கவிஞர் குட்டி ரேவதி
இதுவரை இணையம், மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த கவிஞர் குட்டி ரேவதியின் நேர்காணல் மற்றும் கட்டுரைகளில் சில.
கன்னிமாரா தேசிய பொது நூலகத்தில் கிடைக்கும் கவிஞர் குட்டி ரேவதியின் நூல்கள்:
1.
உடலின் கதவு
Other Title: utalin kathavu by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 649170Actions: Reserve
2.
தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
Other Title: thanimaiyin aayiram irakkaikal by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 575382Actions: Reserve
3.
காலத்தைச் செரிக்கும் வித்தை
Other Title: kaalaththais serikkum viththai by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 702326Actions: Reserve
SRM பலக்கலைக்கழக தமிழ் பேராயத்தில் குட்டி ரேவதி:
http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons
/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
--------------------------------------------------------------------------------------
முழுக்க முழுக்க எனக்காகத்தான் - குட்டி ரேவதி |
குட்டி ரேவதி இரண்டே கவிதைத் தொகுப்புகளின் மூலம் பரவலாக அறியப்பட்ட கவிஞர். இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "முலைகள்" பெண்ணுடல் உறுப்பை படிமமாக கொண்டு கவிதைகள் எழுவது தவறு என்ற மாயை உடைத்தது. பல்வேறு தளங்களில் விவாதங்களை கொழுந்து விட்டு எரியச் செய்தது. சித்த மருத்துவராக இருந்து கொண்டு ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்...
கவிதைன்ன என்ன?
கவிதைங்கிற அதற்கான அவகாசத்தை எடுத்துக் கொண்டு நம்மிடம் தங்கி சீர்மையான முறையில் வெளிக் கொணரப்படுவது. சில சமயம் 3 வார்த்தைகள் சேர்ந்து ஒரு கவிதையும் ஒரு சொல்லே கவிதையாகவும் சில சமயம் எத்தனை சொற்களை போட்டாலும் கவிதையாகமல் இருப்பதும் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் சீர்மைங்கிறது ரொம்ப முக்கியம். அது குலைந்து போறப்ப நமக்குள் ரொம்ப கலைந்து போறாங்க கலைந்து போனதை சரி செய்வதற்காகதான் சொற்களை அடுக்கி அடுக்கி கட்டி சரி செய்யிறாங்க. நாடகம் போன்ற மற்ற வடிவங்களில் முயற்சி செய்து பார்த்து அதில் எதிலும் திருப்தியாகாமல் கடைசியில் மனம் கவிதையில்தான் நிலைப்படுத்தி நின்றது.
அந்த சீர்மைங்கிறது என்ன?
அது அவரவர் மனம் சார்ந்து எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம் பணம் சேர்க்குறதாகவோ வேடிக்கை பார்ப்பதாகவோ ஒருவரின் மீதானா அதீத நேசிப்பாகவோ, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதனதன் இடத்துல அதை அதை வைக்கிற அதோட இதை பொருத்தி பார்க்குறது இது உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாய்த்திருக்கு. விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றிற்கும் கூட இதைப்போன்ற தகுதியும், தேவையும் எல்லா உயிர்களிடமும் இருக்குது.
உங்கள் கவிதைக்கான மொழியை எப்படி அடைந்ததாக உணர்கிறீர்கள்?
மனப்பயிற்சியின் மூலமாகத்தான். எனது தாய்மொழி மராத்தி தெலுங்கு இப்படி எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போன்ற நேர்த்தியான கவிமொழியை அடந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். சொற்களை பலம் வாய்ந்ததாகவோ, ஆறுதல் தருவதாகவோ கட்டி சீர்மயான முறையில்தான் எனது கவிதைகளை அமைப்பதாக நினைக்கிறேன். நான் சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததே அது மொழி சம்பந்தமாக இருப்பதால்தான். சித்த மருத்துவ சொல் அகராதியை எடுத்து பார்த்தீங்கன்னா அதுல இருக்கிற ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்து இருக்கும், அகழ்வாராய்ச்சி செய்தது போல் இருக்கும். பாடல்கள் பொருளுடன் சந்ததுத்டன் இருக்கும். இதைப்போன்ற மனப்பயிற்சி இருந்தால் கவிமொழி எல்லோர்க்கும் வாய்க்கும். மற்றபடி வேற தளத்துல இயங்குற மற்றவர்களுக்குfம் அந்த சூழலுக்கு ஏற்ப மொழி உண்டாகும்.
உங்களின் கவிதைகள் சமன்பாடுகளாய் இருக்கின்றன. இது எப்படி சாத்தியமானதா?
என்னுடய ஒரு கவிதை கூட எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆனால் என்னுடய கவிதையை என்னிடம் கொடுத்தால் அது எப்படி உருவான என்று சொல்ல முடியும். எனக்கு இந்த சமன்பாடு போன்ற தொழில் நுட்பங்களில் திறமை கிடையாது. என்னுடய கவிதைகள் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிய முறைகளை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி செய்யாமல் முடியாது என்று எந்த ஒரு புதிய முறைகளையும் சொல்லி விட முடியாது. உணர்வுகள், மொழி போன்ற நிறைய விசயங்கள் ஒன்றாக கலந்து சொற்களாய் வெளிவரும் வடிவம்தான் கவிதை. பல்வேறு நிறங்கள் ஒன்றோடொன்று கலந்தால் என்ன நிறம் வருமென்று சொல்ல முடியாது. அதுபோலதான் கவிதையும், எந்த எந்த உணர்வுகள் பல்வேறு விசயங்கள் எந்தளவு கலக்குதுங்கிறத பொறுத்துதான் உருவாகும்.
உடல் சார்ந்த படிமங்கள் இருந்த காரணத்தால் உங்கள் "முலைகள்" தொகுப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதே?
கவிதைகளை எழுதும்போது இவ்வளவு பயங்கரமான எதிர்விளைவுகள் இருக்குமென்று நான் எதிர்பார்க்கல. சமூகம் முற்போக்கான. முற்போக்கான படைப்பு வந்தவுடன் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படி நாரகாசம் செய்யுமென்று நினைக்கவில்லை. அந்த தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகி விட்ட இதற்குள் தேவையான அளவு எதிர் விளைவுகளை சந்தித்து விட்டேன். இந்த சமூகம் எவ்வளவு மோசமானதென்று முன்பை விட இப்போது விளங்குகிறது.
உங்கள் பக்கம் நியாயமாய் இதைச் சொல்கீறீர்கள்?
‘முலைகள்’ என்கிற வார்த்தையை ஆபாசமாக பார்க்க கூடாது. அதை அடக்குமுறைக்கு எதிரான ஒரு உயிர் சார்ந்த படிமமாக வரலாற்று ரீதியாகத்தான் பயன்படுத்தினேன். முலைகள் என்ற வார்த்தையை அதற்கு பின்பு நுழைந்து படிக்கணும். ஆண்டாள் எழுத்தை படித்தால் தெரியும் erotic உடன் அழகும், அறமும் சார்ந்து இருக்கும். அழகுடன் சேர்ந்து கொடுக்குறப்ப யாரும் வேண்டாம்னு நசுக்கி விட முடியாது. நான்தான் முதல் ஆள் இல்லை, இதற்கு முன்னாடியே எழுதியிருக்காங்க. இதைக்கூட சரியாக எடுத்து கொள்ள முடியாத பெண்கள் மற்ற ஓவியம். சிற்பம், சினிமா போன்ற துறைகளை எப்படி எடுத்து கொள்ள போறாங்கன்னுதான் தெரியலை.
நீங்கள் ஏன் வேற மாதிரியாக எழுதக்கூடாது?
என்னைச் சார்ந்த இதைப் போன்ற விசயத்தை யாருக்கும் நிர்ணயிக்க உரிமையில்லை.
இதை எப்படி எடுத்துக்கிறீங்க?
எனக்கொரு குருடனைத் தெரியும். கை தட்டியபடி நடந்து செல்வார். அவரின் காது மிகவும் நுட்பமானது. கைத்தட்டலுக்கு வரும் எதிரொலியை கொண்டே இங்கு என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நடந்து செல்வார். அதைப்போல் நானொரு கல்லெறிந்து பார்த்தேன். அதற்குதான் இத்தனை வாதை, பிரதிவாதங்கள், ஆனால் விமர்சனங்கள் எதுவும் ஆரோக்கியமாக இல்லை. சிலபேர் இதைப்பற்றி பேசவேமாட்டேன்கிறார்கள். அவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.
திருமணம் பற்றிய உங்களின் பார்வை என்ன?
அதைப்பற்றிய பேச்சு அவசியமானதென்று எனக்கு தோன்றவில்லை. நாம் என கவிதைகள பற்றி மட்டும் பேசுவோம். மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம்தான் என கவிதைக்கும், கல்யாணத்திற்கும். இதையே ஒரு ஆண் கவிஞர் என்றால் கேட்பீர்களா என்ன?
யாருக்காக எழுகிறீர்கள் உங்களுக்காகவா? மற்றவர்களுக்காகவா?
முழுக்க முழுக்க எனக்காகத்தான். இதில் எல்லா கவிஞர்களுமே சுயநலக்காரர்கள்தான். எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்க, இதைப்போன்ற விபரீதங்கள் நடக்காமல் இருக்கத்தான் எழுதுகிறேன்.
பெண்மையை சார்ந்த உங்களின் பார்வை என்ன?
அது பெண் சார்ந்து. ஆண் சார்ந்து அதாவது பெண்ணைப் பற்றியே கண்டு கொள்ளாத ஆண் சார்ந்து, ஆணாதிக்கத்திற்கு ஆதரவு தருகின்ற பெண் சார்ந்த விஷயம்.
ஒரு ஆண் என கவிதைகளுக்கு எதிர்வினை தந்தால் அதற்கு பின்னாடி இந்த சமூகத்தோட கருத்தியல் இருக்கு. அந்த ஆணை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. ஆனால் அந்த ஆணுக்கு தன்னளவிலாவது கருத்தியலை மாற்ற வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கு. அதற்கு கண்டிப்பாக முயற்சி செய்யணும்.
உங்களின் கவிதைகள் மிகவும் சிக்கலான விசயத்தை அத்துவான வெளியில் சொற்களை கோர்த்து எழுதப்பட்டது போல் இருப்பது ஏன்?
கவிதைதான் என்னை தேர்ந்தெடுக்குது. அது போகிற வழியில் என்னை அழைத்து போகுது எனக்குள்ளும் வெறுப்புணர்வு, கெட்ட எண்ணம் எல்லாம் இருக்கு. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க முடிவதில்லை. எனவே அதற்கு தகுந்தபடி லயத்தோட கவிதையும் மாறுது, வெளி வருது.
உங்கள் கவிதைகளில் இரண்டு விதமான நிகழ்வுகள் உவமைகளை கோர்க்கும் போது, இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
இது காலம், உணர்வு சார்ந்த விசயம் அதனால் அப்படி எழுதினால் தொழில் நுட்பமாக இருக்கும் கவிதையாக இருக்கும். இது உள்மனம் சம்பந்தப்பட்ட விசயம்.
நான் இதுவரை ஒரே கவிதையைத்தான் இடை இடையே தொடர்ச்சியாகவோ இல்லை பக்கங்களை மாற்றியோ எழுதறேன்னு நினைக்கிறேன். இதற்கு மேல் உணரத்தான் முடிகிறது, சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அது உன்னதமான போதையான அனுபவம்
ஒரு கவிதைக்கும், அடுத்த கவிதைக்குமான இடைவெளி பற்றி என்ன நினைக்கிறீங்க?
எனக்குள் நடந்த உரு மாற்றம் (metamorphosis) தான் அந்த இடைவெளி, இது தனி மனித மனம் சார்ந்த விசயம்.
உங்களின் கவிதை நிலைத்தன்மையை அடைந்து விட்டதாய் நினைக்கிறீர்களா?
தெரியல. சொல்ல முடியல. ஆனால் இன்னும் எனக்கு திருப்தி தரும் கவிதையை எழுதவில்ல.
சந்திப்பு : கனகராசு & ரமேஷ்
|
---------------------------------------------------------------------------------------------------- |
நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை! :குட்டிரேவதி நேர்காணல். - சூரியகதிர் நேர்காணல்
தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…
படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?
எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!
“இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”
சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள்இ சமூக வரலாற்றுஇ அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல் மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம் தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா?
தமிழ் மக்கள் குறித்தோ பண்பாடு இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80இ90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார்.
“கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள் விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”
சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால் மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர் தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது.
” இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”
நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால்இ முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால் நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் இலகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால் திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோலஇ ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!
“இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”
அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்.
நேர்காணல் : மு.வி.நந்தினி – நன்றி :சூரியகதிர்
------------------------------------------------------------------------------------------------
குட்டி ரேவதி-தீராநதி நேர்காணல்
புதிய உத்வேகத்துடனும் ஒரு இயக்கமாகவும் தமிழில் கவிதை எழுதத் தொடங்கியுள்ள பெண்ணியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் குட்டி ரேவதி. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்!’ ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘பனிக்குடம்’ என்ற பெண்ணியச் சிற்றிதழையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘முலைகள்’ தொகுப்பு வெளியான போது, தலைப்புக் காரணமாக மிகுந்த சர்ச்சைக்குள்ளானார். அன்று தொடங்கி சமீபத்திய ‘சண்டக்கோழி’ சர்ச்சை வரை பல சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டது. ஆனாலும் சர்ச்சைகள் குறித்த கவலை கொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வரும் குட்டி ரேவதியின் பங்களிப்புகள் தமிழில் பெண்ணிய சிந்தனைகளையும் செயல்பாட்டையும் வளர்த்தெடுப்பதில் முக்கியமானவை.
தீராநதி: உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அடிக்கடி எடுத்து படிக்கிற கவிஞர்கள் யார்?
குட்டி ரேவதி: பிரமிள், தேவதேவன் இருவரும்தான் எப்போதும் எனக்குப் பிடித்த கவிஞர்கள். பிரமிள் பற்றி நான் மீண்டும் மீண்டும் பேச விரும்புகிறேன். கவிதை ஒரு உறைந்த வடிவம் என்று எனக்குத் தோன்றுகிறது. பிரமிளிடமோ அது அதி உறைந்த வடிவமாக இருக்கிறது. தேவதேவன் மிகவும் அரூபமான ஓர் ஆளுமை. அவர், கவிதைக்குள் இப்போது மிகவும் நெகிழ்வான வடிவத்துக்கு நகர்ந்துவிட்டார். ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ எழுதிய தேவதேவன் இல்லை, இப்போதிருக்கிற தேவதேவன். மெதுவாக கவிதைக்குள் உரைநடைக்கு அவர் நகர்கிறார். ஆனால் அதற்குள் ஆழமாக கவித்துவம் இருக்கிறது என்பதுதான், அவரது பலம்…………………
தீராநதி : “விமரிசனங்களைப் புறக்கணிக்கிறேன்” என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். விமரிசன இயக்கம் படைப்பியக்கத்துக்கு வலு சேர்க்கக் கூடியது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
குட்டி ரேவதி : விமரிசன இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மொழியில்தான் படைப்பியக்கமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில், எனக்கு மறுப்பு இல்லை. தமிழில், பிரமிள் அந்த வகையில் மிகச் சிறப்பாக இயங்கியிருக்கிறார். மிகத் தீவிரத்துடனும் சமூக அக்கறையுடனும் அதனை அவர் செய்திருக்கிறார். அவரைப் போன்ற திறந்த இதயத்துடன் இருக்கும் இன்னொரு விமரிசகரை தமிழில் நான் பார்த்ததில்லை. இன்று தமிழ் விமரிசகர்கள் அவர்களின் சுயமதிப்பீடுகள், குழுக்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்துதான் விமரிசனக் கருத்துகளை முன்வைக்கிறார்கள். …………..
தீராநதி: ‘பெண்ணுடலை ஆணுடலுக்கு வழங்குவதற்கான அவஸ்தையே’ உங்களிடம் கவிதையாகியிருக்கிறது. மேலும் ‘இக்கவிதைகள் ஆணிய கருத்தாக்கமான பெண்ணுடல் அருவருப்பானது என்பதையே வலியுறுத்துகின்றன’ என்று மாலதிமைத்ரி உங்கள் கவிதைகளை விமரிசித்துள்ளார். ‘முலைகள்’ கவிதை குறித்த அவரது விமரிசனத்தையும் படித்திருப்பீர்கள் என்று கருதுகிறோம்?
குட்டி ரேவதி: ‘விட்டுவிடுதலையாகி நிற்பதற்கான’ ஒரு ஆரம்பகட்டம்கூட தமிழில் இன்னும் நிகழவில்லையே. ஆண்களுக்கு உடலை வழங்கி, அதிலிருந்து தங்கள் உடலை மீண்டும் மீண்டும் விடுவிப்பதுக்கான எத்தனத்துடன்தான், பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். மேலும் மாலதிமைத்ரி பார்ப்பது போல், மிகவும் மேலோட்டமாக கவிதைகளை அணுகுவதுக்கான தளத்திலிருந்து நான் எனது கவிதைகளைப் பார்க்கவில்லை. ‘முலைகள்’ கவிதையில் ஒரு பெண்ணின் முழு உடலையும் நிலப்பரப்பாக நான் மாற்றியிருக்கிறேன். எனது உடலின் வளர்ச்சியை நான் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். அதனடிப்படையில், உடலை காலமாறுபாட்டுக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பாக ‘முலைகள்’ கவிதையில் பார்த்திருக்கிறேன். எந்தெந்த நிலப்பரப்பில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறேன் என்பது அந்தக் கவிதையில் இருக்கிறது. அதில் எனது காமத்தை நான் கொண்டாடுகிறேன். அந்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும் முழுமையான நிறைவான ஒரு கவிதை அது.
வேறு விதமாகவும் அந்தக் கவிதையை வாசிக்க முடியும். சாதியை மிக நுட்பமாக அவதானிக்கிற அனேக சந்தர்ப்பங்கள் அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது. தலித் பத்திரிகைகள், இயக்கங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று ஒரு எழுச்சி நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. சாதியம் திணிக்கப்படும் முதல் இடமாக பெண் உடல்தான் இருக்கிறது. அதனை அந்தக் கவிதை பதிவு செய்கிறது. இன்னொன்று, உலகமயமாக்கல் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உலகத்தில், ‘முலைகள்’ ஒரு உயிர்பூர்வமான விஷயமாக இல்லை. செயற்கையான பொருளால் உருவான ஒன்றாக அது இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் முலைகள் மிகவும் ஆபாசமாக சித்திரிக்கப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் உயிர் விருத்திக்கான ஒன்றாகவும் அது இல்லை. வியாபாரத்தை வெற்றிகரமாக்குவதுக்கான சிறந்த ஒரு மூலதனம், அவ்வளவுதான். இதற்கான எதிர்வினையாகவும் அந்தக் கவிதையை பார்க்க முடியும்.
தீராநதி: அந்தக் கவிதை வெளிவந்த புதிதில், ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகத்தான் இப்படி நீங்கள் எழுதுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது. இன்று வரைக்கும் அந்த விமரிசனம் தொடரவும் செய்கிறது.
குட்டி ரேவதி: அதனை விமரிசனம் என்பதைவிட, தாக்குதல் என்றுதான் நான் பார்க்கிறேன். உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தக் கவிதை தொகுப்பு வந்திருந்தால், இவ்வளவு எதிர்ப்புகளை அது சந்தித்திருக்காது என்றுதான் கருதுகிறேன். மகாஸ்வேதாதேவி ‘மார்புக் கதைகள்’ (brest stories) எழுதியிருக்கிறார்…………
தீராநதி: நீங்கள் ஒரு சித்த மருத்துவர். சித்தர்களின் ஏடுகளை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அவை உங்கள் படைப்பியக்கத்தை பாதித்திருக்கிறதா?
குட்டி ரேவதி: மிகவும் ஒழுங்கற்ற, ஒப்பனைகள் இல்லாத மொழி சித்தர்களின் மொழி. குறிப்பாக மொழியை அலட்சியம் செய்கிற, அதே நேரத்தில் வேறு வேறு சொற்களைக் கண்டடைகிற தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. சித்தர்களின் ஏடுகளை, படிக்க கிடைத்த வாய்ப்பை மிகவும் முக்கியமாக நான் கருதுகிறேன். அது அகவயமாக என் சிந்தனையோட்டத்தில் ஊடுருவி, மிகவும் ஆத்திகம் சார்ந்த நுட்பமான ஒரு மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது. உடலைப் பிரதானப்படுத்துகிற தத்துவம் சித்த தத்துவம். நிலைபேறு அடைவது என்பதை உடல் வழியாகத்தான் அடைய முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். சாதியை மறுக்கிற ஒன்றாகவும் சித்த தத்துவம் இருக்கிறது.
தீராநதி: பெண்ணியம் சார்ந்து தமிழில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?
குட்டி ரேவதி: பெண்ணியம் குறித்து உலகளவில் நிகழ்ந்திருக்கும் ஆரம்ப காலகட்ட விவாதங்களுக்குள்ளேயே தமிழில் இன்னும் நாம் போகவில்லை என்றுதான் கருதுகிறேன்.
தீராநதி: உலகின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்துள்ள பெண்ணிய விவாதங்களை அப்படியே தமிழுக்கு எடுத்துக்கொள்ள முடியாது, தமிழுக்கான பெண்ணியம் என்பது, அதிலிருந்து மாறுபட்டது என்ற கருத்தும் இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?
குட்டிரேவதி: நமது நிலவெளிக்கான பெண்ணியம் என்பது நமது பாரம்பரியம் சார்ந்துதான் உதயமாக முடியும் என்பதே என் கருத்து. நமது கோடைகாலம் மிக நீண்டது; நமது உணவு மிகவும் காரசாரமானது; உழைப்பு அதிகமுடையவர்கள் நாம்; மிகவும் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாகவும் நாம் இருக்கிறோம்; மொழி, நிலப்பரப்பு, வெயில் சார்ந்து நம்மிடையே ஏகப்பட்ட பிரிவுகள்; கண்ணகி, கற்பு போன்ற மொழிவழியாக உள்வாங்கிக் கொண்ட கற்பிதங்கள் நம்மிடம் அதிகம் இருக்கின்றன. அந்தக் கற்பிதங்களைக் கடக்க முடியாத மனத்தடைகளும் சமூகத் தடைகளும் நம்மிடையே அதிகம் இருக்கிறது. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: ”திருமணமான தொடக்க வருடங்களில் உணவில் சரியாக உப்பு போடாததுக்காக என் கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். ஆனால் இப்போது அடிப்பதில்லை. ஏனெனில் நான் சரியாக உப்பு போட கற்றுக் கொண்டுவிட்டேன்.’’ எவ்வளவு பெரிய வலி இந்த கூற்றில் இருக்கிறது. நமது சமூகத்தின் கட்டுமானம் இதில் வெட்டவெளிச்சமாகிறது. நமது பெண்களைப் பொறுத்தவரைக்கும், பெரிய பயணங்களும் அனுபவப் பகிர்வும்தான் பெண்களின் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று கருதுகிறேன். ஆனால் பெண்கள் பயணம் செய்வதுக்கான சாத்தியங்கள் இங்கு மிகவும் குறைவு.
சாதியை அடிப்படையாக கொண்ட, இங்கிருக்கும் தீண்டாமையும் வேறு எங்கும் இல்லாத ஒன்று. ஆண் அதிகாரத்துக்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்தான் தீண்டாமை. கடந்த ஐந்து வருடங்களில் அரசியல், பத்திரிகை, இலக்கியம் உட்பட எல்லா இடங்களிலும் சாதியம் இன்னும் கூர்மையாகியிருக்கிறது என்றுதான் கருதுகிறேன். பாமா சொல்கிறார்கள்: “தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் மூன்று விதமான வன்முறைக்கு ஆளாகிறது. மேல்சாதி ஆண், பெண் மற்றும் அதே சாதி ஆண் ஆகியோரின் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் பெண் உடல் உள்ளாகிறது.’’ மேல் சாதி பெண்கள் கீழ்சாதி பெண்களை எந்தெந்த வகையில் ஒடுக்குகிறார்கள் என்பது இரண்டு பெண்கள் புழங்கும் பரப்பில் வெளிப்படும் ஒன்று. அதனை பாமா மிக நுட்பமாக அவதானித்திருக்கிறார்………
தீராநதி: ஆண்டாளுக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் பிறகு தமிழில் பெண் கவிஞர்களே இல்லை என்ற கவிஞர் விக்கிரமாதித்யனின் பேச்சுக்கு, “அது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு; நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம்” என்று பல பெண் கவிஞர்கள் எதிர்வினை புரிந்திருக்கிறார்கள். உங்கள் தரப்பு என்ன?
குட்டி ரேவதி: சாருநிவேதிதாவும் மற்றும் பலரும்கூட இதுபோல் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எங்களை புறக்கணிப்பதுக்கான, ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு விஷயம்தான் இந்த ஒப்பு நோக்கல். இதற்குப் பின்னால், ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் சாதியம் சார்ந்த காரணங்களும் மிகப் பலமாக இருக்கிறது என்று கருதுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து, அதுவும் பெண்களிடம் இருந்து இப்படி வெளிப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி மற்றும் நான் எல்லோரது கவிதை உலகமும் மொழியும் வெளிப்பாட்டு முறையும் முற்றிலும் வேறுவேறானவை. அனைவரையும் பொதுமைப்படுத்தி பார்க்க முடியாது. பெண் கவிதைகளை பொதுமைப்படுத்தி பார்ப்பதை நான் அபத்தமாக நினைக்கிறேன்.
ஆண்டாள், காமம் சார்ந்த உறவு விஷயங்களை பக்தியாக பார்த்திருக்கிறார். பக்தி காதலாகி, காமத்தைக் கலந்து வெளிப்படுகிறது. காரைக்கால் அம்மையார், தங்கள் உடலை வருத்தி செய்கிற விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். இருவரிடமும், மொழி, வளமையும் கூர்மையும் கொண்டிருக்கிறது. ஆனால் சமூகத்தை உள்வாங்கிக் கொள்வது என்பது அவர்களிடம் எங்கேயும் நிகழவில்லை. இருவருமே அவர்களது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதுக்கான ஒன்றாகத்தான் கவிதைகளை பார்த்திருக்கிறார்கள். இன்றைய பெண் கவிஞர்களிடம், மிக நுட்பமான சமூகத்தைக் குறித்த அவதானிப்பு இருக்கிறது. அந்தவகையில்தான், நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம் என்று சொல்கிறோம்…………..
தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று இலக்கியத்தைப் பிரித்து பார்ப்பதுடன் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
குட்டி ரேவதி: இல்லை. பெண் எழுதினால் பெண் மொழி, ஆண் எழுதினால் ஆண் மொழி என்று பிரிப்பது சரியல்ல. எழுத்தில் மனோபாவம் சார்ந்துதான் ஆண் மொழி, பெண் மொழி என்று இருக்க முடியும். ஒரு ஆணிடம் இருந்து சிறந்த ஒரு பெண் மொழி வெளிப்படலாம். சில ஆண் இயக்குநர்களின் திரைப்படங்களில், அதில் வெளிப்படும் பெண்களின் உலகம், ஆச்சர்யமூட்டும் வகையில் நுட்பமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு பெண்ணால் மட்டும்தான் அது சாத்தியப்படும் என்று தோன்றும். ஆனால் அங்கே அது ஆணால் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஒரு கட்டத்தில் இருந்தது. இப்போது அதனை கடந்து தமிழ் பெண் கவிஞர்கள் வந்துவிட்டார்கள்……………….
முழுமையான நேர்காணல்- குமுதம்-தீராநதி 01-02-2006
நன்றி: குமுதம் தீராநதி.
------------------------------------------------------------------------------------
சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.
“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”
தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
குட்டி ரேவதி: கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது.
கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.
என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?
இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.
தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?
குட்டி ரேவதி: ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
குட்டி ரேவதி: நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்று அம்பை ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, உடலை விரிப்பதற்கான ஒரு வெளிகூட உங்களுக்குக் கிடையாது.எத்தனை பெண்கள் தங்களுடைய உடலைத் தாங்களே பார்த்திருப்பார்கள்…? மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்புவதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது.
ஆனால், அவ்வாறு செய்வதுகூட ஒரு தகாத செயல் என்பதான எண்ணம் எப்படியோ எங்கள் மனங்களிலே படிந்திருக்கிறது. எங்களை நாங்கள் பார்க்கக் கூச்சப்படுகிறோம் என்று சில மாணவிகள் என்னோடு பேசியபோது சொன்னார்கள். ஏனென்றால், நம்முடைய உடலில் நமக்கு உரிமையில்லை… அது வேறொருவருக்கு உடமையானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளின் இருபத்துநான்கு மணித்தியாலமும் நாம் உடலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதாவது, இந்த உடலை வேற்று ஆட்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று என்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். பாலியல் விகற்பத்திற்கு ஆட்பட்டுவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.இதெல்லாம் இயல்பாகவே ஒரு தனிமைக்கு இட்டுச்செல்கிறது. உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான். அந்தத் தனிமையைக் கட்டியமைப்பதற்கான விடயங்கள்தான் குடும்பம்,சாதி,மதம் போன்றவை. இவற்றினடிப்படையில்தான் நான் தனிமையை முக்கியமான பேசுபொருளாகப் பார்க்கிறேன்.
தமிழ்நதி:உங்களுடைய அடுத்த கவிதைத் தொகுப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்.
குட்டி ரேவதி: ‘உடலின் கதவு’என்பது அதன் தலைப்பு. அந்தப் பெயரைப் பார்த்ததும் உறுப்பைச் சார்ந்தது அப்படியென்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சொல்லாக, ஒரு முத்தமாக, ஒரு அனுபவமாக, நல்ல கலந்துரையாடலாக இருக்கலாம். அது உங்கள் உடலைத் திறந்துகொடுக்கலாம். அந்தத் தலைப்பிலே உண்மையில் ஒரு கவிதைகூட இருக்காது. அந்தத் தலைப்பின் சாயலை பல கவிதைகள் கொண்டிருக்கும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு, பயணத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. துயரமான ஒரு தருணத்தில் வருகிற தோழியின் தொலைபேசி அழைப்பும் விசாரிப்பும் ஒரு கண்ணீர்த்துளியாக கன்னத்தில் உருள்கிறபோது அந்த ஒரு விசாரிப்பு உடலின் கதவாக அமைகிறது அல்லவா? அந்த முக்கியமான தருணங்களின் நெகிழ்வைக் கருதித்தான் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.
தமிழ்நதி:பொதுவாக உங்களுடைய கவிதைகளிலே ஒரு காட்சிப்படுத்தலைக் காணமுடிகிறது. கவிதை மொழியில் இது எப்படிச் சாத்தியமாகிறது?
குட்டி ரேவதி: உண்மையில் ‘காட்சிப்படுத்தல்’என்ற இந்தப் படிமத்தைத் தமிழில் தொடக்கிவைத்தவர் பிரமிள்தான். படிமம் என்றால் ஒன்றின்மீது ஒன்று படிந்து வார்த்தையை அர்த்தப்படுத்துவது என்று பொருள். கவிஞன் வார்த்தை அடுக்குகளை மூடி மூடி ஒரு காட்சியிலிருந்து அல்லது ஒரு படைப்பிலிருந்து வெளியே வருகிறான். கவிஞனால் மூடப்பட்ட அடுக்குகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அந்தக் காட்சியைக் கண்டுபிடிப்பவனாக வாசகன் இருக்கிறான். நவீன கவிதையில் காட்சியைப் பிரதானப்படுத்தி அதற்கான சொல்வீச்சைத் தேர்ந்தெடுக்கும்போது பொருளற்ற சொற்களையல்லாமல் கூர்மையான சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் படிமத்தின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. இந்தக் காட்சிப்படுத்தலுக்கு தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. தமிழர்கள் மிகுந்த அழகியல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம். அழகியல் என்பது ஆழத்திலிருந்து மலர்வது, அதை ஒரு ஒப்பனை என்பதாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். நீங்கள் தீவிரமாக ஒரு விடயத்தில் ஈடுபடும்போது அதன் இறுதி விளைவாகக் கிடைப்பதுதான் அழகியல் என்றும் சொல்லலாம். படிமம், காட்சிப்படுத்தல், அதற்கான சொல் தேடுதல் என்பதன் வழியாக அழகியலைச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ்நதி:உங்கள் மனதில் இருக்கிற கவிதையை உங்களால் வார்த்தைகளில் முழுமையாக வெளிக்கொணர முடிகிறதா?
குட்டி ரேவதி: அது மிகவும் கடினம். எல்லா இலக்கியவாதிகளும் சொல்வார்கள் நாங்கள் நினைத்த கவிதையை எழுதவேயில்லை என்று. அது அப்படியே அழிந்துபோய்விடுவதுமில்லை. அதனுடைய சாரம் காத்திருந்து வேறொரு கவிதையில் வேறொரு வடிவத்தில் வெளிப்படும். அதற்கு நாங்கள் கவிதையின் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆழத்திலிருக்கும் அந்தக் கவிதையின் கவித்துவத்தை நாங்கள் வெளியில் கொண்டுவர முடியும்.சில கவிதை வரிகள் சட்டென்று வந்து விழுந்துவிடும். சில நேரங்களில் திருத்தங்கள் செய்யவேண்டியேற்படும். நிறைய திருத்தங்களை வேண்டி நிற்கும் கவிதையை நான் விட்டுவிடுவேன். கவிதையை எழுதுபவர்தான் முதல் விமர்சகராக இருக்க முடியும். தமிழில் சுய விமர்சன மரபு என்ற ஒன்று இல்லாமற் போனதுதான் பொதுவாக எல்லா இலக்கியங்களுமே நலிந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.
மழையின் இரவுகளில் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன
‘முலைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.
தமிழ்நதியின் பக்கங்களில் இருந்து
-------------------------------------------------------------------------------------------
‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?’*: குட்டி ரேவதி
சில பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் மொழித்தளத்தில் நான் வாசித்து அனுபவித்த மிக முக்கியமான பெண்ணிய விவாதமாகவும் உரையாடலாகவும் மறுகா இதழில் இடம்பெற்றுள்ள த. மலர்ச்செல்வன் எடுத்திருந்த, ‘நான்கு பெண்களுடனான உரையாடலைக்’ கருதுகிறேன். இத்தனை காத்திரமாகவும் நுட்பமாகவும் பெண் மொழியை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான உரையாடல் தமிழ் மொழியில் நடவாமலேயே போனது. ஆனால் அத்தகைய தேவைக்கான ஏக்கம் இந்த உரையாடலை படித்ததும் என்னுடைய மன ஆழத்தில் பொங்கிக் கிடந்ததை உணர்ந்தேன். அதற்குக் காரணம், தமிழகத்தில் நிலவும் குழு மனப்பான்மை அல்லது பெண்கள் தேர்ந்தெடுத்து இயங்கும் தனித்த கருத்தியல் தளம் அல்லது இங்கு ஏற்பட்ட பதிப்புப் புரட்சி மற்றும் அது எழுத்தாளர்கள் மீது செலுத்தும் தனித்த அதிகாரம் அல்லது எழுத்தாளர்கள் பதிப்பகங்களின் உடைமைகளாய் ஆகிப்போனது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பெண் மொழிக்கான இலக்கிய இயக்கம் என்ன ஆயிற்று, அதன் விளைவுகள் என்னென்ன என்பது இந்த விவாதத்தில் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டதும் கூட இந்த விவாதத்தை என் பார்வையில் திறனாய்வு செய்யும் ஆவலையும் எழுச்சியையும் எனக்கு ஏற்படுத்தியதால் இதை எழுதுகிறேன். ஈழத்தமிழ்க் கவிஞர்கள் உருத்திரா, அனார், விஜயலெட்சுமி, சித்திரலேகா மெளனகுரு மற்றும் த. மலர்ச்செல்வன் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கு கொண்டிருந்திருக்கின்றனர். மலர்ச்செல்வன், உரையாடலை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் செய்திருக்கிறார். அவ்வப்பொழுது அவர் ஒட்டு மொத்த ஆண் எழுத்தாளர்களின் சார்பாகவும், ஆண் எழுத்தாளர்களின் ஆதரவை நல்குபவராகவும் இருந்திருப்பதும் ஆரோக்கியமான விஷயமாகும்.
உருத்திரா, அனார் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் தமது பெண் எழுத்து, பெண் மொழி குறித்த நவீனப் பார்வையை முன்வைப்பதுடன் அவ்வப்பொழுது இடம் தேர்ந்து தமிழ்ப்பெண் எழுத்தையும் ஈழத் தமிழ் எழுத்தையும் ஒப்பிட்டு இவ்வுரையாடல் வழியாக ஒரு கூட்டு அசைவியக்கத்தைச் செயல்படுத்தியுள்ளனர். சித்திரலேகா, நானறிந்து அவரும் ஒரு கவிஞர்.தமிழகத்துக்கு முதன்முதலாக ஈழத்தமிழ்க் கவிதையை ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர். இவர் இவ்வுரையாடலில் தனது விமர்சனப் பார்வையை தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு பழமையான பார்வையை மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி இக்கட்டுரையின் இறுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
உருத்திரா எழுப்பும் பெண் மொழியின் முக்கியமான பிரச்சனைகளைக் கீழே தொகுத்தளித்துள்ளேன்:
‘புரியாத படைப்பு என்பதால் மிகச்சிறந்ததென்றோ அடிமட்டமான வாசகனைச் சென்றடையாமல் உள்ளதால் சிறந்த படைப்பு அல்ல என்று நான் கருதலாமா?’
‘எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்.’
‘பெண் சார்ந்த பெண் குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்ததான வேறு சொற்கள் எதனையும் நாம் வைத்திருக்காத நிலையில் தான் இப்பொழுது பெண் மொழி என்று இயம்பப்படுவது பிரச்சனையாகிறது.’
‘சொற்களை தீர்மானிப்பதும் வடிவமைப்பதும் சொற்கள் யாருடையவை என்பதும் தான் பிரச்சனை.’
‘கூர்மையான அனுபவ வெளிப்பாடு தான் மொழியைப் பிரச்சனையாக்குகிறது.’
‘ஆண் பார்வையில், பெண் எழுத வரும் போதே மொழி பிரிக்கப்பட்டுவிடுகிறது.’
‘மொழி சார்ந்த பிரச்சனைக்கான எதிர்ப்புக் குரல்கள் ஒரு போதும் பெண்களிடம் இருந்து வரவில்லை. எனில் நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?’
‘நாம் எழுதுவதற்கு தொடங்குவது என்பதே ஓர் பிரச்சனையாகவே உள்ளது.’
இந்நிலையில், ‘எழுதுவதற்கான எத்தனையோ தூண்டல்கள் உள்ளுக்குள்ளேயே அடங்கிப் போகுமே தவிர வெளியில் வராது.’ மேற்கண்டவற்றையெல்லாம் தமிழ் மொழித்தளத்தில் பெண் மொழி பற்றிய உருத்திராவின் கண்டுபிடிப்புகள் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு பொருள் பற்றி எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது என்பதில் கூட இலங்கும் அரசியலும் பின்னணியும் பெண்ணியம் குறித்தவை. ஏனெனில், உடல் உறுப்பைக் குறிக்கும் சொற்கள் குறித்த அரசியல் அவ்வாறு தான் தமிழகத்தில் திரிந்து போனது. தீவிரமான பெண்ணிய வாதிகளே கூட அத்தகைய சொற்கள் இடம்பெற்ற கவிதைகளை, ‘பாலியல் சார்ந்ததாகத்’, தான் அடையாளப் படுத்தினர். அச்சொற்களுக்குச் சமூகப் பயன்பாட்டில் வேறு வேறு அர்த்தங்கள் இருந்தும் கூட அவை பாலிமை சுமையேந்தி நின்றன. இவ்விடம் உருத்திரா குறிப்பிடும் எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது மூன்றுமே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியவை.
மேலும் அவர் கேட்பது போலவே நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை? என்பதும் மிக முக்கியமான கேள்வி. எங்கள் உடலைப் பற்றிய சொற்களை நாங்கள் பயன்படுத்தத் தடையெனில் அவையும் ஆண்களின் சொற்கள் தாம். முதலில் அத்தகைய சொற்களை அவர்களிடமிருந்து கபளீகரம் செய்வோம். அல்லது, ‘பெண் உணர்வு, குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்த வேறு சொற்களை’ நாம் கண்டடையத் தான் வேண்டும்.
அனார் எழுப்பும் கருத்துக்களாவன:
‘பெண் எழுத்தினை படைப்போரின் நியாயங்களும் அதை வாசிப்போரின் நியாயங்களும் வேறு வேறாக இருக்கின்றன.’
‘பெண் தன் உடலைக் கொண்டாடுதலும் தன் உணர்வுகளை மதிப்பதும் அவளுக்கு ஒரே சமயம் நிகழ்பவை. இது இரண்டாம் தளத்திலிருந்து பெண்ணை உயர்த்துகிறது.’
‘மொழியின் போதாமைகளிலிருந்தும் பெண்ணானவள் தன் மொழியை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.’
‘பெண் உறுப்புகளை ஆண்கள் குறிப்பிடலாம். ஆனால் பெண்கள் குறிப்பிடக் கூடாது’’
‘என்னுடைய உணர்வுகளை நான் வெளியிடும்போது அது வேறுபட்ட ஆயிரம் பெண்களின் உணர்வுகளாகத் தான் இருக்கும்’
எழுத்தைத் தனது ஊடகமாகப் பயன்படுத்தும் ஒரு பெண் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அது எழுத்தையும் வார்த்தைகளையும் கண்டடையாத ஆயிரமாயிரம் பெண்களின் உணர்வு அழுத்தத்தையும் பிரதிபலிப்பானது. அதே மாதிரி, மொழியின் போதாமையை உணர்ந்து தனது உணர்வு வெளிப்பாட்டுக்கு ஒத்த சொற்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த பெண் மொழிப் பயணம் அமையக்கூடும், என்று ஒன்றோடொன்று, நடப்பியலில் பெண்மொழிக்கான வாதங்களை முன்வைக்கும் அனார், படைப்பாளியின் உள்ளத்தில் எழுத்து எழுச்சியுறும் நிலையிலிருந்து படைப்பாக மாறிய பின்னர் அதன் மீது ஏற்றப்படும் நியாயங்களையும் கூறுகிறார்.
‘நிர்ப்பந்தமாக சேர்க்கப்படுகின்ற சொற்கள் காலப்போக்கில் பழமையடைந்து விடுகின்றது. சொற்கள் தேவைப்பாடுகள் கருதித்தான் பயன்படுத்தப்படுகின்றன.’ மற்றும், ’இது ஒட்டு மொத்தமான மொழி சார்ந்த பிரச்சனையன்று. ஒரு வட்டத்தினரின் பார்வைப் போதாமையே முழு தொகுதியினரின் மீதும் ஏற்றிக் கூறப்படுகிறது. இது பார்வை சார்ந்த பிரச்சனையே அன்றி மொழி சார்ந்த பிரச்சனையன்று.’ என்ற விஜயலெட்சுமியின் கூற்று, உண்மையில் இந்த உடல் உறுப்பு பற்றிய சொற்கள் எந்தச் சிந்தனையின் அடிப்படையில் மொழிப் பிரச்சனையானது என்பதற்கான ஓர் அறிவார்ந்த விவாதமாகும்.
சித்திரலேகாவின் விமர்சனங்களுக்கு வருவோம். கலாவின் கோணேஸ்வரிகள் கவிதையில் இடம்பெற்றுள்ள, ‘எமது சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளைத் திறந்து வையுங்கள்!’ என்னும் விளிப்பு இனவாதத்தன்மை மிகுந்த வரி என்று இவரால் மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சொல்லுக்கான கோபத்தையும் ஈழத்தில் நிகழ்ந்துள்ள பொருளுக்கான கோபத்தையும் ஒப்புமைப்படுத்த முடியாது என்றும் கூறுகிறார்.
மேலும், மேற்குறிப்பிட்டுள்ள விஷயத்தை அவர் கூறியுள்ளது மாதிரி பெண்ணிய அரசியல் என்றோ பெண்ணிய நிலைப்பாடு தொடர்பான பிரச்சனை என்றோ தனிமைப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. இம்மாதிரியான முடிவுகள் பெண் என்ற ஒற்றை அரசியல் அடையாளம் என்பதே நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்குப் போதுமானவை என்ற எண்ணத்தினால் எழுபவை. இன்று பெண்கள் வேறு வேறு சூழல் பின்னணியிலிருந்து எழுத வருகின்றனர். பல அரசியல் நிலைமைகளில் பெண்களே ஆணாதிக்க அரசியலை மற்ற ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர். இதனால் பெண் என்ற ஒற்றை அடையாள அரசியல் நிலை மட்டுமே பெண்ணியம் முன்னெடுக்கப் போதுமானது அன்று.
‘கலாவின் கவிதைத் தொடர்பான பிரச்சனை மொழி தொடர்பான பிரச்சனையன்று.’
இவ்வாறு தான் தமிழகத்திலும் பெண்ணியவாதிகள் எனப்பட்டோர், கவிதையுடன் தமக்கான தனித்த உறவை ஏற்படுத்திக் கொண்ட, அதன் சமூக, இலக்கிய அரசியல் பின்னணியை உணர்ந்த ஒரு சிலரைத் தவிர, இம்மாதிரியான கவிதைகளுக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தமில்லை என்கிற ரீதியாய் இதை ஒதுக்கி வைத்து விட்டு வாளாயிருந்தனர்.
அவ்வாறே சித்திரலேகா முழுவிவாதத்திலும் இரு முறைகள் குட்டி ரேவதி வகையறா தவிர வேறு கவிஞர்களும் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அழுத்தம் கொடுத்து பெண் மொழியை விமர்சிக்கிறார். நாங்களும் பிற கவிஞர்களே தமிழகத்தில் இல்லை என்றோ அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்றோ எங்குமே கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட வகைக் கவிதைகளாய் இவை அடையாளப்படுத்தப் படும் போது அதன் அரசியலை விளக்கப்படுத்திப் பேசாதவர்களும் ஒதுங்கி நின்ற பெண் கவிஞர்களும் உண்டு.
மேலும் குறிப்பிட்ட இக்கவிதைகளின் அரசியல் பிரச்சனைப் பற்றிப் பேசும் சூழ்நிலையில் அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுவதை அவர்களே விரும்பாமல் இருக்கலாம். ‘எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்’, என்ற விஜயலெட்சுமியின் கூற்றை இங்கு நினைவுப்படுத்தவும் பொருத்திப்பார்க்கவும் வேண்டுகிறேன். தமிழ்ப் பொதுக்கவிதை என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள படிக்கக்கூடியதாகவும் இருக்கின்ற கவிதைகளை எழுதும் இளம்பிறை, பெருந்தேவி, ரிஷி போன்ற கவிஞர்களுக்கு முதன்மையான இடம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடமில்லை.
மேலும், இவ்வாறு சொற்களைப் பயன்படுத்தும் கருத்து நிலை என்பதே ஆண் மனோபாவத்தை ‘அகப்படுத்திய’ பார்வை என்று சித்திரலேகா குறிப்பிட்டிருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அது முதலில் ஆண்களுக்கே மட்டுமேயான மொழி என்று நீங்களும் ஏன் கருதுகிறீர்கள்? ‘ஆண் மனோபாவம் தான் இத்தகைய சொற்களைக் கூறுகிறது’ என்ற உங்கள் சிந்தனையே மரபார்ந்த வழி வந்ததாகிறது. அதை ஆண்களுக்கான சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே கருதப் போய்த் தான் அச்சொல் பயன்படுத்துவதில் பிரச்சனையாகிறது. அவ்வாறே அது ஆண்வயப்பட்ட ஆண் மனோபாவம் மிக்க சொல் என்று நாம் கருதினால், அந்தச் சொல்லை வலிந்து பயன்படுத்துவதன் வழி அந்தச் சொல்லுக்கான ஒட்டுமொத்த உரிமையையும், அதிகாரத்தையும் நாம் பறித்துக் கொள்வோம். அந்தச் சொல்லை நாம் பயன்படுத்தும் பொருள் நியதி கருதி அதன் அர்த்தப் பயன்பாடுகளை மாற்றிப் மொழிப் பண்பாட்டையும் மாற்றலாம்.
உதாரணத்திற்கு, ‘முலைகள்’ ‘யோனி’ என்பது வசைப் பயன்பாடாக இருந்த நிலை இன்று மாறி அது எம் எழுத்தின் வழியாக உடலின் கொண்டாட்டத்துடன் உணர்வுடன் வினையுடன் அர்த்தமாக்கிப் பயன்படுத்தப்படும் கருத்தியல் நிலை ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.
ஆகவே இவர்கள் யாருமே சித்திரலேகா கூறியிருப்பதைப் போல முலைகளை மட்டுமே கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கவில்லை. எங்களின் முதன்மையான வேலையும் அது மட்டுமேயன்று. எங்கள் பணிகளில் பெண்ணுடல் உறுப்புகள் பற்றிய வார்த்தைகளைச் சிதைப்பதும் ஆக்குவதும் புதுப்பிப்பதும் முக்கியமானவையே. இவர் இந்தக் கவிஞர்களின் எந்த ஒரு கவிதைத் தொகுப்பையுமே முழுமையாக வாசிக்காது விட்டிருக்கலாம் என்று சந்தேகமெழும்புகிறது. அதுமட்டுமன்றி, சித்திரலேகா தனது பதிலின் போது, பாலுணர்வு சார்ந்த விஷயங்களை மட்டுமே குட்டி ரேவதியும் மாலதி மைத்ரியும் எழுதிவருவது பெண்மொழியாகாது என்றும் குறிப்பிடுகின்றார். அது உண்மையன்று என்பதை இவ்விருவரின் கவிதைகளைப் படித்தவர்கள் அறிவர். மேலும், வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெண்களின் பிரச்சனைகள் மேலோங்கி விவாத முன்னிலைக்கு வருகின்றன.
அப்போது அவை பரந்த அளவில் உரையாடலாகித் தீர்வோ தெளிவோ பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் ஏற்கெனவே பெண்கள் எழுதிக் கொண்டு தாம் இருந்தனர், சித்திர லேகா குறிப்பிடும்படியான ‘வேறு பெண் அனுபவங்களை’. ஒவ்வொரு வகையான பெண்ணிய எழுச்சியும் வெவ்வேறு கால கட்டங்களில் தலையெடுக்கும் என்பது அவர் அறியாததா என்ன?
தற்போதைய நிலையில் பாலியல் அரசியலின் நிறைய விடயங்கள் பரவலாக ஊக்கம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரவாணிகள் பெற்றிருக்கும் சமூக, அரசியல் அங்கீகாரம் பெரிய அளவிலானது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. வரலாற்றிலிருந்து காந்தி போன்ற மானுடர்கள் பேசிய உடலரசியலும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து விவாதிக்கப்படுகின்றன. அதற்கு இலக்கியத்தில் நடைபெற்ற கருத்தியல் பரிணாமங்களும் சில பல சொற்பிரயோகங்களை பெண் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் அவை சமூகத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த வேறு விஷயங்களைத் தட்டியெழுப்பியதும் மிக முக்கியக் காரணங்கள். அவர் போன்று பெண்ணிய வாதிகளும் தமிழ்த் தளத்தில் கருத்தைத் தவறாகவோ தமக்குத் தோன்றிய விதமாகவோ எழுப்பப் போய்த்தான் அது ஒரு முழுபடித்தான விவாதமாக விரிய முடியாமல் போயிற்று என்று எண்ணுகிறேன்.
இறுதியாக, தமிழகத்திலும் ஈழத்திலும் பெண்களிடையே நிலவும் ஒற்றுமை என்பது மீண்டும் மீண்டும் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசப்படுகிறது. இதைப் பற்றிய எனது கருத்து என்னவெனில் இதைப் பெரிதும் தீர்மானிப்பது நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் பொருள் தான். அப்படிப் பார்க்கும் போது இப்படிக் குழுவாக வேறுபட்டு நின்று இயங்குவதை நான் பெரிதும் ஆமோதிக்கிறேன். பெண்களுக்கிடையே பெண் என்ற ஒற்றுமையைத் தவிர வேறொன்றும் இல்லை. மற்ற படி, சாதி, இனம், பண்பாடு, அரசியல் என எல்லாவற்றாலும் பிரிக்கப்பட்டு பிளவுபடுத்தப்பட்டுத் தான் இருக்கிறாள். இந்த வேறுபாடுகளை, அவற்றின் அரசியலை எல்லாம் பேசாமல் பெண் ஒற்றுமை என்பது சாத்தியமுமில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெறுமனே பெண் என்று பேசிப் பேசிச் செய்த காரியங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு. வேறுபட்ட சமூகத்தட்டுகளில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருக்கும் போது அவற்றிற்குப் பணியாற்றும் முறையும் மாறுபட்டு தான் இருக்கும். இது தான் இன்றைய பெண்ணிய அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்வதன் தொடக்கமாக இருக்கும்.
*தலைப்பு: கவிஞர் உருத்திரா உரையாடலில் பயன்படுத்திய வரி.
நன்றி: இனியொரு, தமிழ்நதி, தீராநதி
|