ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப் பொழுதில் நகரமே ஒரு தனிமை விரும்பியைப் போல் மந்தைவெளி பேருந்து நிலையம் நெரிசல்களைக் குறைத்துக் கொண்டு வெறுமையைப் பாடிக் கொண்டிருந்தது. சென்னையின் வாகன வியாபார இரைச்சலுக்கிடையில் அந்த மந்தமான கணங்களை மிக அரூபமாகவே உணர முடியும். மந்தைவெளி பேருந்து நிலையத்தில் இறங்கி செயின்ட் மேரிஸ் சாலையில் நடந்து கதை சொல்லிப் பகுதிக்காக மனுஷ்யபுத்திரனை அவரது வீடு மற்றும் உயிர்மை அலுவலகம் உள்ள அபிராமபுரத்தில் சென்று சந்தித்தோம். தன் மடிக்கணினியில் எதனையோ அலைந்து கொண்டிருந்தார். தமிழ்ஸ்டூடியோவில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்ததும்,வரவேற்று தன் அறையில் அமரச் சொன்னார்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியில் செழுமை வாய்ந்தது கவிதை. நாம் வெறும் செய்யுட்களை மட்டுமே நம் சங்கப்பாடல்களில் காண முடியும். உரைநடைகள், சிறுகதை நாவல்கள் இவை யாவும் பிற மொழியில் இருந்து நாம் கடன் பெற்றுக் கொண்டவை மட்டுமே. கவிஞனை பிற எழுத்தாளர்களை விடுத்து மிகப் பெரியவன் எனப் பொது புத்தி கொண்டது நம் சமூகம்.பாரதிக்கு இணையென்று எந்த ஒரு சமகால எழுத்தாளனை குறிப்பாக கவிதை தவிர்த்து பிற எழுத்து வகையில் தமிழில் உச்சம் தொட்டவர்களை நாம் கருத மாட்டோம்.கவிதைக்கு மட்டுமே பேர் போனவன் பாரதி அவனைவிட உரைநடையில் கட்டுரையில் சிறுகதையில் என எத்தனைப் பேர் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றால் கவிஞன் மட்டுமே. இன்று தமிழ் நிலப்பரப்பின் ஜால்ராக் கூட்டங்கள் "தான் கவிஞன், தான் எழுதுவது கவிதை" என்று சொல்லியே சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பிக் கொண்டிருக்கிறது பாவப்பட்ட சமூகம்.
இன்றுள்ள தமிழ் நவீன கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் மனுஷ்.அவர் கவிதையின் வீரியம் மிகப் பெரிய தத்துவப்பாய்ச்சல்களிலும் மொழியின் உயர் உந்துதல்களிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது.ஒரு கவிஞனை அவனுடைய கவிதையைப் புரிந்துக்கொள்ள முற்படும்போது அவனுக்கும் நமக்குமான உரையாடல்கள் நம் கருத்தின் மேல், நம் மனக் கட்டமைப்பின் மேல் ஒரு மீள் விசாரணையை உண்டு பண்ணச் செய்யும்.
லோட்டாக்களில் வந்த காப்பியுடன சிறிதே உரையாடத் தொடங்கினோம்.சமகால இலக்கியச் சூழல், கவிதைகள் என கதைக்கத் தொடங்கினோம்.
அக்டோபர் மாத உயிர்மை இதழில் ஜெயமோகனை கிண்டலடித்து இருந்தார் மனுஷ்.அதைப் படித்ததும் மிக ரசித்துச் சிரித்தேன்.அதனைப் பற்றிய பேச்சுக்களில் மனுஷ் குறிப்பிட்டது 'தமிழ்ச் சூழலை விடவும் தமிழ் எழுத்தாளர்கள் இறுக்கமாக இருக்கிறார்கள்'. 'நீங்கள் எல்லாம் முன்னர் நண்பர்கள் தானே!' என்றேன்."அவர்கள் இப்பொழுதும் நண்பர்கள் தான், நண்பர்களாகத் தான் என்றும் இருப்பார்கள். ஆனால் ஏனோ ஒரு ஆழமான மனக் காயத்தை உண்டு பண்ண விரும்புகிறார்கள்" என்றார். தனி நபர் விமர்சனங்கள் இல்லாத சிறு பத்திரிக்கைகளை நினைக்கவே அபூர்வமாக இருக்கிறது.
கதைகளை பதிவு செய்கையில் எந்த இடையூறும் எந்த சப்தமும் அற்றே பதிவு செய்ய வேண்டும் என்பதால் அவர் அலுவலகத்திலேயே கதையை பதிவு செய்து கொள்ளலாம் என்றார் மனுஷ். கதையை பதிவு பண்ணும் கருவியை தன் கையில் பிடித்துக் கொண்டு கதையை சொல்லத் தொடங்கியவர் தொடர்ச்சியாக கதையை சொல்ல முடியவில்லை.அதற்கான காரணத்தை பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது.ஒலிப்பதிவுக் கருவியை என்னிடம் தந்து விட்டுக் கதை சொல்லத் தொடங்கினார்.கவிஞன் கவிதைகளைச் சொல்பவன்.எளிதில் உணர்ச்சி வசப் படக் கூடியவன்.அவனிடம் கதைக்கான மனவெளி எவ்வாறிருக்கும்?.சுஜாதா மற்றும் ராமகிருஷ்ணனுடைய கதைகளை சொல்லத் தொடங்கியதும்,அவர் இருப்பு அங்கு இருப்பதாக தெரியவில்லை.அக் கதைகளை தானும் பார்த்தவர் போலும் கதாபாத்திரங்களின் குணங்களை தானும் அறிந்தவர் போலும் கதைகளைச் சொன்னார்.அருகில் இருந்தவைகள் காணாமல் போய்விட்டு அக்கதைகளே இக் கணங்களில் நடப்பது போலும் அம்மனிதர்களே சுற்றி நடமாடுபவர்கள் போலும் ஒரு பிரமை உண்டாகத் தொடங்கியது.
மனுஷ் கதைகளை சொல்லும் விதத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவே தெரிந்தார்.அந்த மனநிலையே வலிகளை, வேதனைகளை, பிரிவை, ஏமாற்றத்தை, துரோகத்தை, மன்னிப்பை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும்.அவர் குரல் மட்டும் கதைகளைச் சொல்லவில்லை. அவர் கண்கள்,அவர் கைகள்,அவர் தலை நகர்வுகள்,அவர் நெற்றிப் புருவங்களை ஒரு சேர வைக்கும் ஆங்கில எழுத்து "U" போன்ற மடிப்பு, ஒவ்வொன்றுமே கதைகளை ஒரு அங்கமாகவோ ஒரு பகுதியாகவோ கதை சொல்லும் போது வெளிப்பட்டது.அதனாலே தான் அவரால் ஒலிப்பதிவுக் கருவியை கையில் கொண்டு கதைகளைச் சொல்ல இயலவில்லை.கதைகளை அவர் ஏற்கனவே படித்திருந்தாலும் கதை சொல்லும் போது கதைகளை வசனங்களைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளே கொண்டு செல்வது போல் சொன்னார்.
கதைகளைப் பதிவு செய்தபின் அவருடைய கவிதைகளைப் பற்றிய உரையாடல் தொடங்கியது.அவருடைய "நீராலானது" கவிதை தொகுதிக்கும், இன்று அவர் எழுதிக் குவிக்கும் கவிதை வடிவத்துக்குமான வேறுபாடுகள் அதிகம்."நீராலானதில் ஒரு உணர்வுகளை மட்டுமே நீங்கள் பார்க்கலாம்.அதீதத்தின் ருசியில் எனக்குள் நிகழ்ந்த சிந்தனை மாற்றங்களைக் காணலாம்"என்றார் மனுஷ்.அவர் இன்று எழுதும் வடிவம் மிகப் புதியது. அதைப் பற்றி வினவியபோது, "நான் வேண்டுமென்றே வடிவத்தை அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை,எளிதில் புரிந்து விடும் சொற்களைப் போல் இருப்பினும் அதன் தன்மையில் ஆழம் இல்லையென்றால் அதன் மகத்துவம் அதில் இல்லை, என்னைப் போன்றே கவிதைகள் எழுதி ஒரு சிந்தனைப் பாய்ச்சல் இல்லாமல் எனக்கே அனுப்பி வைக்கிறார்கள். நானும் அவற்றை பிரசுரித்திருக்கிறேன" என சிரித்துக் கொண்டே சொன்னார்."இன்று எழுதுபவர்கள் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பதில்லை,ஒரு வித மாட்னஸுக்கு (madness)ஆட்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு கவிதை எழுத மாட்னஸ் தேவைப் பட்டாலும் அதை கவிதையாக மாற்ற வேண்டிய ப்ரில்லியன்ஸ் (brilliance) இருக்க வேண்டும்" என்றார்.
நாம் கவிதைகளை அகம் என்றும் புறம் என்றும் வகையாகப் பிரித்தவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கவிதைகள் எல்லாம் கவிதைகள் அல்ல என்ற ஒரு சர்ச்சை தொடங்கி அது பரவலாக விவாதிக்கப்பட்டது.பாரதியும் அரசியல் கவிதைகள் எழுதியிருக்கிறார், அவர் கவிஞரா? என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.மனுஷ் எல்லா மாதிரியுமான கவிதைகளை எழுதுகிறார். அயோத்தி பிரச்சனை,ஈழப் பிரச்சனை,வேலைப் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உற்சாக மனநிலை, சாரதிகள், சிறிய புகழுடைய மனிதன் என அவர் எழுதும் தளம் மிக விரிந்ததாக இருக்கிறது. உங்கள் கவிதைகள் தொழில்நுட்ப கவிதைகள் என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது பற்றிய கேள்விக்கு, மனுஷ் "நான் என்னை தொழில்முறை எழுத்தாளன் (professional) என கூறிக்கொள்வேன். என்னிடம் ஞாபகங்கள் மடிப்புகளாக இருக்கின்றன. எனக்குத் தேவையானது எழுதுகிற மனநிலை மட்டுமே. ஒரு கவிதையை அன்றே எழுதிவிட வேண்டும் என நினைப்பேன்.அதை மறுநாள் எழுதும்பொழுது வேறு ஒரு கவிதையாக மாறுகிறது, என்னிடம் சொற்கள் மட்டுமே இருக்கின்றன, நான் ஒரு வரி எழுதும்போது அடுத்து என்ன வரிகள் எழுதுவேன் என எனக்குத் தெரிவதில்லை"என்றார்.
இனி கதைசொல்லிப் பகுதியில் சுஜாதா மற்றும் எஸ் ராமகிருஷ்ணன் கதைகளை மனுஷின் குரலால் கேளுங்கள்.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)
|