செகாவைக் கொண்டாடுவோம்
(21-01-2011 அன்று சென்னை LLA சிற்றரங்கத்தில் கூடு இலக்கிய அமைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் உரைவடிவம்)
**
ஆன்டன் செகாவைப் பற்றிப் பேசுவதற்கு நான் இந்த ஆண்டு பிறந்தது முதலே காத்துக் கொண்டிருந்தேன், இது. செகாவ் பற்றி நான் பேசுகிற நான்காவது கூட்டம், செகாவ் மீது பனி பெய்கிறது என்ற எனது புத்தகத்தை ருஷ்ய மேயர் வெளியிட்டிருக்கிறார், 150 ஆண்டுகளுக்கு முன்பு. ஜனவரி 29-ம் தேதி பிறந்து 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவரான ஆன்டன் செகாவைப் பற்றி இன்றைக்கு நாம் ஏன் பேச வேண்டும்? அவருக்கு எதற்காகப் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்?
என்னைக் கூட ஒருவர் கேட்டார் : நீங்கள் ஏன் செகாவிற்கு விழா எடுக்கிறீர்கள்? இங்கே நமது புதுமைப்பித்தனுக்கு விழா எடுக்கலாமே? என்று, நாம் புதுமைப்பித்தன் உட்பட முக்கியமான எல்லா எழுத்தாளர்களுக்குமே விழா எடுத்திருக்கிறோம், கொண்டாடியிருக்கிறோம், நானேஅதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன்.
செகாவைக் கொண்டாடுவது என்பதே புதுமைப்பித்தனைக் கொண்டாடுவது போல்தான், இவரைப் போலவே அவரும் நையாண்டியாக (satire) எழுதுவதில் தேர்ந்தவர், கூர்மையான சமூக விமர்சனம் உண்டு. குடும்ப உறவுகளை ஆழந்து எழுதியவர் இருவரிடமும் நகைச்சுவை உணர்வு அதிகம் , அதற்காகவே செகாவை நாம் கொண்டாட வேண்டும்.
செகாவை பற்றிப் பேச எங்கிருந்து துவங்குவது.
செகாவ் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்தே தொடங்குகிறேன், அவர் எழுதிய ஒரு குறிப்பு இது :
தினமும் அவர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காட்சி - காரில் வருகிற செல்வந்தர் ஒருவர்.
பல்கலைக்கழகத்தின் வாயிலில் சாலையோரமாகக் காரை நிறுத்தச் சொல்ல. கண்ணாடியை இறக்கி விட்டு 'த்தூ' என்று பல்கலைக்கழகத்துப் பக்கமாகப் பார்த்து துப்பிவிட்டு உடனே மறுபடி கண்ணாடியை ஏற்றியபடி போய்விடுவாராம், வேறு ஒரு வார்த்தைக் கூடப் பேசுவது கிடையாது, காரோட்டிக்கு. அந்த இடம் வந்ததுமே தன்னிச்சையாகக் காரை நிறுத்தி விடுகிற அளவுக்கு இது பழக்கமாகி விட்டது, இதை செகாவ் பதிவு செய்திருக்கிறார், எதற்காக அந்தச் செல்வந்தர், தினமும் சரிலிக்காமல் இப்படிச் செய்ய வேண்டும்? பல்கலைக்கழகத்தின் மீது அவருக்கு அப்படி என்ன கோபம்? அவரது கோபம் ஆசிரியர்கள் மீதா,, கல்வித் திட்டத்தின் மீதா,, பல்கலைக்கழகப் பாடங்களின் மீதா,,? ஏதோ ஒன்றின் மீது அவரது கோபம் இப்படி வெளிப்படுகிறது, இதை ஏன் செகாவ் பதிவு செய்ய வேண்டும்?
இது போல மற்றொரு சம்பவம், அவரது குறிப்பேட்டில் உள்ளது.
ஒரு பையன். அவனுடைய தேர்வுத்தாளை மாலையில் அவன் வீடு திரும்பியதும் தந்தை வாங்கிப் பார்க்கிறார், 5 மதிப்பெண் வாங்கி வந்திருக்கிறான் பையன், தந்தைக்குக் கண்மண் தெரியாத கோபம், பையனைப் போட்டு அடிஅடி என்று அடிக்கிறார், அவன் பரீட்சைப் பேப்பரைக் காட்டி ஏதோ சொல்ல வருகிறான், ஆனால் அப்பா கேட்பதாக இல்லை, வெளுத்து வாங்கி விட்ட பிறகுதான் ஓய்கிறார், மறுநாள் காலை - பையனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகிறார், தலைமை ஆசிரியரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்கிறார் : என்ன பாடம் நடத்தறீங்க நீங்க? என் பையன் 5 மார்க் வாங்கிக் கொண்டு வருகிறான், இதுதான் நீங்க சொல்லித்தரும் லட்சணமா - அதுவா,, இதுவா,,? என்று திட்டும் அப்பாவிடம். தலைமையாசிரியர் அமைதியாகச் சொல்லுகிறார் : ஐயா. உங்கள் பையன் 5க்கு 5 மார்க் வாங்கியிருக்கிறான், அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? - தந்தை திடுக்கிட்டுப் போய்த் தன் கையிலுள்ள பேப்பரைப் பார்க்கிறார், பையன் 5க்கு 5 மார்க்தான்வாங்கியிருக்கிறான்.
இதை ஏன் நீ நேற்று சொல்லவில்லை,,? என்று பையன் மீது பாய்கிறார், அதைச் சொல்வதற்குத் தானே அப்பா நான் பலமுறை முயற்சி செய்தேன், நீங்கள் காது கொடுத்துக் கேட்காமலே அடித்தீர்கள்,,, என்கிறான், தந்தைக்கு அப்போதும் தான் செய்த தவறு புரியவில்லை, அவருக்கு அதுபற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லை. அந்த பையன் அடைந்த வலியும் அவமானமும் ஏன் கண்டுகொள்ளப்படாமலே போகிறது, ஏன் பெற்றோர் பிள்ளைகளை புரிந்து கொள்ளாமல் அடிக்கிறார்கள், பால்ய வயதின் கசப்பு எளிதில் மறைந்து போகாது, இந்த நிகழ்ச்சி அந்தப் பையன் மனதில் நீங்காத வடுவாக தங்கிப்போய்விடும், அது எவ்வளவு பெரிய சோகம்
இதில் வருகிற பையன் போலவே இருந்த்து செகாவ்வின் சிறுவயது, இப்படி அப்பாவிடம் தினமும் எடுத்ததற்கெல்லாம் அடிவாங்கி வளர்ந்தவர்தான் செகாவ்.
செகாவ் ஒரு முறை சாலையில் செல்லும் போது எதிரில் ஒரு பள்ளி ஆசிரியரைக் காண்கிறார், உடனே தலைகவிழ்ந்து கொள்கிறார், எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று அவரது நண்பர் கேட்கிறார் அதற்கு செகாவ் எனக்கு ஆசிரியர்களை பார்க்கும் போது அவமானமும். குற்ற உணர்வும் ஏற்படுகிறது , காரணம் ஆசிரியர்கள் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள், அவர்களை சமூகத்தின் மனசாட்சியாக நான் நினைக்கிறேன் அவர்கள் அப்படி ஒருபோதும் நடந்து கொள்வதேயில்லை, ஆகவே என்னால் ஆசிரியரின் முகத்தையோ - கண்களையோ நேராகப் பார்க்க முடிவதில்லைத, ஆசிரியர் என்பவர் மதிக்கத்தக்கவராக – வழிகாட்டியாக இருக்க வேண்டும், அது ஒரு வேலையில்லை சேவை,
ருஷ்ய ஆசியர்கள் பலருக்கும் பண்பு நலன்கள் இல்லை, ஆசிரியர் தனது தோற்றத்தில். செயலில், பேச்சில் முன்மாதிரியாக இருக்க வேண்டும், அவரை பார்த்தவுடனே நாம் மரியாதை செய்ய வேண்டும் ஆனால் இன்று அப்படியா இருக்கிறார்கள், ஆகவே அது என் மனசாட்சியை வதைக்கிறது என்கிறார்
ஆசிரியரின் தோற்றம். நடத்தை. அவரது அணுகுமுறை பற்றி. அன்றைக்கு நிலவிய கல்வி முறை பற்றி. சமூகத்தைப் பற்றி - சூழ்ந்துள்ள பல விஷயங்களைப் பற்றி செகாவ் தீவிரமான விமர்சனங்களுடன் இருந்தவர்,
அவர் மாற்றுகல்வி பற்றி சிந்தித்தார் அதைச் செயல்படுத்த அவரே ஒரு பள்ளியையும் நடத்தியவர், இந்த வகையில் செகாவ் - டால்ஸ்டாய் இருவரும் நமது மகாத்மா காந்திக்கு முன்னோடிகள், காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய பள்ளிக்கு டால்ஸ்டாய் பெயரைத் தானே இட்டிருந்தார், எழுத்தாளர்களாக மட்டுமின்றி இவர்கள் கல்வி.
மருத்துவம். சமூகமேம்பாடு போன்ற அடிப்படையான தளங்களில் வேலை செய்தவர்களாகவும் அமைந்தார்கள்,
பச்சோந்தி என்ற செகாவ் கதையை இங்கே மயிலைபாலு குறிப்பிட்டார். அந்த கதை நாம் ஒரு போதும் மறக்கமுடியாதது, எளிமையான. கூர்மையான சமூக விமர்சனமுள்ள கதை, இது போல ஒன்றை கு.அழகரிசாமி கூட எழுதியிருக்கிறார், எல்லா ஊரிலும் தெருநாயைப் பற்றி எழுத்தாளர்கள் கவலைப்படத்தான் செய்கிறார்கள், போலித்தனமான மனிதர்களை விட அது மேலானது தானே
ஒரு மனிதனை. நாய் ஒன்று தெருவழியே போகும்போது கடித்து விடுகிறது, கடிபட்டவன் வலிதாங்க முடியாமல் கதறி புகார் செய்கையில். அதை விசாரிக்க வரும் போலீஸ்காரனின் தன்மையை இக்கதை சித்தரிக்கிறது, கடித்தது தெரு நாய் என்றதும் அதைப் பிடித்துக் கூண்டில் அடைத்தாக வேண்டும்; உரிமையாளன் யாரென்று கண்டறிந்து தண்டித்தே தீர வேண்டுமென்று கூப்பாடு போடுகிற போலீஸ்காரன். அது ஒருவேளை ஜெனரலின் அல்லது அவரது சகோதரரின் நாயாக இருக்கக் கூடும் என்று கூட்டத்திலிருந்து யாரோ சொன்னதுமே, கடிபட்ட மனிதன்தான் தப்பு செய்திருக்க வேண்டும்; உயர்குலத்து அதிகாரி வீட்டு நாய் அப்படியெல்லாம் தெருவில் போகிறவனைக் கடிக்காது எனறு மாறிப் பேசுகிற பச்சோந்தித் தனத்தை கதையில் செகாவ் கேலி செய்கிறார், இதில் அவர் விமர்சித்திருப்பது அன்றைய அரசின் அதிகாரத்துவத்தை, ஆனால் இன்றைக்கும் நமது வாழ்க்கையில் இது போல சம்பவங்கள் நடக்கதானே செய்கிறது ஆகவே இது எங்கோ ரஷ்யாவில் மட்டுமே நடந்ததல்ல, நமது தெருவில். நமது வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதுதான், நமது வாழ்க்கையை யார். எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அவரை நாம் கொண்டாடத்தானே வேண்டும்,,,?
செகாவ் 206 சிறுகதைகள் எழுதியிருக்கிறார், அவர் மருத்துவப் படிப்புப் படித்து விட்டு டாக்டராகப் பணியாற்றியவர், டாக்டராக இருந்த போதிலும் கடுமையான காசநோய்ப் பாதிப்பிற்கு ஆளானவர், 44 வயதிலேயே இறந்தும் போனவர், புதுமைப்பித்தனும் காசநோயினால் மிக இளம் வயதில் இறந்தவர்தான், இவரும் செகாவைப் போலவே தீவிர நையாண்டி. கேலி. கிண்டல் நிறைந்த படைப்புகளைத் தந்தவர், செகாவின் கதையைக் கூட தமிழில் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருந்த போதிலும் தனது வாழ்க்கையும் - செகாவின் வாழ்க்கையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன என்பதைப் புதுமைப்பித்தன் அறிந்திருக்கவில்லை, இரண்டு பேரின் தந்தையரும் அளவுக்கு மீறிய கண்டிப்புடனும், கோபத்துடனுமே தங்களின் பிள்ளைகளைச் சிறு வயது முதல் அணுகி வந்திருக்கிறார்கள்,
மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் உள்ள உறவு உலகெங்கும் ஒன்று போலவே இருக்கிறது, ஆகவே செகாவை வாசிக்கையில் புதுமைபித்தனின் நினைவு ததும்புகிறது,
இருவரிடம் நிறைய ஒற்றுமைகளை என்னால் சொல்ல முடியும், செகாவிற்கு நாடகம் புதுமைபித்தனுக்குச் சினிமா, இருவருமே மனைவியை பிரிந்து வாழ்ந்தவர்கள். கடவுளைக் கூட கேலி செய்தவர்கள். அரசியலை பகடி செய்தவர்கள். பத்திரிக்கையில் எழுதி பெயர் பெற்றவர்கள், ஆக செகாவைப் பேசுவது என்பது புதுமைபித்தனை ஒர்மை கொள்வது போலதான் இருக்கிறது
ரஷிய இலக்கியம். உலக இலக்கியத்திற்குப் பல கொடைகளைத் தந்திருக்கிறது, உலகின் சிறந்த நாவல்கள் என்று ஒரு பட்டியலை யார். எந்த மொழியில் தயாரித்தாலும் அதில் குறைந்தது பத்து நாவல்களாவது ரஷிய நாவல்களாகத்தான் இருக்கும், அந்த வகையில்.
டால்ஸ்டாயும் - தாஸ்தாவெஸ்கியும் சிகரங்கள்,
அறிவியல் மேதையான ஐன்ஸ்டீன். அறிவியல் தொடர்பாக தாஸ்தாவெஸ்கி தன் நாவலில் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்குப் பதில் சொன்னவர், அவ்வளவு ஆழமான கேள்விகளை தாஸ்தாவெஸ்கி எழுப்பியிருந்தார். அவர் எழுத்தாளர் மட்டுமில்லை, தத்துவவாதி. உளவியல் அறிஞர். முன்னோடி சிந்தனையாளர். என்று பல முகங்கள் இருக்கின்றன, தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் சைபீரிய சிறைச்சாலை பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள், டால்ஸ்டாய் ஆகச்சிறந்த மனிதாபிமானி. காந்திக்கே முன்மாதிரி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வெறுமனே எழுத்தில் மட்டும் அல்ல; செயலிலும் தன் மனிதாபிமானத்தை. வற்றாத அன்பை வெளிப்படுத்தியவர்,
ரஷியாவில் மிகக் கடுமையான ஒரு பஞ்சம் நிலவியது, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஓர் எலும்புத் துண்டிற்காக ஒரு மனிதனும் - நாயும் சண்டை போட்டுப் போராடிய காட்சியைக் காண்கிறார் அவர்.
உடனே மனம் பதறி தனது மாபெரும் பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் முழுவதையும் பஞ்சத்தினால் துயரப்படும் மக்களுக்கு விநியோகிக்கிறார், டால்ஸ்டாயின் உதாரணத்தைப் பார்த்து ஆன்டன் செகாவ். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் நடத்துகிறார், மக்களுக்காக இறங்கி பணியாற்றும் டால்ஸ்டாயை ஏசுவாக செகாவ் உணருகிறார்,
பகிர்ந்து கொள்ளப்படும் அன்பைப் போல உன்னதமானது வேறு எதுவுமே இல்லை,,, என்கிறார் டால்ஸ்டாய். எவ்வளவு மகத்தான வாசகமது
டால்ஸ்டாய் ஒரு பிரபு, அறுநூறு ஏக்கர் நிலம் வைத்திருந்தவர். ஆனால் அவர் ஒரு போது பணம் படைத்தவராக நடந்து கொள்ளவில்லை, எளிய மனிதனுக்காகவே பேசினார் ,எழுதினார், தன் வாழ்நாளின் முடிவில் தனது மொத்த சொத்தையும் விவசாயிகளுக்கு எழுதி வைத்துவிட்டார் என்பதே அவரது மனைவியின் குற்றச்சாட்டு,
ஒரு முறை அவர் மாஸ்கோவில் இருந்த போது இரவில் சன்னலின் வழியே வெளியே பார்க்கும் போது தூரத்தே தெரியும் ஒரு மினுக்கிடும் விளக்கு வெளிச்சம் டால்ஸ்டாயை ஈர்க்கிறது, பனி கொட்டும் இரவு. அந்த இரவில் எங்கே இருந்து இந்த வெளிச்சப்புள்ளி தென்படுகிறது என்று அறிவதற்காக பனியோடு நடந்து செல்கிறார் டால்ஸ்டாய், நெடுந்தூரத்தில். குளிருக்கு நடுங்கியபடி குப்பை - செத்தை - சுள்ளிகளை எரிக்கும் மனிதர்களின் கூட்டம் ஒன்றைக் காண்கிறார் அவர், அந்தக் காட்சி அவரை உலுக்குகிறது, என்ன அவலமிது, பணக்காரன் கணப்பு அடுப்போடு உறங்க முடியாமல் தவிக்கிறான். வசதியற்றவன் சாலையில் குளிரில் உறங்க இடமில்லாமல் வாழ்கிறான், இதை ஏன் சமூகம் சகித்து கொள்கிறது என்று ஆத்திரப்படுகிறார், மறுநாள் எளிய மனிதர்களுக்காக சேவை செய்ய போகிறேன் என்று எழுதுவதையே நிறுத்திவிட்டு அந்த மக்களுக்காக போராடத்துவங்கிவிட்டார்
இதே போல ஒரு சம்பவத்தை தஸ்தாயெவ்ஸ்கியும் எழுதுகிறார், கடுமையான குளிர் கொண்ட ஒரு இரவில் நடைபாதையில் வசிக்கும் குடும்பத்தில் ஒரு குழந்தை குளிர் தாங்கமுடியாமல் இற்நதுவிடுகிறது அதன் பெற்றோர் பனியில் நனைந்தபடியே. குளிரில் விறைத்து இறந்துபோன குழந்தையைக் கையில் ஏந்தியபடி இரவெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்கள்,
இறந்த குழந்தைக்கு மூத்தவளான பெண் குழந்தை தூக்கத்திலிருந்தவள் - கண் விழித்துப் பார்க்கையில் தனது பெற்றோரும். அருகில் இருக்கும் நடைபாதைவாசிகளும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து என்ன நடந்ததென்று புரியாமலேயே தானும் அழத் தொடங்குகிறாள், ஏதோ நடந்து விட்டது என்பது மட்டும் புரிகிறது அவளுக்கு, என்ன நடந்தது என்று பெற்றோரால் சொல்ல முடியவில்லை, சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய வயதுமில்லை, ஆனால் தொடர்ந்து அழும் சிறுமியின் அழுகையை நிறுத்துவதற்காக அருகே நடைபாதைவாசி தன்னிடம் பாக்கெட்டில் கிடந்த ஒரு மிட்டாயைப் பிரித்து அவள் வாயில் இடுகிறார், ஒரு கணம் அழுகையை நிறுத்தும் சிறுமி. மிட்டாயை வெளியே எடுத்து எறிந்து விட்டுத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள், சாவு என்பது. ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் சுவையுணர்வைக் கூட மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பது தஸ்தாயெவ்ஸ்கியின் பதிவு.
இந்த இலக்கிய மரபில் தான் செகாவ் வருகிறார், நமது முன்னோடிகளே நமது இலக்கிய போக்கினை வழிகாட்டுகிறார்கள். செகாவின் ஆசான் டால்ஸ்டாய் நெருக்கமான நண்பர் மாக்சிம் கார்க்கி அவருக்கு பிடித்த கவி புஷ்கின், அந்த மரபில் வருபவர் இப்படி தானே எழுதுவார், அது தானே நடக்கும்.
ஏன் ரஷ்ய எழுத்தாளர்களை நாம் படிக்க வேண்டும்,
அவர்கள் வாழ்வின் ஆதார விசயங்களைப் பற்றி கவலைபட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து விவாதிக்கிறார்கள், மனித மனதை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள், கடவுள் மதம் குறித்து நிறைய கேள்விகளை கேட்டவர்கள் எழுத்தாளர்களே, அதிகாரத்திற்கு எதிராக அவர்கள் குரல் ஒலித்திருக்கிறது, சமூகத்தின் மனசாட்சி போல இருந்திருக்கிறார்கள், எழுதி பணம் சேர்ப்பது அல்ல அவர்களது நோக்கம். மக்கள் வாழ்வை மேம்படுத்துவதே,
தினசரி வாழ்வின் நெருக்கடி. துர்மரணம், ஏமாற்றம், பேராசை, நிர்கதி, புறக்கணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது.
வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? என்ற கேள்வி பிறக்கிறது,
இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்வதுதான் எழுத்தாளனின் வேலை, மனித மனம் விசித்திரமானது, அதை புரிந்து கொள்வது எளிதில்லை, அதன் ரணங்களை வலிகளை. நினைவுளை எழுத்தாளர்களே சரியாக புரிந்து கொள்கிறார்கள்
செகாவின் நாட்குறிப்பில் தனது ஐந்து பேரன்களில், குடித்து - திருட்டுத்தனம் செய்து சிறையில் இருக்கிற பேரனைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் வயதான ஒரு பெண், அது தான் உலக இயல்பு, அது தான் மனதின் விசித்திரம்
கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தந்தை கொலை செய்யப்பட்டு விடுகிறார், அவரது பிள்ளைகளில் ஒருவன்தான் கொலை செய்தவன்.
ஆனால். அவர் கொலை செய்யப்பட்டதற்கு தாங்கள் அத்தனை பேருமே ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்று மகன்கள் உணருவதுதான் நாவலின் மையம், கொலை அல்ல அதற்கான குற்றமனதையே எழுத்தாளர்கள் ஆராய்கிறார்கள், பிறப்பு வளர்ப்பு மரணம் நோய் பணம் அதிகாரம் அறம் என்று எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து பார்க்கிறார்கள், அவர்கள் மேற்கொள்ளும் விசாரணை நாம் விதி என்று அடையாளப்படுத்தி நம்மை ஏமாற்றிக் கொள்வதை கடுமையாக சாடுகின்றன
டால்ஸ்டாய் - தாஸ்தாவெஸ்கி ஆகிய இருபெரும் சிகரங்களுக்கு நடுவே பொங்கி நுரைத்துப் பாய்ந்த பேராறுதான் ஆன்டன் செகாவ், அவரின் படைப்புகள் அனைத்திலுமாகச் சேர்த்து 8000 கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார் என்கிறார்கள்
செகாவ், இத்தனை கதாப்பாத்திரங்களை எங்கேயிருந்து படைத்தார் அவர்? தன்னை சுற்றிய வாழ்க்கையிலிருந்துதான், அவர் கண்டு கேட்டு அனுபவித்த நிகழ்ச்சிகளில் இருந்துதான் இத்தனை பாத்திரங்களையும் சிருஷ்டித்தார் செகாவ்.
அதில் பெரும்பான்மை எளிய மனிதர்கள், உலகின் கண்ணில் முக்கியம் எனப்படாதவர்கள். சாமான்யர்கள். பெண்கள், பெண்களை குறித்து அதிகம் எழுதிய சிறுகதை ஆசிரியர் அவரே,
செகாவினுடைய முன்னோர் பண்ணையடிமைகளாய் இருந்தவர்கள், செகாவின் காலத்தில்தான் அந்தப் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டது, செகாவின் அப்பா துறைமுக நகரம் ஒன்றில் சிறிய பலசரக்குக் கடை ஒன்று நடத்தி வந்தவர் -, மிகவும் சாதாரண - குறைந்த வருமானம்தான், ஏழ்மை ஆறுபிள்ளைகள். மதநம்பிக்கை கொண்ட அம்மா, கோபக்கார அப்பா இது தான் அவரது பால்யம், சிறுவயதில் நாம் படும் சிரமங்கள் வாழ்வில் எவ்வளவு வசதியாக உயர்ந்து போனாலும் மனதில் இருந்து மறைந்து போகவே செய்யாது, அந்த ஆதங்கம் தீராதது, பால்யத்தின் வடுக்கள் ஒரு போதும் ஆறாதவை
அப்பாவின் அடி-உதையால்தான் தனக்கு மதநம்பிக்கையே இல்லாமற் போனதற்குக் காரணம் என்கிறார் செகாவ், நம்மில்கூட பெரும்பாலானோருக்கு மத நம்பிக்கை – ஈடுபாடு இருப்பதற்கும் இல்லாமல் இருப்பதற்கு நமது குடும்பங்களில் அது திணிக்கப்படுவதுதான் காரணம்.
இச்சூழலில் செகாவ் குடும்பம், கடன்சுமை தாங்காமல் இரவில் ஊரை விட்டு வெளியேறிப் போய்விட முயன்றது இது மிகத் துயரமான ஓர் அனுபவம், கடன் கட்ட முடியாமற் போகும் குடும்பங்கள், பெரும்பாலும் இரவில்தான் வெளியேறிப் போகிறார்கள். வாழ்ந்து கெட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். அவர்கள் வெளியேறி போவதை உடனிருப்பவர்கள் பார்ப்பது பெரும் துயரமில்லையா,
எல்லாச் சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல இருக்கின்றன ஆனால் துயருற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனியாகவே இருக்கின்றன என்பது டால்ஸ்டாயின் வரி, இது ஒரு கண்டுபிடிப்பு இல்லையா, இது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பிற்கு இணையான சாதனையில்லையா,
அப்படி செகாவின் பெற்றோர். பிள்ளைகளுடன் வெளியேற முயன்ற பொழுது கடன்காரர்கள் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள், நீ வாங்கிய கடனைக் கொடுத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போ, தொகையைக் கொடுக்க முடியாவிட்டால், அடமானமாக எதையாவது கொடு, உன் பிள்ளைகளில் யாரையாவது அடமானம் வைத்து விட்டுப் போ,,,? என்கிறார்கள், அப்போது வழியில்லாமல்செகாவைத்தான் அடமானமாக விட்டுவிட்டுப் போகிறார்கள் அவரது பெற்றோர். அதில் சில வருசம் போராடி கடன் அடைந்த பிறகு மாஸ்கோ போகிறார் செகாவ்
துயரங்களால் மட்டுமே நிரம்பியிருந்த எனது சிறு வயது வாழ்க்கை முழுவதிலும் - இறுதி வரையிலும்கூட - என்னைக் காப்பாற்றியது என்னுள் இருந்த நகைச்சுவை உணர்வுதான்,,, - என்கிறார் ஆன்டன் செகாவ், அப்போது – ரஷியாவில் நிலவிய சமூக சூழலை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம்.
நம்மூரில் ஆங்கிலம்போல் அங்கு பிரெஞ்ச் மொழி மோகம் தலைவிரித்தாடியது, பொதுமொழியாக ரஷிய இருந்தாலும் உயர்குடி மொழியாக ப்ரெஞ்ச் மொழிதான் இருந்தது, பிரெஞசு கலாச்சாரத்தை கொண்டாடினார்கள். பிரெஞசு இலக்கியவாதிகள் இசைக்கலைஞர்கள் போற்றப்பட்டார்கள். அது மாறி ருஷ்ய மொழி மீது புதிய விழிப்புணர்வு வர எழுத்தாளர்கள் முயற்சித்தார்கள். அன்று இருந்த அரசு கல்வியை எளிய மக்களும் கற்றுக் கொள்ளகதவுகளை திறந்துவிட்டது
அதனால் அடித்தட்டு மக்கள் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தபோது. செகாவ் மருத்துவம் படிப்பதற்குப் போகிறார். குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மேல்வருமானம் தேவை அதற்காகத்தான் எழுதஆரம்பிக்கிறார் செகாவ், நகைச்சுவைத் துணுக்குகள் தான் அவரது ஆரம்ப காலக் கதைகள், உதாரணமாக- மீசை இல்லாத ஆண் எப்படி இருப்பான்,,,? - மீசை உள்ள பெண் எப்படி இருப்பாளோ அப்படித்தான் இருப்பான்,,, என்பது போன்ற சின்னஞ்சிறு நகைச்சுவைக் கதைத்துணுக்குகளாக நிறைய எழுதினார் செகாவ்.
அவற்றைப் படித்த ஒரு விமர்சகர் செகாவிற்கு எழுதிய கடிதமொன்றில். இந்த மாதிரிக் குட்டிக் கதைகள் எழுதுவதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விடு, பல்வேறு விதமானவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களை நுட்பமாகப் பார்த்து எழுத வேண்டும்,,, என்று குறிப்பிடுகிறார், அதைப்படித்த பின்தான் செகாவ் தீவிரமான படைப்புகளை எழுதத் தொடங்கினார். செகாவிற்கு நாடகத்தில் சிறுவயது முதலே ஈடுபாடு இருந்த்து, ஆகவே நாடகங்களும் எழுத்த் துவங்கினார்
அவரால் ஒரு நாளில் நாலு சிறுகதைகளை எழுதி விட முடிந்திருக்கிறது, அவரது எல்லாக்கதைகளிலும் தனிமை தான் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது, அதிலும் பெண்கள் தனிமையை எதிர் கொள்ளும் வித்த்தை அவர் உன்னிப்பாக அறிந்து எழுதியிருக்கிறார், குடும்பம் எப்படி ரசனையற்று இருக்கிறது என்பதை. அதிகார போட்டியை. பணக்காரர்களின் போலித்தனத்தை. மருத்துவர்களின் அறியாமையை என அவரது கதைகளின் உலகம் மிக விரிவானது, நனவோடை எனப்படும் உத்தியை செகாவ் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.
செகாவ் எழுத்தாளராக மட்டும் இருந்தவரல்ல, பல்வேறு மாற்று செயல்பாடுகளை - களத்தில் இறங்கிச் செய்து வந்தவர் மருத்துவ பணியை சேவையாகவே செய்து வந்தார் அதனால் "மூணுரூபிள்' டாக்டர் என்றே அவருக்குப் பெயர், அவ்வளவுதான் அவர் வாங்கிய கட்டணம், தனது மருத்துவமனைக்கு நோயாளிகள் வரவேண்டுமென எதிர்பார்த்தவர் இல்லை, நோயாளிகளைத் தேடிச்சென்று சிகிச்சை அளிப்பார், ஒரு பெண் குழந்தை பிரியமாய் வளர்த்த நாயை. இவரிடம் சிகிச்சைக்காக கொண்டு வருகிறாள், ""அம்மா. நான் மிருகங்கட்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் இல்லையே, நீ மிருக வைததியரிடம்தான் போக வேண்டும்,,,ஃஃ என்றார் செகாவ், ""இந்த ஊரில் அப்படி ஒரு மிருக வைத்தியர் யாரும் இல்லையே? என்ன செய்யட்டும்? நீங்கள் தான் எப்படியாவது இந்த நாய்க்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று மன்றாடுகிறாள் சிறுமி, செகாவவும் "அப்பெண் சொல்வது சரிதான்; அந்த ஊரில் மிருக வைத்தியர் யாரும் கிடையாதேஃ என்பதை உணர்கிறார், நாய்க்கு சிகிச்சையளிப்பதோடு உனக்கு அறிவு கிடையாதா? அந்தப் பெண் உன்னை நம்பித்தானே இருக்கிறாள்? நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி அவளை கஷ்டப்படுத்துகிறாயே? என்று அந்த நாயைக் கடிந்து கொள்ளவும் செய்கிறார், அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சிறுமி. "நான் என் நாயை வளர்ப்பதை சரியாகப் புரிந்து கொண்ட ஒரே ஆள் நீங்கள்தான்,,,ஃ? என்று நன்றி கூறுகிறாள், இதுதான் செகாவின் மேன்மை.
செகாவின் பல கதைகளில் பலரகமான நாய்கள் வருகின்றன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், ஒன்றைப் போல் இன்னொன்று கிடையாது, ஒரு கதையில் வருகிற நாய்க்குத் தன் வால் அழகாயில்லை என்று ஒரே ஆதங்கம், போகும்போதும். வருகிற போதும் தன் வாலைத் திரும்பிப் பார்த்தபடி வருத்தப்படும் நாய் அது, அதற்கு தான் நாயாய் இருப்பது பற்றி வருத்தமேயில்லை, தன் வால் அழகாய் இல்லையே என்பதுதான் ஒரே வருத்தம், அவர் தனது பயணத்தின் போது ஒரு முறை இலங்கைக்கு வந்து இறங்கினார், இலங்கையில் இருந்து திரும்புகையில் அவருக்கு நினைவுப் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்கிறார்கள், ஒரு கீரீப்பிள்ளை இருந்தால் கொடுங்கள் என்று சொல்கிறார் செகாவ், ஆச்சரியத்துடன் கீரிப்பிள்ளையையும். புனுகுப்பூனை ஒன்றையும் கொடுத்தனுப்புகிறார்கள், தனது ஊருக்குத் திரும்பி வந்த செகாவினால். அங்கு அவற்றைத் தன்னுடனேயே வைத்து வளர்க்க முடியாது என்று தெரிய வரும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, அதை மிருக் காட்சிசாலை கூட வாங்க மறுக்கிறது, அந்த கீரிபிள்ளை அவருக்கு இலங்கையை நினைவூட்டியபடியே இருக்கிறது.
நாரை ஒன்றை வாழ்நாளின் இறுதி வரை பிரியத்துடன் வளர்த்து வந்தவர் செகாவ். அந்த நாரை எந்த எழுத்தாளர் செகாவை பார்க்க வந்து பேச துவங்கினாலும் அருகில் வந்து நின்று கொள்ளும். தன்னை விட அதிக இலக்கிய அறிவு உள்ள நாரை என்று அதைச் சொல்கிறார் செகாவ்
செகாவ் தனது மருத்துவமனையை ஒட்டி கட்டாந்தரையாக இருந்த நிலத்தைப் பண்படுத்தி விதவிதமான பூச்செடிகளை வளர்க்கிறார், பூக்கள் நிறைந்த தனது தோட்டத்தை வந்து பார்க்குமாறு கார்க்கியை அழைக்கிறார், கார்க்கியும் வந்து பார்வையிடுகிறார், ""ரஷ்யாவில் சாதாரணமாக எல்லா இடத்திலும் பூக்கிற பூக்களைத்தானே இந்தச் செடிகளிலும் பார்க்கிறேன், இதைப் பார்க்கவா என்னை அழைத்து வந்தீர்கள்?"" என்று கேட்கிறார் கார்க்கி, அப்போது செகாவ் கார்க்கியிடம் சொன்னது இது; ""ஆச்சர்யம் இந்தப் பூக்களில் இல்லை, இவை மலர்ந்திருக்கும் இந்த நிலம் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வெறும் கட்டாந்தரையாக இருந்த தரிசு நிலம், இந்த மாதிரிக் கட்டாந்தரையிலும் கூட பூக்கள் பூக்கும் என்று தெரிந்ததுதான் எனது ஆச்சரியத்திற்குக் காரணம், இப்படியே ஒவ்வொரு மனிதரும் தன்னைச் சூழ்ந்துள்ள கட்டாந்தரைகளில் பூக்கள் மலரும் என்று தெரிந்து கொண்டால். மலரச் செய்தால் - உலகமே பூக்க்ளின் மயமாகி விடும்தானே?"" என்று செகாவ் சொன்னதும் கார்க்கியும் வியந்து போகிறார்.
எவ்வளவு பெரிய மனது எவ்வளவு பெரிய கனவு,
டால்ஸ்டாய் மிகவும் பலமான உடல்வாகுடையவர், பிரபு குடும்பத்துப் பிள்ளை, குதிரையேற்றம். நடை என்று தன் உடலை மிகுந்த வலிமையான ஆசிருதியுடன் வைத்திருந்தவர், அவர் எழுதின ஒவ்வொரு நாவலும் அச்சிலேயே 1500 பக்கங்கள் வரை வரும், இப்படி 5 முக்கிய நாவல்களை எழுதியவர், அப்போது மையில் தொட்டுத் தொட்டு எழுதும் பேனாதான், ஒருமுறை தொட்டு ஒரு வாக்கியம் எழுதுவதற்குள் மை உலர்ந்து போகும், இதைக் கொண்டு 20000 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதிகளாக 5 நாவலுக்கும் எழுதினார் என்றால் அவரது உடல்வலிமைக்கு வேறு சான்று வேண்டாம், அப்படிப்பட்டவர்.
ஒருமுறை குதிரையேற்றத்திற்குப் போகையில் செகாவையும் உடன் அழைத்துப் போகிறார், காட்டுப் பகுதியில் போய்க் கொண்டே இருக்கும்போது ஒரு குருவியின் துயரம் தோய்ந்த பாடலைக் கேட்கிறார்கள் இரண்டுபேரும், எப்போதும் அந்தக் குருவி ஒரே சோகப் பாடலை மட்டுமே பாடிக் கொண்டிருக்கிறதே என்று டால்ஸ்டாய் சோகமடைகிறார்.
மனிதர்களுக்கு எவ்வளவோ இசையிருக்கிறது, குரலிருக்கிறது, குருவிக்கு ஒரே குரல் ஒரே இசை, அதன் சோகம் தன்னை மிகவும் வருத்துவதாக சொல்லி பலநேரங்களில் இது போல நாம் தேற்றமுடியாத சோகம் நம்மை படுத்தி எடுக்கிறது செகாவ் என்கிறார், எப்பேர்ப்ட்ட ஆசான் பாருங்கள்
செகாவ். மருத்துவமனையில் டாக்டராகப் பணி செய்து கொண்டேதான் எழுதிக் கொண்டு வந்தார், காசநோய் அவரை வாட்டிக் கொண்டிருந்தது, ரத்தவாந்தி எடுத்தபடியே வாழ்ந்தார், சாவின் கை அவரது தோளில் எப்போதும் கிடந்த்து ஆனால் அவர் பயம் கொள்ளவேயில்லை
எப்போதும் போல கிராமங்கள் தோறும் சென்று சிகிச்சை அளிக்கிறார், அவர் சந்தித்த மக்கள் பலரகமானவர்கள், அடிப்படை உணவில் தொடங்கி ஒவ்வோர் அம்சத்திலும் வெவ்வேறு ரசனையுடையவர்கள், வெவ்வேறு வாழ்க்கைத் தரங்களையும். தட்டுகளையும் சார்ந்திருக்கிருந்தவர்கள். அத்தனையும் ஒன்று சேர்ந்து அவரை எழுத்தாளராக்கியது,
அவரது ஆறாவது வார்டு சிறுகதை நம் சமூகத்தின் சீரழிந்த அடையாளம் தானே. செகாவின் கதைகளில் எதுவுமில்லை என்று அவரை விமர்சகர்கள் கடுமையாக திட்டினார்கள், இன்று அவர் தான் உலகின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று கொண்டாடப்படுகிறது, ஆகவே ஒரு எழுத்தாளன் மீது வைக்கபடும் விமர்சனம் அவனை ஒன்று செய்துவிடாது, நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.
ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பில் தான் நவீன தமிழ் சிறுகதை உருவானது, அதில் செகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது, உலகெங்கும் சிறுகதைகள் எழுதுவோர் விரும்பி படிப்பது செகாவை தான். 32 மொழிகளில் அவரது கதைகள் வெளியாகி உள்ளன, தமிழில் இவரது முக்கியக் கதைகள் வெளிவந்துள்ள, அதுவும் நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன,
குற்றவாளிகளை பற்றி அறிந்து கொள்வதில் செகாவிற்கு எப்போதுமே ஈடுபாடு அதிகம், அவர் இளைஞராக இருந்த போது சிறைக்கைதிகளை சந்திக்க Sakhalin என்ற் ஜப்பானிய ரஷ்ய எல்லைபகுதிக்கு சென்றிருக்கிறார்
சைபீரியாவின் துயரங்களை இரண்டே பேர்தான் நேரில் சென்று கண்டறிந்து தமது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்கள், ஒருவர் செகாவ், மற்றொருவர் - தாஸ்தாவெஸ்கி, அவர் தனது Notes from the Underground -ல் சைபீரியா பற்றிப் பதிவு செய்திருக்கிறார்,
அன்றைய ரஷ்யாவின் பீனல் காலனியாக - குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்தது சைபீரியா - Sakhalin என்ற் இடத்தைப் போய்ப்பார்த்து. அங்கிருந்த பத்தாயிரம் பேரையும் சந்தித்து நேர்காணல் எடுக்கிறார், அங்கே சந்தித்த ஒரு தாயையும் - மகளையும் பற்றி அவர் பதிவு செய்கிறார், வறுமையின் கொடுமை தாளாமல். அந்தத் தாயே மகளை விபச்சாரம் செய்து ஏதாவது கொஞ்சம் பணத்துடன் வருமாறு அனுப்புகிறார், மகளும் பக்கத்து நகரத்தில் அம்மாவின் சொற்படி வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறார், இரண்டு நாட்கள் வரை இந்தப் பெண்ணை ஒருவரும் அணுகவில்லை, மூன்றாவது நாள் இரண்டு ஆண்கள் இவளிடம் வந்து பேசி அழைத்துப் போகிறார்கள், இருவருமாக இவரை அனுபவித்தபின். ஒரு நோட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள், வீட்டிற்கு வந்து பொழுது விடிந்ததும் தான் சம்பாதித்து வந்த ரூபாயை அம்மாவிடம் கொடுக்கும் போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது; அந்த நோட்டு பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட காலாவதியாகிப் போன ஒரு லாட்டரிச் சீட்டுதான் அது;
அந்த லாட்டரிச் சீட்டைப் பார்த்துப் பார்த்து தான் ஏமாந்து போனதை எண்ணி அழுது கொண்டே இருக்கிறாள் தாய், செகாவின் பாத்திரங்கள் இப்படியான துயரப்பட்ட மனிதர்கள்தாம். "பந்தயம்" என்ற செகாவின் கதை இந்த மாத செம்மலர் இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது, நொடித்துப் போன வங்கி முதலாளியும் - அறையினுள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் ஒரு குற்றவாளியும் தங்களுக்குள் போடுகிற பந்தயமும்; அதில் கடைசியில் இருவருமே தோற்றார்களா. ஜெயித்தார்களா எனறு இரண்டிற்கும் பொருந்தி வருகிற விதத்தில் அமைந்திருக்கும் முடிவும்தான் அக்கதை,
""வாழ்க்கை தான் எல்லாவற்றையும் விட பெரியது, தனிமைச் சிறையில் ஒருவன் அடைபட்டு உயிருடன் இருப்பதை விட வெளியேறிப் போய் உயிரை விடுவது மேல், வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்காதீர்கள்ஃஃ என்று வங்கி முதலாளிக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு தனிமைச் சிறையான பாதாள அறையிலிருந்து தப்பித்துப் போயிருப்பான் அந்த மனிதன்.
இதேபோல - இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்ஹேஸின் சிறு கதை - Pedro Salvadores நிலவறையினுள் அடைபட்டிருக்கும் ஒரு மனிதன் - தனிமை. அந்த மனிதனுக்கு காலத்தின் சின்னஞ்சிறு துகளைக் கூட அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தந்து விடுகிறது என்பதை உணர்த்துகிறது, கற்பனை பயத்தால் தனது வாழ்வை இழப்பவனை பற்றி சொல்கிறது இக்கதை, செகாவ் தான் இதற்கு மூலம் என்பது போலவே இருக்கிறது
செகாவின் "ஆறாவது வார்டுஃ நாவலில் - அரசாங்க அதிகாரத்துவம் தனது குடிமக்களுக்கு. ஏன். தனது அங்கமான ஊழியர் ஒருவருக்குக் கூட எப்படி அடக்குமுறை பற்றிய அச்சத்தை ஊட்டி விடுகிறது என்பதைத்தான் நையாண்டியுடன் சித்தரித்திருக்கிறார் அவர்,.
இதற்கு வரலாற்றில் சாக்ரடீஸ் காலத்திலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டுகளைக் காண முடியும், ஒரு அமைச்சர் அளிக்கும் விருந்திற்குப் போய் அவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் சாக்ரடீசும். அவரது நண்பர்களும்
அமைச்சர் வரத் தாமதமாகிறது, பொறுமையிழந்த சாக்ரடீஸ் நண்பருடன் வெளியேறி விடலாமா என ஆலோசிக்கிறார், அமைச்சர் வரும் வேளையில் நாம் வெளியே போனால் அரசாங்கப் பிரதிநிதியை நாம் அவமதித்து விட்டதாகக் கருதி நம்மைத் தண்டித்து விடுவார்களே?ஃஃ என்று கேட்கிறார் நண்பர், சாக்ரடீஸ் சொல்கிற பதில் இது;
"அரசு. என்னையோ - வேறு யாராவது ஒருவரையோ - தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால். முடிவு செய்தால் அதற்கான காரணத்தையும் அரசே சிருஷ்டித்துக் கொள்ளும். அரசுக்கு அது ஒரு போதும் பிரச்சினையே இல்லைஃஃ - இந்த அனுபவம்தான். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்த ""ஆறாவது வார்டுஃஃ நாவலில் வருகிற திமீத்ரிச்சின் அனுபவமும்.
செகாவின் வாழ்க்கை காதல்கள் நிரம்யிது, பல பெண் நண்பர்கள். அவர்களுடனான காதல்கள்,,, கடைசியில் அவர் திருமணமும் செய்து கொள்கிறார், வினோதமான ஓர் ஒப்பந்தத்தை இருவரும் செய்து கொள்கிறார்கள், செகாவின் நாடகங்களில் நடித்து வந்த ஒல்கா நிப்பர் என்ற நாடக நடிகையை. அவர் காதலித்தார் அவரையே மணந்து கொள்ள விரும்பினார் அதற்கு தான் இந்த நிபந்தனை, அதாவது திருமணத்திற்கு பிறகு ஒல்கா மாஸ்கோவில் வசிக்க வேண்டும், அவர் யால்டாவில் இருப்பார் அதாவது கணவன் ஒரு ஊர் மனைவி ஒரு ஊர், இருவரில் எவர் எப்போது விரும்பினாலும் மற்றவரை தேடி வரலாம் தங்கலாம். ஒன்றாக ஒரே வீட்டில் வசிப்பது மட்டும் வேண்ர்ம், காரணம் அதற்காக இருவருமே நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் சமரச்ம் செய்து கொள்ள வேண்டும். அது தேவையற்றது, அவரவர் சுதந்திரத்தோ நாம் வாழ வேண்டும் என்றால் தனியே வாழ்வதே சிறப்பானது, அதை ஏற்றுக் கொண்டு ஒல்கா அவரை திருமணம் செய்து கொண்டார் தனித்தே மாஸ்கோவில் நாடகநடிகையாக வாழ்ந்தார்,
நிஜம் தானே திருமணத்தின்போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்ணே, அவள் அத்தனை வருடமாகத் தான் வேர் கொண்டிருந்த இடத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு விடுகிறவள் பெண்தான்.
ஒரே வீட்டில் பல காலம் ஒன்றாக வசிக்கும் கணவன் மனைவி இருவரும் மேஜையும் நாற்காலியும் போல அலுப்பூட்டும் பொருளாகி போகிறார்கள் என்கிறார்கள்
இதை போக்க காதலி போலவே மனைவியை நேசிக்கவே இந்த ஏற்பாடு என்கிறார் செகாவ்
,"நீங்கள். தனிமை போரடிக்கிறது என்று விரும்பி திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு ஒரு போதும் உங்களுக்குத் தனிமை என்பதே கிடைக்காது " என்பது தான் செகாவின் எண்ணம்
செகாவின் நோய் முற்றுகிறது, தன் வாழ்நாள் எண்ணப்டுவதை அவர் அறிந்தே வாழ்கிறார், ஆனால் அதை பற்றி அவருக்கு ஒரு புகாரும் கிடையாது, சந்தோஷமாகவே வாழ்நாளை கழிக்கிறார்
நோய் முற்றிய ஒரு கட்டத்தில் ஜெர்மன் சென்று அங்கே நோய்க்கு இதமான சீதோஷ்ணநிலை இருந்த ஆரோக்கிய நிலையத்தில் தங்கி சிகிட்சை எடுத்து கொள்கிறார்கள், அதிர்ஷ்டவசமாக அவருக்குச் சிகிச்சை அளிக்க ஒரு ரஷிய டாக்டர் கிடைத்து விடுகிறார்,
சாவின் நொடி நெருங்குகிறது, கடைசியாக ஒரு சாம்பெயின் குடித்து சந்தோஷமாக இறந்து போகிறார் செகாவ்,
செகாவின் மனைவி, அன்று இரவு முழுவதும் செகாவின் பிணத்துடன் இருக்கப் போவதாகக் கூறி அவ்வாறே செய்கிறார் , இறந்த உடலின் முன்பு அவர் என் னபேசியிருப்பார், என்ன தனிமையது, காதலின் உன்மத்தம் அது தானோ,
மருத்துவமனையில் தினசரி செகாவைப் பார்த்துப் போக ஒரு பூங்கொத்துடன் வருகிற ஒரு பையன் மறுநாளும் வருகிறான், அவனிடம். ""இன்று மட்டும் அந்தப் பூங்கொத்தை நீயே அவரின் தலைமாட்டில் வைத்து விடு, இன்று அவர் தானே எழுந்து வந்து அதை வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை, என்கிறாள் மனைவி
மறுநாள் - செகாவின் உடல் ஒரு பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தவறுதலான மீன்கள் சிப்பிகள் ஏற்றிவரும் சரக்கு வண்டி மூலம் சொந்த ஊருக்கு வருகிறது,
அவரது மரணம் நடந்த நாளில் யுத்தமுனையில் ற இறந்து போன ஜெனரல் ஒருவரின் உடலும் மற்றொரு பெட்டகத்தில் அதே ஊருக்கு வருகிறது, செகாவின் உடல் இருந்த பெட்டகத்தின் பின்னால் தவறுதலாக இராணுவ அதிகாரி வந்துவிடுகிறான், இதனால் மரண ஊர்வலத்தில் பெரிய குழப்பம் நடக்கிறது
, "வாழ்நாள் முழுக்க இருந்தது போலவே சாவுக்குப் பிறகும் செகாவ் வேடிக்கையானவராகவே இருந்திருக்கிறார்,,ஃ என்று கார்க்கி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார்,
44 வயதில் மறைந்து விட்டாலும். இன்றும் செகாவின் அலை உலகு முழுவதும் பரவியிருக்கிறது, செகாவின் நாடகங்கள் உலக புகழ்பெற்றவை, அவை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன, அவரது கதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன , தொடர்ந்து நிறைய எழுதியவர் அவர்.
ஷேக்ஸ்பியர். இப்சன் எழுதிய நாடகங்களைப் போலவே இவரின் நாடகங்களும் உலக முழுமையிலும் பரவியவை, சிறுகதைத் துறையை விடவும் நாடக உலகில் செகாவின் இடம் பிரமாண்டமானது, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகம் வாசிக்கப்பட்டவர் செகாவ் மட்டுமே, அமெரிக்க நகரம் ஒன்றில். வீதியில். நாள் முழுக்க செகாவின் கதைகளை போவோர் வருவோரிடம் ஓர் ஐந்து நிமிடம் உட்கார்ந்து இதைக் கேட்பீர்களா? என்று வேண்டிக் கொண்டு படித்துக் காட்டியவாறு இருக்கிறார் ஒரு ரசிகர், கேட்டு விட்டுப் போகிறவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்புகிறார் அவர்.
அந்த அளவிற்கு செகாவ் கதைகள் ஐரோப்பாவில் பிரபலமானவை, அவரால் உருவான மிகப்பெரிய எழுத்தாளர் ரேமண்ட் கார்வர், கார்வரது கடைசிக் கதை - "எர்ரன்ட். அது செகாவின் இறுதி நாளைப்பற்றியது , செகாவை அமெரிக்கா கொண்டாட காரணமாக இருந்தவர் கார்வர், தனது ஆசான் செகாவ் என்று கார்வர் பெருமித்த்துடன் சொல்கிறார்,
செகாவ்வின் 150 விழாவை இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்றன . அவரது கதைகள் - அவரைப் பற்றிய படங்கள் - நாடகங்கள் என்பதாக உலகம் முழுவதும் கொண்டாட்டம்நடந்து வருகிறது,
அவரின் ஒரு கதை "துக்கம்ஃ - ஒரு குதிரை வண்டியோட்டியின் குறிப்பிட்ட ஒருநாள் வாழ்க்கையைப் பற்றியது, அவன் அன்றைய தினத்தில் வண்டியில் ஏறும் ஒவ்வொருவரிடமும் தான் ஒன்று சொல்ல வேண்டுமெனவும். அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்குமாறும் வேண்டிக் கொள்கிறான், ஆனால் அவன் சொல்வதைக் கேட்பதற்கு ஒருவர்கூடத் தயாராக இல்லை. அன்று மாலை வரை இப்படியே போகிறது, சோர்வும். சலிப்புமாக வண்டியில் இருந்து குதிரையை அவிழ்த்து ஓரமாகக் கட்டி விட்டு அதற்கு நீரும். இரையும் கொடுத்தபடியே அதனிடம் பேசுகிறான் வண்டியோட்டி, "இன்றைக்கு என் மகன் இறந்துபோய் விட்டான், அந்த இழப்பின் துக்கம் நிரம்பிய மனதுடன்தான் இன்று முழுக்க வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன், இதைத்தான் நான் வண்டியில் சவாரி செய்ய வந்தவர்களிடம் சொல்லுவதற்கு முயற்சி செய்தேன், ஒருவர்கூட அதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை, நீயாவது என் துக்கத்தைக் கேட்கிறாயா?ஃஃ என்று குதிரையிடம் சொல்லச் சொல்ல. அதுவும் ஏதோ புரிந்ததைப் போலத் தலையாட்டிக் கொண்டிருக்கிறது,
இப்படியாக முடிகிறது அந்தக் கதை.
இந்த கதையை போன்றது தான் செகாவின் வாழ்வு. துயரக்கதை கேட்ட குதிரை போன்றது தான் அவரது எழுத்து
செகாவ் மனிதர்களை. அவர்களின் உணர்வுகளைத் தானே நேரடியாகக் கண்டு - அறிந்து - உணர்ந்து எழுதியவர், அதை நாமும் நிஜமாக உணரச் செய்கிறார் என்பதே அதன்தனிச்சிறப்பு
ஒருமுறை குதிரை இரவில் பனியில் நனைவதை கண்டு தானும் அது போல பனி கொட்டும் இரவில் வெளியே நின்று பனி உணர்ந்து பார்த்தவர் செகாவ், அதைச் சொல்லும் போது மொழியற்ற துயரை பகிர்ந்து கொள்வதே அவரது சிறுகதையின் இயல்பு என்று குறிப்பிட்டிருந்தேன், அது உண்மை
அவரது நாய்க்கார சீமாட்டி கதை தான் நான் படித்த மிகச்சிறந்த காதல்கதை, அதைப்பற்றி எனது "செகாவின் மீது பனி பெய்கிறது என்ற
புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
உலகின் துயரம் பல நேரங்களில் மொழியற்றது, மொழியற்ற துக்கத்தை யாரெல்லாம் எழுதுகிறார்களோ. படைப்பு மொழியில் சொல்லுகிறார்களோ அவர்களெல்லாம் உன்னதமான - மாபெரும் எழுத்தாளர்கள், செகாவ் அப்படியான ஓர் உன்னதமான - மாபெரும் படைப்பாளி.
அவரை நாம் தொடர்ந்து வாசிப்போம்
கொண்டாடுவோம்.
••
பேச்சின் உரைவடிவத்தை எழுதியவர் – எழுத்தாளர் கமலாலயன்
Project Gutenberg இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கின்ற செகாவின்
முக்கியப் புத்தகங்கள்
1. The Bishop and Other Stories
2. The Chorus Girl and Other Stories
3. The Darling and Other Stories
4. The Duel and Other Stories
5. The Horse-Stealers and Other Stories
6. The Lady with the Dog and Other Stories
7. The Wife, and other stories
8. The Schoolmistress, and other stories
9. Letters of Anton Chekhov
10. Note-Book of Anton Chekhov
11. The Sea-Gull
12. Uncle Vanya
13. Note book of Anton chekhov
நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்களைக் காண:
http://picasaweb.google.com/thamizhstudio/vIgbZK#
இந்நிகழ்வின் காணொளியைக் காண: (to view the video of this program)
http://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_chegav_s.ra.php
படங்கள்: அஜந்தன் (படிமை மாணவர்)
|