வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
ரவிசுப்ரமணியன்
   
   
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்

உடல்மொழியோடு பாமரர்கும் இசைபாடிய மதுரை சோமு

- ரவிசுப்ரமணியன்.

எனக்கு செவ்வியல் இசையின் மேன்மை தெரியாத வயது அது. ஆனாலும் அந்த பதிமூன்று வயதில், இசையில் பாடல்களில் ஒரு ஒரு ஈர்ப்பு உண்டு. வளர்ந்த சூழலில், அறியாமல், உள்சேர்ந்த இசை கோர்வைகளால் வந்த ஈர்ப்பு அது. அந்த வயதில் தான், முதன் முதலாக மதுரை சோமுவின் கச்சேரியை நான் கேட்கத் துவங்கினேன். அதன் பிறகு எத்தனையோ முறைகள்.

மதுரை சோமு

அம்மாவுக்கும் கலைகளுக்கும் காத தூரம். அதற்கு பல்வேறு காரணங்கள். ஆனால் திரைப்படப்பாடல்களை விரும்பிக் கேட்பார்கள். அதே பாடல்களை தம்பி தங்கைகளுக்காக தாலாட்டு என்ற பேரில் பாடுவார்கள். அவ்வளவுதான் அவரது கலை எல்லைகள்.

அப்பா ஒரு ரசிகன். இசையாகட்டும் நாட்டியமாகட்டும் நாடகமாகட்டும் சாப்பாடாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு தேர்ந்த ரசனை உண்டு. காரணகாரியங்களைக் கேட்டால், அவருக்குச் சொல்லத் தெரியாது. ரசனையான மனிதர்களின் பழக்கம், அவரை ரசனைக்குரிய மனிதராக ஆக்கியிருந்தது.

இப்படி, வெவ்வேறு ரசிகபாவ சாராம்ஸம் கொண்ட, வெவ்வேறு வயதுடைய, நாங்கள் மூன்று பேரும் மதுரை சோமுவுக்கு ரசிகர்கள். இது எப்படி?. அது தான், சோமுவின் பாடல்கள் செய்த மாயம். சோமு, கர்னாடக இசையை தனது பல்வேறு உத்திகளால், எல்லா தரப்பினருக்கும் கொண்டு போய் சேர்க்கவே முயன்றார். அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை என்றாலும் அவரது செயல்கள் அப்படி அமைந்தன. கர்னாடக இசையைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க முயன்ற, ஜனங்களின் கலைஞன் அவர். தனது கச்சேரியையே, ஒரு பல்சுவை விருந்து போல அவர் வடிவமைத்துக் கொள்வார்.

துவக்கத்தில் தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் போன்ற பல மொழிக் கீர்த்தனைகளைப் பாடத்துவங்குவார். பின்பு மெல்ல, ஆரபி, வராளி, ஸ்ரீராகம், போன்ற கனராகங்களையும் காம்போதி, பைரவி, தோடி, கரகரப்ரியா, சங்கராபரணம் போன்ற கச்சேரிகளுக்கே உரிய சில சம்ப்ராதயமான ராகங்களையும் ஆத்மார்த்தமாக அனுபவித்து விஸ்தாரமாகப் பாடுவார். அவர் உலகில் அப்போது, அந்த ராகம் தவிர வேறேதும் இருக்காது. கற்பனையும் உணர்ச்சியும் உண்மையும் ததும்ப, சங்கீதத்தின் விதவிதமான நுட்பங்களாலான, கதம்ப மாலைகளைக் கோர்த்து கோர்த்து, அவர் சபையை நோக்கி வீசியபடியே இருப்பார். ராகங்களை அவர் கையாள்கையில், நடு இரவில் வர்ணங்கள் ஜொலிக்க உதிரும், உயர்தர வாணவேடிக்கை பார்க்கும் உணர்வையே அது நம்முள் சரிக்கும்.

தோடியை அவர் பாடும் போது, திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பற்றியும் அவர் அதை கையாண்டவிதம் பற்றிய குறிப்புகளையும் சொல்வார். அதன் சங்கதிகளை விதந்தோத்திப் பாடிக்காட்டுவார். அது போலவே மோகனம் பாடுகையில், மோகனம் விஸ்வநாதய்யரை நினைவு கூறுவார். தனது குருநாதர் சித்தூர் சுப்ரமணியப்பிள்ளை ராகம் பாடும் விதம் பற்றி பேசி, பாடிக் காண்பிப்பார்.

அதுமட்டுமல்லாமல், அந்த காலத்தில் யாரும் கேட்டிராத காழியன், சந்திரமெளலி போன்ற ராகங்களைப் பாடுவார். பலரும் கேட்டிராத அந்த ராகங்கள், இசை சார்ந்த ரசிகர்களுக்கான புது விஷயமாக மாறும். அதன்பின் சீர்காழிமூவர், ஊத்துக்காடு, வள்ளலார், பாரதியார் ஆகியோர் பாடல்களோடு, தனது சொந்த சாகித்தியங்களையும் பாடி முடிப்பார். பாமர ரசிகர்களுக்கான லயகதியில் அமைந்த பாடல்களும் அதில் இருக்கும்.

சுவாமிமலை அவர் சொந்த ஊராகையால், முருகன் பாடல்களும் அவர் வளர்ந்த ஊர் மதுரையாகையால், மீனாட்சியம்மன் பாடல்களும் அவரது மாமனார் ஊர் திருக்கருகாவூர் ஆகையால், அந்த ஊரின் தெய்வமான கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பாடலும் இல்லாமல் அவர் கச்சேரி முடியாது.

நாதஸ்வர வழியில் மூன்று ஸ்தாயியிலும் ப்ருகா அடித்து பாடும் திறமை பெற்றவர் சோமு. நாதஸ்வர வழியில் பாடுவதுதான் தனக்கு பிடிக்குமென, அவரே குறிப்பிட்டுப் பேசியிருந்தாலும் கூட, சில சமயங்களில் ஷெனாய் வழியில், பிஸ்மில்லா கான், படேகுலாம்அலிகான், பர்வீன்சுல்தானா, போன்றவர்கள் கையாளும் அபூர்வ பிடிகளோடு அமீர்கல்யாணி, தேஷ், திலங் போன்ற ஹிந்துஸ்தானி ராகங்களையும் அவர் கச்சேரியில் பாடுவார்.

அந்த காலத்தில் புல்பெஞ்ச் கச்சேரி என்று அழைக்கப்படும் வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் என்ற சகல பக்கவாத்தியங்களும் சூழ, நடு நாயகமாய் அவர் அமர்ந்திருப்பார். அவருக்கு அபாரமான லயஞானம் உண்டு. மன்னார்குடி கொன்னக்கோல் வித்வான் பக்கிரியாப்பிள்ளை லயசொல்கட்டுகளை சொல்லச் சொல்ல கேட்டு வாங்கி, இவர் பதிலுக்கு எதிர் சொல் சொல்ல ஆரம்பிப்பார். அவரும் உக்ரமாக சொல்ல ஆரம்பிக்க, ஹரிபிரசாத்செளரஸ்யா போல, இளமையில் மல்யுத்தம் பயின்ற சோமு, இப்போது தாளத்தில் அவரோடு மல்யுத்தம் செய்வது போல இருக்கும். இது பார்வையாளர்களுக்கு காட்சியாகவும் லயமாகவும் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மாயவரம் கஞ்சிரா சோமுவிடமும், மற்றும் மிருதங்கம், கடம், மோர்சிங் கலைஞர்களோடும் இப்படி தாளம் போட்டு தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அந்த அளவு லயத்தில் ஈடுபாடு இருந்ததாலோ என்னவோ, அவர் வீட்டு விசேஷங்களுக்கு லயமேதை நாதஸ்வரவித்வான். திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை போன்றவர்களையே அவர் கச்சேரிக்கு அழைத்திருக்கிறார்.

உருவம் குள்ளமாக இருந்தாலும் அவர் மல்யுத்தம் பயின்றதால், அவர் உடல் ஒரு உருளை கட்டை போல, வலுவாக இருக்கும். சோமுவிடம் வெளிப்பட்ட உடல் மொழி அனாயசமானது. தனித்துவமானது. கமகங்கள் உருள்கையில் அதை நமக்கு உணர்த்த, அவர் கைகள் வேகமாக உருளும். மேல் ஸ்தாயிக்கு போகையில், கையை தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டு போய் நிறுத்துவார். மத்திம ஸ்தாயிக்கு வரும் போது, அவரது கைகள் மார்புக்கு நடுஎதிரில் நிலைத்து, அசைந்து அசைந்து திளைக்கும். மந்திர ஸ்தாயிக்குச் செல்கையில், கை இன்னும் கீழே தாழ் நிலைக்கு சென்று அசையும். அப்போது, ஆ… என்று மூச்சை இழுத்து பிடித்தபடி, சன்னமாக அந்த குரல் இயங்கும் விதத்தை அவர் முகத்திலிருந்தும் நாம் உணர முடியும். ஒரு வகையில், பாடுவதை அவர் காட்சிப்பூர்வமாகவும் நிலை நிறுத்த முயன்று கொண்டே இருப்பார். மொத்தத்தில், ராகங்களை மேல் கீழ் என ஏற்றி இறக்கி பாடும் போது, அதன் ரூபத்திற்கு, தன் அங்க அசைவுகளால் உருக் கொடுக்கிறாரோ என்றுதான் நமக்கு எண்ணத்தோன்றும்.

கண்செருகி, ஈடுபட்டு பாடும் நிலையை பற்றி கேட்கும் போது, இன்று ஒரு சிறுவன் கூட, அப்படியான ஒரு கிறங்கிய நிலையில் இருப்பதை, பெரும் ஆன்மீக அனுபூதி என்று சொல்கிறான்.

விவரிக்க இயலாத ஆன்மீக அனுபூதி என்பது, ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். எல்லோருக்கும் கிடைப்பதெல்லாம் வேறு வேறு. ஆனால் சோமுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. அந்த ஜாலங்களெல்லாம் கைவரப்பெறாத அபூர்வ பிரகிருதி அவர். பாடும் ஷணத்தில் அவர் என்ன உணர்கிறாரோ அதை அப்படியே குரலில்,
பாடும் ஏற்றஇறக்கத்தில், உடல்அசைவில், முகபாவத்தில் என எல்லாவற்றிலுமாய் வெளிப்படுத்துவார்.

சில சமயம் பாடும் போதே கரைந்து அழுவார். பாடும் பொழுது, இடது வலதாய் உடல் முழுவதையும் சுற்றிச்சுற்றி அசைத்து இயக்குவதால், வியர்வை பெருகி வழிந்து, பல சமயங்களில் அவர் ஜிப்பா நனைந்திருக்கும். தனது துண்டால் முகத்தை, கைகளை, கழுத்தை துடைத்துக் கொள்வார். அந்த அளவு, தன் உடல் மொழி மூலமும் இசையின் ருசியை ரசிகனுக்கு கடத்திவிட முயன்றவர் சோமு.

பெரும்பாலும் சாதாரண ரசிகர்களை மையமாக வைத்து ஜனரஞ்சகமாகப் பாடுவதால், அவர் மேதமை ஒரு போதும் குறைந்ததில்லை. அதுவும் கச்சேரிகளுக்கு நடுவில் சில நிமிஷங்கள் பட்டுத்தெறித்து மறையும். தன் சககலைஞர்களிடமும் முன்னோடி கலைஞர்களோடும் அவர் இசை பற்றி பேசி, பாடும் போதும், அது வெளிப்பட்டிருக்கிறது. கும்பகோணம் வந்தால் வயலின் மேதை பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை போன்ற மூத்த கலைஞர்களிடம் பேசும் போது, அதை துலக்கமாய் உணரமுடியும் என்கிறார்கள் அந்த உரையாடலை நேரில் கேட்டவர்கள்.

சங்கீத ஞானமே இல்லாத ஒருவனைக்கூட, தன் பாடலால் தலையசைக்க வைத்துவிடுகிற சோமு, தன் கச்சேரிக்குள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த சமயாசந்தர்பதிற்கேற்ப பல உத்திகளைக் கையாள்வார்.

கல்யாண வீட்டுக் கச்சேரியில் மாப்பிள்ளை பெண் பெயர்களை இணைத்துப் பாடி, அவர்களையும் கல்யாண வீட்டினரையும் சந்தோஷப்படுத்துவார். கச்சேரிக்கு வந்த புலவர்கள் எழுதிக்கொடுக்கும் ஒரு சில பாடல்களில் நல்லவற்றை உடனே ராகபாவத்தில் பாடுவார். கும்பாபிஷேக அழைப்பிதழில் உள்ள, அந்த கோவிலைப்பற்றிய பாடலை கச்சேரியில் பாடுவார். பொதுவான கச்சேரிகளுக்கு வருகிற முக்கிய பிரமுகர்கள், கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் போன்றவர்களை, பாடிக்கொண்டிருக்கும் ராகத்திலேயே, அவர்களது பெயரைச் சொல்லி கூப்பிட்டு வணங்கி, வாங்க, இப்படி வந்து உக்காருங்க, என்பார்.

சுவாமிமலையில் அவரது கச்சேரி நடக்கும் போது, அவரது பால்யகால நண்பர் நாராயணசாமி கொத்தனார் கச்சேரி நடுவில் எழுந்து கிளம்புகிறார். ”ஏ…நாராயணசாமி எங்க கிளம்பிட்ட இரு, உன்னை பாக்கும் போது நாம சின்ன புள்ளைல பன்னி அடிச்சி விளையாண்டமே அதெல்லாம் ஞாபகம் வருது”. என்று ஒருமுறை சொன்னார். அம்மாஞ்சிகுருக்கள் பட்டுக் குருக்கள் கன்னுக் குருக்கள், போன்றவர்கள் அவரது பால்யகால நண்பர்கள். ”அம்மாஞ்சி இப்படி முன்னாடி வந்து உக்காரு.” என்று கச்சேரிக்கு நடுவில் கூப்பிடுவார். கச்சேரிக்கு இடைல இதல்லாமென்ன அபச்சாரம் என்றெல்லாம் பேசப்பட்ட போது கூட, அவர் அதைப் பொருட்படுத்தியதில்லை.

கச்சேரி முடியப் போகிறது என்று நாம் நினைக்கும் வண்ணம் பாடிக்கொண்டிருப்பார். முடியப்போகிறது என்று நினைத்தால் பிறகு திரும்பவும் விட்ட இடத்திலேயே மறுபடி தொடருவார். எதோ ஒரு ரூபத்தில் பார்வையாளர்களை அவர் கச்சேரிக்குள்ளே சுழற்றிச் சுழற்றி இழுத்தபடியே இருப்பார். அவரைப் போல ஆறு மணிநேர கச்சேரிகள் செய்ய இன்று ஆளே இல்லை என்றே சொல்லிவிடலாம். அப்படி நேரக்கணக்கு பாராமல் பாடியதால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் குறைவாக கொடுத்திருக்கிறோம் என்ற உணர்வையே கச்சேரி ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏற்படுத்தி விடுவார் சோமு.

தான் கேட்டு வளர்ந்த, அதே சமயம் சம காலத்து கலைஞர்களாகவுமிருந்த அரியக்குடி, செம்மங்குடி, ஜி.என்.பி, மதுரை மணி அய்யர், பாலமுரளி,
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, போன்றோருக்கு இல்லாத, அடித்தட்டு பாமர ரசிகர்களை இது போன்ற விஷயங்களும் உத்திகளுமே அவருக்குப் பெற்றுத்தந்தது.

சுவாமிமலை முருகன் சந்நிதியில் நின்றவாறு தன் நண்பரான அம்மாஞ்சி குருக்களை பார்த்து, ”அம்மாஞ்சி நீ பாடு” என்று சொல்லி, வள்ளலாளரின் ”ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” பாடலையும் சுவாமிமலை முருகன் மீது இயற்றப்படட்ட ஷண்முக மணிமாலைப் பாடல்களையும் பாடச்சொல்லிக் கேட்பார். சில வேளைகளில் அவரும் சேர்ந்து பாடுவார்.

அவர் இசைவேளாளர் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தன் திறமையாலும் அன்பாலும் குணத்தாலும் சகல சமூகத்தினருக்கும் ப்ரியமான கலைஞனாகவே வாழ்ந்தார்.

மூத்த சககலைஞர்கள் நண்பர்கள் மட்டுமின்றி தனக்கு வாசிக்கும் கலைஞர்களிடமும் ஒருவிதமான உரிமையான அன்பு கலந்த நட்புணர்வையே அவர் கொண்டிருந்தார். கச்சேரிகளில் அவர்களுக்கெதிரான சிறு பார்வையை கூட, சோமு பார்த்து பார்த்ததில்லை என்கிறார் அவரது தூரத்து உறவினரான தேனுகா. ஆனால் அவர்கள் வாசிக்கும் போது அதைக் கேட்டு மகிழ்ந்து சிறுபிள்ளையைப் போல் கைதட்டிக் கொண்டாடுவார்.

பலே, பலே, சபாஷ், அடடா, ஹய்யோ என்று, விதவிதமாய் பாராட்டி உற்சாகப்படுத்துவார். அவர்களுக்கு கணிசமான நேரம் ஒதுக்கி, அவர்கள் திறமையைக் காட்ட, தனி ஆவர்த்தன சந்தர்பங்களை, சந்தோஷமாக ஒதுக்கி தருவார். ஒரு முறை அவரது பக்கவாத்திகாரர் வயலின் கணேசனை ”கணேசா கொஞ்ச நேரத்தில என்னையே வேட்டு வுட்டுட்டியேப்பா” என்று சொல்லி சிரித்து, எல்லோரையும் சிரிக்க வைத்தார். பின் பாட்டு பாடும் அவரது சிஷ்யர் கழுகு மலை கந்தசாமியை திடீரென நீ பாடு என்பார். ”எங்கயோ போறான். போ போ நடக்கட்டும் போ போ” என்று உற்சாகப்படுத்துவார். சிறு பொறாமையும் அவரிடம் தென்பட்டதில்லை. தன் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கையால் பிற திறமையாளர்களை தனக்கு மேலானவர்களாகவே பாராட்டி அவர் குதூகலப்படுத்திக் கொண்டிருந்தார்.

சோமுவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக காரணமாக அமைந்தது தேவரின் தெய்வம் படத்தில் வந்த, தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த, மருதமலை மாமணியே பாடல்தான். பல பாடல்கள் பாடி ஒரு பாடகர் அடையும் பெரும் புகழை, அந்த ஒரே பாடலில் பெற்றார் அவர். ஒரு காலத்தில் அவரிடம் பக்கவாத்தியம் வாசித்து, பின்னாளில் புகழ் பெற்ற குன்னகுடி வைத்தியநாதன் இசை அமைப்பில் வெளிவந்த, பாடல் அது. அவரைப் போலவே, லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணண், சந்திரசேகரன், பாலக்காடு ரகு, முருகபூபதி போன்ற மிகச் சிறந்த கலைஞர்கள் இவருக்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளனர்.

தெய்வம் படத்திற்கு முன்பே, இவர் சம்பூர்ண ராமாயணம் படத்திற்கு பாடல்கள் பாட கே.வி. மகாதேவனால் தேர்வு செய்யப்பட்டு, பின் மைக்கிற்கு ஏற்ற குரல்வாகில்லை என்று நிராகரிக்கப்படவர் சோமு. இளமையில் அவர் குரல் அவ்வளவு இனிமையாய் இல்லைதான் என்றும் அவரது நண்பர்கள் கூறினாலும் பின்னாளில், அந்த குரலை வைத்துக் கொண்டே, தனது அபாரமான திறமையால், மனம் தளராத தொடர்ந்த பயிற்சியால் அப்பியாசத்தால், சகலரையும் அசர அடித்தவர் சோமு. ”மாடு மேய்க்கும் கண்ணா” என்ற தேஷ் ராகத்தில் அமைந்த ஒரு பாடலையும் அவர் மருதமலை மாமணி பாடலுக்கு முன்பே திரைப்படத்தில் பாடி உள்ளதை, அவரே சொல்லி உள்ளார்.
அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்ட போது, அவரது சொந்த ஊரான சுவாமிமலையில், நாதஸ்வரம் சுவாமிநாதன், நாதஸ்வரம் பி.வி.காளிதாஸ் ஆகிய இருவரது ஏற்பாட்டில், அவருக்கு பாராட்டு விழா நடந்திருக்கிறது. அன்று யானை ஊர்வலம், பூரணகும்ப வரவேற்பு, நாதஸ்வர மேள தாளமுழக்கம் என, அன்று அந்த ஊரே அவரைக் கொண்டாடியிருக்கிறது.

ராமலிங்க சுவாமிகளின் மாணவரின் மாணவரான சுவாமிமலை அருட்பா சீனிவாசம் பிள்ளையே, இவரது இளமைக்கால இசை குரு. சாலைகளில் நடந்து சென்றவாறே வள்ளலார் பாடல்களைப் பாடி, எங்கும் பரப்பிய அவரது படத்தை, அந்த விழாவின் போது திறந்து வைத்து, அற்புதமான தன் தமிழ் பாடல்களால் சபையை மணிக்கணக்கில் கட்டி வைத்திருந்திருக்கிறார் சோமு. அந்த அபாரமான இசைக் கோர்வைகளால் பார்வையாளர்கள் சிலிர்த்துக் கிடந்திருக்கிறார்கள். அவரும் உணர்ச்சி பெருக்கில் இருந்திருக்கிறார்.

அந்த நாளில் அங்கு வந்த பெரியவர்களோடு மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளோடும், அவர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு பெண் குழந்தையைப் பார்த்து, கேட்டிருக்கிறார். ”நான் சினிமாவுல பாடின மருதமலை மாமணியே பாட்ட கேட்ருக்கியாம்மா நீ.” அது கூச்சமாக தகப்பனின் கால்களை பிடித்தபடி வெட்கப்பட்டுக் கொண்டு நின்றதாம். தேர்ந்த கலைஞர்களும் ஒரு வகையில் குழந்தையாகத்தானே இருக்கிறார்கள்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </