கதை சொல்லி - கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன்
கி. ராஜநாராயணன் அவர்களைப் பற்றிய அறிமுகமோ, விபரங்களோ தெரியாமால் யாரும் தமிழ் இலக்கியத்தில் நுழைந்துவிட முடியாது. கரிசல் காட்டு எழுத்தாளரான இவர்தான் முதலில் கரிசல்காட்டு இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. தேர்ந்த கதைசொல்லி..இவர் கதைசொல்லும் அழகை ரசிப்பதற்கும், கதையினை கேட்பதற்கும், இரு கண்களும், இரு காதுகளும் போதாது.
பச்சை மரங்களைக் கூட தீப்பற்ற செய்யும் சுளீர் வெய்யிலில் ஒரு நாள் புதுச்சேரி நோக்கி புறப்பட்டேன். வெயிலை நேசிப்பதுதான் அதிலிருந்து நாம் தப்பிக்கும் வழி.. நம்மை அதனிடம் ஒப்படைத்துவிட்டால் அதன் கோரப் பார்வையிலிருந்து தப்பிவிடலாம். அருவியில் குளிக்கும்போது மட்டுமல்ல..வெய்யிலில் குளிக்கும்போதும், குளித்து முடித்த பின்னரும் உடல் முழுவது தண்ணீரின் பசைகள் ஓட்டிக்கொண்டே இருக்கும். அப்போது அடிக்கும் அனல் காற்று கூட தென்றலின் சுகத்தைக் கொடுக்கக் கூடியது.
அப்படிப்பட்ட ஒரு மாலை வேளையில் நகரின் பிரதான சாலையில் இருந்து ஒதுக்குப் புறமாய் ஒன்றிரண்டு மரங்களுடன் லாஸ் பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடி இருக்கும் கி.ரா. அவர்களை கதைசொல்லி பகுதிக்காக சந்திக்க சென்றேன். வயோதிகத்திலும் வாலிபப் பிள்ளையாய் கொஞ்சும் ஓசையுடன் அவர் கோபமாகப் பேசினாலும், அந்த ஆளுமையின் பேச்சு நம்மை ரசிக்க வைக்கிறது.
நான் எண்ணக் கதை சொல்லணும் னு நீ நினைக்கிறே? என்றதும், நீங்கள் படித்த, அல்லது நீங்கள் எழுதிய ஏதோ ஒரு கதையை சொல்லுங்கள் என்றேன். ஆனால் அவரோ, அதெல்லாம் பழசு ஆகிடிச்சு. உனக்காக நான் ஒரு புதுக்கதையை சொல்றேன்.. என்று சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து ஆரம்பித்தார்.
ஒரு கதையை தயார் செய்ய அவருக்கு இரண்டு நிமிடம் போதுமானதாக இருந்தது. என் கண் முன்னே மிக நேர்த்தியாக ஒரு கதையை இரண்டு நிமிடத்தில் உருவாக்கி, எந்த வித தடையும், பிசிறும் இல்லாமல் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் எண்பத்திரண்டு வயசாகும் இந்த இளைஞர். தமிழகத்தின் தேர்ந்த கதைசொல்லி, என் கனவில் கூட தன் எழுத்துகளால் என்னை அதகளப்படுத்தும் ஒரு ஆளுமையின் குரலால் இரண்டு நிமிடத்தில் ஒரு கதையை கேட்டபோது ஏதோ ஒருவித பரவச நிலையில் நானிருப்பதை உணர்ந்தேன்.
கைமாத்து எனும் அந்தக் கதையை முடித்துவிட்டு, ஆரம்பத்தில் என்னிடம் பேசத் தயங்கிய அவர், பின்னர் பேசிய பேச்சு அனைத்தும், என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. தமிழ் இலக்கியத்தின் தற்போதய நிலை, தன் கதைகளை ஆரம்பத்தில் நிராகரித்த பத்திரிகைகள், கதவு கதை முதன் முதலாக சரஸ்வதி இதழில் வெளிவந்தது என்று அவர் பேச்சு மிக சுவாரசியமாக இருந்தது.
கிளம்பும் போது அம்மாவின் கையால் வரக்காப்பி குடித்து விட்டு போ என்றார். நீங்கள் காப்பி குடிப்பீர்களா என்றேன்.. பழக்கம் இல்லை என்றார்.. எனக்கும் அந்தப் பழக்கம் இல்லை என்று கூறி அவரிடம் விடைபெற்றேன், இமயத்தின் உச்சத்திற்கு சென்று வந்த திருப்தியுடன்.
|