ம. ஜோசப் |
ஞாயிறு, 14-03-2010 ; 8:17 PM |
பரிசுத்த வேதாகமத்தில், புதிய ஏற்பாட்டின் கீழ் புனித மத்தேயு, புனித மாற்கு, புனித லூக்கா மற்றும் புனித யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்கள் (Gospels) உள்ளன. இவை கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை கூறுகின்றன. மேற்குறிப்பிட்ட நான்கு
நற்செய்திகள் அல்லாமல், 80 க்கும் மேற்ப்பட்ட நற்செய்தி நூல்கள் உள்ளதாகவும், பிலிப்பின் நற்செய்தி (Gospel of Philip) மற்றும் மேரி மேக்டலினின் நற்செய்தி (Gospel of Mary Magdalene) ஆகியோரின் நற்செய்தி நூல்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி (Gospel of Judas Iscariot) நூலும் இருப்பதாக National Geographic Channel சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி சில விபரங்களை இக்கட்டுரை தருகிறது.
பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. பெரிய ஏரோதிற்கு பயந்து, எகிப்தில், ஜோசப் (இயேசுவின் வளர்ப்புத் தந்தை), குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் சில காலம் வாழ்ந்தார். பின் இயேசுவின் இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் கழிந்தது. ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாமத்தின்படி, கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது. இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான் அவர் போதித்தார். இயேசுவின் 12 சீடருள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத், அவரை 30 வெள்ளிக்காசுகளுக்காக, யூத குருமார்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, ஏறக்குறைய கி.பி. 30-ல்அவர் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய்க் குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நூல் யூதாஸைப் பற்றி புதிய பிம்பதை தருகிறது. இயேசுவைக் காட்டி கொடுத்ததற்காக, 2000 ஆண்டுகளாக, இப்புவியில் விமர்சிக்கப்பட்டவர் யூதாஸ் இஸ்காரியோத், சபிக்கப்பட்டவர். உலகம் முழுதாலும் நிராகரிக்கப்பட்டவர். புதிய ஏற்பாட்டிலுள்ள முக்கிய 4 நற்செய்தி நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விபரங்களைத் தருகிறது இந்த நற்செய்தி. இயேசுவால் மிகவும் நேசிக்கப்பட்ட சீடராகயூதாஸ் இருந்துள்ளார். மேலும், இயேசுவின் வேண்டுகோளின்படியே யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுத்துள்ளார், ஆகியவை இந்த நற்செய்தி நூல் சொல்லும் முக்கிய செய்திகளாகும். "மற்ற தலைமுறையினரால் நீ சபிக்கப்படுவாய்", மேலும் "நீ அவர்களை ஆட்சி செய்ய வருவாய்", என இயேசு யூதாஸிடம் கூறுவதாகஅந்த நூல் குறிப்பிடுகிறது.
1970 ஆம் ஆண்டு எகிப்தின் பாலைனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஆவணங்களில் (ancient documents), இதுவும் ஒன்று. தேசிய புவியியல் சங்கத்தால் (National Geographic Soceity) அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. வல்லுனர்களைக் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அது சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
காப்டிக் மொழியனால் (Coptic Language) எழுதப்பட்டுள்ளது. காலம் ஏறக்குறைய கி.பி. 300. (காப்டிக் மொழி, எகிப்திலுள்ள பழங்கால காப்டிக் கிறிஸ்துவ திருச்சபையால் (Coptic Church) பயன்படுத்தப்பட்ட மொழியாகும். எகிப்து மற்றும் எத்தியோப்பியர்களை உறுப்பினர்களைக் கொண்டது.) இந்நூல் முற்கால கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூலின் பிரதியாகும் (copy). யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி, கி.பி.180 வாக்கில், லியனின் (தற்போதைய ப்ரான்ஸ் ) ஆயர் இரேனியஸ் (Bishop Iraneous) முதன் முதல் குறிப்படிகிறார். அவர் அது திருச்சபைக்கு முக்கிய கொள்கைக்கு விரோதமானது ஆகையால் விலக்கப்பட்ட நூல் ( heresy), என அறிவித்தார். புதிதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நற்செய்தி நூல் இவ்வாறு ஆரம்பிக்கின்றது: இயேசு யூதாஸிடம் பேசிய உரையாடலின் ரகசியத்தின் வெளிப்பாடு. நூலின் முக்கிய பகுதியில் இயேசு யூதாஸிடம் , "என்னை மூடியிருக்கும் மனிதனை நீ பலியிடுவதால், நீ அவர்கள் அனைவரிலும் மேலோங்கி நிற்பாய்', என கூறுகிறார். இயேசு தனது மாமிசத்தை வெற்றி கொண்டு, ஆன்மீக உயர்நிலையை அடைவதை, இதுகுறிப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
"மற்ற அனைவரிடமிருந்து ஒதுங்கியிரு, நான் அரசாட்சியின் (kingdom) புதிர்களை உனக்கு அறிவிப்பேன்",எனவும் இயேசு யூதாஸிடம் கூறுகிறார். யூதாஸை தனியே தெரிவு செய்து சிறப்பான அங்கிகாரம் அளிக்கிறார். "பார், உனக்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது, உன் கண்களை ஏறெடுத்து அந்த மேகத்தை உற்றுப் பார், மேலும் அதனுள் உள்ள ஒளியையும், அதனைச் சுற்றியுள்ள விண்மீன்களையும் பார். வழி நடத்தும் அந்த விண்மீன் நீயே", இயேசு யூதாஸிடம் கூறுவதாக, யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
யூதாஸ் இஸ்காரியோத், இயேசுவை யூத குருமார்களிடன் காட்டிக் கொடுப்பதுடன் நற்செய்தி நிறைவு பெறுகிறது. கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது பற்றியோ, அவரது உயிர்தெழுதல் பற்றியோ ஏதும் இதுகூறவில்லை.
இந்நூலின் ஆசிரியர் யாரெனெ குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர், யூதாஸ் மட்டுமே கிறிஸ்துவின் போதனைகளின் முக்கியத்துவதை புரிந்திருந்ததாக நம்பியவர், என தேசிய புவியியல் சங்கம் தெரிவிக்கிறது. 1970-ல் கண்டு பிடிக்கப்பட்ட பைப்பிரஸ் (papyrus) சுருள்கள், பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டதாக அது கூறுகிறது. 1000 துண்டுகள் மீண்டும் ஒருங்கிணக்கப்பட்டதாகவும் கூறுகிறது. ரேடியோ கார்பன் டேட்டிங் முதலான பல அறிவியல் ஆய்வுமுறைகளும், பிற பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்பட்டதாக, அது மேலும் கூறுகிறது.
இந்த நூல், ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையில் எகிப்திலுள்ள காப்டிக் அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட உள்ளது என, இந்த நற்செய்தி நூலை சிதிலமடையாமல் பாதுகாப்பதற்கு பண உதவி செய்த வெய்ட்ட் வரலாற்று கண்டுபிடிப்பு நிறுவனத்தைச் சார்ந்த, டெட் வெய்ட்ட் கூறுகிறார்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் National Geographic Channel ஒளி பரப்பப்பட்ட program மற்றும் இணைய தளங்கள், பத்திரிக்கை செய்திக் குறிப்புகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. |