வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


சாருவுடன் படிமை மாணவர்கள் சந்திப்பு.

செந்தூரன்  


இன்று படிமையின் இலக்கிய இறுதி வகுப்பு. பலவிதமான எழுத்தாளர்களையும்,இலக்கிய ஆளுமைகளையும் சந்தித்திருக்கிறோம்.பலரோடும் வகுப்பறையில் அமர்ந்து உரையாடியிருக்கிறோம்.இன்றைய பயணம் அப்படி அமைந்துவிடவில்லை.பாண்டிச்சேரியில் படகினிலே அமர்ந்து உரையாடப் போகிறோம் என்ற உற்சாகம் காலையிலேயே எம்மிடம் தொற்றிக்கொண்டது.சாரல் தெறித்த காலைப்பொழுதின் அமைதியில் எம் பயணம் ஆரம்பமானது.

இன்றைய நாள் எம் நாயகன் சாரு நிவேதிதா.இந்த பெயருக்கு பின் இருக்கும் வீரியம் எதையும் எழுத்தில் வடிக்கவல்லது.பேசாத,கேட்க மறுக்ககூடியதாய் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வார்த்தைகளின், நிகழ்வுகளின் ஒற்றை வார்த்தை சாரு.சாரு என்றாலே காட்டம் என்ற பொருள் தரக்கூடிய மனிதரை நாம் எதிர்பார்த்து அமர்ந்திருந்தோம்.காலைகாற்று பல நாட்களுக்கு பிறகு நாம் அனுபவிக்ககூடியதாய் இருந்தது.நாங்கள் அனைவரும் ஏரியின் ஒவ்வோர் பக்கங்களில் இருந்து,கதைத்தும்,விளையாடிக்கொண்டும் இருந்தோம்.நேரம் கசிய ஆரம்பித்தது.எங்களின் உற்சாகமும் அதிகமாகத் தொடங்கியது.சாரு தன் வாகனத்தில் இருந்து மெதுவாய் இறங்கி வருகிறார்.எம்மிடம் இருந்த துடுக்குதனங்கள் மெதுவாய் மறைகிறது. அவரின் முன்னாலே ஒன்றுகூடி வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரும் பதில் வணக்கம் கூறுகிறார். எங்களுக்கான படகு தயாரானது. ஒவ்வொருவராய் ஏறி அமர்ந்து கொண்டோம். சாரு எல்லோருக்கும் தெரியும் விதத்தில் எதிரில் அமர்ந்துகொண்டார்.நாம், காலம் குறைவாகத்தான் உள்ளது என்பதை தெளிவாகவே உணர்திருந்தோம். எம் அறிமுகபடலம் ஆரம்பமானது.எல்லாவற்றையும் அமைதியாயும் அவ்வப்போது இடைகேள்விகள் கேட்டும் நான் மாற்றான் இல்லை என்பதைப்போன்று எம்முடன் சகயமாகிகொண்டார்.

அதுவே நாம் அவரோடு இணைந்து நடக்க ஏதுமானதாய் இருந்தது.படகு இலகுவாய் மிதக்க ஆரம்பித்தது.நாம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.சில நிமிடங்களுக்கு மேலான அமைதி,தொடர்ந்தார்.

நான் நாகூரிலே பிறந்தவன்.என் வீட்டையும்,தெருவையும் பார்த்தீர்களானால் அதைவிட ஒரு தாக்கம் எதுவுமே இருக்கமுடியாது.தற்பொழுது எனக்கு வயது ஐம்பத்தியெட்டு.நான் என் பத்து வயதுகளில் அந்த ஊரைவிட்டு வெளியே வந்தேன்.நாற்பது வருட வித்தியாசத்தின் பின் அந்த ஊரை சென்ற மாதம்தான் பார்த்தேன்.இதே போல் எனக்கு பதினாறு,பதினேழு வயது இருக்கும்போது என் மாமா நாற்பது வருடங்களின் பின் அந்த தெருவை பார்க்கிறார்.அப்பொழுது அவர்கூரியது நாற்பது வருடமாய் இந்த செங்கல்கூட மாறவேயில்லை என்றார்.அந்த அளவுக்கு என் ஊரினில் எந்த மாற்றமும் கிடையாது.சென்ற மாதம் நான் சென்றிருந்தபோதும் அந்த செங்கல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது.அந்த காற்றின் அரிப்பினால் மட்டுமே அந்த செங்கல் சிறிது உள்ளே சென்றிருக்கிறது. இருநூறு வருடங்களுக்கு முன்பு நான் இருந்த தெருவுக்கு "கொசத்தெரு" என்னும் பெயர் தகரம் கண்டுபிடித்த காலங்களில் அதை எழுதியிருப்பார்கள் போலிருக்கிறது,அந்தளவுக்கு எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. அந்த தகரம் அரித்து இப்பொழு சிறியதாய் கொசதெரு என்று இருக்கிறது.

எங்கள் தெருவுக்கு அருகினில் சுடுகாடு,நிறைய கருவேலமரங்கள், எக்கச்சக்கமான பன்றிகள் நான் நாற்பது வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே வடிவம்தான் இன்றும்.அங்கேயிருந்து ஒருவன் வருவானா? என்பதே சந்தேகம்தான்.நீங்கள் தற்போது சென்னையில் காணக்கூடிய சேரி போன்றுகூட இருக்காது. ஒரு கிராமம் போன்ற அமைப்பு கூட கிடையாது. இந்த இடத்தில நான் எவ்வாறு கற்றேன்? எங்கள் வீட்டினில் குமுதம், ஆனந்த விகடன் கூட வாங்கமாட்டார்கள்.இந்த நேரத்தில் பொதுநூலகம் என்ற அமைப்பு எங்கள் பகுதியில் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்,அல்லது கருணாநிதியால் விளைந்த ஒரு நன்மை படிப்பகம் மட்டுமே.அது ஓலை குடிசை அங்கே ராணி, கல்கி இவ்வாறான பத்திரிக்கைகளை படிப்பது இதுதான் என் வேலை. இவ்வாறு காலம் செல்ல செல்ல கிளை நூலகமும்,தஞ்சாவூர் நூலகத்திலும் ஜெயகாந்தன், ஆதவன் இவ்வாறன புத்தகங்கள் அறிமுகமாயின.இந்த நேரத்தில்தான் கணையாழி ,பிரக்ஞை போன்ற இலக்கிய இதழ்களை பற்றிக்கொண்டேன். ப்ரக்ஞையின் எழுத்துக்கள் எனக்கு மிக கடினமாய் இருந்தது.அதனாலேயே நான் மீண்டும் மீண்டும் அதைபடிக்க ஆரம்பித்திருந்தேன்.இந்த நேரத்தில் கமல்ஹாசன் ஏதோ ஓர் பத்திரிகையில் அவருக்கு பிடித்த பத்திரிகை ப்ரக்ஞை என கூறியிருந்தார்.

அதில் அப்படி என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.அந்த பத்திரிகை வந்த அந்த காலகட்டங்களில் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி லினோ கட் என்று சொல்லப்படக்கூடிய ஓவிய வகையறாக்களை அதில் வரைந்து கொண்டிருந்தார்.அதுவும் எனக்கு ஆர்வத்தை தூண்ட காரணமாய் இருந்தது.இதுதான் நான் படிக்க ஆரம்பித்த கதை.என் பையனுக்கு தமிழ் பேச தெரியும், படிக்கதெரியாது. நான் என் மகனை " நீ தமிழ்தான் படிக்கவேண்டும்" என்று சர்வாதிகாரியாய் கட்டளை இடமுடியாது.சரி படிப்பு என்பது எதற்கு தேவை?அதாவது நீங்கள் என்னதான் பெரிய மனிதாபிமானியாய்,அறிவாளியாய் வள்ளலாரை எல்லாம் கற்றுக்கொண்டாலும்,இந்த இலக்கிய படிப்பு என்பது சமூக அக்கறை,தனிமனித உணர்வுகள்,ஒரு விஷயத்தை சரியான விதத்தில் நகர்த்துவதற்கு படிப்பு மிக மிக அவசியம்.

இந்த உலகத்தில் நாம் ஒரே ஆளாய் இல்லை.மனித மனங்களுக்கு இடையிலான உறவுகளை நாம் பேணவேண்டும்.நம் அருகே மனிதன் இருக்கிறான்,நதிகள்,மரங்கள்,பறவைகள் இவைகளோடு நாம் வாழ்கிறோம்.நாம் என்ன செய்கிறோம் எதையுமே சரியாய் மதிப்பு கொடுத்துவாழ்வதில்லை.நான் ஒரு நாள் பார்க்கில் நடந்து போகும்போது என் தோள்பட்டையே உடைந்துபோகுமாறு ஒருவர் இடித்துவிட்டு அவர்பாட்டிற்கு நடந்துகொண்டிருந்தார்.இதுவரை என்னிடம் யாருமே "சாரி" என்ற வார்த்தையை உபயோகித்ததில்லை. இங்கதான் அந்த சரியான தன்மையில்லா,வாழ்வின் தன்மையுனரா மனிதர்கள் ஏதும் கேட்க போனால் நான் வேண்டுமென்றா இடித்தேன் என அதற்கொரு சண்டை. நமக்கு இது தேவையா? ஆனால் இதே பிரச்னை வேறு ஒரு இடத்தில நடந்தது. அதாவது என் அருகில் ஒருவர் வந்துகொண்டிருந்தார் அவர் ஒருவரை இடித்து விட்டார் பயங்கரமான இடி அது.அவர் இவரை அடிக்க பாய்வது போன்று பார்த்தார் அதற்கிடையில் நான் இடையில் "சாரி,சாரி பிரதர்" என்றேன் அவர் ஒன்றுமே பேசாமல் சென்றுவிட்டார்.இதுதான் தனிமனித ஒழுக்கம்.இந்த பிரச்சனையின்போது என் அருகில் நின்றிருந்தவர் "இது ரோடா இருக்கு இல்லன்னா உங்க கால்ல விழுந்துருவன் எப்பிடி உங்களால இப்புடி இருக்க முடியுது" என்றார்.அதற்கு நான் கூறினேன் இது ஒன்றுமல்ல இது சுயநலந்தான் சண்டை போட்டால் சட்டை கிழியும் காயம் வரும் என்றேன்.இங்கே சட்டை என்பது நம் மனமே.அவனோடு சண்டையிட்டால் நம் மனம் புண்படும்.கோவம் வரும் ஏன் நம் அழகிய மனதை காயப்படுத்தவேண்டும் அவ்வளவுதான்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பாய் இருப்பதே சுயநலந்தான்.நம் மேல் நாமே அன்பாய் இருப்பதால்தான் அடுத்தவர்கள் மேல் நம் அன்பு சரியானதை இருக்கும்.ஒருவனை வீதியில் இன்னொருவன் அடித்தானானால் நமக்கு மனது சாந்தி ஆகாது.அது கொதித்துக்கொண்டே இருக்கும்.நாம் நம் மீதே அன்பாய் இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.இந்த அற்புதமான தருணம் அல்லது அற்புதமான புரிதல் ஏன் வருகிறது எனில் நாம் ஆக சிறந்தவன் இல்லை.எனக்கு சேக்ஸ்பியரும்,ஆண்டாளும்,கரிச்சான் குஞ்சுவும்,ஆதவனும் கொடுத்த அன்பு.காலையில் இருந்து மது அருந்திக்கொண்டிருப்பவனின் உடலில் ஆல்ககால் எப்படி ஓடுகிறதோ அதேதான் இந்த இலக்கியம் என்னுள் என்ன சாரத்தை இறக்கி விட்டதோ அதைதான் எந்த பிரயாசையும் இன்றி வெளிபடுகிறது.தற்போது நிறைய சாமியார்கள் மரம் நடுங்கள்,மரம் வெட்டாதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள் அல்லவா இது அவர்கள் சொல்லிதர தேவையில்லை இது எனக்கு இலக்கியம் சொல்லித்தரவேண்டிய விடயங்கள்.இலக்கியம் என்பது துறை சார்ந்த,அறிவாளிகள் படிப்பதற்காக அல்ல இது நமக்கானது.ஒரு அறிவாளியான தொழில்நுட்ப விஞ்ஞானிகளிடம் உங்களுக்கு பிடித்த கவிஞன் யாரெண்டு கேட்டீர்களானால் வைரமுத்து என்பார்கள்,கலைஞன் யார் என்றால் விவேக் என்பார்கள்.வைரமுத்துவை சொன்னால்கூட பரவாயில்லை அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். ஆனால் பா.விஜய் என்கிறார்கள். எப்படி இது சாத்தியமாகிறது.இவர்களெல்லாம் பெரிய தொழில்நுட்ப அறிவாளிகள்.இவர்கள் இப்படி இருப்பதால்தான் இந்த சமூகம் இவ்வளவு வன்முறையானதாயும், குரூரமானதாயும் இருக்கிறது.இந்த உலகத்தில் வன்முறையானதும்,குற்றங்கள் பெருகிய சமூகம் நம்முடையதைதான் இருக்கும்.வேற சில நாடுகள் இருந்தாலும் நம்முடையது முன்னிலையில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.ஏனெனில் டெல்லி பக்கத்தில் ஒரு பெண் தனியாய் நடமாடமுடியாது பகலிலும் சரி,இரவிலும் சரி.நான் ஓர் சர்வதேச பயிற்சிபட்டறை ஒன்றிற்கு டெல்லி சென்றிருந்தேன்.அங்கே ஒரு பெண் வந்திருந்தாள்.அவளுக்கு வயது இருபத்தி மூன்று இருக்கும்.அவளிடம் கேட்டேன் என்ன இப்போதா வந்தாய் என்றேன்.அவள் ஆம் விடிகாலை நான்கு மணிக்குதான் வந்தேன் என்றாள். நான் எப்படி வந்தாய்? ஏதாவது நடக்காமல் இருந்திருக்காதே என்றேன்.இல்லை நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வந்துவிட்டேன்.நான் அறைக்கு வந்தவுடனேயே யாரோ வந்து கதவை தட தட என காலை நான்கு மணியிலிருந்து விடியும் வரை தட்டிக்கொண்டு இருந்தார்கள் என அவள் கண்கள் விரிய கூறினாள்.கதவை தட்டியது வேறு யாருமல்ல அந்த பழ்கலைக்கழக காவலாளிதான்.

இந்த சமூகம் எவ்வளவு பெரிய குற்றவியல் சமூகமாய் மாறியிருக்கிறது.நாம் பத்திரிக்கைகளை பார்த்தோமானால் அதில் எவ்வளவு குற்றப் பதிவுகள்,வழக்குகள்.இங்கே மனைவி கணவனை ஆட்கள் வைத்து கொள்வது,மகனையே கொன்று துண்டாய் அறுத்து ப்ரிட்ஜில் வைப்பது என்பது போன்ற குரூரங்கள் தொடரை நடந்துகொண்டிருக்கின்றன.இவர்களுக்கு நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம் என்ற அடிப்படை அறிவே இல்லாததது எவ்வளவு பெரிய படிப்பறிவற்ற,முட்டாள்தனமான பண்பாடுகள் கொண்ட சமூகத்தை முன்னிருத்துகிறார்கள்.இங்கே இதுபோன்ற சமூக இழிவுகள் நடைபெற என்ன காரணம் பெரிய பெரிய விஞ்ஞானிகளிலிருந்து ரிக்சா வண்டிக்காரர்கள் வரை எவருக்குமே இலக்கியம் தெரியாததுதான் காரணம்.நம் சினிமா சாக்கடையாக என்ன காரணம்? மிகப் பெரிய படைப்பாளிகளாய் தம்மை முன்வைக்கும் இயக்குனர்களுக்கே இலக்கிய அறிவு கிடையாது.இங்கே முதல் படம் நன்றாக எடுத்து விடுவார்கள் ஏனெனில் அது அவர்கள் வாழ்கை.அடுத்து அவ்வளவுதான்.ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்க்கைதானே.நான் ஒருதரம் பிரான்ஸ் சென்றிருந்தேன்.அங்கே நம் மாநகர பேருந்து போன்று ஒரு பேருந்து அதிலே என்னால் நிற்க முடியாமல் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு பெண் எதையோ ஒரு பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அவள் என்னதான் படித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கவனிப்பதில் அவ்வளவு ஆர்வம் எட்டிப்பார்த்தேன்.அவள் மதாம் பாவுரி புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருக்கிறாள்.அது அவ்வளவு சுவாரஷ்யமான புத்தகமும் கிடையாது.ஆனால் அது பிரான்சின் கிளாசிகல் ஆகவே அவள் அதை படிக்கிறாள்.இந்தய மாதிரியான படிப்பு நம்மிடம் இல்லை.நீங்கள் மேற்கத்திய நாடுகளில் ஒரு பத்திரிக்கையாளனாய் இருந்தீர்களானால் உங்களுக்கு அங்கே வேலையே கிடையாது.வெறும் வானிலை அறிக்கை எழுதுவது மட்டுமே உங்கள் வேலையை இருக்கும். இதிலேயே அந்த சமூகம் எவ்வளவு ஆரோக்கியமானதாய் இருக்கிறது என்பது புரிந்துவிடுகிறது இல்லையா? இதுதான் படிப்புக்கும்,குப்பைக்கும் உள்ள வித்தியாசம்.சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன் அந்த படத்தில் வரக்கூடிய ஊட்டி படுதா மக்களின் வாழ்வியலோடு சார்ந்த ஒரு பாடல் இடம்பெறும்.அந்த பாடல் இவர்களுடையது அல்ல.அந்த பாடலை முன்னமேயே ஒருவர் பணம் செலவு செய்து அதி பதிவு செய்துள்ளார்.ஆனால் இவர்கள் அவரின் எந்தவித அனுமதியுமின்றி திருடி தம் படத்தில் வைத்துவிட்டார்கள்.அவர் செலவு செய்த பணம் கூட அவருக்கு கொடுக்கவில்லை.இந்த வேலைகள் குற்றவாளிகள் செய்யக்கூடியது.இவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன வித்தியாசம்.அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே உலக திரை இசைகளிருந்து திருடப்பட்டவை.இந்த இசைக்கு ஒரு கோடி என்ற அளவுகளில் சம்பளம் வேறு.

இந்த உண்மைகளை நான் வெளியே பொதுப்பார்வைக்கு வைத்தேனானால் நான் வில்லங்கமானவன், பொறுக்கி. யார்ரா பொறுக்கி நீ செய்வது பொறுக்கித்தனமான வேலை, இதை நான் கூறினால் என்னை வில்லங்கமானவன் என்கிறாய்,ரவுடி என்கிறாய்.அனைவரும் வாயை மூடிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கின்றனர்.ஏனெனில் அடுத்த படத்துக்கு அவர்களுக்கு வசனம் எழதுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என.திருட்டுதனதுக்கும்,முள்ளமாரிதனத்துக்கும் உதவி செய்து நான் நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் எனக்கு அந்த பெயர் தேவையே இல்லை.இந்த திருடர்களுக்கும் வங்கிக்கொளையர்களுக்கும் என்னய்யா வித்தியாசம்.

சிறிது நேரம் சாரு என்ற எழுத்து மனம் சுயம் வெளிக்காட்டி, பேர் ஆழியொன்று அமைதி கொண்டாற்போல் மௌனித்து அந்த ஏரியின் மௌனங்களுக்குள் சங்கமித்தது.அந்த சங்கமிப்பை கிழித்தெரிவாற்போல் நாம் கணைகள் தொடுக்க ஆரம்பித்தோம்.

கேள்வி:நாங்கள் அறிந்த இலக்கியங்களில் அதிகம் ரஷ்ய இலக்கியங்களை தூக்கிப்பிடிக்க கூடியவை.நீங்கள் அதிலிருந்து மாறுபட்டு லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை முன்னிறுத்தி பேசிவருகிறீர்கள்.உங்களை லத்தீன் அமெரிக்க இலக்கியம் எந்த அளவுக்கு ஈர்த்தது?ரஷ்ய இலக்கியத்துக்கும்,லத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடுகள்?

பதில்;இந்த ஜென் கதைகளெல்லாம் கேட்டுருக்கிறீர்களா? நான் ஒரு கதை சொல்கிறேன்.ஒரு ஜென் துறவி பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.அந்த நேரத்தில் அவரின் உரையை கெடுப்பது போன்ற சப்தத்தை ஒரு குருவி மரத்தின் மேலிருந்து கத்துகிறது.குரு மேலிருந்து வரும் சப்தத்தை கேட்டவுடன் தன் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு குயில் கூவுவதை கேட்கிறார்.சிறிது நேரத்தில் குயிலின் சப்தம் கேட்காமலேயே போகிறது.அனைவரும் குரு பிரசங்கத்தை ஆரம்பிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.குரு பிரசங்கம் முடிந்துவிட்டது.குயிலின் சப்தம்தான் பிரசங்கம் என்று கூறி நகர்கிறார்.நமக்கு இவ்வளவு அழகான இயற்கையை ரசிக்கும் மனப்பான்மை இன்னும் கற்றுக்கொடுக்கப்படவில்லையா?

என்றவாறு சிரித்துக்கொண்டே ஏரியின் அழகை கொண்டாடமாய் ரசிக்க ஆரம்பித்திருந்தார்.ஏரியை அறிந்து கொள்ளும் நோக்குடன் ஏரியைப் பற்றிய கேள்விகளையும் தொடரை கேட்டுக்கொண்டே இருந்தார் சாரு.சிறிது நேரத்தில் நாங்கள் ஒரு ஆஸ்ரமத்தை அருகே சென்றுகொண்டிருக்கும்போது அந்த கேள்விக்கான பதிலை தந்தார்.

பதில்:எங்களுக்கு காங்கிரஸ் பதிப்பகம் மூலமா நிறைய புத்தகங்கள் கிடைத்தன.nc bage மூலமா மிக பெரிய புத்தகங்கள் வெறும் இரண்டு ரூபாய்,ஐந்து ரூபாய் போன்ற விலைகளில் கிடைக்கும். தஞ்சாவூர் பக்கங்களிலெல்லாம் கம்யூனிஸ்ட் வளர்ச்சி இருந்தாலும் அவ்வளவாக இருக்கவில்லை.எங்களுக்கு அங்கு கிடைத்த புத்தகங்களெல்லாம் தி.ஜானகிராமன், ஆதவன், கரிச்சான் குஞ்சு, மௌனி இவர்களைப் போன்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் எழுத்துகளே கிடைத்தன.பின் சென்னை வந்ததின் பின்னான காலங்களில் சேகுவேரா மேல் கொண்ட அதீத போக்கினால் இலத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டு அப்படி தெரிந்து கொண்டது தான் இலத்தீன் இலக்கியம்.அது மிகவும் புதிதாக இருந்தது.அப்பொழுது மாக்கேஷ்லாம் நோபல் பரிசு வாங்கியிருக்கவில்லை. இன்னோறு விடயம் தஞ்சாவூர் மனிதர்கள் காலத்தை எப்பொழும் கொண்டாடமாய் கழிக்கவேண்டும் என்று நினைப்பவன் எனவே அங்கிருந்து வந்ததால் எனக்கு கொண்டாட்டமான் இலத்தீன் இலக்கியம் பிடித்திருக்கிறது.

கேள்வி:தமிழ் கதை சொல்லல் முறை உடைத்தெறியப்பட்டு அதற்கு நேர் எதிராய் தமிழின் புனைவு அழகியல்,கலாசார அழகியல்,என்பதை சிதறடித்து கதை சொல்ல்வது தங்களின் பாணி.இதிலே தங்களின் எழுத்து முறையை நாங்கள் எந்த மாதிரியான அளவுகளில் சரியாய் ஏற்றுக்கொள்வது?

பதில்: அதாவது ஃபான்சிபனியன் வரைக்குமான காலங்களில் என் எழுத்து என்பது.ஒரு எழுத்தாளன் ஒரு எழுத்தை உருவாக்குகிறான்.அதாவது சிந்தனையை அவன் உங்களுக்கு வழங்குகிறான்.வாசகன் வாங்கிக்கொள்கிறான்.கொடுத்தல் வாங்கல் முறைதான்.அதாவது நான் அடிக்கடி சொல்லக்கூடியதுதான் ஒரு முக்கோண அமைப்பில் வாசகன் கீழிருந்து மேல் ஏறுவான் அங்கே எழுத்தாளன் பிரசாதம் வழங்குவான்.அதை வாங்கிக்கொண்டு அடுத்த வழியே இறங்கிவிடுகிறான்.இதுதான் உறவு நிலை.அதாவது திறந்த நிலை எழுத்து என்பதும் பின் நவீனத்துவம் என்பதும் இதுதான்.இதுதான் முடிவு இதுதான் ஆரம்பம் என்பது இன்றி அந்த கதையின் குறுக்கு வெட்டுதோற்றத்தை உருவாக்குவதுதான் பின் நவீனத்துவம்.இதுதான் வரும்காலதுகான எழுத்து.இது என் அனுபவங்கள் கிடையாது.இது என் சுய சரிதம் கிடையாது.

கேள்வி:சாருவின் எழுத்து என்றாலே ஒரு காட்டமும் முகத்தில் அறைகிராற்போல் இருக்கும்.ஆனால் பான்சிபனியனிலும்,சீரோ டிகிரியிலும் சில அத்தியாயங்களில் அன்பை தேடும் பக்கங்கள்,ஜெனிக்கு எழுதும் கடிதங்கள் இதில் பெரிய மிக பெரிய தொலைவு இரண்டிலும் இருக்கிறது. இது புதுவித நடையாய் இருக்கிறதே?

பதில்:கோபம் என்பது ரௌடிதனமோ,வெறுப்போ கிடையாது.கோபம் என்பது கோபமேதான்.ஒரு குதிரைய ஒரு குதிரைக்காரன் அடித்தான். உடனே நீட்சே அவனிடம் நீ என்னை அடி என்றார்.இது வெறுப்பா இல்லை கோவம்.அதாவது கோவம் என்பது அன்பினால் பிறப்பது.வெறுப்புதான் வேறு .என்னுடைய கட்டுரைகளில் கோபத்தை மட்டும்தான் உங்களால் கண்டிருக்க முடியும்.வெறுப்பையல்ல.யாருக்கும் உணவு கிடைக்கவில்லையெனில் உலகத்தை அழித்திடுவேன் என பாரதி முழங்குகிறான்.இது அன்பா? கோவமா? அன்பு அவ்வளவுதான்.

மீண்டும் சிறிது நேர மௌனம் ஏரியையே பார்கிறார்.பிறகு மீண்டும் திரும்பி எனக்கு கொண்டாடமான எழுத்துகளையும்,கிண்டலான மொழினடைகளையும் படிக்கவே பிடிக்கும்.காஃபாவினை கொஞ்சம் கூட பிடிக்காது.அந்நியன் நாவலையும் படிக்க முடிவதில்லை.

கேள்வி:பிரச்சனையின் மையம் என்பது மாற்றம் இந்த மாற்றம் என்பதை அரசியலின் அடிப்படை மாற்றம் என்பது எந்த மாதிரியான அடிப்படையாய் இருக்கும்?

பதில்: அரசியல் வாதிகள் மற்றம் தேவையில்லை.நாம் மாறவேண்டும் அது மட்டும்தாம் மாற்றமாய் இருக்கும். அரசியல்வாதிகள் என்பவர்கள் யார் நம் மாமன்,மச்சான்,பக்கத்துக்கு வீட்டுக்காரன். நாம் மாறினாலே போதும் மாற்றம் இலகுவாய் வந்துவிடும். நாம் எந்த வித பொறுப்புமின்றி அலைந்து கொண்டிருக்கிறோம்.எவனைப்பற்றியும் கவலை கிடையாது.ஒரு சமூகமே பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது மதியம் கடந்துகொண்டிருந்தது.மெதுவாய் படகு நகர்ந்து கரையை எட்டியது அங்கிருந்து மதிய உணவுக்காய் அருகே இருந்த உணவகம் சென்று அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்டோம்.பின் சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் படகு நோக்கி நடக்கலானோம்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/kGlViK


தொகுப்பு: செந்தூரன்
படங்கள்: சோமசுந்தரம்

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.