|
மோனோலிசாவின் மர்மப் புன்னகைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பை பாஸ்கர் சக்தியின் கதை சொல்லி நிகழ்வு எனக்கு அளித்தது. ஏதேனும் முகவரி கொடுத்து யாரையேனும் சந்திக்கச் சொல்லும் நேரங்களில் திருவிழா நாட்களில் பெற்றோரை தொலைத்துவிட்டு அழும் குழந்தையைப் போல் மாறிவிடுவேன்.சிறுவயதில் மோனோலிசா ஒவியங்களை அதிகம் திரைபடங்களிலும் நாடகங்களிலும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் ஒரு கிருஸ்துவ கத்தோலிக்கப் புனிதர்களில், அருள் நிறைந்த மரியாள்களில் ஒருவர் என்றே நினைத்திருந்தேன். அவர் அந்த ஒவியத்தில் புன்னகை செய்வதாக என்றும் நினைத்ததில்லை.நாட்கள் செல்லச் செல்ல மோனோலிசா ஓவியத்தை பற்றி வாசிக்கத் தொடங்கியபோது அவர் மெலிதாக சிரிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஓவியத்தை உற்றுப் பார்க்கையில் அவர் சிரிப்பதாக என்னால் சமாதானம் கொள்ள முடியவில்லை.
பாஸ்கர் சக்தியை சந்திக்க சற்று தாமதமாகவே செல்ல நேர்ந்தது. அவரிடம் தொடர்பு கொண்டு தாமதமாக வருவதற்கு மன்னிப்பு கோரி விட்டு,பேருந்தில் ஏறி கே.கே நகரை வந்தடைந்தேன். எத்தனை முறை இந்த கே.கே நகருக்கு கேணி கூட்டத்திற்காக வந்திருப்பேன். வழக்கம் போல் இந்த முறையும் அழகிரிசாமி சாலையை கண்டடைய முடியவில்லை.கூகுள் மாப்சை(google maps) என் மண்டையில் பதிவிறக்கம் செய்தாலும் என்னால் உடனடியாக ஒரு இடத்தை கண்டு பிடிக்க முடியாது. ஏழு மலை தாண்டி ஏழு கடல்கள் தாண்டி! வரும் சோதனைகளையெல்லாம் கடந்து இளவரிசியை மணமுடிக்க அவள் உயிரைக் காப்பாற்ற புறப்பட்ட இளவரசனின் பயணம் தொடர்ந்தது. அந்த இளவரசன் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்.
சென்னையில் வேலைக்கு வந்த எனக்குள் மிக அதிக எதிர்பார்ப்பு என்ன என்றால் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும்... கனவு நட்சத்திரங்களான எழுத்தாளர்களை சந்திக்கலாம்... அவர்களுடன் இலக்கிய விவாதங்கள் நடத்தலாம்... என பலப்பல கற்பனைகள். மஞ்சள் பைக்கு பதிலாக ட்ராவல் பாக்கையும்( Travel bag) சூட்கேசையும்(suitcase) எடுத்துக் கொண்டு வந்தேன். எந்த ஒரு எழுத்தாளரையும் பரிச்சயமில்லாத எனக்கு உயிர்மையில் எஸ்.ராமகிருஸ்ணனின் புத்தக வெளியீட்டு விழா south indian film chamberல் நடை பெறுவதை விளம்பரம் செய்து இருந்தார்கள். சக்தியை கண்டுவிட்ட ராமகிருஸ்ண பரமஹம்சரைப் போல் ஆனந்தம் அடையத் தொடங்கினேன். அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்ட சிறப்பு விருந்தினர்களில் ஞாநியும் ஒருவர். விழாவிற்கு மனுஷ்யபுத்திரன்,சாரு,ராமகிருஸ்ணன் என நான் கொண்டாடும் அத்தனை எழுத்தாளர்களும் வந்திருந்தனர். என் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டேன். ஜெயமோகனை என்னும் பார்க்க வில்லையே என்கிற கவலை மட்டும் நெஞ்சின் அடி ஆழ்த்தில் இருந்தது. விழாவில் ஞாநி தன் பேச்சினிடையே கேணி என்னும் இலக்கியக் கூட்டம் நடைபெறுவதைக் குறிப்பிட்டார். கூட்டம் முடிந்த பின்னர் எப்படியாவது ஞாநியிடம் கேணியைப் பற்றி கேட்டு விடுவதென உறுதி பூண்டேன்.
|
இயல்பிலேயே அதிகம் கூச்ச சுபாவம் உடையவன் ஆதலால் யாரிடமும் முதலில் சென்று வலிய பேசமாட்டேன். ஞாநியிடமும் கேணியைப் பற்றி கேட்டாக வேண்டும். என்ன செய்வது என்ற தயக்கம் வேறு. புத்தக வெளியீட்டு விழா முடிந்ததும் அவரைச் சுற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் நலவிசாரிப்புகள், சில இளஞர்கள் என அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம். தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன், இது சரி வருவதாக தெரியவில்லை! இவரிடம் பேசுவது கடினம் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே Chamber வாசலை வந்தடைந்தேன். எங்கிருந்து தான் தைரியம் வந்தது என்று தெரியவில்லை. வீறு கொண்ட வேங்கையென சாம்பருக்குள் (Chamber) மீண்டும் நுழைந்தேன். ஞாநி முன் தம் கட்டி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேணியைப் பற்றி கேட்டேன்.
அவர் கேணியைப் பற்றியும் இதுவரை எந்த எந்த எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள் எனவும் விவரிக்கத் தொடங்கினார்.அவர் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ரா.! அடடா அவர மிஸ் பண்ணிட்டோமே என்கிற கவலை எழுந்தது. விகடனில் வந்த துணையெழுத்துக்கும் அவரின் புனை கதைகளுக்கும் நான் அடிமை. ஆனால் இன்று ஒரு மொக்கைப் பாண்டியாகவே மாறிவிட்டார். அவரைத் தேடி ஒரு இலை வரும், அது ஏன் வந்தது என ஆராய்வார் இல்லை ஒரு தவளை ரோட்டைக் கடக்கும் போது மடிந்து இருக்கும், பிறகு அந்த தவளை எங்கிருந்து வந்தது,ஏன் வந்தது,எதற்கு கடந்தது என அந்த தவளையைப் பிடித்து தீவிர விசாரணை நடக்கும்.இதற்கு அந்த தவளை செத்ததே மேல்.அப்படியும் அது போரடித்து விட்டதா, ஒரு சினிமாவை இரண்டாவது அல்லது நான்காவது முறை பார்த்து விட்டு(எப்போதும் இதைத் போல் தானே சொல்கிறார் நம்பித் தான் ஆக வேண்டும்) ஒரு கட்டுரை. (என்னால முடியலடா சாமி!). "இவர் என்ன சினிமாவை பார்த்து விட்டு தப்புத் தப்பாக எழுதுகிறார்" எனக் கூறிய தோழி ஞாபகத்திற்கு வருவாள்.
கேணிக்கு ஞானி சொன்ன முகவரியையும் குறித்துக் கொண்டேன். இளவரசனின் பயணம். இவ்வாறே தொடங்கியது.
ஞாநியும் பாஸ்கர் சக்தியும் இணைந்து ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் கேணியை நடத்துகின்றனர். அழகிரிசாமி சாலையில் உள்ள ஞாநியின் வீட்டில் அவர் கொல்லைப் புறத்தில் கலைத்துறையைச் சார்ந்த ஒரு ஆளுமை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அவர் படைப்பு சார்ந்த விவாதம், வாழ்வனுபவம்,சில சமயங்களில் சூடான கருத்தியல் போர்கள் என கலைகட்டும்.ஞாநி பேசும் பொழுது தன் தொண்டையை செறுமிக் கொண்டே"என்னா நான் சொல்றது, என்னா அது வந்து ,என்னா நடந்துச்சுன்னா,என்னா" என நொடிக்கு ஆயிரம் முறை என்னா போடுவார். ஞாநியை அப்படியே நகைக்காக பிரதிபலித்து ஞாநி பேசுவது போல் பேசுவார் ஒரு நண்பர். பாஸ்கர் சக்தி பேசும் பொழுது அடக்கமான ஒரு மாணாக்கண் எழுந்து நின்று பேசுவதுபோல் பேசுவார்.அவரின் மெலிதான தேகம் ஒரு இருபதுகளின் கடைசியில் உள்ள ஒரு இளஞனைப் போல் காட்டும்.அவரின் கண்ணாடி எனக்கு அவரிடம் பிடித்ததில் ஒன்று.ஒரு மேதமைத் தன்மையை பறைசாற்றுவது போல் இருக்கும் அந்தக் கண்ணாடி.
மோனோலிசாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை விட மோனோலிசாவுக்கும் பாஸ்கர் சக்தியுக்குமான தொடர்புகள் மிக நெருக்கமானது. தொலைபேசியில் அவருடைய வீட்டிற்கான இடக்குறிப்பை இவ்வாறே அறிந்து கொள்ள முடிந்தது.மோனோலிசா ப்யூட்டி பார்லருக்கு எதிரில் செல்லும் ரோட்டிலேயே அவர் வீடு இருக்கிறது. அழகிரிசாமி சாலையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருப்பவனுக்கு எங்கே மோனோலிசாவைக் கண்டு பிடிப்பது?.சிறுது தூர நடை அலைச்சலுக்குப் பிறகு அழகிரி சாமி சாலையை கண்டுபிடித்து விட்டேன். வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வழி கண்டு பிடித்ததும், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததை விடவும் மேலான சாதனை செய்த திருப்தி எனக்கு. அழகிரிசாமி சாலையில் சிறிது தூரத்திலே மோனோலிசா புன்னகை செய்தார்.(அடடே! ஆச்சிரியக்குறி). லியனார்டோ டா வின்ஸ்கிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, சாலை பிரிந்த இடத்தில் நடக்கத் தொடங்கி பாஸ்கர் சக்தி வீட்டை அடைந்தேன்.
பாஸ்கர் சக்தியின் கதைகள் இயல்பிலேயே நகைச்சுவைத் தொனி நிறம்பியவை.தொலைக்காட்சி சீரியல்களுக்கும், அண்மையில் வெளியான வியாபார வெற்றித் திரைப்படங்களுக்கும் வசன கர்த்தா.சமீபத்திய திரைப்படத்தில் "நான் மகான் அல்ல"நாயகன் தன் புதிதாக திருமணமான தோழியின் கணவனுக்கு இவ்வாறு பகடி செய்வான்" என்ன சார், எல்லாரும் விட்டுக் கொடுத்து வாழ்வாங்கன்னா நீங்க சுட்டுக் கொடுத்து வாழ்றீங்களா" இவ்வாறு அவர் என்னிடம் இனிக்க இனிக்க பேச நேரமில்லைஎன்றாலும் மணக்க மணக்க ஒரு அருமையான தேநீர் கொடுத்தார்.சம்பிரதயமான விசாரிப்புகளுக்குப் பிறகு, கதை பதிவு செய்யத் தொடங்கினோம். அவர் ஆனந்த விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தன் சிறுகதை ஒன்றை வாசிக்கத் தொடங்கினார். ஒரு கதையோடு அவர் நிறுத்திக்கொண்டது கவலை அளித்தது. நான் வந்த நிமிடத்தில் இருந்தே ஒரு பரபரப்புடன் தான் இருந்தார். தான் ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருப்பதாகவும்,அதை முடிக்கும் அவசரத்தில் இருப்பதாகவும் சொன்னார்.
பிறகு தன் வேலை முடிந்ததும் இளவரசன் மோனோலிசாவை நினத்துக்கொண்டு வீடு நோக்கி, பேருந்தில் பயணமானேன். இவ்வளவு வேலைப் பளுவிற்கு இடையிலும் சிறிது நேரம் ஒதுக்கி கதை சொல்லிப் பகுதியை சிறப்பாக முடித்துக் கொடுத்தமைக்கு பாஸ்கர் சக்தி அவர்களுக்கு ஒரு விசேஷ நன்றி.
இக்கதை சொல்லிப் பகுதியில் கூடு வாசகர்களுக்காக தன் சிறுகதையைப் "மகன்" பகிர்ந்து கொள்கிறார்.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)
|