"பாரச்சிலுவையை
சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழவும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே "
- பானுபாரதி.
எழுத்தாளர்களை சந்திப்பதற்காக செல்லும் முன் அவர்களுடைய புத்தகங்களை படித்துவிட்டு செல்வதுவென் வழக்கமாக இருந்ததில்லை. அவர்களுடைய புத்தகங்களை ஏற்கனவே படித்திருப்பேன் அல்லது அவருடைய ஆளுமையை பற்றி முழு அறிதல் எனக்குள் இருக்கும். என்னுடைய புத்தககட்டுகளில் தேடியபோது சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அது பாமாவின் கருக்கு நாவல். புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கியவனுடன் கோடை மழையின் தூரல் கேட்டுக்கொண்டிருந்தது. மழையைகேட்டுக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். அற்புதமான இந்த மழையைப் போல் இருக்கவில்லை பலர் வாழ்க்கை. இன்னும் சாதியத்தின் துயர் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
சாதியென்பதை எதிர்த்து இலக்கியத்தில் வலிகளின் பதிவும், அதை எதிர்கொள்ள ஏற்றுக்கொண்ட துணிவும் முன்னெடுத்த பாதைகளுமே நாளைய வரலாற்றை மாற்றி அமைக்கும். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட தலித்துகளின் வாழ்க்கை பதிவை அவர்கள் போல் காத்திரமாக யாராலும் முன்வைக்க இயலாது என்பதை உணர்த்தியது கருக்கு. மதம் சக மனிதனை நேசிக்கச் சொல்லித்தந்தாலும், எந்த சாதி சார்ந்த மனிதனிடம் அன்பு செலுத்துவது என்பதையும் அதன் நிறுவனம் உட்புகுத்திச் சொல்லித் தரும் என்பதை தெளிவாக்கியது அவர் கன்னியாஸ்திரியாக பூண்ட துறவறம்.
பாமாவை சந்திககச் செல்லும் காலை கருமேகங்களால் நிறைந்திருந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அவரை கதை சொல்லிக்காக சந்திக்கப் புறப்பட்டேன். பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீரும், சேறும் சகதியுமாக மழையின் இன்னொரு முகம் அனாயசத்தை வரவழைத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே கவனித்தும் கால்களை காந்தம் போல் ஒட்டிக் கொண்டது சேறு. புதிதாக கடைகளில் தென்பட்ட மாம்பழங்கள் மாம்பழ சீசனை சொல்லிக் கொண்டிருந்தது. அவர்வீட்டுக்கு தாமதமாகவே செல்ல நேர்ந்தது. மதியத்தை தாண்டிவிட்டிருந்ததால் கதை பதிவின் நடுவே உணவு பரிமாறினார்.
பாமாவின் மூத்த சகோதரர் ராஜ் கௌதமன். அவர் தேர்ந்த விமர்சகராக அறியப்படுபவர். சிலுவை ராஜ்சரித்திரம் அவரின் புகழ் பெற்ற நாவல். கருக்கு நாவலில் அவரை கல்வி கற்க ஊக்கப்படுத்தும் அதே அண்ணன் தான். தமையனிடம் இருந்து தான் எழுத்தைப் பெற்றுக் கொண்டீர்களா எனக் கேட்டவுடன்உடனே மறுதலித்தவர் தன் தந்தையிடம் இருந்து தான் எழுதும் திறன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். "என் தகப்பனார் அறியப்படாவிட்டாலும் நாடகங்கள் எழுதுவார், பாடல்கள் இயற்றுவார். எழுத்துத்திறன் ஜீனில் வந்திருக்க வேண்டும் " என்றார்.
பாமாவின் எழுத்து அவரின் கிராமத்தில் உள்ள மனிதர்களின் வாழ்வியலை அவ்வாறே பதிவு செய்வது. அவர் நாவல் எழுதுவது என்று திட்டமிட்ட வடிவுடன் எழுதாததால் பெயர்களையும் மாற்றாமல் நிகழ்காலத்தில் அழைக்கும் பெயர்களுடனே கருக்கு நாவலிலும் குறிப்பிடிருக்கிறார்.
நான் சென்னையிலுள்ள மேன்சனில் தங்கியிருந்த நாட்களில் 'ஆழி சூழ் உலகு' எழுதிய ஜே.டி.குருஷின் நண்பர் ஒருவரும் தங்கியிருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் சுவாரசியமானவை. ஜே.டி.குருஷ் ஆழி சூழ் உலகில் தான் பார்த்த மனிதர்களையே பதிவுசெய்துள்ளார். நாவலைப் பற்றி அறிந்து கொண்ட அங்குள்ள மனிதர்கள் கோபமைடையவே அவர்களைப்பற்றி எப்படி எழுதலாமென அவரை ஊருக்குள் நுழைய தடை விதித்து விட்டார்கள். அவருடைய கிறிஸ்தவ தேவாலயத்திலும் புத்தகத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இதுவல்லவா இயேசுவின் மறுகன்னத்தை காட்டுவது.
அதைப் போலவே பாமாவும் தான் எழுதிய கருக்கு நாவலால் ஒரு வருடம் பாண்டிச்சேரியில் தன்னுடைய தமயன் வீட்டில் வனவாசம் இருந்திருக்கிறார். அதிகம் படிக்க தெரியாத மக்கள் பிறர் மேலோட்டமாக படித்துச் சொன்னதை அப்படியே கேட்டுவிட்டு ஆத்திரத்தில் கொதித்திருக்கிறார்கள். அந்த நாட்களில் பாமாவின் ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் பாமாக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரை கொஞ்ச நாட்கள் ஊர் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருக்கும் மக்களை கூட்டாமாகச் சேர்த்து நாவலை வாசித்துக் காட்டியிருக்கிறார். அவர்களின் பட்டப்பெயர்கள் இன்ன இன்ன இடத்தில் தான் உபயோகித்திருக்கிறார். எதையும் அவர் தவறாக எழுதவில்லை என்பதை விளங்கப் படுத்தியிருக்கிறார். அதன் பின்னரே அம்மக்களும் சமாதானம் அடைந்திருக்கின்றனர்.
பாமாவின் ஊரில் திறக்கப்பட்ட 'அம்பேத்கர்' சிலைக்கு அவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். இன்று 'கருக்கு பாமா' எனவே அவர்களால் அறியப்படுகிறார். பாமா இருப்பது அவர்களுக்கு பெருமிதமும் கூட. 'இப்பொழுதெல்லாம் அவர்களே என்னிடம் வந்து கதைகளைக் கூறி இந்த கதையை எழுது என்று உரிமையுடன் சொல்கிற நிலைக்கு வந்துவிட்டது' என்றார். 'இப்பொழுது சுதாகரித்து விட்டேன் பெயரைமாற்றியே எழுதுகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
பாமா கதைகளை சொல்வதற்கு பெரிய ஆயத்தம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கதைகள்அவருக்குள்ளே இருந்தது. கதைகளைச் சொல்லும் போதே இடையிடையே எடுத்துக் கொள்ளும் மௌனத்துடன் கதை விவரிப்பு அழகாக கடந்து சென்று கொண்டிருந்தது. கதைகளை விவரிக்கையில் சில இடங்களில் அவராலேயே சிரிப்பை அடக்க இயலவில்லை. கதைகளை லயித்து லயித்துச் சொன்னார். பன்றியும் குரங்கும் வரும் கதையில் ஆச்சியத்துடன் எழும் அவர் குரலில் இருக்கும் பூரிப்பை நேரில் கண்டேன். ஒவ்வொரு கதைக்கும் இடையில் அவர் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே தொடங்கி மழமழவென விவரிக்கத் தொடங்கிவிடுவார். கதைகள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம் போல என நினைத்துக்கொண்டேன்.
அவர் சொன்ன கதைகளில் 'ஏணி ஏற்ற இடம்' போலவே இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையைச் சொன்னார். ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படுகிற சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனால் பரிமாறப்பட்ட உணவை வேண்டாம் என்று சொன்ன அசிங்கம் பிடித்த பிற சாதித் திமிரின் நிகழ்வு ஒன்றைப் பற்றியும் சொன்னார். 1925ல் எழுதிய கதை 2011லும் பொருந்துகிறது.
கதைகளில் பதிவை தாண்டியும் தேனீருடன் அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவை. பாமா கலந்து கொண்ட சிறுகதை பட்டறைக்கு அழகிய பெரியவனும், ஆதவன் தீட்சண்யாகவும் பயிற்சி பெற வந்திருக்கின்றனர். அவர்களை பட்டறை முடியும் போதே கதைகள் எழுதச் சொன்னோம். நன்றாகவே எழுதினார்கள் என்றார். இன்று இருவரும் தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கறிந்த ஆளுமைகளாக இருக்கின்றனர்.
பாமா பள்ளி ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள 'செயல் வழி கல்வி'யில் உள்ள நடைமுறைச் சிக்கலை பகிர்ந்தார். செயல் வழி கல்வி சிறப்பானதாக இருந்தாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களால் தமிழைக்கூட வாசிக்க இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்று வருத்தங்கொண்டார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவின் ஆங்கில வடிவம் : நன்றி: மலர்விழி
http://writingcaste.wordpress.com/2011/06/09/storyteller-bama/
“The load of the cross
Must be borne.
Stumble, we must,
On stone and thorn,
Fall on our face, we must
Feel the whiplash,
Walk to the peak of snowy mountains.
We cross all these
Only to be crucified.”
-Banubharathi
The literature against caste, with its register of pain and the paths that were followed with the courage to face it, will rewrite our tomorrows. Karukku reminds us that none can tell the life stories of dalits with the same rage as dalits whose forebears have been enslaved for centuries. Her experiences as a nun make it clear that even if religion teaches us to love one another, its institutions will interject and tell us to which castes we may show our affections.
Bama’s older brother is Raj Gauthaman. He is known as a skilled critic. Siluvai Rajasarithram is his famous novel. He is the brother who is mentioned in Karukku as encouraging her to study. So did your writing come to her through her brother? She immediately refutes the suggestion. ‘The skill of writing must have been passed on to me from my father’, she says. “Even if my father was not well-known, he wrote plays and composed songs. The skill of writing must have come through my genes.” she said.
Bama’s writings documents the life of people in the village exactly as it is. Since, she did not begin writing with the aim to write a novel, names have found place as they are. The names that are used by people currently have found place in the Karukku novel.
…Bama too spent a year in exile in her brother’s house in Pondicherry for her novel, Karukku. The people who did not read much had listened to those who had read her work superficially and were enraged. In those days, a man from Bama’s village who had only completed his eighth standard had written a letter to her. He told her not to come near the village for a few days, then he had gathered the people and read the novel to them. He had explained that she was using their nicknames in specific places and that she had not written anything that was wrong. Only after this did the people grow calm.
She was also invited as a special guest to open the Ambedkar statue in her village. Today, she is known as ‘Karukku Bama’ by her people. Her existence is a source of pride for them. ‘Nowadays, they come to me of their own accord and tell me stories. It has come to a stage where they tell me, ‘write this story’ with authority’, she said. ‘Now I have learnt and change names when I write,” she said with a smile.
------------------------------------------------------------------------------------------------------------
கதை 5 மற்றும் 6 ஆகியவை குழந்தைகளுக்கான கதைகள்.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |