வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


குருநாதர் (ஓவியர் சி. கொண்டையராஜு) பற்றி டி.எஸ். சுப்பையா எழுதியவைகளிலிருந்து........

மாரீஸ் புதன், 07-04-2010 ; 8:50 PM

ஓவியர் சி. கொண்டையராஜு அவர்கள் வாழ்க்கை வரலாற்றை என்னிடம் தொடர்ந்து சிலர் கேட்டுக் கொண்டேயிருப்பதால், சுமார் 50 வருடங்களுக்கு பின்நோக்கி ஞாபகப்படுத்தி இதை எழுதுகிறேன்.

சி. கொண்டையராஜு

வைத்தியத் தொழிலில் சிறப்புற்றிருந்த திரு.சி. குப்புசாமி - அலமேலு அம்மையார் தம்பதிகளுக்கு 1898 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி சென்னை மலையப்பெருமாள் கோவில் தெருவில் நெம்பர் 60 இல்லத்தில் பிறந்தவர். அண்ணா - ( இப்படித்தான் நாங்கள் எங்கள் குருநாதரைக் கூப்பிடுவது வழக்கம்.) வின் 13வது வயதில் அவரது தந்தை குப்புசாமி காலமாகி விட்டார். அந்நாளில் சென்னையில் தலைசிறந்த புகைப்படக் கலைஞரும் ஓவியருமான திரு. பி. கெங்கையாராஜு அண்ணாவின் சித்தப்பா ஆவார். அன்னாரின் பராமரிப்பிலும் தாயும் மகனும் மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவில் தெருவில் வாழ்ந்து வந்தனர்.

தந்தையோடு கல்விபோம் என்பதற்கேற்ப அவர் கல்வி இரண்டாம் பாரத்துடன் முடிந்து போனது. கொஞ்சநாட்கள் முருகேச நாயக்கர், என். சுப்பையா நாயுடு போன்றவரிடம் ஓவியம் பயின்றார். பின் 1915 ஆண்டு அவர் சென்னை அரசினர் ஓவியப்பள்ளியில் சேர்ந்து கற்க ஆரம்பித்தார். முறைப்படி ஓவியக்கலை பயின்று 1918 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதல் மாணவராக தேர்வு பெற்றார். படித்த கையோடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் டிராப்ட்மேனாக வேலைக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் தகுதி ஆர்வம் இருந்தபோதிலும் அவர் மனம் தனிமையில் நாட்டம் கொண்டது. 1920 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ரமணமகரிஷி ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். அங்குள்ள சீடர்களோடு சேர்ந்து பிட்சை பெற்று குருதேவருக்கு சமர்ப்பித்து பிரம்மச்சரியமும் பேணி வந்தார்.

குடும்பத்துடன் சி. கொண்டையராஜு

அதுசமயம் பகவான் ரமணரிஷி அவர்களின் படம் ஒன்றை பெரிய அளவில் வரைந்து வந்து ஒரு அன்பர் சுவாமியிடம் சமர்ப்பித்தார். அந்தப்படத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக கூற, அருகில் நின்றிருந்த அண்ணா அவர்கள் சுவாமியிடம் ’எளிய சில திருத்தம் செய்தால் போதும் சரியாகி விடும் சுவாமி!’ என்று கூறியுள்ளார். அதற்கு,” உனக்கு அந்த தொழில்நுட்பம் தெரியுமா? தெரியுமெனில் திருத்தம் செய்” என பணித்தார் ரமணரிஷி அவர்கள்.

சுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த படத்தை நல்லமுறையில் திருத்தம் செய்தார். பகவானும் உளம் மகிழ்ந்து, இவ்வளவு கலைத்திறன் மிக்க உன்னால் உலகினுள் உண்டாகக்கூடிய நலன்கள் பல உள. எனவே இனி உனக்கு ஆஸ்ரமவாசம் வேண்டாம் எனக்கூறி அவ்வூர் வழக்கறிஞர்கள் சேர்ந்து நடத்தி வந்த அமெச்சூர் நாடகசபாவுக்கு தேவையான நாடக திரைச்சீலைகள் எழுதவதற்காக அன்றைய நகராட்சி மன்ற தலைவர் திரு. இராமசாமி ஐயர் அவர்களுடன் அனுப்பி வைத்தார் சுவாமிஜி.

அதுசமயம் ஸ்ரீலஸ்ரீ டி.டி.சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீ மீனலோசினி பால சற்குண நாடக சபா விழுப்புரத்தில் நாடகம் நடத்தி வந்தனர்.

சுப்பையா

திரு. சுவாமிகளும் சபா உரிமையாளருமான டி.என். பழனியாபிள்ளை அவர்களும் தங்கள் நாடக சபாவிற்கும் திரைச்சசீலை மற்றும் நாடகத்திற்கேற்ற தந்திர சீன்கள் முதலியவைகளை எழுதுவதற்காக சேர்த்துக் கொண்டார்கள்.

1930 ஆம் ஆண்டு- திருநெல்வேலியில் கணபதி விலாஸ் தியேட்டரில் நாடகங்கள் அதிகம் நடந்து வரும் காலம். அது சமயம் ஓவியத்தின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நான் பகல் நேரங்களில் தியேட்டருக்குச் சென்று என் குருநாதர் திரைச்சீலைகள் எழுதுவதை பார்த்துக் கொண்டிருப்பேன். என்னைப்பற்றி விசாரித்தார்கள். என் ஆர்வத்தைக்கூறினேன். அவர்களும் என்னை நாடகக்குழுவில் சேர்த்து ஓவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார். அத்துடன் புகைப்படத் தொழிலையும் கற்றுக் கொடுத்தார்.

பின் நாடகக்குழு தமிழகம், கேரளா மற்றும் இலங்கையிலும் நாடகங்கள் நடத்தியது. நாடகங்கள் அங்கு பெரும் வரவேற்பு பெற்றன. அவற்றில் முக்கியமாக கிருஷ்ணலீலா, தசாவதாரம் ஞானசெளந்தரி போன்றவை சில உதாரணங்கள். இவை தந்திரக் காட்சிகளுக்கும் ஓவிய திரைச்சசீலைகளும் பெயர் போனது. போகும் இடம் எல்லாம் என் குருநாதருக்கு ஏக மரியாதை.

ராமலிங்கம்

1942 உலக மகாயுத்தம். இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்து மதுரை ராஜபாளையம் போன்ற ஊர்களில் நாடகம் நடத்தி விட்டு கோவில்பட்டி வந்து சேர்ந்தோம். நாடகத் தினத்தன்று சரியான பேய் மழை. நாடகக்கொட்டகை குழுவில் கருத்து வேறுபாடு காரணமாக கலைந்தது. என்ன செய்வதென தெரியவில்லை. கோவில்பட்டி ஊரிலுள்ள சில பெரியவர்கள் அண்ணாவை அங்கேயே தங்கயிருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எங்கள் குருவுடன் நான், மீனாட்சிசுந்தரம் போன்ற சீடர்கள் சேர்ந்து ஸ்ரீ தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு புகைப்பட நிறுவனத்தை நிறுவி தொழில் செய்து வந்தோம்.

1956 வாக்கில் சிவகாசியில் பிரிண்டிங் பிரஸ்கள் தொடங்கப்பட்ட காலம். எங்களிடம் ஒரு தேவி படம் ஒன்றை வரைந்து பிரிண்ட் செய்ய கொடுக்க சென்றவரிடம் எங்களைப்பற்றி விசாரித்து கோவில்பட்டி வந்து எங்கள் குருநாதரை சந்தித்தனர். முதன்முதலில் ஸ்ரீ அம்பாள் காபி கம்பெனிக்காக மீனாட்சி கல்யாணம் படம்தான் வரைய ஆர்டர் வாங்கினார் எங்கள் குருநாதர். எங்கள் குழுவில் உள்ள எனது மருமகன் ராமலிங்கம்தான் அந்த வரைந்தார். படங்களை நாங்கள் வரைந்தாலும் படத்தில் எங்கள் குருநாதர் பெயரைப் போட்டுதான் கொடுப்போம். தொடர்ந்து எங்களைத் தேடி பல்வேறு கம்பெனி ஆர்டர்கள் வந்தன. காலண்டர் மட்டுமல்லாது, நாடகப்படுதாக்கள், ஸ்டுடியோ பேக்கிரவுண்ட், விளம்பரப் போர்டுகள் என எல்லாவித படங்கள் செய்து வந்தோம்.

சி. கொண்டையராஜு வரைந்த நாடக போஸ்டர்

சில முக்கிய நிகழ்ச்சிகள்

கேரளாவில் மாவேலிக்கரை என்னும் ஊரில் நாடகம் நடந்து கொண்டிருந்த சமயம் ஓவியர் ரவிவர்மாவின் பேரன் அவர்கள் ஞானசெளந்திரி நாடகம் பார்த்து அதன் சீன் ஜோடனைகளை பாராட்டி 3 பவுனில் மெடல் அணிவித்து, அவருடைய புகைப்பட நிறுவனத்திற்கு தேவையான திரைச்சீலைகள் வரைந்து தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் காரைக்கால் அம்மையார் சங்கத்திற்காக காரைக்கால் அம்மையார் பற்றிய படங்களை எழுதிக் கொடுத்தோம். அந்த படங்களை பார்த்து மகிழ்ந்து சோமசுந்திர தம்பிரான் அவர்கள் என் குருவிற்கு பொன்னாடை போர்த்தி கலைமாசெல்வன் என்ற கெளரவப்பட்டத்தையும் வழங்கினார்.

சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரி சுவாமிகள் ஆதிசங்கரர் படமும் ஸ்ரீ சாரதாம்மாள் படமும் எழுதித் தரச் சொன்னார்கள். அது சமயம் சுவாமிகள் திண்டுக்கல் கேம்ப்பில் இருந்தார்கள். எங்களை வரவழைத்து அருகில் அமரச்செய்து படங்கள் அமைய வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் ஆசி வழங்கினார்.

சிவாஜியுடன் சி. கொண்டையராஜு

கேரளா திருவனந்தபுரத்தில் ஆரியசாலை நாடகத் தியேட்டரில் நாடகம் நடந்த சமயம். திவான் சி.பி.ராமசாமி ஐயர் அவர்கள் கிருஷ்ணலீலா நாடகம் பார்த்து பெரும் மகிழ்ச்சி கொண்டு குருவை வெகுபாராட்டிச் சென்றார்.

1958 ஆம் வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி குருவின் 60 ஆண்டு நிறைவு விழாவினை சீடர்களாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து நடத்தினோம். அது சமயம் பாலகவி வேங்கட்ராமன் அவர்கள் குருவை பாராட்டி ஓவியமணி என்ற பட்டத்தை வழங்கினார்.

1959 ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் கொழும்பு கலைமகள் கம்பெனி அதிபர் சங்கு சுப்பிரமணியம் அவர்கள் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் இ.மு. சுப்பிரமணியபிள்ளை அவர்களைக்கொண்டு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

சி. கொண்டையராஜு வரைந்த ஓவியம்

1964 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் நடிகர்திலகம் வந்திருந்து குருவைப் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.

1956 லிருந்து தொடங்கிய கோவில்பட்டி ஆர்ட்டிஸ்ட்களின் சாமிப்படங்கள் ஏற்கனவே இருந்த ரவிவர்மா ஓவியங்கள் போல அல்லாது வேறுவிதத்தில் இருந்தன. கொண்டையா ராஜூவின் நாடக அனுபவ பாதிப்பு அனைத்து சீடர்களுக்கும் இருந்தது. எனவே சாமிகள் நாடகத்தன்மையோடு கூடிய பேக்கிரவுண்டில் தோன்றினர். புதியதாக மார்க்கெட்டில் உற்பத்தியான கேம்லின் போஸ்டர் கலர்களை உபயோகித்தனர். படஏஜெண்ட்கள் கூறிய கருத்துகள் ஆகிய அனைத்தும் உள்ளடக்கி புதிய திசையில் மலர்ந்தன கோவில்பட்டி சாமி படங்கள். தொடர்ந்து கொண்டையாவின் படங்கள் பிரசித்தி பெற்றன. அஷ்டலட்சுமி, தட்சிணமூர்த்தி, பாலதிரிபுரசுந்தரி, சாரதா அம்பாள், தீபாவளி பூஜை, வெங்கடாசலபதி, லட்சுமி, சரஸ்வதி என படங்கள் வரத் தொடங்கின.

சி. கொண்டையராஜு வரைந்த ஓவியம் - 2

கொண்டையாராஜூ தன் வாழ்நாள் முழுவதும் சுத்த பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தார். தனது சீடர்கள் அனைவரும் தனது பிள்ளைகள் என்றார். பத்து பதினைந்து சீடர்கள். இதில் ஊமை, செவிடு மாணவர்களும் அடக்கம். அவர்களுக்கு ஓவியம் பயிற்றுவித்ததில் அதிக கவனம் காட்டுவார். பள்ளி லீவு விட்டதும் எல்லா சீடர் வீட்டு பிள்ளைகளும் கொண்டையா ராஜூ ஓவியக்கூடத்திற்கு படை எடுப்பார்கள். எல்லாருக்கும் நோட்டு, பென்சில், ஸ்கேல் ரப்பர் வாங்கி கொடுத்து நோட்டின் குறுக்காக கோடு வரைந்து ஒரு புறம் தனது முதிய வயதிலும் நடுங்காமல் ஒரு ரைனிங் டிசைன் போட்டு அதன் மறுபுறத்தை வரையச் சொல்வார். வரைந்து போய் காட்டினால் பேஷ் பேஷ் நன்றாக வரைந்துள்ளாய் என பாராட்டுவார். சொக்கலால் பீடி குடிப்பார். டீ அதிகம் சாப்பிடுவார். நாய்கள் வளர்த்தார். ஒரு சமயத்தில் 12 நாய்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றாக இறக்க, நாய் வளர்ப்பை விட்டுவிட்டார். 1976 ஜூலை 27 ஆம் நாள் மறைந்தார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.