ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ், பெரிய ஏரோது
(Herod the Great) உள்ளிட்ட ஆளுனர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்தான், இயேசு பிறந்த போது,
குழந்தைகள் படுகொலைக்குக் (massacre of innocents) காரணமானவர். இம்மக்களின் மிக முக்கியமான
குணம், மேற்குறிப்பிட்ட வரலாறு முழுவதையும் பதிவு செய்துள்ளனர். அதுதான் விவிலியம் (Bible). உலகிற்கு
இஸ்ரவேலரின் நன்கொடை இதுவாகும்.
பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு
கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. யூதேயாவில்தான் ஜெருசலேம் நகரம் இருந்தது.
யூதேயாவின் ஆளுனரின் அரண்மனை அங்குதானிருந்தது. பெரிய ஏரோதிற்கு பயந்து, எகிப்தில், ஜோசப், குழந்தை
இயேசு மற்றும் மேரியுடன் சில காலம் வாழ்ந்தார். பின் அவரது இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில்
கழிந்தது. அதனாலேயே நசரேயன் என அவர் அழைக்கப்படுகிறார். அதுவும் ரோம ஆட்சிக்குட்பட்டதாகும்.
ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாகமத்தின்படி,
கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது.
இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான்
அவர் போதித்தார். ஏறக்குறைய கி.பி. 30-ல் அவர் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய்க்
குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.
யூத சமூகம்
யூத சமூகம் மிகுந்த சடங்கு, ஆச்சாரங்களுக்குட்பட்ட ஒரு மூடுண்ட சமூகமாகவே இருந்தது.
ரோம ஆளுனர் கீழ் அரசியல் அதிகாரம் இருந்தது. அக்கால கட்டத்தில், அச்சமூகத்தில் பரிசேயர் மற்றும் சதுசேயர்
என்ற இரு பிரிவினர் இருந்தனர். மேலும் திருச்சட்ட அறிஞர்களும், யூத குருமார்களும் இருந்தனர். அவர்கள் அச்சமூகத்தில்
உயர் குடிமக்கள் ஆவர். ஆலயங்களிலும், தொழுகைக்கூடங்களிலும், மற்ற பிற பொது இடங்களிலும் அவர்களே
முதன்மையானவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களே அதிகாரம் பெற்றவர்கள்.
திருச்சட்டம் மோசேயினால் அச்சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டது. 10 கட்டளைகளும், பிற கட்டளைகளும் அதில் அடங்கும்.
இது அசீரிய மன்னர் ஹம்முராபியின் சட்டத் தொகுப்பை ஒத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பரிசேயர்(Pharisees)
பரிசேயர் என்றால் தனித்துவம் உடையவர்கள் (Separated One) என பொருள் கொள்ளலாம். இவர்கள்
திருச்சட்டத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டவர்கள். ஓய்வு நாளை மிகத் தீவிரமாகப் பின் பற்றுபவர்கள். இவர்களில்
ஒரு பிரிவினர் ஓய்வு நாளில் போர் தொடுத்தால் இவர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள். சிரியாவை ஆண்ட ரோம படைத்
தளபதிகள் ஓய்வு நாளில் போர் தொடுத்து வெற்றி அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு சட்ட திட்டங்களில் பற்று
உடையோர் ஆவர். பரிசேயர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும் பழகமாட்டார்கள். அவர்கள் வீடுகளுக்குச் செல்ல
மாட்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் செலூட்கள் (zealots) ஆவர். இவர்கள் போராளிகள் என்றால் மிகையில்லை.
யூத சமூக சடங்கு, சட்ட திட்டங்களை பின்பற்றாமல், ரோம, கிரேக்க சடங்குகளைப் பின்பற்றும் யூதர்களை கொல்வதும்,
அவ்வாறு பின்பற்ற கட்டாயப் படுத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் புரியும் இயல்பும், உடையவர்கள்.
(இவர்களின் தொல்லையால்தான், கி.பி.70 ரோம பேரரசர் டைடஸ், புகழ் பெற்ற, சாலமோன் அரசரால் கட்டப்பட்ட
எருசலேம் தேவாலயத்தை அழித்தார் என வரலாறு கூறுகிறது.)
சதுசேயர்(Sadducees)
இவர்களின் திறந்த மனமுடையவர்கள் எனக் கருதப்படுகின்றனர். ஆட்சியாளர்களுடன் நல்லுறவு கொண்டு,
அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். கோவில் நிர்வாகம் இவரகளின் கையில்தானிருந்தது. இவர்களும் மக்கள் மேல்
அதிகாரம் கொண்டவர்கள். பரிசேயர், சதுசேயர்கள் வேறு வேறான கொள்கை உடையவர்களாயிருந்தும், கிறிஸ்துவை
எதிர்ப்பதில் ஒன்றாக செயல்பட்டனர்.
மக்கள்
ரோம பேரரசில் மக்கள் ஆட்சியால் அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களின் அடிமை வரலாறு மிக நீண்டது. அசிரியர்கள்
காலம் முதல் இது ஆரம்பிக்கின்றது. மேலும் மக்கள் சமூக ரீதியில், பரிசேயர், சதுசேயர்களால் அடிமைபட்டுக் கிடந்தனர்.
அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவர்கள் மீட்பரை எதிர்பார்த்திருந்தனர்.
கிறிஸ்துவின் மக்கள் பணி
கிறிஸ்துவின் மக்கள் பணி (வேதாகமப்படி திருப்பணி) மூன்றாண்டுகள் மட்டுமே. அப்போதனைகள் இன்றளவும்
நிலைத்துள்ளன. பேசப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனைகள்
அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தது. இயேசுவுக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை யூத அதிகார
மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை
(Kingdom of God) நிறுவுவதுமே ஆகும். இதை அன்பின் அரசு என்கிறது வேதாகமம்.
பரிசேயர்கள், சதுசேயர்களை மிக அதிகமாக விமர்சித்தார். 'மாயக் காரர்கள்', என சாடினார். 'சுமக்க முடியாத
நுகத்தடியை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்', எனவும் விமர்சித்தார். 'இறைவனின் இல்லத்தை கள்வர் குகையாக்கினீர்கள்', என
குற்றம் சுமத்தினார், இயேசு. அக்காலங்களில் பெரிய ஆலயங்கள், முக்கிய வியாபாரத் தளங்களக இருந்தன என்பது நினைவு
கொள்ளத்தக்கது. திருமுழுக்கு யோவான் (John the Baptist), அவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', என கூறினார்.
இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்கு கட்டுப்பட்டதே', என்றார். அவர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும்
பழகினார். தாழ்த்தப்பட்ட சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். அவரின் சீடர்கள், செம்படவர்கள் மற்றும்
சாதாரண மக்கள். சில பெண்களும், சீடர்கள் என்பது ஆச்சரியத்திற்கும், ஆய்வுக்கும் உள்ள விபரமாகும். 'கிறிஸ்து
மக்களினிடையே மக்களுக்காக வாழ்ந்தார்', என்றால் மிகையில்லை. பெரும் மக்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது.
'திருச்சட்டத்தை நிறைவு செய்ய வந்தேன்', என்றார். புதிய அன்பின் கட்டளைகளைக் கொடுத்தார். மக்களை
அன்பின் அரசிற்கு தயார் செய்தார். சமூத்தின் மீது ஆதிக்கம் கொண்டவர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கியது, அவரது
போதனைகள். பழமைவாதிகளின் அதிகாரம் ஆட்டம் கண்டது. அவர்கள், இயேசுவைக் கொல்ல தக்க சந்தர்ப்பத்திற்காக
காத்திருந்தனர், என புதிய ஏற்பாடு பலமுறை குறிப்பிடுகிறது. கிறிஸ்துவும், தமது போதனைகளுக்காக, தாம் கொல்லப்படுவோம்,
என்பதை திட்டவட்டமாக அறிந்திருந்தார். அவரே, தனது சாவை சில முறை முன்னறிவித்தார், என புதிய ஏற்பாடு குறிப்பிடுகிறது.
கி.பி. 28ல், கிறிஸ்துவிற்காக, வேதாகமக் கூற்றுப்படி, வழியை ஆயத்தப்படுத்திய இறைவாக்கினர், திருமுழுக்கு யோவான்
கொல்லப்பட்டார். இயேசு, 'எருசலேமே, இறைவாக்கினர்களை (தீர்க்கதரிசிகளை) கல்லெறிந்து கொல்பவளே', என எருசலேம்
குறித்துக் கூறினார். ஆகவே, அவர் சாவை எதிர் நோக்கியிருந்தார், என்றால் அது மிகையானது இல்லை. அவரது சிறப்பானகுணம்,
அவரது போதனைகளுக்கு உண்மையாய் வாழ்ந்தது மட்டுமின்றி, உயிரையே கொடுத்ததுதான்.
உவமைகளின் நோக்கம் இயேசு கிறிஸ்து பேசிய மொழி, அக்காலத்தில், அப்பகுதி மக்கள் பேசிய மொழியான அரமாயிக் ஆகும். அது மேன்
மக்களின் மொழியல்ல. Passion of Christ படத்தில் பாத்திரங்கள் இம்மொழியை பேசுகிறார்கள் என நினைக்கின்றேன். இயேசு
பெரும்பாலும் உவமைகளாலேயே அதாவது சிறு சிறு கதைகள் மூலம் பேசினார். அவரது நல்ல சமாரியன் கதையை, உலகின் முதல்
மனோதத்துவக் கதையாக அத்துறை சார்ந்த ஒரு அகராதி (encyclopedia) குறிப்பிடுகிறது. கிறிஸ்து மொத்தம் 39 உவமைகள் அல்லது
கதைகள் கூறியுள்ளார் என ஆய்வுகள் ( நான்கு நற்செய்தி நூல்களின் படி) தெரிவிக்கின்றன. பழைய ஏற்பாட்டிலும் நிறைய உவமைகள்
உள்ளன. அவற்றையும் கிறிஸ்து கையாண்டிருக்கிறார். உ.ம். மூலைக்கல் உவமை. கிறிஸ்துவின் புகழ் பெற்ற கட்டளையான,
'உன்னைப் போல உன் அயலானையும் நேசி' என்பது மோசேயின் கட்டளைகளில் உள்ளது. அவரது வேரகள், யூத புனித நூல்களில்
(Jewish Scriptures) இருந்துள்ளது என இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். மிக இளமைக் காலத்திலேயே அந்நூல்களை
கற்று தெளிந்தவராயும், அவை குறித்து வல்லுனர்களிடையே விவாதிக்கிறவராயும் இருந்தார், என புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படுகிறது.
இது அவரது அறிவைக் குறித்து, நாம் புரிந்து கொள்ள உதவும்.
ஏன் அவர் உவமைகளினூடே பேசினார்? மக்களுக்கு புரியும்படி நேரிடையாக பேசியிருக்கலாமல்லவா?
அவரிடம், சீடர்கள், ஏன் மக்களிடையே உவமைகளினுடே பேசுகின்றீர்? எனக் கேட்டதற்கு, 'கேட்பதற்கு, காதுள்ளவன் கேட்கட்டும்',
என மறுபடியும் குறியீடாகவே பதிலளிக்கிறார். 'யாருக்கு அருளப்பட்டிருகிறதோ, அவர்களே புரிந்து கொள்வர்', எனப் பொருள்
படும்படி பதிலளிக்கிறார்.
'தமது போதனைகளுக்காக, தாம் கொல்லப்படுவோம்', என்ற சூழலில், அவர்களை எதிர்த்து பேச வேண்டிய கட்டாயத்தில்,
அவர் எப்படி நேரிடையான மொழியில் பேச முடியும்?, என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆகவே அவர் குறியீட்டு மொழியை தேர்வு
செய்தார், எனலாம்.
அவர், காலம் கடந்து, இனம், மொழி கடந்து மனிதனை நேசித்தவர். அவர் போதித்த அன்பின் அரசை, ஒரு கடுகு
விதைக்கு ஒப்பிடுகிறார். அது வளர்ந்து பெரிய மரமானது (அப்பகுதியில் கடுகு செடி பெரிய மரமாய் வளரும் இயல்புடையது).
வானத்து பறவைகள் அங்கு வந்தடைந்தன என்கிறார். ஒரு பெண் கைபிடியளவு புளித்த மாவை, ஒரு மரக்கால் மாவில் பிசைந்து
வைத்தார். மாவு முழுதும் புளிப்பேறியது. காந்தி, தனது அஹிம்சை தத்துவத்தை கிறிஸ்துவிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது.
மார்டின் லூதர் கிங்கும் கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து உந்துதல் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், தனது
போதனைகள் மேல் கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. காலம், இனம், மொழி கடந்து தனது போதனைகள் மக்களை
சென்றடைய வேண்டுமென விரும்பினார். அதற்காக தனது சீடர்களை தயார் செய்தார். அதனாலேயே, அவர் காலம் கடந்து
நிற்கும் குறியீட்டு மொழியில் பேசினார். மேலும், கதைகள், மக்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுவதும், ஒருவரிடமிருந்து,
மற்றொருவருக்கு எளிதில் பரவுவதற்கும் உகந்ததும் ஆகும். அதனாலேயே அவை காலம் கடந்து நிற்கின்றன.
இன்றைக்கும் அவரது அன்பின் தத்துவத்தின் தேவையை நாம் உணர முடியும். மனித நேயமும், சக மனிதன்
மீதான அன்பும், தற்போதய சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இச்சூழ்நிலையில் கிறிஸ்துவின் போதனைகள் மீதான
வாசிப்பும், ஆய்வும் தவிர்க்கவியலாதது என்பதால், அதற்கான ஒரு ஆரம்ப முயற்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
முக்கிய ஆதார நூல்கள்
[1] பரிசுத்த வேதாகமம் - கத்தோலிக்க கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[2] பரிசுத்த வேதாகமம் - சீர்திருத்த கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[3] The Open Bible (The New King James Version)
[4] World History by B.V..Rao, Sterling Publishers Private Ltd, New Delhi
|