அமெரிக்க வல்லரசை இன்று அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியிருப்பது அல் காயிதாவின் மிரட்டல் நடவடிக்கையன்று. மாறாக அமெரிக்காவையே தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிதான் இன்று ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக உலகளவில் வலம் வரும் அமெரிக்க ஆட்சியாளர்களின் விழிகளை உறங்கா நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவின் புதிய மீட்பராக அமெரிக்க மக்களாலும் உலக ஊடகங்களாலும் அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்ற பாரக் ஒபாமாவின் செல்வாக்கு இன்று பரமபத விளையாட்டில் பாம்பினால் தீண்டப்பட்டதைப் போன்று படுபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதை சமீபத்தில் அமெரிக்க நாட்டில் நடந்த மாகாணத் தேர்தல் முடிவுகளும் ஊடகங்களின் கணிப்புகளும் உணர்த்துகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகி விட்டன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் தான் இன்றைய அமெரிக்க ஆட்சியாளர்களின் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன.
உலக வல்லரசையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார சுனாமியால் சிறிய நாடாக இருக்கின்ற அதுவும் ஆடம்பரத்திற்கும் வீண் விரயத்திற்கும் பெயர் பெற்ற துபை பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யமளிக்கும் விடயமாக இருந்திருக்கும். அருளை மட்டுமே அடிப்படையாக வைத்து செயல்படும் பல ஆன்மீக பீடங்களே பொருளாதாரம் என்று வந்தால் அடித்துக் கொள்ளுகின்ற காலமிது.
பொருளீட்டுதல் என்ற ஒன்றை மையப்படுத்தியே துவங்கப்பட்ட துபை DP வேர்ல்ட் எனும் நிறுவனம் இன்று 5600 கோடி டாலர் கடனில் தத்தளிக்கின்றது. இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கும் இந்த நிறுவனத்தால் துபையின் கட்டுமானப்பணிகள் முற்றிலும் நிறுத்தப் பட்டு விட்டன. கட்டுமானப் பணியினைச் சார்ந்த மற்ற துறைகளும் இதனால் முடங்கிப் போய்விட்டது. இத்துறைகளில் வேலை பார்த்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து தாய் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் 90 சதவிகதத்திற்கும் அதிகமானோர் சில ஆயிரங்கள் மட்டுமே மாத வருவாயாக ஈட்டியவர்கள். எதிர் காலத்திற்கான எந்த ஒரு உத்தரவாதமுமின்றி பிழைக்க சென்ற நாட்டில் பணியிழந்து வருகின்றவர்களுக்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ உதவிக் கரங்கள் நீட்டவில்லை என்பது பொருளாதார நெருக்கடியை விட அச்சப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகளை நம் நாட்டிற்கு அன்னிய செலாவணியாக அள்ளித்தந்தவர்கள் இவர்கள் தாம் என்பதை மத்திய அரசு வசதியாக மறந்து விட்டது.
துபையினில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவிற்கு எத்தகைய பாதிப்புகளுமில்லை என்ற ஓர் அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இந்த நாட்டின் மக்கள் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் துபையினில் பணிபுரிய அதில் பெரும்பாலோர் பணியிழந்து எதிர்காலமே சூன்யமாகி நாடு திரும்புகையில், எத்தகைய பாதிப்புகளுமில்லையென மத்திய அரசு அறிவிக்கிறதென்றால் இது மக்களுக்கான அரசு தானா என்பதில் சந்தேகம் வருகின்றது.
இந்த நாட்டின் வளங்களை சுரண்டிக் கொண்டும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தியும், ஏமாற்றியதை கையும் களவுமாக பிடித்தவுடன் சில நூறு கோடிகளை மட்டும் அபராதமாக கட்டி மத்திய அரசையும் இந்த நாட்டு மக்களையும் வஞ்சித்த கார்ப்பரேட்டுகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அலறி அடித்து அவர்களின் இல்லங்களுக்கே ஓடோடி சென்று துயரங்களை துடைக்கும் மத்திய அரசு கடைநிலை மக்களின் துயரங்களை கண்டும் காணாமல் இருப்பது ஆட்சி முறைக்கு அழகல்ல.
துபையினில் பணியிழந்து வருகின்றவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகள் மத்திய மாநில அரசுகளினால் செய்யப்பட வேண்டும். பல பணமுதலைகளை போன்று அரசினை ஏமாற்றத் தெரியாதவர்கள் இந்த அப்பாவிகள். துபையில் பணிபுரிந்த காலத்திலெல்லாம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டி தந்தவர்கள். கார்ப்பறேட்டுகளின் மீது காட்டும் கரிசனத்தில் கால்வாசியாவது இத்தகைய கடைநிலை மக்கள் மீதும் இந்த அரசுகள் காட்ட வேண்டும்.
எவற்றை செய்தால் தீங்கு வரும் என்று தெளிவாக தெரிகின்றதோ அவற்றை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு அடிபணிந்து செய்து கொண்டிருக்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் பயிரிட அனுமதி வழங்கியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். எவற்றை செய்ய வேண்டுமோ அவற்றை செய்யாமல் வெறும் வாய்ஜாலம் மட்டும் காட்டுவதையே வழக்கமாக்கி வைத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.
பொதுவாக அமெரிக்க வல்லரசு தன்னிடமுள்ள அபாயகரமான கழிவுகளையெல்லாம் (அணுக்கழிவுகள் போன்றவற்றை) கடல் வழியாக இந்தியா போன்ற ஏதாவது ஒரு ஏமாந்த நாட்டின் தலையில் கட்டுவது வழக்கம். நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை அபாயகரமான கழிவுகள் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் ஆட்சி புரிகின்ற ஆட்சியாளர்கள் தான். தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து ஆட்சி புரிவார்களேயானால் அடிமட்ட மக்கள் வெகுண்டெழுந்து தங்களின் போராட்டத்தினூடாக இத்தகைய அரசியல் கழிவுகளை நிரந்தர அரசியல் அகதிகளாக ஏகாதிபத்திய வெறி பிடித்த அமெரிக்காவிற்கே அனுப்பி விடக்கூடிய சூழ்நிலை வந்து விடும். ஜனநாயகம் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்தியா போன்ற நாட்டினில் மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் இது சாத்தியமானதே.
|