விடியலின் கருக்களில்
காடு................?
ஜல் ஜல்லென்ற சலங்கை ஒலி சத்தம். கண்களை மறைக்கும் செம்மண் பறக்க மாட்டு வண்டி தம்மை நோக்கி வந்தன. வந்தவேகத்தை கட்டுப்படுத்த வண்டி ஓட்டியவன் மூக்கணாங்கயிரை இழுத்து ப்பா ப்பா...பா என்று பிடிக்க வண்டி நின்றது. வண்டி முழுவதும் மக்கள் பூங்குழளோடு புத்தாடை உடுத்தி புன்னகை தவழ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து இருக்க, வண்டி நிற்க, அவ்வழியாக சென்ற வழிபோக்கனிடம் வண்டி ஓட்டியவர் 'ஏம்ப்பா, காளி கோயிலுக்கு எப்படி போவனும்' வழிபோக்கன் 'அதோ..தோ..தோ' என்று ஐந்து மையில் தொலைவு, நின்று பார்த்த ஊரைவிட தான் அழகிய குன்றாக நின்று கொண்டு அந்த ஊருக்கு அடையாளம் காட்டுகிறது அந்த காடு. காட்டுக்குள் இருக்கிற சாமி காளியம்மனை தரிசிக்க வருஷத்துக்கு ஒருநாள் சுத்துப்பட்டு கிராமங்கள் ஒன்றுகூடி காளிக்கு திருவிழா. வீடுகளின் வாசல்கள் கோலங்களால் அலங்கரித்து பறங்கி பூக்கள் நடுவே. கருப்பன், வெள்ளைச்சமி போன்றவைகளை குளிப்பாட்டி அலங்காரமிட்டு அதிகாலை அறுவடைக்கு தயராக நிக்க வைத்து (பெரும்பாலும் கிராமங்களில் ஆண் ஆடுகளுக்கு மட்டுமல்ல கிராமத்து சாமிகளுக்கும், கருப்பன், வெள்ளைச்சாமி என்று பெயர் வைப்பது வழக்கமாக உள்ளது)
அனைவரின் முகங்களிலும் ஆர்பரிக்கும் புன்சிரிப்புகள் தவழ, எதிரியிடம் கூட சாடை பேச்சால் சமரசம் ஆகிப்போவதும், பொதுவாக கிராமக்காதல் திருவிழாக்களில்தான் தொடங்கும். கள்ளக்காதலும்தான்... அந்த காடுகளுக்குள், அறிஞர்கள் பலர் வந்து ஆராய்ச்சி பண்ணினா அந்த காட்டில் வளர்ந்த அந்த மரங்களுக்கு பல நூற்றாண்டுகள் வயதிருக்குமெனச் சொல்வார்கள். கிராமவாசிகள் யாரும் காட்டில் வெறகு கூடத் தொடுவதில்லை. எங்கே காட்டுக்குள் இருக்கிற காளி தங்களை அடித்துவிடுமோ என பயந்து, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத அந்தக் காட்டில் விதவிதமான பறவைகள் ஒன்றுகூடி ஒரு சரணாலயமே அமைத்துக்கொண்டும், குள்ளநரி, முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை, காட்டு முயல் எனவும், பச்சைப் பாம்பு, கட்டுவிரியன், நல்லபாம்பு போன்ற நச்சுப் பாம்புகளும் ஏன் ஒநாய்கள் இருந்ததாகவும், அப்பகுதிக்குள் யாரும் செல்வதில்லை.
திருவிழா முடிந்து ஒருவருடம் கடந்துபோயிருந்தன.
அதிகாலை தொடங்கி அந்திவரை அந்தக் காட்டிலிருந்து வருகிற சப்தம் அந்த ஊருக்கு பின்னணி இசையாய் நித்தம் நித்தம் புதிது புதிதாய். ஒலிக்க. சூரியன் பூமியின் மறுபகுதிக்கு ஒளியூட்ட புறப்படும் நேரம், வானத்தில் கருமேகங்கள் பரவத் தொடங்கியது. காமத்தின் முன்வேளைப்போல் இதமாகி, பூமி மணம் மணக்க, மழை காற்றாக வீச, மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும்போது உண்டாகும், அந்த நொடிப்பொழுது ஒலி, ஒளியால், அந்தக் காடே பிரகாசமானது. அந்த அரிய மின்னலொளியைக்கண்டு அந்தக் காடும், காட்டு மரங்களும் (ஏற்கனவே ஒன்றுபட்டு இருப்பதால்) கூட்டாக அசைந்தன. அந்த அசைவால் பறவைகளும், பாம்புகளும், நரிகளும் அல்லாமல் காட்டிற்கு வெளியே வசிக்கும் நாய்கள், ஆடுகள், மாடுகள் என அத்தனையும் சேர்ந்து காட்டின் அசைவிற்கு ஏற்ப ஒலியெழுப்பி அந்தக் காடே ஆனந்தக் கூத்தாட்டம் ஆடியது.
அந்தக் காட்டுமரங்களின் ஆட்டத்தால் உருவான காற்றா? அல்லது காற்றால் உருவான ஆட்டமா? என அறியமுடியாத அளவுக்கு காட்டின் ஆட்டமும், காற்றின் பலமும், ஜீவராசிகளின் சப்தமும் ஒன்றோடொன்று சேர்ந்து பலம் பொருந்திய மழையை வரவழைத்துவிட்டது. காடு தன்மீது மழை பட்டவுடன் தனது ஆட்டத்தை குறைத்து, மழையில் தன்னை நனைத்து சுவைத்து, மழையை தனக்குள் உள்வாங்கி அமைதியானது(தான் மேலும் ஆடினால், அதனால் உருவாகும் காற்று மழையை துரத்திவிடும் என்பதால்) அனைத்து ஜீவராசிகளும் அப்படியே இருந்தது. மழையும் ஒய்ந்தது, காடு அமைதியானது, இருள் பரவத்தொடங்கியது. சகல ஜீவராசிகளும் ஆனந்தக் கூத்தாட்டத்தால் களைத்து வண்ணக் கனவுகளுடன் ஆழ்ந்து உறங்க ஊரும் உறங்கியது.
கருத்த வானத்தில் ஒரு வெள்ளி நட்சத்திரம். விடியலின் கருக்கலில் காடு ஊருக்குள் ஒருநாயின் ஊளை சத்தம். அதன் சத்தத்தால் காடு விழித்தது, காட்டிலுள்ள ஜீவராசிகளும் விழித்தன. நாயின் சத்தம் ஒலமாக இருந்ததால், என்னவோ நடக்கபோகிறதென காடே பயந்தது. காட்டில் வசிக்கும் ஜீவராசிகளும் நாய் சத்தத்துடன் சேர்ந்து ஒலமிடுகிறது. இப்படியொரு சத்தத்தை இதற்குமுன் கேட்டதே இல்லையே என மனிதனால் உருவாக்கப்பட்ட மண் சிற்பம் காளிக்கு, ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு, எனக்கு அது வேண்டும் இது வேண்டும், அவன் குடும்பத்தை அழிச்சிடு, என் குடும்பத்தை மட்டும் காப்பாற்று எனக்கூறி பொன்னையும் பொருளையும் காலடியில் கொட்டியபோது அந்த சிற்பத்துக்கு வராத உயிர், காட்டுக்குள் வசிக்கும் ஜீவராசிகள் அழுதபோது அந்த மண் சிற்றப்பகாளிக்கு வந்தது உயிர், விழித்துப் பார்த்தாள் தன்னிடம் வரவேண்டி வந்திருப்பார்களோ என. ஆனால் ஜீவராசிகள் அனைத்தும் தமக்குள் ஏதேதோ சத்தம்போட்டு பேசிக்கொள்கிறது என்று புரிந்தது காளிக்கு. காளி தன்காலில் உணர்வு ஏற்பட்டு தன் கால்களை பார்க்கிறது. அதன் பாதங்களின்மீது கசங்கிய மாலைகளும், கருத்துப்போன நாணயங்களும் சிந்திக்கிடந்தன. தான் பிறந்தமேனியாக நிற்பதை பார்த்து, தான் யார் என யோசிக்கும்போது, காளியின் தலைக்குமேலிருந்து ஒரு சத்தம், “நலமா?” காடு கேட்டது.. சிற்பமும் மேலே பார்த்தது,
“நீங்க ?”...சிற்பம் கேட்டது.
"நான் காடு” எனச்சொல்லி தொடர்ந்து பேச ஆரம்பித்தது சிற்பத்தை பார்த்து...
“நீங்க இங்கே வந்து ஒரு வருஷம் முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு. வருஷத்துக்கு ஒருவாட்டி இந்த ஊர்க்காரங்க ஒங்கள மேளதாள சத்தத்தோட தூக்கிக் கொண்டாந்து வைப்பாங்க... உங்கள குளிப்பாட்டி, பட்டாடை உடுத்தி, பொன்னு பொருளெல்லாம் இட்டு, அழகு பார்த்து மனிதர்கள் எல்லாம் உங்ககிட்ட மண்டியிட்டு அவங்களுக்குள்ளேயே அவனை கொன்னுடு என்னை வாழவைன்னு வேண்டிக்கிட்டு அம்மான்னு கூப்பிடற ஒரேயொரு வார்த்தைக்காக பொறந்த ஆடு, மாடு கோழின்னு அறுத்து, என்னோட கழிவுல கொளுத்தி இங்கே வறுத்து தின்னுட்டு, ஒருவாரம் கும்மாளம் அடிச்சிட்டுப் போயிடுவாங்க. போவும்போது சும்மா போகமாட்டாங்க (காடு... பிறந்தமேனியா நிற்கும் சிற்பத்தப் பார்த்து சிரிச்சிக்கிட்டு) உங்களுக்கு போட்டிருந்த நகைநட்டு பட்டாடையெல்லாம் கழட்டிக்கிட்டு போயிடுவாங்க. அதோ பாருங்க உங்க காலடியில கறுத்துப்போய் கிடக்கிற காசு அவங்க கழட்டும்போது தவறி விழுந்த மிச்சம்தான். ஒரு வாரம் ஜோடனையா இருக்கும் நீங்க ஒன்னுமில்லாம இருப்பீங்களேன்னு நான் தான் என் தழையால காப்பாத்திக்கிட்டு இருக்கேன்”...
அப்போது சிற்பம் குறுக்கிட்டு,
“நீங்க எப்ப இங்க வந்தீங்க?” காடு சற்று சிரிப்புடன்
“உங்களப்பத்தி சொன்ன எனக்கு என்னப் பத்தி சொல்ல எனக்கு தெரியல. இருந்தாலும் நான்தான் முதன்முதலா வந்தேன். ஆனா எனக்கு முன்னாடியே காத்து, மேகம், மழை எல்லாம் வந்திடிச்சி. எனக்குப் பிறகு வந்த மனிதன் என்னோடுதான் இருந்தான். நான்தான் அவன செல்லப்பிள்ளையா வளர்த்தேன். அவனும் (சிற்பத்தை பார்த்து) பிறந்தமேனியாதான் சுத்துவான். பலநூற்றாண்டுகளா என்னோட இலைகளைத்தான் அவன் உடைகளா உடுத்தி வாழ்ந்தான். அதன் பிறகுதான் மனிதன் வெட்கப்படவே ஆரமிச்சான். ஆனா ஒன்ன பாத்தாதான் பாவமா இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில நீ இருக்கமாட்ட...”
“ஏன்?” சிற்பம்
“உன் பின்னால பாரு” காடு சொன்னது,
சிற்பம் திரும்பிப் பார்க்கிறது. அதைப்போலவே உடைந்துப்போன சிற்பங்கள்
“ஆச்சரியம் இது எல்லாம் பல வருஷங்களாக நடப்பவை. வருஷத்துக்கு ஒருவாட்டி திருவிழா கொண்டாடுவாங்க. உங்களப்போல புதுசா சிற்பம் கொண்டு வருவாங்க பழைய சிற்பத்த தூக்கிப் போட்டுட்டு அந்த இடத்தில புது சிற்பம் வைப்பாங்க...” காடு சொல்லிக்கொண்டிருக்கும்போதே விண்ணைப் பிளக்கும் அளவுக்கு வெடிச் சத்தம். சிற்பம் காட்டைப் பார்த்து
“என்ன சத்தம்?” என்று கேட்க...
“வேட்டு வச்சிட்டாங்க உங்களுக்கு”....
பறவைகள், விலங்குகள், பாம்புகள் என அனைத்தும் காட்டைவிட்டு ஒடி ஒளிந்தன. காடு வெறிச்சோடி கிடந்தது.
“காட்டு கோயில் ஆலமரத்தடியில் ஊர் கூட்டமாம்...” தண்டோரா சத்தம். சிற்பம் தண்டோரா சத்தம் கேட்டு கண்களை மூடிக்கொண்டது. காடும் ஊர் மக்களின் ஒருவார கும்மாளம்தானே என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. ஊர் கூட்டம் கோயில் மரத்தடியில் கூடியது. சிற்பமும், காடும் தன் காதை தீட்டிக் கொண்டது. ஊர் என்ன பேசப்போகிறது என்று. கூட்டத்திலிருந்து எழுந்த நல்லு பொய்ந்தார், “ஏம்பா எல்லாரும் வந்தாச்சா?”.... கூட்டத்திலிருந்து ஒரு இளசு (நல்லு பங்காளி பையன்)
“எங்க தாத்தா வரல”... நல்லு அவன பார்த்து, “எப்ப வருவாரு?”
“அவரு வரமாட்டாரு... நாம எல்லாரும்தான் மேலே போவணும்” என்று இளசு சொல்ல (கூட்டமே சிரிக்க, காடும் சிற்பமும் சேர்ந்து சிரிக்க) கூட்டத்தில் ஒருத்தர், “என்னப்பா பெரிச கிண்டல் பண்ற?” பொடிப்பயலே என்றார். பொடிப்பையன் அவரை பார்த்து “பின்ன என்னங்க கொண்டுக்கிட்டு வந்த சொம்புத்தண்ணிய குடிச்சிபுட்டு உருப்படியா ஒன்னும் பேசாம வெட்டிப்பேச்சு பேசி பொழுதில்ல போக்கிட்டு இருக்குறீங்க பின்ன என்னங்க வந்த வேலய உடனே பேசி முடிங்க” கூட்டத்திலிருந்த ரெங்கு கண்டியர் எந்திரிச்சாரு. எல்லோரும் அவரைப் பார்த்தாங்க. [அவர்தான் திருவிழாவின்போது எண்னெய் கொப்பரையை பூவால தலைக்கு சும்மாடு வச்சிக்கிட்டு, தானே தலைல தூக்கி வச்சி, பட்டுப்பாவாடை உடுத்தி, காலில் சலங்கையுடன் ஒத்தக்கை தலைமேல எரியும் கொப்பரையை புடிக்க, மற்ற கை காளி கோயில் அரிவாளுடன் ஆட... அவருக்கு முன்னால் சாமியையா ஒரு கையில கொழுக்கட்டயும், அரிவாளையும் வச்சுக்கிட்டு, இன்னொரு கையால தரையில கைவச்சு குட்டிக்கரணம் அடிக்க ஊரே காளியும், முனியும் இவங்கதான்னு நெனச்சி வழிபடுவாங்க]. சாமியையா காட்டுக்கே மூத்த மரமான ஆலமரத்தில சாய்ந்து அமர்ந்திருக்க, ரெங்கு கண்டியர் மட்டும் எழுந்து, “இளசு சொன்ன மாதிரி விஷயத்துக்கு நேரே வரேன்... இந்த வருஷம் திருவிழா கிடையாது”. இதைக் கேட்டவுடன் சிற்பத்துக்கு ஒரே சந்தோஷம். “எனக்கும் சந்தோஷம்தான். இன்னும் ஒரு வருஷத்துக்கு என்னுடன் இருக்கப் போறீங்க” என்று காடு சொன்னது. ரெங்கு கண்டியர் தொடர்ந்து பேசினார் “ஆனா எனக்கும் வயசாயிடிச்சி. சாமியையாவும் ஒத்தக்கையால எத்தனை வருஷம் கரணம் அடிக்கிறது? எனக்குப் பின்னால யாரு கொப்பரை தூக்குவாங்கன்னு தெரியல... அதனால இனிமே நிரந்தரமா முதல்ல உள்ளே இருக்கிற மண்ணு சிலைய தூக்கிப் போட்டுட்டு, காளிக்கு கோயில் கட்டுறதா முடிவு பண்ணியிருக்கு”... என்று சொல்லி நிறுத்த இதைக்கேட்ட சிற்பம் அமைதியாக இருந்தது. காடும் அதே நிலைதான். ரெங்கு கண்டியர் மேலும் “கோயில் கட்டுறதுக்கு முன்னால இந்தக் காட்ட அழிக்கனும்” இதைக்கேட்டதும் காடு நிலைதடுமாறியது. சிற்பம் காட்டுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவஸ்தைப்பட்டது. சாமியையா அவசரமாக எழுந்து ரெங்குவைப் பார்த்து “ஏங்க காட்ட அழிக்கனும்? இந்தக் காட்டுக்குள்ளேயே கோயில் கட்டலாமே?” ரெங்கு ஆவேசமாக எழுந்து...
“கோயில் கட்டுறது நீமட்டும் பார்க்கிறதுக்கு இல்ல... நாம கோயில கட்டுனா சுத்துப்பட்டு கிராமத்தில உள்ள அத்தனப் பேருக்கும் தெரியனும். காட்டுக்குள்ள கட்டுனா எவனுக்கு தெரியும்? ஏன்...... இந்த மரத்தடியில உனக்கு படுக்க இடம் இல்லாம போயிடும்னு பாக்கறியா?... பயப்படாதே கோயில் மணடப்பத்தில உனக்கு அறையும் இருக்கு.... கோயில் பூசாரியும் நீதான்” என்று கூற ஊர்கூட்டம் விலகிச் சென்றது. எதற்குமே கலங்காத காடு தனது நிழலையே பார்த்துக் கொண்டு வெறும் சடமாக அமைதியாக நின்றது.
“உன்னை அழிக்க போறாங்களே...” காட்டைப் பார்த்து சிற்பம் அழுதது. “என்னை எங்கே அழிக்கிறாங்க... என்னை அழிக்கிறதா நெனச்சி அவங்களையே அழிச்சிக்கிறாங்க” என்று காடு பதில் சொன்னது. காலமும் கடந்து போனது.
காடு அழிக்கப்பட்ட இடம் தெரியாமல் போனது. கோயிலுக்கு பூமி பூஜையும்போட்டு ஒருவருஷம் ஆகிவிட்டது. ஆறுமாசத்தில முடிக்கப் போறதா ஆரம்பிச்ச கோயில் ஆறு வருசமா ஆரம்ப பூஜையோட நிக்குது. ஊருல மழை இல்லை. குடிக்க தண்ணியே இரண்டு மைல் நடந்துபோய் கொண்டு வரவேண்டியிருக்கிறது. ரெங்கு கண்டியருக்கு கண்ணு தெரியாம இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கிடக்கிறார். அதோட அவரோட உள்மனசு காடு அழிய நாமதான் காரணங்ற குற்ற உணர்வும் அவரைப்போட்டு வாட்டுது. சாமியையா மதிய வெயில்ல காளிகோயில் கட்டுறதா சொல்லிட்டு பூமிபூஜையோடு நின்று போனதப் பார்க்கிறான். அந்த மதிய வெயில் அவனை வாட்டுது. அங்கிருந்து சுற்றும் முற்றும் நிழல் இருக்கான்னு பார்க்கிறான். ஒரு பக்கம் வெயிலின் சூடு, மறுபக்கம் பசிமயக்கம் (காடு இருக்கும்போது வாரத்துக்கு இரண்டு நாள் யாராவது வேண்டுதல் என்ற பெயரில் காளிக்கு பொங்கல் வைத்து அவனுக்கு கொடுத்துவிட்டுதான் போவாங்க) சாமியையா மயங்கி காடு இருந்த இடத்தில் விழுந்தான். கொஞ்ச நேரம் கழித்து, தன்மேல் ஒரு நிழல் விழுவதை உணர்ந்து திடுக்கிட்டு பார்த்தான்.
ஊரையே காலி செய்து எல்லோரும் ஊர்ந்து போய்க்கொண்டிருக்காங்க. காட்டுமரங்களின் அடியில் பூமிக்குள் வாழ்ந்த கட்டெறும்புகள்கூட வேறிடம் நோக்கி சென்று கொண்டிருந்தன. சாமியையா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து. கண்விழித்துப்பார்த்தான் (எல்லாம் பிரமை என உணர்ந்தான்) அவன்மீது ஒரு மனித நிழல் ஒரு கையில் கம்பை ஊன்றிக்கொண்டு நிற்பதைப் பார்க்கிறார். சாமியையா நிழலின் உருவத்தைக் கூர்ந்து பார்க்கிறார். வெடிக்கிற வெயிலில் தலையில் துண்டுடன், கையில் கம்புடன் கண்தெரியாமல் நிற்பது ரெங்கு கண்டியர் என தெரிகிறது. சாமியையா மெல்ல எழுந்து, “நான்தான் சாமி...” குரல் தழுதழுக்கிறது. “ஒனக்கு என்ன ஆச்சு? நல்லா இருக்கிறயா? எனக்கு கண்ணு தெரியாம போனதிலிருந்து வீட்டைவிட்டு எங்கும் போறதில்ல. ஆனா நீ கோயில் முன்னால படுத்துக்கிடக்கிறதா எம்பேரன் வீட்டுல சொல்லிக்கிட்டு இருந்தான்”. இப்படி சொல்லி முடிக்கையில் ரெங்குவும், சாமியையாவும் காடு இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.
ரெங்கு மிகுந்த மனவேதனையுடன்,
”தெரிஞ்சோ தெரியாமலோ இந்த காடு அழிய நான்தான் பெரும் காரணமாயிட்டேன் அதனாலதான் எனக்கு கண்ணு தெரியாம போச்சின்னு நெனக்கிறேன். நான் திருவிழாவின்போது தீக்கொப்பரையை சொமந்து வரும்போது தலைமேல பூ சும்மாடு வச்சாலும் அஞ்சு நிமிசத்துக்கு ஒருதடவை மாத்தினாலும் சூடுதாங்காம துள்ளிக்குதிப்பேன். அதுல எனக்கு ஒருசக்தியும் வந்திச்சி. இந்த ஊரும் அதை நம்பினாங்க ஒன்னையும் முனியா நெனக்கிறாங்க... இதுநாள்வரை நமக்கு சாமி வந்திச்சோ இல்லையோ ஆனா இப்ப நமக்கு சாமி வந்ததா ஊர கூட்டனும்....” என சாமியையாவுடன் சேர்ந்து ரெங்கு கண்டியார் காளியாகவும் பூமாதேவியாகவும் மாறி அடிதொண்டையை கூட்டி சத்தமிட்டு ஆட்டம் போட, ஊரே காடு இருந்த இடத்தில் கூடிவிட்டது. அங்கே கண்தெரியாத ரெங்கு கண்டியரின் முன்னால் சாமியையாவின் சாமியாட்டம் கண்டு ஊரே ஆச்சரியப்படுகிறது.
சாமியையா ஆடும் ஆட்டத்தைப்பார்த்து சாமிக்கு என்ன வேணும்னு கேட்கிறாங்க... சாமியையா குறி சொல்கிறார், “எனக்கு ஒன்னும் வேணாம். எனக்கு கட்டடம்கட்டி நீதான் வருஷா வருஷம் அழனும், ஆனா காடு இருந்த வரைக்கும் உங்களுக்கும் எனக்கும் நிழலா இருந்திச்சி, நீங்க குடிக்கிற சாராயத்துக்கு பட்டையாவும், பல்லு துலக்க விழுதுவாவும் இருந்திச்சி. அதுயெல்லாம் விடுங்க நீங்க செத்தா எரிக்கறதுக்கு கட்டைக்கு எங்கடா போவீங்க? அதாகப்பட்டது எனக்கு எதுவும் வேணாம், கோயில அப்புறம் கட்டுங்க... ஊருல மழைபெய்யனும் வளம் பெறனும்...”
“எங்களுக்கு நல்லது நெனக்கிற ஒனக்கு என்ன வேணும்” ஊர் மக்கள் கேட்க, சாமியையா ஆக்ரோஷத்துடன் ஆடிக்கொண்டு, “நான் கேட்டத கொடுப்பியா? ஊரையே ஒட்டுமொத்தமா கொடுப்பியா? அப்போ ஒன்னு செய். என் சன்னதி முன்னால இயற்கையா ஒரு நெழல உண்டாக்கு”... அதுக்குதானே சாமி கோயில் கட்டுறோம்” ஊர்மக்கள் சொல்ல, சாமியையா ஆக்ரோஷமாக, “கோயில் அப்புறம் கட்டு...(தூரமா வெயில்ல மல்லாந்து கிடக்கிற சிற்பத்தைக் காட்டி) அதுக்கு நிழல் கொடுக்கிறமாதிரி ஏதாவது பண்ணு” (என்று நாக்கை இறுக்கமாக கடித்து கத்தினார் ஒன்றும் புரியாமல்)
ஊர்மக்கள் ரெங்கு கண்டியரை பார்த்து, “கண்டியரையா காளி என்ன சொல்லுது?”
“எனக்கு புரிஞ்சிடிச்சி யாரயாவது காளிக்கு ஒரு சொம்பு தண்ணிய கொடுத்து மலை ஏற வையுங்க” என்றார்கள்.
அடுத்தநாள் அதிகாலை காடு இருந்த இடத்தில் ஊர்மக்கள் அனைவரும் கூடி ஒரு மரத்தை நட்டு, ரெங்கு கண்டியர் முதலில் தண்ணீர் ஊற்ற... “தினம் வீட்டுக்கு ஒருவர் இந்த மரத்துக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்” இது காளி இட்டகட்டளை........
|