"Don’t know when
The dawn will be coming
I open all the doors"
---------------------------------------------------------------------------------
மேற்சொன்ன வரிகள் கல்கியின் வீட்டில் அவருடைய அழகிய புகைப்படத்துடன் எழுதப்பட்ட எமிலிடிக்கின்ஸனின் கவிதை வரிகள். கதை சொல்லிக்காக கல்கியின் கொட்டிவாக்கத்தில் உள்ள அவர்வீட்டில் நுழைந்தவுடன் வீட்டில் மாட்டப் பட்டிருந்த படங்களும் வாசகங்களும் பெரிதும் கவரத்தொடங்கின. ஒரு புகைப்படத்தில் கல்கி அடியில் புத்தகங்களுடன் படுத்திருப்பது போன்று ஒருபுகைப்படம் இருந்தது. மேலும் ஒரு புகைப்படம் கல்கி அவர் தோழிகளுடன் வட்டமாக படுத்துக் கொண்டேமேலே பார்ப்பது போன்றதொரு புகைப்படம். சதுர புகைப்படச் சட்டகத்தின் வழி பாயும் வட்டம் உருக்கொணரும் உணர்வு அலாதியானது. இன்னுமொரு புகைப்பட்ட சட்டத்தின் இருந்த வாசகம் இவை
" நான் திருநங்கை தான்
ஆனால் அது மட்டுமே
என் அடையாளம் அல்ல".
புறக்கணிப்பு, கேலி, ஒடுக்குமுறை இவைகளை எதிர்க்கும் திறம் கொண்ட மனிதர்கள் வாழ்வின் இன்னல்களையும் தாண்டி வாழ்வையொரு கொண்டாட்டமாக மாற்றத் தொடங்கிவிடுவர். தனக்கும் தான் சார்ந்த சக மனிதனுக்கு வாழ்வின் உன்னதத்தை பகிரத் தருவார்கள். அன்பும் கருணையும் விரவிக்கிடக்கும் நாளெல்லாம் வாழ்வும், மது கொண்ட உச்சமென மனமும் குதுகளிக்கும். சமூகப் போராளி, நடிகை, உதவி இயக்குநர், திருநங்கைகளுக்கென இணையதளம், தெரு நாடகங்களென கல்கியின் பல அவதாரங்கள்அவரைப் பற்றி நிரூபிப்பவை. தன் சமூகம் சார்ந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கையெனவும் நெஞ்சுரம் கொண்டவராகவும் வாழ்ந்து வருபவர்.
கல்கி தன் பள்ளி நாட்களில் முதல் மாணவராக வந்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் திரு நங்கைகளைக் குறிப்பிடும் பேடி என்னும் வார்த்தை அறியாமையைத் தவிர வேறேன்ன!.
கல்கியின் சிறு பிராயத்திலே தன்னிடம் பெண்மைத் தன்மை மிளிர்வதை உணரத் தொடங்கிவிட்டார். தன்னுடைய பத்து வயதில் தன் சகோதரிகளுடன் சேர்ந்து நாடகங்களில் பங்கேற்கும் போது கூட நாட்டியக்காரி, இளவரசி, வியாபாரப் பெண்மணி என்றே தன் பாத்திரங்களை விரும்பி எடுத்திருக்கிறார். தன்னுடைய பதிமூன்றாவது வயதில் தன்னுடைய பெண்மைத்தனத்தையும் அதை மறைக்க இந்த உலகுடன் தான் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கவிதையாக எழுதி வைத்துள்ளார். அவை அவர் தாயாரின் கண்களில் படவே, கல்கியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
பின்னர் பள்ளி மேல் நிலை படிப்புக்காக ஆண்கள் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து விட்டிருக்கிறார்கள். சக மாணவர்கள் அவரை வார்த்தைகளாலும் செயலாலும் அவருடைய பெண்மைத் தனத்தை கிண்டல்செய்து சீண்டி இருக்கிறார்கள். இதில் ஆசிரியர்களும் அடக்கம். அந்த ரணங்களில் இருந்து தப்பிப்பதற்காக பள்ளியை மட்டம் அடித்து பூங்காக்களில் உலாவத் தொடங்கியிருகிறார். அங்கு தான் தன்னைப் போன்ற அப்சரா என்னும் திருநங்கையைச் சந்தித்திருகிறார். திருநங்கைகளின் குடும்பத்தில் தன்னை ஒருஅங்கமாக இணைத்துக் கொண்டார்.
நல்ல வேளையாக தான் பிறந்த குடும்பத்தில் இருந்து வெளியேறும் நிலை கல்கிக்கு ஏற்படவில்லை. தன்குடும்பத்தாரிடம் விலக்கிச் சொல்லி அவர்களை மனதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக மாற்றியுள்ளார்.
மதுரை காமராஜர் கல்லூரியில் ஊடகத் துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டார். தன்னைப் போன்ற பிற திருநங்கைகளில் வலியை எடுத்துக் கூறவதற்கே அந்த படிப்பை மேற்கொண்டுள்ளார். கல்லூரிநாட்களில் "சகோதரி" யென்னும் பத்திரிக்கையை திருநங்கைகளுக்காக ஆரம்பித்துள்ளார்.
பன்னாட்டு ஊடக மொன்றில் வேலைக்குச் சேர்ந்து ஆராய்ச்சி சம்மந்தமான ஆண்கள் குழு ஒன்றுக்கு தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். பின்னர் வேலையை விட்டு, 'சகோதரி' அமைப்பை திருநங்கைகளுக்காக ஆரம்பித்தார். ஆரோவில்லில் உள்ள நாடகக் குழுவிலும் பங்கெடுத்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களைச் சந்திப்பதுஅவர்களுடன் திருநங்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது மற்றும் திருநங்கைகளை சமமாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவர்களுடன் உரையாடுகிறார். 2008ம்ஆண்டு ஈழத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராக திருநங்கைகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அநீதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து அதை எதிர்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளார் கல்கி.
திருநங்கைகளுக்காக தொடர்ந்து போரடி வருபவர் கல்கி. மெல்ல மெல்ல திருநங்கைகளைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம் மாறி வருவதைப் பார்க்கலாம். திருநங்கைகளுக்கென நலவாரியம் ஒன்றைஅமைத்திருக்கிறது தமிழக அரசு. அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களென சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக கருதுகிறார் கல்கி.
கல்கியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது "விடுதலை கலைக்குழு" என்னும் முற்றும் திருநங்கைகள் பணியாற்றும் கலைக் குழுவைப் பற்றிச் சொன்னார். இக் கலைக்குழுவில் திருநங்கைகளே இசை அமைத்தும், நடனங்களையும் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் கொச்சின் திரைப்பட விழா மற்றும் நேபாளத்தில் நடந்த சவுத் ஏசியன் கான்பரன்ஸ் பார் வைலன்ஸ் எகெய்ன்ஸ்ட் வுமன் (south asian conference for violence against women) நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.
கல்கியின் வீட்டிற்கு அருகில் சிறு தோட்டம். கதைகளை பதிவு செய்யத் தொடங்கும் தேவையானஅமைதியை கிழித்துக் கொண்டு வெளியில் இருந்த காகக் கூட்டம் கரையத் தொடங்கியது. அவைகள் பாசைகள் விளங்குமாயின் காக்கைகளின் கதைகளையும் பதிவு செய்யலாம் தான். கதைகளுக்குள் நுழைந்த பின் காக்கைகளின் பாடல் நின்று போனது.
மொத்தம் ஐந்து கதைகளென இலக்கு வைத்து பதிவு செய்து கொண்டோம். கோடை வெய்யில் உருக்கி எடுத்துவிடும் போன்ற நிலையிலும் அழகாக கதைகளை பதிவு செய்து தந்தார் கல்கி.
பின்குறிப்பு: கல்கியின் வாழ்க்கை குறிப்புகள் அவருடைய இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.
கதை 5 குழந்தைகளுக்கான கதை.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |